(கணிக்)கண்ணபிரான் [&co] ஒலிபரப்பிய கோதைத்தமிழ்ப்பா(வை)காதைத்தீண்டி இழுக்க, அரங்கன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொண்டு மாதவிப்பந்தல் நோக்கி நடை கட்டிட்டான் ; பாய் ஜாக் பண்ணப்பட்ட அரங்கனை இங்கு மீட்டு வரபாரதியின் காதல்கீதம் கீழே!
கண்ணன் என் காதலன்
தூண்டிற் புழுவினைப்போல் ---வெளியே சுடர்விளக்கினைப் போல் , நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ! கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை கொண்டு மிகவும் நொந்தேன் ; வேண்டும் பொருளையெல்லாம்--மனது வெறுத்து விட்டதடீ!
உணவு செல்லவில்லை ;--சகியே! உறக்கங் கொள்ளவில்லை. மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை; குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ ! கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.
கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் . வினவக் கண் விழித்தேன் ;--சகியே! மேனி மறைந்து விட்டான்; மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - இது பாரதியார் பாடல்-ன்னு பலருக்கும் தெரியும்! ஆனால், சினிமாவில், இதை இரண்டு பெரும் பாடகிகள் பாடியுள்ளனர் என்று தெரியுமா? = எம்.எல்.வசந்தகுமாரி (ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்) & எஸ்.ஜானகி!
இருவரும், அவர்களுக்கே உரித்தான குரல் வெளிச் சோலைகளில்! கேட்டீங்க-ன்னா உங்களுக்கே தெரியும்! ஒன்று கம்பீரக் குரல், ஒன்று கண்ண்ணன்ன்ன் என்னும் மென் குரல்! :) சரி, அது என்ன தங்கமே தங்கம்? யார் அது? பாரதியார் யாரைத் "தங்கமே தங்கம்"-ன்னு கூப்பிடுகிறார்? = கண்ணனையா? ராதையையா? ரெண்டு பேரையுமே இல்லை! யாரை-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
இந்தப் பாட்டை, கண்ணன் பாட்டுக் குழுவில் ஒருவரான ராதாமோகன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்! :) அவரு தான் அடிக்கடி தங்கமே தங்கம்-ன்னு மின்னஞ்சல் போடுவாரு! நாங்க வெள்ளியே வெள்ளி-ன்னு பதில் போடுவோம்! சரி தானே இராகவ்? :)
ஜானகி பாடுவது: கண்ண்ண்ண்ண்ண்ண்ணன்-ன்னு குழையும் போது, குழலோசை மட்டும் கேட்கும்! அப்படியே தந்தி இழுக்க...வீணை இசையைக் கேட்கத் தவறாதீர்கள்! அதே போல், தங்கம்ம்ம்ம்-ன்னு முடிக்கும் போது, டொய்ங்க்-ன்னு ஒத்தை இழுப்பு வீணைத் தந்தியும் மறவாது கேளுங்கள்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம் தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம் வீர மறக் குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப் பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம் நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம் தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
மரபிசையில்...நித்ய ஸ்ரீ பாடுவது:
இவை பாரதியாரின் "கண்ணன் என் காதலன்" பாடல்கள்!
"தங்கமே தங்கம்" யாரு-ன்னு கண்டு புடிச்சாச்சா? அவள் தான், தூது செல்லும் உற்ற தோழி! அவள் பேர் என்ன? தன் பாங்கியை (தோழியை) அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்! "தங்கமே தங்கம்" என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்! கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்! அய்யய்யோ, கண்ணனோட மனநிலையா? மனநிலை சரியில்லாதவன் ஆயிட்டானா என்ன கண்ணன்?
ஹா ஹா ஹா! அடிப் பாவி, நீ தான்டி மனநிலை சரியில்லாதவளா ஆயிட்ட! ஒரு நாளைக்கு ஒரு வேளை - மதிய வேளை உணவு மட்டும் தான்! உறக்கம் இல்லை! விழிப்பும் இல்லை! ஒப்புக்கு வாழ்ந்துகிட்டு இருக்க! கண்களிலோ தினப்படிக்கு வற்றாத குற்றாலம்! அவன் பழைய மடல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துப் படிச்சிக்கிட்டு இருக்க!
இதுல உன் மனநிலையைத் தான் முதலில் செக் பண்ணனும்! நீ என்னடா-ன்னா கண்ணன் மனநிலையைக் கண்டு வரச் சொல்லுறியே! ஏய், இனி என்னடீ பண்ணப் போற நீயி?
இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு! * இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க! * தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க! அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?
"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"
"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"
"இல்லை! இது பராசக்தி பாட்டு!"
"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்? * இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு! * இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை! அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "
"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"-ன்னு எழுதறாரே!"
"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"
"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)
"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"
"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"
கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி! * அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை! * அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை! * அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!
கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்? பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!
பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன? மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன? குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்! கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!
இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!
பாரதியும் அதையே செய்கிறான்! பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா? எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்! சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!
பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!
பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டாச் சேர்ந்து ஒரு பாட்டு எழுதினாங்க! :-) என்ன.......அது ஆப்பரேஷன் கில்மா-ன்னு நினைக்கறீங்களா? இல்லை இல்லை! அது எல்லாம் நம்ம வெட்டிப்பயல் தான் பதிவு போடுவாரு! நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒண்ணுமே இல்லீங்கோ!
கண்ணன் என் சேவகன் பாட்டு, பாரதியார் எழுதினார். ஆனால் அதைச் சினிமாவிற்கு அப்படியே எடுத்தாள முடியாது! வரகவி கண்ணதாசனுக்கு, கண்ணன் மேல் இல்லாத உரிமையா? பாரதியையும் கண்ணனையும் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் உலவ விட்டுவிட்டார், நம்ம கவிஞர்!
மொதல்ல பாரதி பாட்டைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்! ஹூம்......இந்தக் காலத்துல எங்க நல்ல வேலைக்காரங்க கிடைக்கறாங்க? அப்படியே கிடைச்சாலும் "வேலைக்காரங்களையும் ட்ரைவர்களையும் வேலைய விட்டுத் தூக்கவே முடியாது...அப்பிடி ஒரு பாசம்"-னு நம்ம கவுண்டமணி ஒரு படத்துல மந்திரவாதியா அருள்வாக்கு டயலாக் கொடுப்பாரு! ஆனா எல்லாக் காலங்களிலும் நெலமை, இதே தான் போலும்! பாரதியாரே புலம்புவதைப் பாருங்க! :-)
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; 'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்; எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;
சோர்ந்தான் பாரதி....வந்து சேர்ந்தான் கண்ணன்!
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்; மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; ..... காட்டுவழி யானாலும், கள்ளர் பயமானாலும்; இரவிற் பகலிலே எந் நேரமானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்; கற்ற வித்தை ஏதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே! ......என்று கண்ணன் தன் பாட்டுக்கு அடுக்குகிறான்!
கண்ணனுக்கு இடம் கொடுத்த பாரதியின் கதி என்னவாயிற்று? ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு, நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் ......
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்! இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா, மினிமா ஆக வேண்டியது தான்:-)
பாருங்க, கண்ணதாசன் கலக்கும் சுவையான காப்பியை! இதைக் காப்பின்னு சொல்லுறதே பெருங்குற்றம்...ஆனாலும் சுவைக்காகச் சொல்கிறேன்.... பாரதியை டிகாஷனில் இறக்கி, மணக்க மணக்க, ஏ.ஆர்.ரகுமான் தந்த லியோ காப்பியைப் போல் கொடுக்கிறான்!
கண்ணே கனியமுதே என்ற ஒரு படம் வந்தது! ஞாபகம் இருக்கா? அதில் வரும் இந்தப் பாரதியார் பாடல் மிகவும் இனிமை! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸின் தேன் குரல்!
எப்பவும் ராதை தானே கண்ணனுக்கு ஏங்குகிறாள்! அடுத்த கண்ணன் பாட்டில், ராதைக்காக அந்தக் கண்ணன் ஏங்க வேண்டும், சொல்லிட்டேன், ஆமா! - அப்படின்னு நம்ம திருவரங்கப்ரியா ஒரு போடு போட்டார்கள்! இதோ நிறைவேற்றியாகி விட்டது அரங்கன் ஊர் ஆணையை! :-)
நண்பர் இலவசக்கொத்தனார், மகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய mp3 ஒன்றைத் தனி மடலில் அனுப்பியுள்ளார்; அவருக்கு நம் நன்றி. இதோ சுட்டி! San Diegoவில் சந்தானம் அவர்கள் பாடுவது என்று நினைக்கிறேன். ராகம்: பாகேஸ்ரீ
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!... மரணத்தின் தன்மை சொல்வேன்!... மானிடர் ஆன்மா மரணம் எய்தாது... மறுபடிப் பிறந்திருக்கும்!... மேனியைக் கொல்வாய்...மேனியைக் கொல்வாய்... வீரத்தில் அதுவும் ஒன்று! நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி, சென்று தான் தீரும் ஓர் நாள்...
(கண்ணா, உனக்கு எல்லாம் தெரியும், ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும், பரந்தாமனைத் தான் தெரியும்! நீயா என்னை இந்தப் பாவச் செயலுக்குத் தூண்டுவது?)
என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்! கண்ணன் மனது கல் மனதென்றோ... காண்டீபம் நழுவ விட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்! மன்னரும் நானே, மக்களும் நானே, மரஞ் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்... துணிந்து நில், தர்மம் வாழ்க!
(ஆனால் கொல்லப் போகிறவன் நான் அல்லவா? அந்தப் பழியெல்லாம் எனக்கல்லவா? கண்ணன் காட்டிய வழி என்று நீ எண்ணியதை நான் செய்து விட்டால், அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்தக் கொலைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல், சொல்!)
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!... போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே!... கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான்!... காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக, இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...
பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12) (வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன! பின் வருவன பாரதியாரின் வரிகள்...)
பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.
கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.
இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும். ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.
முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.
அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.
சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.
ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.
நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை