Thursday, September 30, 2010

கண்ணனைக் காணவில்லை


பக்த மீரா படத்தில் மற்றுமொரு அருமையான பாடல். அதிகபடியான சோகத்தை வரவழைக்கும் பாடல் என்று முன்னரே சொல்லிவிடுகிறேன்.:-)

உடல் உருக உளம் உருக
ஊனெலாம் நெக்குருக
குழலூதி இசை பாடி, எனைத் தேடி வந்து
கடல் வண்ண திருமேனி எழிற் கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த  கண்ணா !  என் கிரிதரனே !
படமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ !
பாவி உயிர் உன் பிரிவால் வேள்வது அறிந்திலையோ !
இடர் கடலில் மீராவை தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் ?
என்னரசே ! எங்கு மறைந்தனையோ?

 மேலே உள்ள பாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.

யாரும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா? இப்படி "என்னரசே ! என்னரசே! எங்கு மறைந்தனையோ?" என்று அவள் கதறியது அரசன் காதில் விழுந்தது. துக்கத்தில் ஆழ்ந்த மீராவை மேலும் தவிக்க விடாமல்,  காவிரி ஆற்றங்கரையில்  கிடந்தபடியே உலகை ஆளும் அரசன், அரங்கன், அவளுக்கு தரிசனம் தருகிறானாம். கொவ்வைக் கனி போன்று சிவந்த வாய், செந்தாமரைக் கண்கள் இவற்றை கண்ட உடன்  தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடைந்த ஆனந்த நிலையை மீராவும் அடைந்தாள். :-)

இனிதிரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே*
தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்*
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்*
பனியரும்பு உதிருமாலோ? என் செய்கேன் பாவியேனே ?
                                                      
பாயுநீர் அரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே.
                              (திருமாலை - 18, 20)
மேலே உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.

Sunday, September 26, 2010

பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய மீரா பஜன் (ஹிந்தி பாடல்). உங்களுக்கும் பிடிக்கும் என்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். :-)
கலைமகள் மகள் எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கே கேட்கலாம்.


[மீரா பஜனை]

சாக்கர் ராகோ ஜி ! மனே சாக்கர் ராகோ ஜி !

சாக்கர் ரஹஸூ பாக் லகாஸு நித உட் தர்சன பாஸூ
ப்ருந்தாவன கீ குஞ்சகலின் மே தேரீ லீலா காஸூ

மோர முகுட பீதாம்பர ஸோஹ கல பைஜந்தி மாலா
ப்ருந்தாவன மே தேனு சராவே மோஹன முரளி வாலா

யோகி ஆயா யோக கரண கோ, தப கரணே சன்யாசி
ஹரி பஜன கோ சாது ஆயா, ப்ருந்தாவன கே வாசி

மீரா கே ப்ரபு கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா
ஆதிராத ப்ரபு தரசன தேன்ஹே ப்ரேம நதீ கே தீரா[பொருள்]

வைராக்யம் வாய்ந்த தீரர்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றும் மீராநாதன் அளவிட முடியாத ஆழமானவன் ! கம்பீரமானவன் ! தீரர்களுக்கு எல்லாம் தீரன் ! இவன் வைஜயந்தி மாலை அணிந்தவனாக, மயிற்பீலி அலங்கார கிரீடம் தரித்தவனாக, பீதாம்பரனாக, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு பிருந்தாவனத்தில் மாடுகள் மேய்ப்பவன். காண்போர் மனதை மயக்கும் அழகன்.

மோஹன கிருஷ்ணா ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் ! உன் தரிசனத்தை தினமும் பெறுவேன். கொடி மண்டபங்கள் நிறைந்த பிருந்தாவன தெருக்களில் எல்லாம் உன் லீலைகளைப் பாடி செல்வேன். உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன். அந்தத் தோட்டத்திற்கு பிருந்தாவன வாசிகள் பலரும் வருகை புரிவர். யோகம் செய்ய யோகிகள் வருவர். தவம் செய்ய சன்யாசிகள் வருவர். ஹரி பஜனை செய்ய சாது ஜனங்கள் வருவர். அமைதியான இரவில் உள்ளத்தில் அன்பு பொங்கும் வேளையில் நீயும் வருவாய். அனைவருக்கும் உன் இன்ப தரிசனம் தருவாய். ஐயே ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !

Sunday, September 19, 2010

மீரா இதயம் கோவில் கொண்டான்

பக்த மீரா படத்தில் வரும் ஓர் இனிய பாடல்.
அமரர் கல்கி எழுதிய  இந்தப் பாடலை எம்.எஸ் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.லீலைகள் செய்வானே - கண்ணன்
மாயைகள் புரிவானே!
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீலமுகில் மணிவண்ணன் - கண்ணன் (லீலைகள்)

கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன் !
வானவர் வாழ மாநிலம் மீது
ஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன் (லீலைகள்)

ஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே !
மாய புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே ! - கண்ணன் (லீலைகள்)

ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவான் !
திருமுகம் அதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் - கண்ணன் (லீலைகள்)

மாயனைக் காண மாமுனியோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார் !
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கிலம் என்று வியந்தார் !

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார் !
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார் !

மீரா ஹிருதயம் கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான்  - பேதை
மீரா ஹிருதயம் தனில் - அடியாள் மீரா...
 
மீரா ஹிருதயம்  கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான் !
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தந்தான் - கண்ணன் (லீலைகள்)

 

Wednesday, September 08, 2010


சமீபத்தில் வலையில் ஆய்ந்து கொண்டு ரமாஸ்தோதிரத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையான தமிழில் பொருள்பொதிந்த துதியை படித்தவுடன் இதை பதிவில் இடலாம் என்று தோன்றியது.கண்ணம் பதிவுதான் என்றாலும் ராமனையும் பாடலாம். அதிலும் இந்தத்துதியில் கண்ணனைப் பற்றியும் வருகிறது. நீண்டநாட்களாக எழுதாமல் இருந்த என்னயும் எழுத வைத்தது ராமகிருஷ்ணரின் கருணைதான். அனைவரும்படித்து பார்த்து ஆனந்தம் அடையலாம் இதை எழுதியவார் யார் என்று தெரியவில்லை.இசைச்சுட்டியும் கிடைக்கவில்லை. கேஆர்ஸ் மனது வைத்தால் கிடைக்கலாம்

பூதலத்தை யோரடி அளந்த ரூபமானபொற்
பாததாமரைச்சரண்பணிந்து பூசை செய்குவேன்
மாதவாகோவிந்தாஹரிகேசவாநாராயணா
நாதகீதவேதமந்த்ர ராமராமராமனே!


சூகரத்தின் வடிவெடுத்த சுந்தரா சௌந்தரா
ஏகலோகநாயகா நீயெங்குமாய் நிறைந்தவா
மேகமா யளாவிநின்ற வேதஞானதேசிகா
நாகமீதில் மேவுகின்ற ராமராமராமனே!


காரணா தாமோதரா கரியநீலவண்ணனே
பூரணா பயோதரா புராதனா நிராதனா
வாரணாதிமூலமென்ற போதுவந்த வாமனா
நாரணா யசோதைபுத்ர ராமராமராமனே!


வீரசிம்ஹ உக்ரமுற்ற விஜயன்மீதுதசரதன்
பாரின்மீது மைந்தனாகவந்த பஞ்சவர்சகாயனே
பூரணா க்ருபாகரா புதியதூணில்வந்துமுன்
நாரஸிம்ஹ ரூபமான ராமராமராமனே!


மாமனான கம்சனை வளைந்துகொன்று வென்றவா
பூமியுண்டுமிழ்ந்தவா புகழ்ந்தபொன்னரங்கனே
வாமனஸ்வரூபனான வாசுதேவதேவனே
நாம மாயிரம் படைத்த ராமராமராமனே!


கோடி சூரிய ப்ரகாச கொண்டல்மேக வண்ணனே
வாடிநொந்திடைந்திடாமல் வந்தருள்புரிந்தருள்
தேடிஅந்தகன் வெகுண்டுசீறி மேவி உன்னிடம்
நாடி வந்தபோது காரும் ராமராமராமனே!


தந்திதான் முன்னோலமென்ற போதுவந்த வாமனா
வந்துகாத்ததன்றுபோல் வந்துகாப்பதெந்தநாள்
செந்திருமணாளனான ஸ்ரீநிவாஸநாதனே
நந்திசேகரன் தரித்த ராமராமராமனே!


எண்ணி யன்பரானபேர் இடத்திருந்து வாவியே
புண்ணியநாம தேசிகா புவனரக்ஷகாரனே
வண்ணனே லீலாவிநோதவாசனே நின்மலரடி
நண்ணினேன் வைகுந்தமேவும் ராமராமராமனே!


தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!


களபவாசனை மிகுந்த கரியமேகவண்ணனே
துளபமாலை மார்பினில் புனைந்த சுருதிவேதநாயகா
உளம் மகிழ்ந்து கருணைகொண்டு உன்னடிமையென்று நான்
நளினபாதம் தந்து காரும் ராமராமராமனே!


இல்லறத்தின் மாயையாலே ஏங்கினேன்மயங்கியே
புல்லறிவுகொண்டுயானும் போற்றி உன்னைப் பணிந்திலேன்
அல்லல் உற்றகாயமென்று அறிந்துவந்து என்னுளே
நல்லறிவு தந்து ரக்ஷி ராமராமராமனே!


சங்குசக்கரம்தரித்த சாருஸ்ரீநிவாசகா
எங்குமாய்நிறைந்தவா இலங்குமுந்நூல்மார்பனே
மங்குல்மேனியாள் இலங்கு மகரகுண்டலாதிபா
ரங்கநாயகா முகுந்தராமராமராமனே!


ஆழிமீது நின்றுயர்ந்த அச்சுதா முன்னாதியில்
ஏழுமராமரத்தை எய்தி ராவணாதிகள்
மாளவேசரம் தொடுத்த மாயனேமகிழ்ந்து
எந்நாளும் நீ உகந்துகாரும் ராமராமராமனே!


கோலினின்று உயர்ந்தவா குசத்தில் ஏறிநின்றவா
காளைகன்றுமேய்த்தவா முன்கம்சனைவதைத்தவா
சாலநான்முகனை யுந்திதன்னில்படைத்தவா
நாலுவேதமும் புகழ்ந்த ராமராமராமனே!


மத்ஸ்யரூப ராகவா வராகரூபராகவா
கொச்சை யாயருக்குகந்து குன்றெடுத்துநின்றவா
பச்சை ஆலில் துயின்ற பச்சைநீலவண்னனே
ரக்ஷகாஸ்ரீராகவா ஸ்ரீராமராமராமனே!


தஞ்சமாவதேதுன் பாததாமரைச்சரண்
மிஞ்சவேறு தப்புமில்லைமேகநீலவண்னனே
அஞ்சலஞ்சல் என்று கையமர்த்தி ஆதரிப்பராரையா
ரஞ்சிதப்ரகாசனான ராமராமராமனே!


விருந்துசெய்ய வேண்டுமென்று விதுரன்மனையிலேகியே
இருந்துமாயையாக வில்லிரண்டு துண்டமாக்கினாய்
பொருந்துமாயமோ மயக்க புண்டரீகமாயனே
நறுந்துளவ மணிந்தரங்க ராமராமராமனே!


மாயவாமுன்பாரதப் போர்வந்துதோன்றும் நாளையில்
நேயமாய் அர்ச்சுனர்க்கு நின்று தேரையூர்ந்தவா
ஆயனேஅனந்தமான ஆதிலட்சுமியென்னும்
நாயகிமணாளனான ராமராமராமனே!


பாவியென்றுபேர்கொடாதே பஞ்சபாதகங்களை
மேவிநூறு குற்றமே செய்தாலும் வந்துமெய்தனில்
காவலாகநீயிருந்து கருணைகொண்டுகாரையா
நாவினால் நிதம்துதிப்பேன்ராமராமராமனே!


அம்புவிழிமாதர்கள் ஆசைதன்வலைக்குள்ளே
இன்பசாகரந்தரித்த எண்னமற்றவஞ்சகன்
வம்புகோடிசெய்திடினும் மாயனேபொறுத்திடாய்
நம்பினேன்நான் உனதடிமைராமராமராமனே!


கந்தமர்துழாயணிந்த கருடகேசவாகனா
சொந்தடிமை இவனுமென்று சூக்ஷ்மபாதம் நல்கியே
இந்தவேளைவந்து ரட்சி ஏகலோகநாயகா
நந்தகேசவா முகுந்தராமராமராமனே!


சிகரகோபுரம்சிறந்த செய்யவீதிசூழவே
மகரதோரணம் சிறப்ப வரிசைமண்டபங்களும்
பகரமுற்றகொடிகளும் பணிந்துதான் அயோத்தியில்
நகரவாசமாயிருந்த ராமராமராமனே!


குற்றமென்ப தெதுசெய்தாலும் கொலைகள்செய்திருப்பினும்
பெற்றதாய்விரோதமுண்டோ பிள்ளையென்றுகொஞ்சுவாள்
அற்றதன்மையாவனோ யான்குறைசெய்தாலுமென்
நற்றமிழ் உகந்து காரும்ராமராமராமனே!


சாடிசெய்துரியோதனன் சபையில்திரௌபதிதனை
ஆடையுரித்தபோது ஆதிமூலமென்றிட
வாடிடாமல்நாணம்காத்து விளையுமாறுசேலைகள்
நாடியொன்று இலட்சமாக்கும் ராமராமராமனே!


கற்சிலையெனச்சபித்த அகலிகைசாபத்தையும்
உச்சிதமாகவென்று அந்தசாபம்நீக்கினாய்
ஜானகிதனைமேவ ஆசைதன்மிதிலைக்குளே
நற்சிலைவளைத்துநின்ற ராமராமராமனே!


வாசமாளிகைபொலிந்த மண்ணையுண்டவண்ணனே
கேசவாமுராரிநந்த கிருஷ்ணனேமனோகரா
தாசனென்றுபாததாமரைச் சரண்கொடுத்தருள்
நேசவேங்கடேசனான ராமராமராமனே!


ஆவல்கொண்டுபாரிலே அலைந்துமேயலாதிகள்நின்
சேவடிக்காளாய்வராத ஜென்மமென்னஜென்மமோ
பாவகாரியென்றெண்ணாமல் பாதுகாத்தருள்புரி
நாவலர்க்கன்பால் உகந்தராமராமராமனே!


ஏகவஸ்துவாகிநின்ற எங்கள்ரங்கநாயகா
சாகரத்தினின்றுயர்ந்த சஹஸ்ரநாமதேசிகா
மோகனாசௌந்திரா முராரிமோக்ஷகாரணா
காகவண்னன் ஆகிவந்த ராமராமராமனே!


ஜானகிமணாளனாய் தரணியையோரடியுமாய்
வானமோடளாவிநின்ற வராகவவதாரனே
நமோநமோநாராயணா முகுந்தநந்தகேசவா
ஞானதேசிகப்ரதாப ராமராமராமனே!


பலச்ருதி


செப்பியேவுந்திபோற்றும் செங்கண்மால்பாதம்போற்றி
முப்பதும்படித்தோர்கேட்டோர் முற்றிலுமெழுதினோர்க்குத்
தப்பில்லாவரங்கள்தந்து சந்ததிகிளைபெற்றோங்க
இப்புவிதனில்வாழ்ந்து எண்ணமற்றுஇருப்பர்தாமே

Sunday, September 05, 2010

மறவேனே எந்நாளிலுமே...

பக்த மீரா படத்தில் வரும் ஒரு பாடல். மீராவின் பக்தியைப் புரிந்து கொள்ளாத சிலர் அவளைக்  கொல்ல சதி செய்வர். மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்படும். அவள் அதனைக் குடித்தவுடன், அருகில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தின் முக நிறம் மாறிவிடும். (அதே நேரத்தில் த்வாராகாவில் உள்ள கண்ணன் கோயில் கதவுகள் தானே அடைத்து கொள்ளும்.)

மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுத்த உறவுக்காரப் பெண் உண்மையை சொல்லிவிடுவாள். மீரா விஷம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பதையும், தனக்கு எந்த ஒரு துன்பமும் வராமல் அவள் வணங்கும் கிரிதர கோபாலன் அருள் செய்ததையும் உணர்கிறாள். அந்த நேரத்தில் பொங்கி வரும் பாடல் இது.

படத்தில் எம்.எஸ் அவர்கள் பாடிய  பாடலை இங்கே கேட்கலாம்.மறவேனே எந்நாளிலுமே - கிரி
தாரி உனதருளே - கிரி
தாரி உனதருளே !

நஞ்சை நீ உண்டனையோ - இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ - ஒரு
விஞ்சை புரிந்தனையோ !

ஆரங்கள் சூடிடுவேன் - அலங்
காரங்கள் செய்திடுவேன் - பல
கீதங்கள் பாடிடுவேன் !

கண்ணா என் கண்மணியே - முகில்
வண்ணா எந்தன் துரையே - உன்னைப்
பண்ணால் துதித்திடுவேன் !

மறவேனே எந்நாளிலுமே !
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!

Wednesday, September 01, 2010

அப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு! கண்ணன் பாட்டு!

கண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...
மாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...
இதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...
நெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...
பால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..
கை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...

மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பிறந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா!
இதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய்! இனி உனக்குத் தூக்கமே போச்சு! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா! அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா!இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன! கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா!அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்புறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா!
இவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்!
வெண்ணைய்க்காடும் பிள்ளையாய்!
அனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்!

* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்டும்!
* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்!

* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்!
* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்!
* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும்? வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்!

பாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே! உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்?
பிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா!
மகரந்த வாசம் வீசும் மாதவா! ராகவா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கள்ளமில்லாத கள்ளக் குழந்தையாய்,
பல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,
நீ எப்பமே நல்லா இருக்கணும்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...
பல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!எங்கள் முழு"முதல்" தெய்வமே...
தொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...

என் பால் நோக்காயே ஆகிலும்...
தரு துயரம் தரினும்...
ஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...

உன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே
நானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி
அவனோடு பல்லாண்டு பல்லாண்டு...

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!

அப்பா! எங்கள் பெருமாளே!
புகல் ஒன்றில்லாப் பேதை...
இரு கரம் தூக்கினேன்! ஏலோர், ஏலோர்!

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!

எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி!

இன்று கும்மி அடிக்கலாம் வாங்க! வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல! கண்ணன் பிறந்த நாள் கும்மி! அதுவும் நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் கும்மி:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday KaNNa! - From me & my murugan :)


கண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா என்று பலவிதமான பண்டங்களைக் குழந்தைகள் ஜாலியாக உண்டு மகிழும் நாள்! மகிழட்டும்! மகிழட்டும்!

ஆனால் பெரியவர்கள் சற்றே நினைவில் வையுங்கள்! கண்ணன் பிறந்த நேரம் இத்துணை ஜாலியாகக் கழியவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர...

பால், தயிர், வெண்ணெய், நாவற்பழம் என்ற எளிமையும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்!
எனவே நம்மளவில் பூசைகளில் எளிமையைக் கைக்கொள்வோம்!

அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல் என்பனவற்றை எல்லாம், அருகில் காப்பகங்களில்....ஒருத்தி மகனாய்/மகளாய்ப் பிறந்து, ஒளிந்து வளரும் குழந்தைகளோடு பகிர்ந்துண்டு மகிழ்வோம்! அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!கண்ணன் பிறந்தநாள் பதிவுகளின் தொடர்ச்சியாக..இது மூன்றாம் பதிவு! முத்தான பதிவு! ஏன்-ன்னா, எல்.ஆர். ஈஸ்வரியின் துள்ளலான கும்மி ஒலிக்கும் பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் கோதை மற்றும் முருகன் பிறந்தநாள் பதிவுகள் வருமே தவிர, கண்ணனுக்கு ஓரவஞ்சனை தான் செய்துள்ளேன் போலும்! இப்பத் தான் பார்த்தேன்! :)
அதான் இந்த ஆண்டு, ஓரவஞ்சனையை ஈரவஞ்சனை ஆக்கிறலாம்-ன்னு.... :)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-இன் கிருஷ்ண கானங்களின் நேற்றைய தொடர்ச்சியாக, இன்று எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணன் கும்மாளம்!
அவருக்கே உரித்தான துள்ளலோசையோடு! கேட்போமோ கண்ணன் கும்மி?
அப்படியே பெரியாழ்வாரின் கண்ணன் பிறந்த நாள் குதூகலங்கள் போலவே இருக்கும் பாருங்க!

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

இதோ ஒலிச்சுட்டி! கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்


குழந்தைகள் கும்மி அடிக்கும் காணொளி:))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP