Tuesday, June 21, 2011

அன்னமய்யா தெலுங்கு படப் பாடல்...தமிழில்!

இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில், சித்ராவுடன், எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....

திருவேங்கடமுடையான் மீது அன்னமய்யா 14th CE-இல் இசையமைத்த பாடல்! இதைப் பாடாத மேடையோ, பாடகரோ இல்லை!
எம்.எஸ் அம்மா முதற்கொண்டு, இன்று சபையில் அறிமுகமாகும் என் தங்கச்சி பொண்ணு வரை, இந்தப் பாடலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

சில சமயம், தமிழ்ச் சொற்களை இசையில் போட்டு உடைப்பது போல், பிரம்ம க'டி'க்கின என்று அழுத்திக் கடிப்பவர்களும் உண்டு!:)

அன்னமாச்சார்யர் தெலுங்கில் மட்டுமே கீர்த்தனைகள் எழுதினாலும், ஆழ்வார்கள் மீது மாறாத அன்பு கொண்டவர்! உடையவர் மீது தனிக் கீர்த்தனையே செய்துள்ளார்!
அதான் ஆழ்வார் பாசுரக் கருத்தை, இந்தப் பாடலில் அப்படியே பொழிந்துள்ளார்! என்ன பாசுரம்-ன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்! :)

பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு

சித்ராவின் குரலோடு, அனுராதா ஸ்ரீராம், பூர்ண சந்தர், சுஜாதா என்று பலரும் ஒன்று சேர்ந்து பாடி, படத்தை நிறைவு செய்வது...அவசியம் கேட்கவும்!!!
* அன்னமய்யா தெலுங்குப் படத்தில்....கடைசிப் பாட்டு!

(அல்லது)

எம்.எஸ்.அம்மா உருகிப் உருகிப் பாடுவதைக் கேட்டுக் கொண்டே படிக்கவும்!
தமிழாக்கம், அதே மெட்டில் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்!
@சங்கர் - இதை எனக்குப் பாடித் தருகிறாயா?:)
பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு
பிரம்மன் துலக்கிடும் பாதமே! - பரப்
பிரம்மம் தான்-இந்தப் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

செலகி வசுத கொலி, சின நீ பாதமு
பலி தல மோபின பாதமு
தலகக ககனமு, தன்னின பாதமு
பலரிபு காசின பாதமு

சென்றது பூமியில் செவ்வடிப் பாதமே!
பலி தலை மீது உன் பாதமே!
அவனியும் புவனியும் அளந்தநின் பாதமே!
அடியவர் ஆதரி பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

காமினி பாபமு கடிகின பாதமு
பாமு தல நிடின பாதமு
ப்ரேமபு ஸ்ரீசதி பிசிகெடி பாதமு
பாமிடி துரகபு பாதமு

பேதையின் சாபத்தைப் போக்கிய பாதமே!
பாம்பின் தலை நிலை பாதமே!
நெஞ்சிலுன் திருமகள் கொஞ்சிடும் பாதமே!
பரிமேல் அழக-நின் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

பரம யோகுலகு பரிபரி விதமுல
வரமு செகடி நீ பாதமு
திருவேங்கட கிரி திரமணி சூப்பின
பரம பதமு நீ பாதமு

ஞானிகள் பலப்பல பாதைகள் வழிவர
வரங்களை வழங்கிடும் பாதமே!
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழும் பாதமே! - எங்கள்
பரமபதம் உன் பாதமே!!!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)இன்னும் சில குரல், கருவிகளில்...
* பாலமுரளி வயலின் வாசிக்க-காயத்ரி வீணையில்
* உன்னி கிருஷ்ணன்
* யேசுதாஸ்
* பால முரளி கிருஷ்ணா

குரல்: சித்ரா
இசை: மரகதமணி (எ) கீரவாணி
படம்: அன்னமய்யா
வரிகள்: அன்னமாச்சார்யர்


பிரம்ம கடிகின பாதமு...
பரம பதமு நீ...பாதமு!

Monday, June 13, 2011

நித்தியமும் வந்து சத்தியங்கள் செய்தவன்...

நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!

வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..
நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

ஆயர்க்குலச் சீயன் அவன் அங்கம் வழியும் கருமையை
சாயம் பூசினான் சந்திரன் தவழும் விண்ணிற்கு..
வியர்வையாய் சுரந்தனன் மாயன் மழையதனை - அதில்
மண்குளிரச் செய்வதாய் ஏழை மனம் குளிர்வித்தானடி..

திராவிட வேதம் - முருகன் பிறந்தநாள்!

இன்று வைகாசி விசாகம் (Jun 13 2011)! தமிழே உருவாய், உயிராய் இருக்கும் இருவருக்குப் பிறந்தநாள்
* முத்தமிழ் முருகன்
* அத்தமிழில் வேதம் செய்த மாறன் - நம்மாழ்வார்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், மாறன் நம்மாழ்வாரே!
Happy Birthday Honey, My Muruga!:)

* இங்கு, கண்ணன் பாட்டிலே, நம்-ஆழ்வார் பிறந்த நாள் பதிவாக...அவர் எம்பெருமானைச் சந்திக்கும் காட்சி - திருவல்லிக்கேணியில்!
* முருகன் Birthday Post here முருகனருள் வலைப்பூவில்
பராங்குச நாயகியாக நம்மாழ்வார்! அந்தக் காதல் உள்ளம் எந்தையைச் சந்திக்கத் துடிக்கும் காட்சிகள்!
காதல், மனசு, தூது, தோழி, தாய், திட்டு, ஊர் ஏசல், பழி, படர்மெலிந்து இரங்கல்...கடந்து, இதோ....

(அரையர் ஸ்ரீராமபாரதி் உள்ளங் கசிந்து பாடும் திருவாய்மொழித் தனியன்கள், பின்னணியில் ஒலிக்க,
இந்த அசைபடம் vasudevan52 அவர்களால், STD பாடசாலையில் அனுமதி பெற்று, Youtube-இல் வலையேற்றப்பட்டது!)


வீடியோவில் வரும் பாடல்கள்..............கீழே!

திருவாய்மொழித் தனியன்கள்

வடமொழியில், "திராவிட வேதத்தை" புகழ்ந்து:
பக்தாம்ருதம் விச்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
சகஸ்ர சாகோபநிஷத் சமாகமம்
நமாம்யகம் திராவிட வேத சாகரம்

பக்தர்களுக்கும் அமுதம் போலவும், உலக மக்களுக்கு இன்பத்தைக் காட்டுவதும்,
எல்லாப் பொருளும் இதன் பால் உள என்று விளங்கும் மாறன் சடகோபனின் வாக்கு-நூல்...
ஆயிரம் கிளைகள் கொண்ட சாமவேதத்துக்கு சமம்!
அந்தத் "திராவிட வேதம்" என்னும் தமிழ்க் கடலை வணங்குகின்றேன்!தமிழ்த் தனியன்கள்

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து (ஈச்வரமுனிகள்)

வழுதி வள நாடான திருநெல்வேலி, குருகூரிலே
வாசனை மிக்க பொருநை (தாமிரபரணி) கரையிலே
சாமான்யர்களுக்கு கிடைத்தற்கு அரிய மறைகளை, அந்தாதியாய் செய்தவன் = மாறன்!
அவன் அடிகளை, எப்போதும் சிந்தித்து தெளிவாய், என் நெஞ்சமே!


மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று (சொட்டை நம்பிகள்)

வெறும்பேச்சாய் இல்லாது, மனம்+வாய் இரண்டிலும் குருகூர் மாறனைக் கொள்ளும் இனத்தவர்கள்...
அவர்களை மட்டுமே நான் இறைஞ்சுவேன்!
அருள் என்னும் பொருளில் எனக்கு ஒரு குறையுமில்லை!
எந்தை மாறன் சடகோபனின் பாதங்களே எனக்குப் பற்று!


ஏய்ந்தபெரும் கீர்த்தி இராமானுச முனி-தன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்
சீரார் சடகோபன் செந் தமிழ்வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற (அனந்தாழ்வான்)

திருப்புகழ் பொலிந்து விளங்கும் இராமானுச முனிகள்!
அவர் பாதம் பணிகிறேன்!
நம்மாழ்வாரின் நூலில் எதற்கு இராமானுசரைப் பணியவேணும் என்று கேட்கிறீர்களா?

இந்தத் தமிழ் வேதங்களை, ஆலயம் தோறும் பரவச் செய்தவர் யார்?
* வடமொழி வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்வேதத்தை எம்பெருமானுக்கும் முன்னால் ஓதி வரச் செய்தது
* வேத விஷயமான ஸ்ரீபாஷ்யத்துக்கு கூட, ஆதாரமாக, தமிழ் வேதத்தையே முன்னிறுத்தியது
* தன்னைச் சடகோபன் பொன்னடியாகக் கருதி, திருவரங்கத்திலே, தமிழ் விழாவாக, இந்தத் திருவாய்மொழித் திருநாளை நடத்திக் காட்டியது...

அதனால்,
ஆய்ந்த மறைகளான தமிழ் வேதத்தை நான் படிக்கத் துவங்கும் முன்,
இராமானுச முனிகளை வணங்குகின்றேன்!
என் உள்ளம் தமிழ் வேதத்தை ஏற்கட்டும்!


வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன் (பராசர பட்டர்)

வான் முட்டும் சோலை-மதில் உடைய அரங்கத்திலே...
அங்கு கொலுவிருக்கும் பரம் பொருளின் முன்னிலையில்...தமிழ் மறைகள் ஆயிரமும்!
இந்தத் தமிழ் வேதம் என்னும் குழந்தைக்கு,
* ஈன்ற தாய் = மாறன் சடகோபன்!
* ஆசையுடன், வளர்த்த தாய் = இராமானுசன்!


மிக்க இறைநிலையும், மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும், தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல் (பராசர பட்டர்)

என்ன சொல்லுகிறது இந்தத் திருவாய்மொழி?
1. மிக்க இறைநிலை = பரமாத்மா எது?
2. 'மெய்யாம்' உயிர்நிலை = ஜீவாத்மா எது? (உண்மை! மாயை இல்லை)
3. தக்க நெறியும் = பரமாத்மா-வை, ஜீவாத்மா அடையக் கூடிய வழி
4. தடையாகித் தொக்கியிலும் = அடைய விடாமல் தடுக்கின்ற (மறைமுகத்) தடைகள்
5. ஊழ்வினையும் வாழ்வினையும் = ஊழ்வினை தீர்ந்து அடையும் வாழ்வு

இந்த ஐம்பொருள் (அர்த்த பஞ்சகம்) ஓதும் குருகைப் பிரான் நம்மாழ்வாரின் தமிழ் வேதம், இசையோடு பாட வல்லது! யாழின் இசை வேதத்து இயல்!


இவையே நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குப் பின்னாளில் எழுதிய தனியன்களும்-அதன் பொருளும்!

தமிழ் வேதமான திருவாய்மொழி இசையோடு பாடவல்ல 1102 பாசுரங்கள் கொண்டது!
'உயர்வற' என்று தொடங்கி,
பிறந்தனர் 'உயர்ந்தே' என்று...
ஆதியும் அந்தமும் ஒன்றே - துவங்கிய இடத்திலேயே முடிகிறது!

இதற்கு "தமிழ் வேதம்" என்று அடைமொழி வழங்கிச் சிறப்பு செய்தவர் பெரும் சிவ பக்தரான இடைக்காட்டுச் சித்தர்!
ஒரு சாரார் மட்டுமே ஓதி வந்த சாம வேதத்தை, அந்தச் சாராரின் பெண்கள் கூட ஓத முடியாமல் இருந்த வேதத்தை....

அனைவரும் ஓதும் வண்ணம், அதன் கருத்துக்களைத் துணிந்து, தமிழாக்கித் தந்த முயற்சி என்பதனாலேயே = தமிழ் வேதம்!
(கவுரவம்/அந்தஸ்தைக் காட்டும் அடைமொழி அல்ல!)

அப்பேர்ப்பட்ட திராவிட வேதத்தை அளித்த...
32 வயதேயான - மாறன் நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Sunday, June 05, 2011

அருள்விழியைத் திருப்பு

               அருள்விழியைத் திருப்பு  

                       
                  
ஓரடியால் இந்த உலகளந்த 
பேரருட் கடலே! பரந்தாமா!
ஓரடி எடுத்துக் கொடுத்துவிட்டு
ஓடி ஒளிவதுதான் நியாயமா? (கோவிந்தா,ஹரிகோவிந்தா..)


                              

புள்ளுக்கும் வாகனப்பதவி தந்து 
கௌரவப்படுத்திய  கனஷ்யாமா!
உள்ளத்திலோர்வரி சொல்லிவிட்டு
கள்ளன்போல் காணாமற்போகலாமா?(கோவிந்தா..)

புல்லுக்குன்  பூவிதழில் குழலாய்
முகவரி அருளிய முரளீதரா!
முதலடி எடுத்துக்கொடுத்ததுமே
தலைமறைவாவது முறைதானா?(கோவிந்தா..)

 கன்றுக் குட்டிகளைக் குழலூதிக்
கூப்பிட்டுக் கொஞ்சிடும் கோவிந்தா!
நின்னையே நாளெல்லாம் நினைத்தேங்கும்
எந்தனுக்குமுந்தன் தரிசனந்தா!(கோவிந்தா..)

உன்பிழையே அன்றோ என் பிறப்பு?
சொள்ளையோ,சொத்தையோ,உன் படைப்பு!
நான் கடைதேறுவதுன் பொறுப்பு!
என்பக்கம் அருள் விழியைத்திருப்பு!(கோவிந்தா..)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP