Friday, May 27, 2011

ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் பாடிய பெருமாள் பாட்டு!

இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!

எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!:)
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)

இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)




ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)


கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டா?
அம்மா வாயில் சதா முருகா என்று மட்டும் தானே வரும்? மறந்தும் புறம் தொழுவார்களா என்ன? :)




ஒரு வகையில் KBS அம்மாவின் காதல் கெட்டிப்பட, கண்ணனே ஒரு "பாழும்" காரணமாகப் போய்விட்டான்! முன்பு குடுத்த வரலாற்றுப் பதிவைப் படிச்சிப் பாருங்க, தெரியும்!
திருநீற்றையே நீரில் குழைத்து, நெடுக்காக நாமம் போல் இட்டுக் கொண்டு, அவர்கள் நடித்த படம்: திருமலை தென்குமரி! அதில் தான் KBS கண்ணன் பாட்டு!

பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க..."ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக் கவலை?"




ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்


இது தான், KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டு!


அப்பா...
என் நினைவுக்குத் தெரியாத காலத்தில் இருந்து எனக்கு நின்று விட்ட திருவேங்கடமுடையானே!
நாயேன், உன் வீட்டு வாசலை வந்தடைந்தேன்....
அடியேனை அணைத்து, ஆட்கொண்டு அருளே! என் முருகனோடு என்னை ஏழேழ் பிறவிக்கும் சேர்த்தருளே!

Saturday, May 07, 2011

'வண்டு'த்துதி

                                          'வண்டு'த்துதி

                                     [shanmatha+sthapanacharya.jpg] 


'சங்கர ஜெயந்தி'யான இன்று சங்கரர் பெருக்கிய
  புனித கவிகங்கையிலிருந்து சில துளிகளையாவது
  ப்ரோக்ஷணம் செய்து கொள்வோம்,வாங்க!




      சங்கரரின் 'வண்டு' ஸ்தோத்ரம்

                 [வண்டுத்துதி பற்றிய எனது இந்தப்பதிவைப்   படிப்போர்க்கு  
                       ஒரு  'கொசு'(ரு)த்துதியும் விளக்கமும் இலவசம்!!]
                
               முதலில் இந்தத்துதியின் ஆறு ஸ்லோகங்களை 
   பொருட்சுருக்கத்துடன் அளிக்கிறேன்;இதைப் படித்ததும், இந்த
   ஸ்தோத்திரத்தைப்பற்றி அறியாதவர்கள் ,

  "ஸ்தோத்ரத்துக்கும் வண்டுக்கும் என்ன சம்பந்தம்?"
   "இதுலே வண்டைப்பற்றி  எதுவுமே இல்லையே?" 

   என்று வினாக் கணைகள்   விடுவீர்கள்!   
  
                                பொறுமை!பொறுமை!!

                        நிதானமாகக் கீழுள்ள ஒவ்வொரு  சொல்லையும்
  பக்தியோடு படித்து விடுங்களேன்!

   வண்டுப்புதிருக்கு விடையும் உங்களுக்காகக்  காத்திருக்கு!



                                            ஷட் பதீ  (விஷ்ணு ஸ்தோத்ரம்) 

         (1 )  அவிநய-மபநய விஷ்ணோ
                 தமய மந  :சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் I
                 பூத -தயாம் விஸ்தாராய
                 தாரய சம்ஸார-ஸாகரத :  
                                                                       
 "  ஹே    விஷ்ணுவே!பணிவின்மையைப் போக்குவாய்!
    மன அடக்கமும்,(பலவித வேட்கைகள் எனும் கானல்
   நீர் நோக்கி இந்திரியங்கள் ஓடாதபடி)புலனடக்கமும்
    அருள்வாய்!
   அனைத்துயிருக்கும் தயைகாட்டும் பரந்தமனமருள்வாய்!
   பிறவிக்கடல் தாண்டிக் கடைதேறக்கருணை  புரிவாய்!"

           (2 ) திவ்ய-துநீ மகரந்தே
                  பரிமள பரிபோக சச்சிதானந்தே I
                 ஸ்ரீபதி பதாரவிந்தே
                பவ-பய-கேத-ச்சிதே வந்தே
  
   "புனித கங்கை எனும் தேனைச்சொரிவதும்,
    பரமானந்தம் எனும் பரிமள சுகந்தத்தால் 
    சுகமளிப்பதுமான  ஸ்ரீபதியின் சரண கமலத்தை,
    சம்ஸாரபயத்தையும் துக்கத்தையும் சிதைக்க  
    வல்லதான  பாதாரவிந்தத்தை  நமஸ்கரிக்கிறேன்."

         (3 )ஸத்யபி பேதாபகமே
              நாத தவாஹம் ந மாமகீனஸ் -த்வம் I
              ஸமுத்ரோ ஹி தரங்க :
             க்வசந ஸமுத்ரோ ந தாரங்க :

    "பகவானே!நீயும் நானும் வேறில்லை என்றாலும்
      நீ என்னுடைமை என்பது தவறே;
      நான் உன்னுடைமை என்பதே மெய்;
      நீ மகா சாகரமென்றால் நான் அதில்
      ஒரு சின்ன அலை ;ஜீவாத்மாவான நான்தான்  உன்னைச்
      சார்ந்தவனே அன்றி ,பரமாத்வான நீ என்னைச்
      சார்ந்திருப்பவனல்ல"

           (4 )உத்த்ருத -நக நகபிதனுஜ
                தனுஜகுலாமித்ர மித்ர-சசி -த்ருஷ்டே I
               த்ருஷ்டே பவதி ப்ரபவதி
               ந பவதி கிம் பவ -திரஸ்கார :




    "மலையைத் தாங்கியவனே!(அம்ருதம் எடுக்கக் கடல்
      கடைந்தபோது ஆமை அவதாரத்தில் மந்தரமலை
      சுமந்தவன்,கோகுலத்தில் இந்திரனின் சதியால் 
      பெய்த பேய்மழையிலிருந்து  மக்களைக்காக்க
       கோவர்தனகிரியைக் குடையாய்ச் சுமந்தான்)
     மலையைப் பிளந்த இந்திரனுக்கு இளையோனே!
     (இந்திரன் முதலான  தேவர்களின் பெற்றோரான
       கஷ்யப அதிதி தம்பதிக்குபிள்ளையாக அவதரித்தவர்தான்
       வாமனர்!)அசுரர்களின் பகைவனே!சூரிய சந்திரரை
       இரு கண்களாகக் கொண்டவனே!உன் தரிசனம்
        கிடைத்துவிட்டால்,பிறவிப்பிணி
        போகாமலிருக்கமுடியுமா?"

                (5 )   மத்ஸ்யாதிபி-ரவதாரை -
                         ரவதாரவதா-வதா ஸதா வஸுதாம் I
                         பரமேஸ்வர பரிபால்யோ
                         பவதாபவ -தாப-பீதோஹம் II




       " மீனவதாரம் முதலான பல அவதாரங்களாக
        இறங்கிவந்து உலகைக் காக்கும் பகவானே!
        சம்ஸாரத்தில்  மூழ்கி  பீதியடைந்திருக்கும் 
        என்னையும் காத்தருளவேண்டும்."

                (6 ) தாமோதர குணமந்திர
                      சுந்தர -வதநாரவிந்த கோவிந்த I      
                       பவ-ஜலதி-மதன மந்தர 
                      பரமம் -தர-மபனய த்வம் மே II  



  " ஹே,தாமோதரா!குணக்குன்றே!அழகிய கமலவதனமுடைய
  கோவிந்தா!சம்ஸார சாகரத்தைக் கடைந்து ஆத்மதத்வமெனும்
 அம்ருதத்தை  எடுக்க மத்தான மந்தரமலையாய் இருப்பவனே!
 என்னைக்கலங்கவைக்கும் சம்ஸாரபயத்தைப் 
 போக்கியருள்வாய்!"
                                                  
                                        படித்தாகிவிட்டதா?


      "ஷட் பதீ " என்ற  தலைப்பைக்   கவனித்தீர்களா?
        அதிலேயே பாதி விடை ஓளிந்திருக்கு!


      பொருள்  ( 1 )  ஷட் = ஆறு  , பதீ =பதங்கள்/ஸ்லோகங்கள்
                                 ஷட்பதீ =ஆறு பதங்களுள்ள ஸ்தோத்ரம். 

       பொருள் (2 )ஷட்பதீ =ஆறு காலுள்ள  ஜீவஜந்து.-(வண்டு)


       சங்கரர் என்ற மஹாகவி  நமக்குள் பக்தியூட்டுவதற்காக
       செய்த யுக்தி தான் இந்த  ஸ்லேடை  நயமுள்ள தலைப்பு!!
   ['வண்டுத்துதி' என்ற தலைப்பு  தூண்டும் ஆர்வத்தையும் ஆவலையும்,ஒரு
       சாதாரண தலைப்பு தூண்டி இருக்க முடியுமா ?]


        பலஸ்ருதி போல் அமைந்துள்ள ஏழாவது ஸ்லோகத்தைப்
        படித்தால் மீதி விஷயமும் புரிந்துவிடும்!


                   ஏழாவது ஸ்லோகமும் அதன் விளக்கமும் இதோ :


 (7 )நாராயண கருணாமய சரணம் கரவாணி
       தாவகௌ சரணௌ!  
       இதி ஷட்பதீ மதீயே வதன-ஸரோஜே ஸதா வஸது II


                           


    "நாராயணனே!கருணாமயமானவனே!உன்னிரு
      திருவடிகளைத்தஞ்சமடைகிறேன்;
     இந்த ஆறுஸ்லோகங்கள்(ஷட்பதீ) எந்தன் வதனம்
     எனும் தாமரையில் எப்பொழுதும் வசிக்கட்டும்"
  
                          ''இதி ஷட்பதீ....'' எனும் கடைசி  வரியில்,


      'பதீ '="ஸ்லோகங்கள்" என்று கொண்டால்


      ''இந்த ஆறு சுலோகங்களும் என் வதனத்தாமரையில்
       எப்போதும் இருக்கட்டும்''   என்றிருக்க,


     'பதீ' '= ''சொற்கள்"  என்று பொருள் கொண்டாலும்,
     "இந்த ஆறு சொற்களும்  என் வதனத்தாமரையில்  
       எப்போதும் இருக்கட்டும்" என்று  பொருளமையுமாறு
       சொல்லாடல் செய்திருக்கிறார்  சங்கரர்!


                                    எந்த ஆறு சொற்கள்? 


 "கருணாமயமான நாராயணா! உன் இணையடியில்
  சரண் புகுகிறேன்" என்ற பொருளமைந்த
"நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ!"         
  என்ற ஆறு சொற்கள்!


                 முதல் ஆறு ச்லோகங்களையோ அல்லது ஏழாவது
    ஸ்லோகத்தின் ஆறு சொற்கள் கொண்ட முதல் வரியையோ
    எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால்,அந்த ஆறு  
     ஸ்லோகத்தில் நாம் வேண்டுவதெல்லாம் நிறைவேறும் 
    என்று சொல்லாமல்   சொல்கிற பலஸ்ருதியாக 
     அமைந்திருக்கிறது ஏழாவது சுலோகம்.


                                              அதெல்லாம் சரிதான் !!
     ஆனால் வினயத்திற்கோர் உதாரணமாக விளங்கிய
     சங்கரர், "வதன சரோஜே " என்று தன் வதனத்தைத்  தானே
     தாமரையோடு ஏன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்?


            இதன் காரணவிளக்கமே வண்டுப்புதிரையும்  முழுமையாக 
   அவிழ்த்துவிடுவதைப்  பார்ப்போம் வாங்க!

         "ஷட்பதீ"என்றால் ஆறுபத ஸ்தோத்ரம்  என்ற  பொருளோடு,
    வண்டு  என்றோர்  பொருளுமுண்டு  என்று  பார்த்தோமல்லவா?   
  
               "இந்த  ஆறுபதங்கள்   ஸதா   என் வதனத்திலிருக்கட்டும்!"
   என்று சொல்ல வந்த சங்கரர், ஷட் பதீயின்  வண்டு எனும்  
   இரண்டாம் பொருளையும் மனத்தில் கொண்டு
   
                      "வண்டு  (ஷட்பதீ) ஸதா இருக்கிற இடமாக என்  
            வதனம் இருக்க வேண்டுமானால் அது தாமரையாக
        இருந்தால் தானே முடியும்?" என்றெண்ணியவராய்,
        "வதன சரோஜே"என்று போட்டுவிட்டார்! 

  

                  ஸ்ரீபதியின் பாதாரவிந்தம்பற்றி ஸதா பேசிக்
    கொண்டிருக்கும் ஒருவரின் வதனம் தூய கமலமாக இருப்பதும் 
    இயற்கைதானே?


             ''வண்டு ஸ்தோத்ரம்''என்ற நாமகரணம் எப்படி
           இந்த ஸ்தோத்ரத்திற்குப் பொருத்தம் என்று இப்போ  
          தெளிவாயிருக்குமே!

ஜெய ஜெய சங்கர!ஹர ஹர சங்கர!
   
                 அடுத்தபடியாக,நான் இலவசம் என்று அறிவித்த 
     "கொசு[ரு]" ஸ்தோத்ரத்தைப் பார்ப்போமா?


                                        'கொசு'த்துதி

                                       சக்ர ப்ரமண-கரத்வாத்
                                       குத்ருஷ்டிபிர்  -தூரவர்ஜ்யமாநத்வாத்
                                       ச்ருத்யந்த -கேலநத்வாத்
                                       மசக த்வாமேவ மாதவம் மந்யே II 


                   இந்த சின்ன நாலுவரி ஸ்லோகத்தில் ஓங்கி
            உலகளந்த உத்தமனையும்,கொசுவையும்
           குறித்து,இரு பொருள்பட  பாடி இருக்கிறார் பெயர்
           தெரியாத ஒரு சம்ஸ்க்ருதப் புலவர்!

        (ஸ்லேடைச்சொற்கள் பச்சை வண்ணத்திலும் அதற்கான
         இரு பொருள்களில் விஷ்ணுவைப்பற்றிய பொருள்
         செவ்வண்ணத்திலும்  கொசுவைக்குறிக்கும் பொருள்
         நீலவண்ணத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன)


                


         பொருட்சுருக்கம்:     "ஏ கொசுவே! 
சக்ரப்ரமணம் செய்தல் (சக்கரம் சுற்றுதல் /-வட்டமடித்தல் ),    
குத்ருஷ்டி(துர்நோக்கம் /-கண்வலி)உள்ளவர்களை 
தூரப்போகச்செய்தல்,
ச்ருத்யந்தத்தில் (வேதாந்தத்தில் /-காதோரத்தில்)
ஆனந்தமாக வளையவந்து விளையாடுதல்,
ஆகிய காரியங்களை நீ செய்வதால்,
உன்னையே மகாவிஷ்ணுவாக நினைக்கிறேன் ! !"

         
                                                         

           ''இத்தனூண்டு கவியில் இவ்ளோ ச்லேடையா?''ன்னு
         வாய் பிளந்துட்டீங்களா? கொசு பூந்துடப்போறது!
         
             இந்தக் கவிஞரைப்போல் கொசுவைக் கேசவனாய்
         நினைக்கும்  பக்குவமிருந்தால்   நோ ப்ராப்ளம் ! 

             கேசவன் நம்முள் புகுந்துவிட்டால்,அதற்குமேல் நமக்கு
           வேறென்ன வேண்டும் ?


[நன்றி:ர கணபதியின் 'தெய்வத்தின் குரல்' (3 ,4 ) இல் பரமாச்சாரியாரின் உபன்யாசங்கள் ]
disclaimer:images taken from google search








       
    




Friday, May 06, 2011

உடல் நிலையில்லை! ஆனால் உலகை வெறுக்கவேண்டாம்!


கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர்? ஜியேத்
கோன் ஜெலுமவைகி? கோநொக்கி? த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி? (கோன்)


எவ்வேளையில் எங்கு விழுந்து போகுமோ இவ்வு டல்? போனால்
எந்த ஜென்மம் வருமோ? என்னவோ? இதை யாரா லும் அறிய முடியுமோ? (எவ்)

மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ!
த்4யாந் கரோ! ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல! (கோன்)


கவனமின்றிக் கேட்காமல் காது கொடுத்து கேட்பீர்!
தியானம் செய்யுங்கள்! ஹரி முக்தி தர வருவான் சத்தியம்! (எவ்)


ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா?
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா? பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா?
ஹநநவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
மொந் ஹரிஹோர் தொ2வொ! முக்திதே3யி ஸெத்ல! (கோன்)


நாய் பூனை பெருச்சாளியாய் பிறந்த நாட்கள் போதாதா?
சுக துக்க ங்கள் போதாதா? அடைந்த
சுகம் துக்க ங்கள் போதாதா?
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
மனம் ஹரி மேல் வையுங்கள்! முக்தி தருவான் சத்தியம்! (எவ்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா?
கரெ கருமுன் பு2ந்நஹா? பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா?
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
ஸிள ஹரிக் த4யாந்கரோ! ஸெய்முக்தி தே3ய் ஸெத்ல! (கோன்)


கருப்பு சிவப்பு உருவுடன் பிறந்த நாட்கள் போதாதோ?
செய்த கர்மங்கள் போதாதோ? முன்னால்
செய்த கர்மங்கள் போதாதோ?
(கழுத்தை)நெறிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
குளிர் ஹரியை தியானியுங்கள்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)



ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா?
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா? யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா?
பான்ப2ட3ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்?
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ! ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல! (கோன்)


இளைப்புடன் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணப்புழு ஆகவில்லையா? பாருங்கள் (நாம்)
சாணப்புழு ஆகவில்லையா?
சீட்டைக் கிழிக்கும் எமனை என்ன செய்யமுடியும் உம்மால்?
இளைப்பு தீரும் தியானம் செய்வீர்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்?
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3? யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3?
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ!
நடனகோ3பாலூஸ் தே3வ்! நஜ்ஜாநகோநைகொ! (கோன்)


(என்னைவிட) மூத்தவன் அவன் இவன் என்றால் விட்டுச் செல்வானா எமன்?
உடையாமல் போகுமோ பானை? எமன் வந்தால்
உடையாமல் போகுமோ பானை?
வடப த்ரார்யர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கு கிட்டியது!
நடனகோபாலனே கடவுள்! கெட்டு விடாதீர் கேளும்! (எவ்)



இயற்றியவர்: மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
மொழி: சௌராஷ்ட்ரம்

இந்தப் பாடலை ஏற்கனவே நண்பர் சிவமுருகன் மொழிபெயர்த்து இங்கே இட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பில் நான் சில சொற்களை மட்டும் மாற்றியமைத்து இங்கே இடுகிறேன்.

உடலின் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும். ஆனால் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் சிலருக்கு வேறு வகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்று தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Thursday, May 05, 2011

உடலே பண்டரி உயிரே விட்டலன்!


இதோ இன்னொரு வைஷ்ணவாத்வைதி! விசிஷ்டாத்வைதி என்று தான் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லை! எதுவாக இருந்தாலும் இவர் ஒரு பேரடியார்! மராட்டிய ஆழ்வார்! சந்த் ஏகநாதர்!

மராட்டிய பக்தர்கள் பாடிய அபங்கங்களை முதலில் கேட்டது நாரத கான சபாவில். அவ்வளவாகப் புரியவில்லையே என்று தான் தோன்றியது. 'புரியணுமா? அப்படின்னா மராத்தி தெரியணுமே. உனக்குத் தெரியுமா?' என்று கேட்காதீர்கள். அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் புரிவதால் மொத்தமாக ஒரு புரிதல் கிடைக்கும் சில வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கும் போது. அது போல் அபங்கங்களும் புரியும் என்று நினைத்தேன்.

ஏகநாதரின் இந்தப் பாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நல்லவர் என்னைப் போன்றவர்களுக்காகவே இந்தக் காணொளியில் பாடலின் பொருளை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இரண்டும் சேர்ந்து இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள உதவியது. 'எனக்கு புரியவில்லை. உங்களுக்கு என்ன புரிந்தது. தெளிவாக விளக்குங்கள்' என்று இரவிசங்கர் தூண்டில் போடுவார். இந்த மீன் மாட்டாது. :-)



வைஷ்ணவாத்வைதி என்று சொன்னேனல்லவா? ஏன் என்று கேட்கத் தோன்றியதா? தோன்றாவிட்டாலும் பரவாயில்லை. சொல்லுகிறேன். :-)

பாடலின் முதல் வரியைப் பாருங்கள். ஆத்மா ஹா விட்டல என்கிறார். ஆத்மாவே இறைவன் என்பது அத்வைதம் தானே!

அப்படி சொல்லமுடியாது என்று இன்னொரு குரல் கேட்கிறது. எனக்குள்ளிருந்து. ஆத்மாவின் குரலா? இல்லையில்லை. அறிவின் குரல் தான். அனுபவத்தின் குரலும் இல்லை.

யாருக்கு உலகம் உடலோ, யார் உலகத்திற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.

யாருக்கு ஆத்மா உடலோ, யார் ஆத்மாவிற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.

இவை வேதங்கள் சொல்பவை.

முப்பெரும் பொருட்கள் உண்டு. இயற்கை, உயிர், இறைவன் என்பவை அவை. மூன்றும் வெவ்வேறானவை. ஆனால் இயற்கைக்கும் உயிருக்கும் உயிராக இருப்பவன் இறைவன். இயற்கையையும் உயிர்களையும் விசேஷணமாக, தன்னில் அடங்கிய மெய்ப்பொருள்களாகக் கொண்டு தான் மட்டுமே இருப்பவன் இறைவன்! அந்த வகையில் இறை என்பது மட்டுமே மெய்ப்பொருள்.

இப்படி விளக்குவது தானே விசிஷ்டாத்வைதம்.

ஏகநாதரின் இந்தப் பாடலை அந்த வகையிலும் விளக்கலாமே?

விளக்கலாம் தான். ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? பாடலைக் கேட்டு அந்தப் பாடல் சொல்வதை அனுபவத்தில் கொண்டு வர இறையருள் கிட்டினால் போதாதா? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்புறுவோம்.



காயா ஹீ பண்டரி ஆத்மா ஹா விட்டல
நாந்த3தோ கேவல பாண்டுரங்க!


உடலே பண்டரி உயிரே விட்டலன்
உள்ளே இருப்பவன் பாண்டுரங்கனே!

பா3வ ப3க்தி பீ3மா உதக தே வாஹே
ப2ரவா ஸோப3தாஹே பாண்டுரங்க! (காயா)


அன்பு பக்தி பீமா நீரின் ஊற்றே
உண்டு தாகம் தீர்பவன் பாண்டுரங்கனே! (உடலே)

த2யா க்ஷமா ஷாந்தி ஹேஜி வாளுவந்த
மிளாலாச தா4ட வைஷ்ணவாஞ்சா! (காயா)


ஈரம் பொறை அமைதி சேரும் மண்ணின் மீதே
சேரும் அன்பர் கூட்டம் கூடுவதை போலே! (உடலே)

ஞான த்3யான பூஜா விவேக ஆனந்த
ஹாஜி வேணுநாத ஸோபி3தசே! (காயா)


ஞானம் தியானம் பூஜை அறிவு ஆனந்தம்
அமையும் என்னில் குழலோசை போலே! (உடலே)

த2ச இந்த்ரியாஞ்சா ஏக மேள கேலா
ஐசா கோபால்காலா ஹோத அசே! (காயா)


பத்து புலன்களும் ஒன்றே ஆக்கி
தந்தேன் பசுபதிக்கே படையலாக! (உடலே)

தே2கிலீ பண்டரி தே2ஹி ஜனி வனி
ஏகா ஜனார்த்தனி வாரி கரி! (காயா)


காண்கிறேன் பண்டரி என்னில் உன்னில் எங்கும்
இதுவே யாத்திரை போகும் இடமே! (உடலே)



இந்தப் பாடலின் தமிழ்ப்பெயர்ப்பையும் பாடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கே!

Wednesday, May 04, 2011

மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்!

திருக்கோவில்களில் தெய்வத் திருநீராட்டின் போது ஓதப்படும் வேத மந்திரங்களில் முதன்மையானது புருஷ சூக்தம்.

'ஸஹஸ்ர சீருஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்' என்று ஆயிரம் தலைகள் உடையவன், ஆயிரம் கண்களை உடையவன், ஆயிரம் கால்களை உடையவன் என்று தொடங்கும் புருஷ சூக்தத்தில் இறைவன் புருஷ: என்ற பொதுப் பெயராலேயே சொல்லப்படுகிறான். ஆனால் அப்படி பொதுப்பெயராலேயே சொல்லும் வேதமும் 'ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீ:ச பத்ன்யௌ' என்று 'அவனுக்கு பூமியும் லக்ஷ்மியும் பத்தினிகள்' என்று மறைமுகமாக அவன் அடையாளத்தைச் சொல்லிவிடுகிறது.


அதே போல் எப்போதும் பிரம்மத் தியானத்திலேயே இருந்த அவதூதராக விளங்கிய சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரும் 'மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்' என்று பிரம்மம் என்ற பொதுப்பெயராலேயே இறைவனை இந்தப் பாட்டில் குறித்தாலும் 'மயிற்பீலி அணிந்தவன், திருமகள் கேள்வன், குழலை இசைப்பவன்' என்று இறைவனின் அடையாளங்களைக் கூறிவிடுகிறார். அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரரும் பிரம்மம் எனில் யார் என்பதை ஆதிசங்கரரைப் போல் மிகத் தெளிவாக இந்தப் பாட்டில் கூறுகிறார்.



மானஸ ஸஞ்சரரே! – பி3ரம்மனி
மானஸ ஸஞ்சரரே!


மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில்
மனமே சஞ்சரிப்பாய்!

மத3சிகி பிஞ்சா அலங்க்ருத சிகு3ரே
மஹநீய க2போ3ல விஜித முகு3ரே (மானஸ)


மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி (மனமே)

ஸ்ரீரமணீ குச து3ர்க விஹாரே
ஸேவக2 ஜன மந்தி3ர மந்தா3ரே
பரமஹம்ஸ முக சந்த்ர சகோ3ரே
பரிபூரித முரளீரவதா3ரே (மானஸ)


திருமகள் தனமெனும் மதிலுக்குள் அலைபவன்
அடியவர் வேண்டுதல் தருவதில் தருவவன்
பரமஹம்சர் முகம் பருகிடும் பறவையன்
உலகினில் பரவிடும் குழலினின் இசையவன் (மனமே)

தனிமையில் இயற்கைச் சூழலில் இந்தப் பாட்டின் ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துக் கேட்டால் ஒரு மாபெரும் தியானம் கைகூடுவதைக் கண்டிருக்கிறேன். அதனால் தானோ என்னவோ இந்தப் பாடலைப் பாடாத இசைவாணர்களே இல்லை என்று சொல்லும் வகையில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இசைவாணர்கள் பலரும் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கிருக்கும் காணொளிகளில் கண்டு கேட்டு மகிழுங்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடித் தரவேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கு! :-)









  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP