Monday, June 11, 2012

காலம் என்று வரும்?


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மிக்க நன்றி தாத்தா!


எனக்கு -
உன் கன்னத்தோடு கன்னம் வைக்கும் காலம் வருமோ? – உன்றன்
உள்ளங் கையில் ஓய்வெடுக்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சின்னப் பூவின் வண்ணம் பார்க்க ஆசை வருமோ? – இந்த
வண்ணப் பூவின் வாசம் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் பட்டுப் பாதம் தொட்டுப் பார்க்கும் காலம் வருமோ? – உன்றன்
கட்டுக்குள்ளே கண்ணுறங்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சிட்டுப் போன்ற பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – என்றன்
கட்டுக் கொள்ளாக் காதல் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் இதழைத் தழுவும் குழலாய் மாறும் காலம் வருமோ? – உன்றன்
குழலைத் தீண்டும் தென்றலாகும் நேரம் வருமோ?


உனக்கு -
உருகும் இந்தப் பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – உயிர்
கருகும் முன் என் கண்ணீர் வந்து சேதி சொல்லுமோ?


--கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP