Thursday, January 04, 2007

25. ஆசை முகம் மறந்து போச்சே!

பாடல்: ஆசை முகம் மறந்து போச்சே
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி

நித்யஸ்ரீ பாடிடும் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது இங்கே!ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)


கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)


Maharajapuram Santhanam...

மார்கழி 21 - ஏற்ற கலங்கள் - இருபத்தி ஒன்றாம் பாமாலை

29 comments :

ஷைலஜா said...

//கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)//

கேட்டதும் (இந்தப்பாடலை) கொடுத்தவரே

நன்றி நன்றி!

கண்ணன் மீது உள்ள நேசத்தை இதைவிட சிறப்பாய் யாரால் சொல்லமுடியும்? ஆண்கவிஞர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறதோ?:)
'ஷை'லஜா.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// ஷைலஜா said...
கேட்டதும் (இந்தப்பாடலை) கொடுத்தவரே, நன்றி நன்றி!//

வாங்க ஷைலஜா, கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்! :-)

//ஆண்கவிஞர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறதோ?:)//

:-)
அன்பே உள்ளமானவர்கள் அல்லவா ஆண்கள்! அதனால் இருக்கும் போல! சரி தானே? :-)

பதிவர் அரைபிளேடு அவர்களே, உங்கத் தொடர் பதிவின் சிறப்பு கண்ணன் பாட்டிலும் தெரியுது பாருங்க! :-))

குமரன் (Kumaran) said...

//'ஷை'லஜா.//அட இதுவும் நல்லா இருக்கே. ஷை + லஜ்ஜா = ஷைலஜா. இரண்டு மொழிகளில் இருமடங்கு வெட்கமா உங்களுக்கு? :-))

குமரன் (Kumaran) said...

ஒரு நூறு முறைகளாவது இந்தப்பாடலை இதுவரைப் பாடியிருப்பேன் வாழ்க்கையில்.

குமரன் (Kumaran) said...

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்

பால் கறக்க ஏந்தி நின்ற பாத்திரங்கள் நிறைந்து பொங்கி வழியும் படி குறை வைக்காமல் தங்குதடையின்றி பால் சொரியும் வள்ளல்களாம் பெரும்பசுக்கள் நிறைய உடைய நந்தகோபனின் திருமகனே. விழித்தெழுவாய். ஊக்கம் உடையவனே. பெரியவனே. உலகினில் தோன்றி நிற்கும் சுடரே. துயில் நீங்கி எழுவாய். பகைவர்கள் தங்கள் வலிமையை எல்லாம் உன்னிடம் இழந்து தோற்று வேறு கதியின்றி நீயே கதி என்று உன் வாசலில் வந்து உன் அடிகளைப் பணிகிறார்களே அது போல் நாங்களும் நீயே கதியென்று உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்தோம்.

Anonymous said...

அருமையான பாடல், பட்டம்மாள் பாடி கேட்டிருக்கிறேன்.

நன்றி

ஓகை said...

இந்தப் பாடலை எழுதியதற்கு ரொம்ப நன்றி வெட்டி.

மிக அருமையான கண்ணன் பாட்டு.
பாடலை அனுபவித்து கேட்டோமானால் கண்ணன் மேலேயும் பாரதியாரின் மேலேயும் அபிமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.

// கண்ணன் மீது உள்ள நேசத்தை இதைவிட சிறப்பாய் யாரால் சொல்லமுடியும்? ஆண் கவிஞர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறதோ?:) //

என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்? எங்களால் கொஞ்சம் கூடவா புரிந்து கொள்ள முடியாது? இந்தப் பாடலை எழுதியவருக்கு பெண்களைப் பற்றி எவளவு தெரியுமோ நமக்குத் தெரியாது. ஆனால் கண்ணனைப் பற்றி அளவில்லாமல் அறிந்திருந்தாரே!

இன்னொன்று சொல்கிறேன். நித்யஸ்ரீ பாடலில் ஒரு மிக முக்கியமான சரனத்தைப் பாடவில்லை. "தேனை மறந்திருக்கும் வண்டும்...." .இதே பாடலை சுதா ரகுநாதனும் பாடியிருக்கிறார். இந்த இரண்டு பெண்கள் பாடியதையும் கேளுங்கள். இதே பாடலை மஹாராஜபுரம் சந்தானம் பாடியிருக்கிறார். அதையும் கேளுங்கள். அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாவங்கள் அதியற்புதமானவை. அதிலும் "தேனை மறந்திருக்கும்....." எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இணையத்தில் இருந்தால் தேடி சுட்டி கொடுக்க முயல்கிறேன்.

ஓகை said...

மஹாரஜபுரம் பாடியது இங்கே இருக்கிறது

http://www.musicindiaonline.com/s?q=Subramanya%20Bharathi&i=1&f=composer&s=&o=50

Natrajan said...

RAGAM RAGAMALIGAVA (OR) BOJPURIYA?
EDU SARI???
Natrajan

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆண் எழுதிய பாடலாக இருந்தாலும் பெண் பாடுவதாகத்தான் இந்த பாடல் அமைந்ததுதான் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி''

கண்ணன் மேல் இத்தனை காதலா!
என்று ஆச்சரியப்படவே வேண்டாம்.
அவனிலேயே அடங்கினால்தான் இந்த சோகமும் தீரும்.

'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.' அவன் எங்கிருந்தாலும் நாம் அவனைப் பற்றவேண்டும்.நன்றி ரவி.

சுதர்சன்.கோபால் said...

அட்டகாசமான பாடல்.

நினைவூட்டியமைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப, மாற்றாதெ பால் சொரியும் வள்ளல்களான ஆசிரியர்கள் இருக்கும் வரை நாம்
கண்ணன் அமுதம் பருகத் தடையில்லை.

கண்ணனே ஆக்கினான், கண்ணனெ காப்பாற்றுவான்.
நன்றி குமரன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே//

மிக நல்ல இடம் குமரன் இது! இறைவனின் அத்தனை அவதாரங்களையும் ஏத்தும் ஒரே வரி இது என்று சொல்லுவார்கள்!

உலகில் அவதாரமாய்த் தோன்றி, அவதாரப் பூர்த்தியாகி மறைந்தாலும், அவதார சம்பந்தங்கள் இன்றும் நிற்கின்றன!

தோன்றி மறைவது நாம்!
தோன்றி நிற்பது அவன்! என்றென்றும்!! தோற்றமாய் நின்ற சுடரே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Mathuraiampathi said...
அருமையான பாடல், பட்டம்மாள் பாடி கேட்டிருக்கிறேன்//

நன்றி மெளலி சார்! பட்டம்மாள் சுட்டியை நானும் தேடினேன்; கிடைக்கவில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஓகை said...

இன்னொன்று சொல்கிறேன். நித்யஸ்ரீ பாடலில் ஒரு மிக முக்கியமான சரனத்தைப் பாடவில்லை//

பாரதியின் இன்னும் இரண்டு சரணங்கள் உள்ளன; ஆனால் பாட்டில் பலர் பாடுவதில்லை போலும்!
இதோ அந்த இரண்டு சரணங்கள்:

ஓய்வும் ஒழிதலும் இல் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயும் உரைப்ப துண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப் போதும்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ணன் உருமறக்க லாச்சு;
பெண்களின் இடத்தில் இது போலே - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ ?

//இந்த இரண்டு பெண்கள் பாடியதையும் கேளுங்கள். இதே பாடலை மஹாராஜபுரம் சந்தானம் பாடியிருக்கிறார். அதையும் கேளுங்கள். அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாவங்கள் அதியற்புதமானவை//

சூப்பர் ஓகை ஐயா! நல்ல கவனித்து தேர்ந்த ரசனையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்! நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஓகை said...
மஹாரஜபுரம் பாடியது இங்கே இருக்கிறது//

நன்றி ஓகை ஐயா!
பதிவின் இறுதியில் அடியேனும் கொடுத்திருந்தேனே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//M said...
RAGAM RAGAMALIGAVA (OR) BOJPURIYA?
EDU SARI???//

நடராஜன் சார்,
நித்யஸ்ரீ ஜோன்புரியில் பாடுகிறார்!
ஆனால் பலர் ராகமாலிகையாகத் தான் பாடுகிறார்கள்!

ஆனால் பாரதியார் இதற்கு இட்ட ராகம் பிலஹரி! சிந்து பைரவியில் சுகாசினி சிவகுமாரிடம் இதைச் சொல்லுவார்கள் ஒரு காட்சியில்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆண் எழுதிய பாடலாக இருந்தாலும் பெண் பாடுவதாகத்தான் இந்த பாடல் அமைந்ததுதான் சிறப்பு//

திராச ஐயா
பெண் போல் உருகும் உள்ளத்துடன் பாடுவதால் பாடலுக்கு இன்னும் சிறப்பு அல்லவா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.' அவன் எங்கிருந்தாலும் நாம் அவனைப் பற்றவேண்டும்.நன்றி ரவி//

நன்றி பாலாஜிக்குத் தான் வல்லியம்மா! இந்தப் பதிவை அவர் தான் இட்டார்!

அவரே பதிவின் "தல"! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சுதர்சன்.கோபால் said...
அட்டகாசமான பாடல்.
நினைவூட்டியமைக்கு நன்றி//

நன்றி சுதர்சன்.கோபால்!

ஷைலஜா said...

//அன்பே உள்ளமானவர்கள் அல்லவா ஆண்கள்! அதனால் இருக்கும் போல! சரி தானே? :-)
//
50% சரிதான் ரவிசங்கர்!


குமரன் (Kumaran) said...
'ஷை'லஜா.//

//அட இதுவும் நல்லா இருக்கே. ஷை + லஜ்ஜா = ஷைலஜா. இரண்டு மொழிகளில் இருமடங்கு வெட்கமா உங்களுக்கு?//

குமரன்! அச்சம் தவிர்னு பாரதி சொல்லிட்டார்.
அதான் வெட்கத்தைவிடமுடியவில்லை! பெயர்லதான் 2மடங்கு!!!


//என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்? எங்களால் கொஞ்சம் கூடவா புரிந்து கொள்ள முடியாது? இந்தப் பாடலை எழுதியவருக்கு பெண்களைப் பற்றி எவளவு தெரியுமோ நமக்குத் தெரியாது. ஆனால் கண்ணனைப் பற்றி அளவில்லாமல் அறிந்திருந்தாரே//

ஓகை சொன்னால் மறுக்கமுடியுமா? கண்ணன்
பேர்ல ஆசிரியப்பா பாடவேண்டியதுதானே ஓகை?

தி. ரா. ச.(T.R.C.) said...
//ஆண் எழுதிய பாடலாக இருந்தாலும் பெண் பாடுவதாகத்தான் இந்த பாடல் அமைந்ததுதான் சிறப்பு. //

100% ஆமோதிக்கிறேன் திராச. அதிலும் பாருங்களேன் மனநிலையை உற்ற தோழிதான் அறிவாள் என்று வார்த்தைகளை அமைத்திருப்பது
அருமைதான்.

//சிந்து பைரவியில் சுகாசினி சிவகுமாரிடம் இதைச் சொல்லுவார்கள் ஒரு காட்சியில்//
ரவிசங்கர் என்ன இது நான் எப்படி அந்தக்காட்சியை மறந்தேன். இதுக்காகவே சிடி வாங்கிப் பாக்கப்போறேன்!
ஷைலஜா

Anonymous said...

பாட்டுக்கு மிகப் பொருத்தமான படம். ஆசை முகம் மறந்து போச்சே என்று அந்த பெண் அங்கலாய்ப்பதும் அதனை நெருங்கிய தோழியர் கேட்டு பரிதாபப்படுவதையும் முதல் ஓவியம் நன்றாக காட்டுகிறது.

எப்படியோ ஆசை முகம் நினைவிற்கு வரும் படி, கண்ணன் வரும் படி, இந்தப் பாடல் செய்து கண்ணனும் இரண்டாவது படத்தில் வந்துவிட்டான். சந்தோஷம்.

நாமக்கல் சிபி said...

//கேட்டதும் (இந்தப்பாடலை) கொடுத்தவரே

நன்றி நன்றி!//

ஷைலஜா மேடம்,
நான் நீங்க கேட்டதே தெரியாமல் தான் எடுத்து போட்டேன். பிறகுதான் கண்ணபிரான் சொன்னார்...

நீங்கள் விரும்பியதும் கொடுத்தது கண்ணன் தான் :-)

நாமக்கல் சிபி said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வல்லிசிம்ஹன் said...
'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.' அவன் எங்கிருந்தாலும் நாம் அவனைப் பற்றவேண்டும்.நன்றி ரவி//

நன்றி பாலாஜிக்குத் தான் வல்லியம்மா! இந்தப் பதிவை அவர் தான் இட்டார்!

அவரே பதிவின் "தல"! :-)
//
எல்லோரையும் வழி நடுத்துபவர் தாங்கள்தானே... அதனால் நன்றி உங்களுக்கே KRS!!!

நாமக்கல் சிபி said...

//Sai Devotee 1970s said...
பாட்டுக்கு மிகப் பொருத்தமான படம். ஆசை முகம் மறந்து போச்சே என்று அந்த பெண் அங்கலாய்ப்பதும் அதனை நெருங்கிய தோழியர் கேட்டு பரிதாபப்படுவதையும் முதல் ஓவியம் நன்றாக காட்டுகிறது.

எப்படியோ ஆசை முகம் நினைவிற்கு வரும் படி, கண்ணன் வரும் படி, இந்தப் பாடல் செய்து கண்ணனும் இரண்டாவது படத்தில் வந்துவிட்டான். சந்தோஷம்.
//

இந்த பாடலுக்கு படம் கிடைப்பதற்கு தான் கொஞ்சம் நேரம் அதிகமாகியது... இருந்தாலும் இதற்கு தகுந்தாற் போல் படம் கிடைத்தது மகிழ்ச்சியே!!!

தங்களின் பாராட்டிற்கு நன்றி!!!

Anonymous said...

இந்த பாடலைக் கேட்கும்போது - பிரியா ஸிஸ்டர்ஸ் நினைவுதான் வரும். அவர்கள் பாடிதான் அதிகமுறை கேட்டிருக்கிறேன் நான்!
- இந்தமுறை ஜெயா டி.வி மார்கழி மகோற்சவம் - அதிலும் இந்த பாட்டை பாடியிருக்கிறார்கள்.

Anonymous said...

என்னை மிகவும் பாதித்த பாரதி பாடல் இது. இதற்காகவே ஒரு பாசுரமடல் எழுதினேன். இப்பாடலை இன்னும் கூட மெருகேற்றிப் பாடலாம் என்று தோன்றுகிறது. சுட்டிகள் தந்த அனுபவம் போதவில்லை. மற்றவர்கள் பாடியதையும் கேட்கவேண்டும்!

எல்லோரையும் பாதித்த பாடலென்று பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது!

Anonymous said...

I think this one is better.

any comments?

http://youtube.com/watch?v=VoNLQmF_U38

Bala

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP