Monday, January 31, 2011

#tnfisherman #தமிழ் மீனவர்கள் (AVM & பி.சுசீலா!)

கண்ணன் பாட்டு அன்பர்களே,
தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் முயற்சியாக, நிரந்தரத் தீர்வுக்கு, உங்கள் குரலையும் இங்கே கொடுங்கள்! மிகப் பெரும் இணைய முயற்சி ஒன்று நடந்து கொண்டிருக்கு - எட்டிப் பாருங்கள்!

எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போடுங்கள், உங்கள் கையெழுத்தை! கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல், மிக மிக சூப்பர் ஹிட் சுசீலாம்மா பாடல்!
அன்பே வா என்ற சூப்பர் ஹிட் படம் எடுத்த கையோடு,
ஏ.வி.எம் நிறுவனத்தார் எடுத்த அடுத்த வண்ணப் படம் = ஆன்மீகப் படம்! :)

ஐயோ! பலரும் வேண்டாம் என்றார்கள்! சூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பிறகு, ஒரு ஆன்மீகப் படமா? ஃப்ளாப் ஆகி விடும் என்று பயமுறுத்தினார்கள்!
ஆனால் ஏவிஎம் எடுத்துக் காட்டினார்! தந்திரக் காட்சிகள் சூப்பர் ஹிட்! பி.சுசீலா பாடல் = நாராயண மந்திரம்....ஒலிக்காத பட்டி தொட்டியே இல்லை!
குழந்தைப் பிரகலாதனாக நடித்த குழந்தையை அனைவருக்கும் பிடித்துப் போனது!


பக்த பிரகலாதா = தெலுங்கு, தமிழ், இந்தி என்ற மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுத்தனர்!
தந்திரக் காட்சிகள் ஏ.வி.எம் புகழுக்கு எடுக்கப்பட்டன! தந்திரக் காட்சிப் புகழ் பாபுபாய் மிஸ்திரியின் உதவியாளர் ரவிகாந்த் எடுத்தார்!

இரணியன் = எஸ்.வி. ரங்காராவ்
அவன் மனைவி கயாது = அஞ்சலி தேவி
சிறுவன் பிரகலாதன் = பேபி ரோஜா ரமணி
நாரதர் = பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா

தெலுங்கு டப்பிங் என்பது தெரியாமல் இருப்பதற்காக, தமிழில் தனி நகைச்சுவை Track!
டி.எஸ்.பாலையா & ஏ.கருணாநிதி = இவர்களே பிரகலாதனின் ஆசிரியர்கள்!
ஓம் இரணியாய நம என்று சொல்லிக் கொடுத்து, கடைசியில் அவர்களே ஓம் நாராயணாய நம என்பதற்கு மாறி விடுவார்கள்! Class Room நகைச்சுவை சூப்பரா இருக்கும்! :)அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள் என்ற மகா வாக்கியம்! வேதம்!
இதைத் தானே இரணியனும் சொன்னான்?
ஓம் இரணியாய நமஹ! நானே கடவுள்! :)
அப்போ அவன் தான் முதன்முதல் அத்வைத குருவா? :)

* அஹம் பிரம்ம ஆஸ்மி = நான் கடவுளாய் "இருக்கிறேன்"!
நானே கடவுள் அல்ல! நான் கடவுளின் வெளிப்படு பொருளாய் (வடிவமாய், உடம்பாய்) இருக்கிறேன்!
* தத் தவம் அஸி = அது நானாக இருக்கிறது!
கடவுள் நானாக என்னுள் இருக்கிறார்! இது தான் இவ் வேத வாக்கியங்களுக்குப் பொருள்! அதனால்....நான் தான் கடவுள்-ன்னு "ஞானத்தில்" ஓவராத் துள்ள வேண்டாம்! :)

நான் தான் "அதுவா"?
"அது" பண்ணுற வேலையை எல்லாம் என்னால் பண்ண முடியுமா? என்னைக் காப்பாத்திக்கவே எனக்கு வக்கில்லை! அப்பறம் எப்படி நான் மொத்த உலகத்தைக் காப்பாத்துவேன்? :)
மொதல்ல எனக்கு "கருணை"-ன்னு ஒன்னு வருமா? என்னை தாழ்த்திக் கொண்டாலும், அடியவர்களுக்காக இறங்கி வருகிறேன்-ன்னு சொல்லும் மனசு எனக்கு இருக்கா? அது வரட்டும்! அப்பறமா சொல்லிக்கலாம் "அஹம் பிரம்மாஸ்மி"-ன்னு! :)

ஓம் இரணியாய நம-ன்னு சொன்னான், ஊரையே சொல்ல வைத்தான் இரணியன்! -அதுவும் எட்டெழுத்து தான் பாருங்கள்!
ஓம்(1)+இரணியாய(5)+நம(2) = அஷ்டாட்சரம்! :)
அறிந்தோ அறியாமலோ அஷ்டாட்சரம் சொல்லி, குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கையால், உணரப் பெற்றான், அந்தப் பெற்றவன்! நாம பாட்டைப் பார்ப்போம் வாருங்கள்!

சுசீலாம்மாவின் அன்றைய சூப்பர் ஹிட் பாடல்! பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்! கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!படம் : பக்த பிரகலாதா
குரல் : பி.சுசீலா
இசை: கேவி மகாதேவன்
வரி: கண்ணதாசன்

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்
...
(நாராயண மந்திரம்)

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணாஎம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போட்டு விட்டீர்களா, உங்கள் கையெழுத்தை? கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!

Friday, January 28, 2011

தொலைவில்லிமங்கலம் - காதல் பெண்ணைக் கைவிட்ட பெற்றோர்!

இன்றைய கண்ணன் பாட்டில், தை வெள்ளிக் கிழமை - நேயர் விருப்பமாக, InLoveWithKrishna என்னும் கள்வனின்காதலி விருப்பப் பாடல்!
தமிழ் வேதம் - திருவாய்மொழியில், நம்மாழ்வார் எழுதும் காதல் கவிதை! ஆறாம்(6ஆம்) பத்து! மனம் ஆறாத பத்து!

மகளின் காதலைக் கண்டு, பெற்றோர் அவளை அம்போ என்று இந்த ஊரில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்!
இனி அவள் கதி? = அதோ கதி! அதோ, அவனே கதி!வழுதி நாட்டு நெல்லைச் சீமையில் உள்ள திவ்யதேசம் (108 திருத்தலம்) - இரட்டைத் திருப்பதி என்னும் தலம்! திருச்செந்தூர், என் முருகனிடத்தில் இருந்து ரொம்ப கிட்டக்க! தாமிரபரணி ஆறு சிலுசிலு என்று கொஞ்சும் தலம்!

கோயில் ரெண்டு இருந்தாலும், இரண்டும் சேர்த்து ஒரே திவ்ய தேசம்! தனித்தனியாக எண்ணக் கூடாது! எண்ணினால் 109 வந்து விடும்! :)
தென் திருப்பேரை அருகிலேயே உள்ள ஊர்கள் இவை! இரட்டைக் கோயில்கள் (Twin Tirupathi)

#1.1 - துலைவில்லி மங்கலம் - தேவப் பிரான் (ஸ்ரீநிவாசன்-அலர் மேல் மங்கை)
#1.2 - இரட்‌டைத் திருப்பதி - அரவிந்த லோசனன் (கருந்தடங் கண்ணித் தாயார்-செந்தாமரைக் கண்ணன்-தொலைவில்லிமங்கலத் தாயார்)

துலை=தராசு; வில்லி=தராசின் வில்! துலை-வில்லி மங்கலம்!
இப்போது தொலைவில்லி மங்கலம் என்று ஆகி விட்டது! காட்டில் அமைந்துள்ளது! வீடுகள் இல்‌லை!
பாண்டி நாட்டு நவகிரக தலங்களில் ராகு-கேது என்ற நிழல் கிரகங்களுக்கு உரிய தலங்கள்! ஆனால் கிரக பூசைகள் இல்லை! எம்பெருமானுக்கே அனைத்தும்!தமிழ் வேதம் - திருவாய்மொழியில், நம்மாழ்வார் எழுதும் காதல் கவிதை! ஆறாம்(6ஆம்) பத்து! மனம் ஆறாத பத்து!
அரையர் ஸ்ரீராமபாரதி கொடுக்கும் முன்னுரையைக் கேட்டு கொண்டே பதிவை வாசிக்கலாம்!


துலைவில்லி மங்கலப் பெருமானிடம் ஈடுபட்ட தலைவியின் நிலை பற்றித் தாய்மாரிடம் தோழி கூறுதல்!

துவள் இல் மாமணி மாடம் ஓங்கு, தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க, நின்று நின்று குமுறுமே. 6-5-1

மென்மை இல்லாத மாடங்கள் உள்ள தொலைவில்லி மங்கலத்தைத் தொழுது நிற்கும் இவள்!
ச்சே...இவளுக்கு நீங்களா அம்மா?
உங்களுக்கு இவள் மேல் பாசம் இல்லை! விட்டு விடுங்கள்! எப்படியோ போய் ஒழிகிறாள்!
வெண் சங்கு-சக்கரம், தாமரைக் கண் என்றெல்லாம், தன் குவளைக் கருமலர் கண்ணீர் பொழிய, இவள் குமுறி விட்டுப் போகட்டும்! உங்களுக்கு என்ன போச்சு? நீங்கள் "பெற்றவர்கள்" அல்லவா?
--------------------------------------------------------------------------------------

குமுறும் ஓசை விழவு ஒலி, தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர், உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள் தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க, நெக்கு ஒசிந்து கரையுமே. 6-5-2

விழா ஓசை நிரம்பிய தொலைவில்லிமங்கலம் புகுந்தவளை...மெல்லப் பேசும் பேதையை...ஆசையில்லாமல் அகற்றி விட்டீர்களே! தகுமா?
இவள் திமிர் பிடித்துப் போய் (மரத்துப் போய்) நிற்கிறாள்! தேவ தேவா தேவ பிரானே என்று!
உதட்டைச் சுருக்கி (நிமிந்து) குழந்தை போல் அழுகிறாளே! நெக்கு உருகி நிற்கிறாளே! ஐயோ!
--------------------------------------------------------------------------------------

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ, இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை, மணிவண்ணாவோ என்று கூவுமால்;
துரங்கம் வாய் பிளந்தான் உறை, தொலைவில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும், அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னையே! 6-5-9

மனம் இரங்கி, தினமுமே வாய் உலர்ந்து, கண் பனிக்க.....இவளோ மணிவண்ணா என்று கூவுகிறாள்! அசையாத மரம் கூட அசைந்து அய்யோ என்று கூவிடுமே இவளைப் பார்த்து!
குதிரை வாயைப் பிளந்த (கேசி என்னும் கம்சனின் ஆளைக் கொன்ற) பிரான், துலைவில்லியில் இருக்கிறான்! அவன் ஊரை இவள் அறிந்து கொண்டாள்! அங்கேயே கைகூப்பி, அம்மா-அப்பா என்று நின்று விட்டாள்!
--------------------------------------------------------------------------------------

பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல், பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ! இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்;
முன்னி வந்து அவன், நின்று இருந்து உறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும்; அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே! 6-5-10

ஆசை நப்பின்னையோ? கருணை நிலமகளோ? எம்பெருமாட்டி திருமகளோ? - யாராய் வந்து இவள் பிறந்தாளோ தெரியலையே!
என்ன மாயமோ? இவள் திருமாலே என்று கூவுகிறாளே!
முன்னால் வந்து, நின்றும்-இருந்தும் அருள் பாலிக்கும் தொலைவில்லி மங்கலத்தில்...(நின்று = தேவப்பிரான், இருந்து = அரவிந்த லோசனன்)
தலையால் வணங்கி...அந்த ஊரின் பேரையே இவளின் சிந்தனைக் காது கேட்கிறதே!
--------------------------------------------------------------------------------------

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை, தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார், அடிமை செய்வார் திருமாலுக்கே! 6-5-11

சிந்தை-சொல்-செயல் (காயேன வாசா மனசி இந்திரியேர்வா) முழுக்க தேவபிரான் ஒருவனையே....அம்மா-அப்பாவாக அடைந்த குருகூர் மாறக் குழந்தை!
ஆயிரத்துள் இப்பத்தான தொலைவில்லிமங்கலச் செந்தமிழ்ப் பாசுரங்களை...அனுபவித்தவர்கள்...திருமாலுக்கு அடியவராய் சுகப்படுவார்கள் என்பது திண்ணம்!மாறன் என்னும் நம்மாழ்வார், தன் "தாய்-தந்தை" என்று பாசுரத்தில் காட்டியது, இந்த திவ்யதேச எம்பெருமான்-பிராட்டியையே!
இன்றும்....தாமிரபரணி விடையாற்று விழா முடிந்து திரும்பும் போது, ஆழ்வார், இந்த அம்மா-அப்பாவையே ஏங்கி ஏங்கிப் பார்த்து, நெடு நேரம் நிற்பார்!
"அம்மா-அப்பா கைவிட்ட தன்னை.....,
தொலைவில்லி அம்மை-அப்பனாக இருந்து,
கண்ணனிடம் மணமுடித்து வைப்பீர்களா?"

Tuesday, January 25, 2011

பத்ம பூஷண் SPB: வான் போலே வண்ணம் கொண்டு, வந்தாய் கோபாலனே!

முதலில் பத்ம பூஷண் (தாமரை அணிகலன்) விருது பெற்றுள்ள SPB-க்கு இனிய வாழ்த்துக்களைச் சொல்லிப் பதிவைத் துவங்குவோமா?
பத்ம பூஷண் பாலு, கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!
போன வருசம் ராஜாவுக்கு! இந்த வருசம் உங்களுக்கு! இனிய வாழ்த்துக்கள்! :)

ஆனா இந்த விருதுகளையெல்லாம் தாண்டியும் உங்க சாதனை பேசப்படும்! இது சும்மா அடையாளம் மட்டுமே!
சங்கராபரணத்தில் தொடங்கி...உங்கள் சிரிப்பூ கலந்த பாடல்கள், பலர் நெஞ்சங்களைச் சிலர்க்க வைப்பவை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி-ன்னு கலக்கியவர் நீங்க! இசையமைப்பாளர், நடிகர் என்றும் வேறு வேறு முகங்கள் வேறு உங்களுக்கு!

கண்ணன் பாட்டு அன்பர்கள் சார்பாக, உங்களுக்கு வாழ்த்துக்கள் பாலு!
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்

- ஒன்று போதாதா நீங்கள் தந்த கண்ண-இன்பத்துக்கு! வாழ்க!இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல் - SPB & அவர் தங்கை SP ஷைலஜா பாடுவது!

குரல்: SPB & SP ஷைலஜா
படம்: சலங்கை ஒலி
வரி: வைரமுத்து
இசை: இளையராஜா
ராகம்: மோகனம்

கேட்டுக்கொண்டே படியங்கள்! ஆரம்பக் குழலிசை ராஜா ஸ்டைல்! அழகான Opening Piece!

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
(வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
(வான் போலே)


பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
!
(வான் போலே)


அன்பர்களுக்கு இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்!
Long Live the Republic! பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம்!

Monday, January 24, 2011

கண்ணா என் கையைத் தொடாதே!

இன்னிக்கி ஒரு டமாஷான கண்ணன் பாட்டைக் கேட்போமா? பதிவர் ராதாவின் நேயர் விருப்பம்! :)

அப்படி என்ன டமாஷா?
கண்ணா என் கையைத் தொடாதே-வாம்!
அப்படின்னா, கண்ணா என் கையைத் தொடாதே, இதழைத் தொடு-ன்னு அர்த்தம்! :))

இதோ கேட்டுக்கிட்டே படிங்க! சுசீலாம்மாவின் வித்தியாசமான-கீச்கீச் குரலில்
நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!

தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?

கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)

மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!

கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)

படம்: மல்லிகா
குரல்: பி.சுசீலா
வரிகள்: ஏ.மருதகாசி
இசை: டி.ஆர்.பாப்பா


ஹே, பொற்க்கீ! கண்ணா, என் கையைத் தொடாதே! :)

Wednesday, January 19, 2011

தைப்பூசம்: முருகனும் பெருமாளும் என்னை வளைத்துக் கொண்டே...

இன்று தைப்பூசம்!(Jan-20-2011)! அதற்குத் தோதான பாட்டைப் பார்க்கலாமா?

தைப்பூசம் என்பது, திருமுருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் என்று சொல்லுவார்கள்!
என் முருகன் ஒய்யாரமாய் நிற்கும் பழனி மலையில், குன்றமெல்லாம் கொண்டாட்டம்! அலங்காரங்கள் மணக்கும்!

எது அலங்காரம்? = அகங்காரம் அழிப்பது எதுவோ, அது அலங்காரம்!
* நமக்கு மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணினால் = அகங்காரம்
* அதை முருகனுக்குச் சூட்டும் போது, அதே மனம், அதைக் கண்டு பொறாமை கொள்ளாமல், கண்டு களிக்கிறது அல்லவா! = அலங்காரம்!

அருணகிரி, முருகனுக்குச் செய்யும் அலங்காரம் = கந்தர் அலங்காரம்!
அதில் ஒரு பாடல், மிகவும் பிரபலம்!
கடைசி வரைக்கும் துணை வருவது வடிவேலும் மயிலும்-ன்னு வரும் பாடல்!
அதே போல் கண்ணனுக்கும் ஒரு பாட்டு இருக்கு, தெரியுமா? பலரும் அறியாத பாட்டு!


என் பிறந்த வீட்டுப் பாட்டையும், புகுந்த வீட்டுப் பாட்டையும், இன்னிக்கு தைப்பூசம் அதுவுமாய், கண்ணன் பாட்டில் ஒரு சேரப் பார்க்கலாமா? வாரீங்களா?புகுந்த வீடு:
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும், செங்கோடன் மயூரமுமே!
- கந்தர் அலங்காரம்

பிறந்த வீடு:
நாளும், பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்,
தோளும், தொடர்ந்து எனையாளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு-ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே, தமியேனை வளைந்து கொண்டே!
- திருவரங்கத் திருவந்தாதி

Saturday, January 15, 2011

அரங்கனிடம் தோழி

கோதை படும் துயரை, தாளாத அவள் தோழி, அரங்கனிடம் சென்று முறையிடும் பாவனையில் எழுதியது.
பொன்னியே பொறுத்திருக்க.. ரங்கா..
கோதைக்குத் துணை இலவு மரம் வாழும் கிளிதானோ ?


சுழித்தோடி வரும் பொன்னி நதியோ உன் திருப்பாதம்
தழுவ தவம் இயற்றி தாரணியில் யுகமாச்சே..

காத்திருந்து களையிழந்து கண்மை கசிந்துறைந்தாள்..
ஓய்வின்றி ஒழிவின்றி உன் நாமம் போற்றி வந்தாள்..
உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..
இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!

Tuesday, January 11, 2011

சீர்காழி+TMS - சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?

சீர்காழி + TMS = முருகனைச் சேர்ந்து பாடி இருக்காங்க! திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்-ன்னு! தெய்வம் படத்தில்...
* பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா-ன்னு அவர் எடுக்க
* கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா-ன்னு இவர் முடிக்க...
ஆகா! கண்கொள்ளாக் கந்தக் காட்சி! என் முருகச் சொந்தக் காட்சி!

ஆனால் இந்த கலக்கல் ஜோடி, கண்ணனைச் சேர்ந்து பாடி இருக்காங்களா?
உம்...உம்...உம்...தனித்தனியாப் பாடி இருக்காங்க தெரியும்!
* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-ன்னு TMS Hall of Fame!
* திருப்பதி மலை வாழும் வேங்கடேசா-ன்னு சீர்காழியின் பெருமை!

ஆனால் இருவரும் சேர்ந்து பாடினதா தெரியலையே! சேர்ந்து பாடி இருக்காங்களா என்ன, கண்ணனை?
ஒரு வேளை, முருகனருள் முன்னின்றது போல், கண்ணனருள் முன்னிற்கலையோ? :)
கண்ணன் அருள், மெய்யாலுமே "முன்" நின்றது!
முருகனைப் பாடும் முன்னரே...., கண்ணனைப் பாட ஜோடி சேர்ந்து விட்டனர் நம்ம சீர்காழி + TMS! அதுவும் சினிமாவில்! :)
முப்பத்து மூவர் அமரர்க்கும், "முன் சென்று" கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

ஆகா! அது என்ன படம்? அது என்ன படம்?
நீங்களே பாருங்க! கேட்டுக்கிட்டே படிங்க!


பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய‌
அருள் வாயே ராமா!


த‌யாள‌னே சீதா ராமா! சாந்த‌ மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ‌ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான‌ ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)

படம்: சம்பூர்ண ராமாயணம்
இசை: கே.வி. மகாதேவன்
வரி: மருதகாசி
குரல்: சீர்காழி, TMS

இறைவனின் திருவடி நிலைகளை, அழகான குழுப் பாடலாக (பஜனைப் பாடலாக) பாட, இந்தப் பாடலின் மெட்டு, பொருந்தி வருகிறது அல்லவா?

பாதுகை-ன்னா என்ன? வெறும் கால் செருப்பா? அது எப்படி ஒருவருக்குத் துணையாகும்?
பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!

Thursday, January 06, 2011

I saw Trip-Liq-Cane! திருவல்லக்கேணி கண்டேனே!

டிரிப்ளிக்கேன்! ஆகா, என்ன அழகா வெள்ளைக்காரன் பேரு வச்சிருக்கான்!
Trip போனா Liquor & Cane Juice எடுத்துக்கிட்டு போகணும் - அப்போ தான் சரக்கு ஏறும்! அதான் Trip, Liq, Cane என்று வைத்தானோ? :)

இந்த மார்கழி வெள்ளிக் கிழமை, சும்மா காலாற, திருவல்லிக்கேணி போவலாம், வாரீகளா?
திருவல்லிக்கேணி = அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!
தொட்டணைத்தூறும் மணற் கேணி - குறள் ஞாபகம் வருதா?
108 திருத்தலங்களுள் ஒன்று! ஆழ்வார்கள் பாசுரம் பெற்ற தலம்! இராமானுசர் பிறக்க, அவர் பெற்றோர்கள் வேண்டிக் கொண்ட தல

அட, "கூவம் மிகு" சென்னைக்கு இவ்வளவு பெருமையா-ன்னு ஆச்சரியமா இருக்கு-ல்ல? :)
திருஞானசம்பந்தர், ஆழ்வார்கள், அருணகிரி, வள்ளலார்-ன்னு சென்னையைப் பாடாதவர்களே இல்லை-ங்கிறேன்!

அந்தச் சென்னையின் கடலோரத்தில், நெய்தல் நிலத்தில், முல்லை நிலத் தலைவன் மாயோனுக்கு ஒரு பழமை வாய்ந்த ஆலயம்!
அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!


இப்போ கொஞ்சம் பராவாயில்லை! குளத்தில் தண்ணீர் உள்ளது!
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுச் சுத்தமாகவும் உள்ளது! அல்லி மலர்கள் தான் காணோம்!
ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் ட்ரிப்ளிக்கேன் என்று எழுதாமல், திருவல்லிக்கேணி என்றே எழுதி இருக்கிறார்கள்!

அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், Arrest-ஆகும் குளம், எல்லாம் இது தான்!:)

மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால், ரத்னா கபே...
இப்படிப் பல பிரபலங்கள் உள்ள இடம் திருவல்லிக்கேணி! சென்னையின் மிகப் பெரிய "சேவல் பண்ணை", அதாங்க Mens Mansion-உம் இங்கே தான்! :)

மும்பை - Gateway of India போல், Gateway of Chennai = TiruvallikENi! :)


திருவல்லிக்கேணி ஆலயத்துக்குள் போலாமா?நான் சென்னை வரும் போதெல்லாம் - அல்லிக்கேணி & வடபழனி - Never Miss! ஒன்னு என் பொறந்த வீடு, இன்னொன்னு என் புகுந்த வீடு! :)


முதலில் முக்கியமான விஷயம் சொல்லிடறேன்! அப்பாலிக்கா பெருமாளைப் பார்ப்போம்!

1. இந்த ஆலயத்து சர்க்கரைப் பொங்கல் சூப்பர் டேஸ்ட்! ஒரு கிலோ அரிசின்னா, அரை கிலோ நெய், அரை கிலோ முந்திரி போட்டுச் செய்யும் சர்க்கரைப் பொங்கலை - மறக்காம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :)

2. திருவல்லிக்கேணிப் பெண்கள், மரபு உடையில் இருந்தாங்க-ன்னா, கொள்ளை அழகு! :) திருமங்கை ஆழ்வாரே நோட் பண்ணிச் சொல்லி இருக்காரு! :) = மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!! :)

சரி, சரி, விளையாட்டு போதும்! ஒருவனாய் நின்ற ஒருவனைப் பார்க்கலாமா?அடியார்கள் எல்லாரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ளுங்கள்!
பிருந்தாரண்யம், துழாய்க் காடு என்னும் தலத்திலே....சேவை சாதிக்கும்....

இதோ..............மூலவராகிய எம்பெருமான் வேங்கடகிருஷ்ணன்!பெரிய மீசை வைத்த நெடியோன்! மாயோன்! ஒன்பதடி உசரம்!
கீதை சொல்லும் கோலத்திலே, எம்பெருமான் நின்று சேவை சாதிக்கின்றான்!
பெரிய திருமுடி! வஜ்ர கிரீடம்!
அகன்ற நெற்றியிலே துலங்கும் திருமண் காப்பு!
நம்மைப் பார்த்து, "வா வா...குழம்பித் தவிக்கும் தோழா, கலியுக அர்ச்சுனா" என்னுமாப் போலே குறு குறு தோழமைக் கண்கள்!

அழகிய மேல் சுருக்கு மீசை!
மார்பிலே "அவள்" திகழ,....
தேரோட்டியின் கவசம் அணிந்து,
இடுப்பிலே குதிரை ஓட்டும் உழவு கோல்!

இப்படியாக, எடுத்துக் கொண்ட பொறுப்பிலே, சுய கெளரவம் பார்க்காது,
தேரினை ஓட்டியும், குதிரைகளைக் குளிப்பாட்டியும், புல் பிடுங்கிப் போட்டும், சாணம் அள்ளியும்,
குல வழக்கப்படி மீசை வைத்தும், தன் திருவுடம்பிலே உழவுகோல் தரித்தும்,
தோழனுக்காகக் கொண்ட கோலத்தைப் பெருமையோடு காட்டி நிற்கிறான்!

இடுப்புக் கச்சை! மேனியெங்கும் தவழ்ந்தோடும் சாளக்கிராம மாலை!
கருவறையெங்கும் அவன் வாசமா அல்லது துளசீ வாசமா அல்லது இரண்டும் கலந்த வாசமா?

வலது கையில் சங்கு மட்டுமே! சக்கரம் இல்லை! போரில் ஆயுதம் ஏந்தேன்-ன்னு சொன்னதால்!
இடது கை, மொத்த கீதையின் சாராம்சத்தையும் உணர்த்தி நிற்கிறது! = மாம்-ஏகம்-சரணம் வ்ரஜ! என்னையே சரணமெனப் பற்றுக!
= பற்றுக பற்றற்றான் பற்றினை!

அப்பற்றை பற்றுக என்று வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாய், தாமரைத் திருவடிகள்! திருவடி எங்கும் துழாய் மலர்கள்!

அப்படியே குடும்ப சகிதத்தையும் சேவித்துக் கொள்ளுங்கள்! இதோ...
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது.....பாரத பூமியில், இந்த ஒரே தலத்தில் தான்!

வலப்புறம் ருக்மிணி பிராட்டி! இடப்புறம் கண்ணனின் தம்பி, சாத்யகி!
இன்னும் வலப்புறம் அண்ணன் பலராமன்! இன்னும் இடப்புறம் மைந்தன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன்!!

உற்சவரான பார்த்த சாரதிப் பெருமாள்! இதோ...

உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்கின்ற திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் கரு முகத்தை (உற்சவர்) இங்கே கண்கூடாகப் பாருங்கள்!

தோழனின் தற்கொலையைத் தடுக்க, தன் சத்தியம் மீறினாலும் பரவாயில்லை என்று...,
நட்புக்காகச் சக்கரம் ஏந்தியும், பீஷ்ம வடுக்களோடும் ஒருங்கே காட்சி அளிக்கின்றான்!
* மூலவர் = போருக்கு முந்தைய திருக்கோலம்!
* உற்சவர் = போரின் இடையே ஆன திருக்கோலம்!

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னனுமாய்,ஆளவந்தார்,
இவனை வேண்டிக் கொண்டு பிறந்த இராமானுசர்,
தேசிகன், மணவாள மாமுனிகள் என்று ஆசார்ய மங்களாசாசனங்களையும் ஒருங்கே பெற்று...

இதோ, கர்ப்பூர தீப மங்கள ஜோதியில் ஜொலிக்கும் பிரான்...!

இனிக்க இனிக்க உங்களைப் பார்த்துச் சிரிக்கும் எம்பெருமானை...
Paartha Saarathy PerumaaL - PSP என்று செல்லம் கொஞ்சிடும்...


எந்தை, எனக்கு உயிர் குடுத்த வித்தினை - அப்பா.....
என்று கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்!
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

கோதில்-இன் கனியை, நந்தனார் களிற்றை,
குவலயத்தோர் தொழுது ஏத்தும்,
ஆதியை, அமுதை, என்னை ஆளுடை....அப்பா......
திருவல்லிக் கேணிக் கண் டேனே!
திருவல்லிக் கேணிக் கண் டேனே!!


கோவிந்தா! கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!!

இதோ, மணக்க மணக்க, துளசீ தீர்த்தம் பருகிக் கொள்ளுங்கள்! = நாரணம் என்னும் நீர் என்று அவனையே பருகிக் கொள்கிறீர்கள்!
இதோ, சடாரியும் வாங்கிக் கொள்ளுங்கள்! = அவன் திருவடிகளை, மாறனாகிய நம்மாழ்வாரை, உங்கள் தலை மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்!
அவன் கால் பட்டு அழிந்தது, 
உங்கள் தலை மேல், பிரமன் கையெழுத்தே!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்...
முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

ம்ம்ம்ம்...தரிசனம் ஆனவர்கள்-ல்லாம், அப்படியே சேவிச்சபடியே, நகருங்க-ம்மா, நகருங்க! ப்ளீஸ், நகருங்கோ சார்! நகருங்க.....


கருவறையை விட்டு வெளியே வந்து, காற்றாட ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்வோமா? 

இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் மட்டுமே!
கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
அப்பவே சென்னையில் குடும்ப ஆட்சி-ன்னு சொல்லாமச் சொல்லி விட்டானோ, இந்த பார்த்தசாரதி? :) நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்! :)

சொல்லப் போனா, இந்தத் தலம், முழுக்க முழுக்க, ஒரு குடும்பத் தலம்!
கண்ணன் மட்டும் அல்ல...,
திருவல்லிக்கேணியில் எல்லாக் கருவறையிலும், No Singular, Only Plural! :)
ஒரு கூட்டமாகத் தான் எல்லாக் கருவறைக் கடவுள்களும் இருப்பார்கள்! :)

* ஆலயத்துள் நுழைந்து, கொடிமரம் தாண்டி, கஜானனரை வணங்கி, கருடாழ்வாருக்கு ஹாய் சொல்லி...வரிசையில் சேர்ந்து கொண்டால்...

* திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், மாமுனிகள் என்று ஆசார்யர்களைக் கடந்து, முதலில்....என் இராகவன் வீடு! :)

அங்கும் குடும்ப சகிதம் தான்!
பொதுவாக இராமன்-சீதை-இலக்குவன்-அனுமன் மட்டும் தானே இருப்பார்கள்! இங்கோ, மொத்த குடும்பமாய், பரதனும் சத்ருக்கனனும் கூட உண்டு!

இவர்களைப் பார்த்த வண்ணம், எதிர்ப் பக்கத்தில் ஆஞ்சநேயன்...
அதே வரிசையில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள், கருடன்-அனந்தன் முதலான நித்யசூரிகள்!

* அடுத்த சன்னிதியாகிய அரங்கன் சன்னிதி!
மன்னாதன்! மன+நாதன் என்று தாயார் அழைத்த பேரில்...இங்கும் கருவறையில் ஒருவர் மட்டும் இல்லை!
தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் நரசிம்மப் பெருமாளும் உண்டு!

* திருவல்லிக்கேணி தனிக் கோயில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த அரங்கனின் தர்ம பத்தினியே!
இவளுக்கு வெள்ளி தோறும், மற்றும் அஸ்த நட்சத்திரம் அன்றும் உள் புறப்பாடு/ஊஞ்சல் உண்டு!

* அடுத்த சன்னிதி, வரதப் பெருமாள்!
கருடனும் அதே கருவறைக்குள் இருப்பான்! இறைவனைத் தாங்கிப் பிடித்தபடி! = நித்ய கருட சேவை!

* முக்கியமான பின் சன்னிதி, ஆளரிப் பெருமாள் என்னும் நரசிம்ம-அழகிய சிங்கர் சன்னிதி! மூலவர் மட்டுமே யோக நிலையில், சிங்க முகத்தோடு, "ஆ-வா" என்ற கரத்தோடு!
உற்சவருக்கு சிங்க முகம் இல்லை! சிரித்த முகம் மட்டுமே!
இந்த ஆலயத்தில் நாக்கில்லா மணிகள் தான் அத்தனையும்! கதவில் தொங்கும் மணிகள் உட்பட...

* அடுத்த சன்னிதியாக என்னுயிர்த் தோழி...கோதை...திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!
சரி சரி போதும், உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?
ஹேய் வாடீ...அப்படியே விமானங்களைக் கண்டு, கண்ணாடியில் முகம் பார்த்து, தலைமுடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, பிரசாதக் கடையில்...தோழனுக்கும் எனக்கும் பிடித்த அதிரசம் வாங்கித் தின்போம்! :)

கிறு கிறு புளியோ தரையில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"!
ஆனால் ஷைலஜா அக்கா பண்ண மாயம்...இப்பல்லாம் ஒரே கட்டுரையாப் போயிரிச்சி! :)

வாங்க கண்ணன் "பாட்டில்", பாட்டைப் பார்ப்போம்!
திருவல்லிக்கேணி-க்கென்றே உள்ள சில பாசுரங்களைக் கேட்போமா?
Pasurams - TIRUVLLIKENI and Tiruneermalai - Aruna Sairam
கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!
பிரபல பாடகி, அருணா சாய்ராம், க்ஷேத்ரம்: சென்னைபுரி என்னும் தொகுப்பில் (Album: Ksetra Chennapuri) பாடும் பாட்டு!

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி
வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,விழுமிய முனிவர் விழுங்கும்
கோது-இல் இன்-கனியை, நந்தனார் களிற்றை, குவலயத்தார் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை, என்னை ஆளுடை அப்பனை, ஒப்பவர் இல்லா!
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!!
Shylajakka sent this pic of this year's maargazhi koshti at thiruvallikENi.

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (இது சென்னை திருநீர்மலை தலம் பற்றியது, இருப்பினும் Album-இல் உள்ளதால், இங்கு காண்போம்!)
பாரார் உலகும், பனிமால் வரையும்
கடலும் சுடரும், இவை உண்டும் - எனக்(கு)
ஆராது என-நின்றவன் எம்பெருமான்
அலைநீர் உலகுக்கு அரசாகிய - அப்

பேரானை முனிந்த முனிக்கு-அரையன்
பிறரில்லை நுனக்கு-எனும் எல்லையினான்!
நீரார்ப் பேரான், நெடுமால் அவனுக்கு
இடம் மாமலை யாவது நீர்மலையே!

பேயாழ்வார் - 3ஆம் திருவந்தாதி:
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணி-யான் சென்று.

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி:
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீள்-ஓதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை.


Here ends the "Triplicane" Tour! :)
Pl assemble @ Marina, for a Treat of Murukku, Sundal & Maangai Bathai, sponsored by Radha Mohan, Citizen of ThiruvallikENi! :)

Also, home made vEN pongal, for pongalO pongal from ILWK aka kaLvanin kaathali :)
- alo, KK, get me some good thakkaLi kothsu and vengaaya chutney, not as prasadam, but as side-dish :) மாம் ஏகம் பிரசாதம் வ்ரஜ! :))

Tuesday, January 04, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

Sunday, January 02, 2011

சாதி மாணிக்கம்புகழு நல்லொருவன் என்கோ? பொருவில் சீர்ப்பூமி என்கோ?
திகழும் தண்பரவை என்கோ? தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ? நீள்சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவுமாறே.


பங்கயக் கண்ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ?


 அங்கதிர் அடியன் என்கோ? அஞ்சன வண்ணன் என்கோ?


செங்கதிர் முடியன் என்கோ? 


திருமறு மார்வன் என்கோ?


சங்கு சக்கரத்தன் என்கோ? சாதி மாணிக்கத்தையே !

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP