Monday, April 21, 2008

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன்...ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே
பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன் (என்னெஞ்சில்)

சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி (சயனிக்கும்)
உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி (உலகத்தின்)
அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் கோதண்டம்
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும் அவ்வாமனனின் பாதம் (அண்டம்)
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ர தாரி (என்னெஞ்சில்)

திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே - உன்
திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே (திருப்பதியில்)
உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே - உன்
அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே (உடுப்பியினில்)
நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த பல அவதாரம்
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே வாழ்வின் ஆதாரம் (நெறியையும்)
அருள் தரும் தேவா வரம் தர வா வா
அருள் தரும் தேவா வரம் தர வா வா
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா (என்னெஞ்சில்)

இயற்றியவர்: சேலம் ஈஸ்வர்
இராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

இந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க இங்கே அழுத்தவும்.

Thursday, April 17, 2008

கண்ணன் எப்போது வருவானடி? கலந்து சுகம் பெறவே!


மதுரையின் ஜோதி, ஆண்டாளின் அவதாரம், நவ யுக ஆழ்வார் என்றெல்லாம் போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகளின் பாடல் இது. சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர பாடல்களையும் தமிழ்ப்பாடல்களையும் இந்தப் பதிவில் படிக்கலாம்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்


கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)

நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Monday, April 14, 2008

ராமநவமி: இராமன் என்னும் கோபக்காரன்!

ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.

எப்போது நம்மால் பறக்கமுடியும்?

மனம் இலேசானால்..

மனம் எப்போ லேசாகும்?

அழுத்தங்கள் அகலும்போதுதான்..

அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?

கவலையும் கோபமும் சூழும்போது வரும்.

கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.

நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.

சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?
கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?
இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.
அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?

ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.

இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது
மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.

இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.
தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.

எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.
சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.
கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?

பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.

கோபம் அதிகரிக்கிறது.
சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.

ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.

பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.
யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு
தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

ஜிதக்ரோத: எனப்பட்ட ராமனுக்கும் பிராட்டியை ராட்சசன் கவர்ந்து சென்றதில் கோபம் எழுந்தது.
ஆனால் இளையபெருமாளால் சமாதனம் செய்யப்பட்டதும் அந்தக்கோபம் தணிந்தது மீளவும் ஜிதக்ரோதனான்.

அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்று
ராமனுக்கு.
காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.
ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.

பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.

அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.
'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.

ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.
உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .


இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.
'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.

தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..

இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!
********************************************************************************

எம் எஸ் அவர்களின் இனியகுரலில் இந்தப்பாடல்......இங்கே கேட்கவும்!

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP