Wednesday, August 28, 2013

சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

 
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறி வெண்ணையுண்டு களிப்பாய்.


இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
அருட்பெருஞ்ஜோதியே,தேவகிநந்தனனே !,
            நாகம் குடைபிடிக்க , நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவமைந்தனே !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா !
   கயிற்றாலுனை  உரலில் கட்டிய தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா!
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்
.

பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
சிறுவிரலால் கிரிசுமந்த கோவர்த்தனா !
         விடநாகததையடக்கி அதன்மேல்
         களிநடம்புரிந்த காளிங்கநர்த்தனா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
கல்லெறிந்துடைத்த  நந்தகிஷோரா !
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
 

குளிக்குங்கோபியர் ஆடையை மறைத்து
குறும்பாய்ச்சிரித்த கோகுலபாலா !
        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
        மானங்காத்த  தீனதயாளா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

கால்விரல்ருசிக்கும் சிசுவாய்ப்ரளய
காலத்தில் தோன்றிய ஆலிலைப் பாலா!
         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைத்த வாமனக்கோலா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த  தூயா! நரசிங்கா! 
       எங்களுக்கிரங்கி  இங்கின்று வருவாய், 
      பங்கஜ நயனா! ஹே  பாண்டுரங்கா!
      
 
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

கண்ணன் பிறந்த இரவு: நாத்திக ஆராரோ!

கண்ணன் பிறந்த இரவு - இன்று! (Aug-28-2013)

எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு = மோகனத் தாலாட்டு அல்லவா?
அதுவும்... அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதினால்?:)

அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு = ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு "வெண்ணெய்" தான்! :)


இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
* சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
* பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது!

உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,
இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..
விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
= கவிஞர். பெரியாழ்வார்;  படம்: பெரியாழ்வார் திருமொழி:)
= கவிஞர். வைரமுத்து;       படம்: சிப்பிக்குள்-முத்து


முதலில்: ஆத்திகத் தாலாட்டு

பாடுவது:  தமிழ் மொழியில், பிள்ளைத் தமிழ் உருவாக வித்திட்ட பெரியாழ்வார்! என் தோழியின் தந்தை!

உலக அம்மை-அப்பனான, சிவபெருமானே வந்து தாலாட்டுறாராம்;
பாடுவது பெரியாழ்வார்:
பாடப்படுவது: "தேவகி சிங்கம்"; யசோதை இளஞ்சிங்கம் அல்ல:)

உலக முதல்வனையே, "நாராயணா அழேல்" -ன்னு பாட, இவருக்கு எம்புட்டுத் துணிவு இருக்கணும்?
கடவுளை மற, மனிதனை நினை -ன்னு இவரு தான் உண்மையான  நாத்திகரோ?:))

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் 
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே, தாலேலோ 
வையம் அளந்தானே, தாலேலோ (1) 

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு 
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ 
தேவகி சிங்கமே தாலேலோ (4)

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!
நான், இங்கு, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியதை மட்டும் குடுக்கின்றேன்!




அடுத்து: நாத்திகத் தாலாட்டு:

கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

* தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!

* தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
= ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்குப் படத்திலும் சிறப்பாக இருக்கும்!
சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!

படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

அதே பாடல்: தெலுங்கில் (ஸ்வாதி முத்யம்)

Tuesday, August 27, 2013

கோகுலத்தில் கோலாகலம்!


கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.
இதோ… லலிதையின் வீடு!

லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…


உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

“ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

“மாட்டிக் கொண்டாயா!”

என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

“இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

“யசோதா!”
     “யசோதா!”
             “யசோதா!”

ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

“என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

“யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

“ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

“என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

“என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

“தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

“அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

[நன்றி: பாசுரம், உதவி - KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]
படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

நன்றி: வல்லமை
 

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்தநாள்! ஆடியில் சிறந்தநாள்!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!

அவளுக்கு, என்னவன் முருகவன் சொல்லும் வாழ்த்து = இங்கே!

இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

*அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
*சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
*பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் நல்லாத் தெரியுது; சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் - திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

(தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!)

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்


Happy Birthday Kothai!
உனக்கு அவனோடு (கண்ணனோடு) பல்லாண்டு பல்லாண்டு...
எனக்கு அவனோடு (முருகவனோடு) பல்லாண்டு பல்லாண்டு...



Thursday, August 08, 2013

உனக்காக!



சிற்றில் ஒன்று கட்டி வைத்தேன்
சின்னக் கண்ணா உனக்காக
சற்றே உன்றன் தண்டைக் காலால்
உதைத்துக் கலைப்பாய் அதற்காக!

வண்ணப் புது சிற்றாடையை
உடுத்தி வந்தேன் உனக்காக
ஆற்று நீரில் நீராடையில்
திருடிச் செல்வாய் அதற்காக!

கடைந்த வெண்ணெய் ஒளித்து வைத்தேன்
கள்ளக் கண்ணா உனக்காக
கறந்த பாலும் திரிந்ததென்று
திரித்துச் சொன்னேன் அதற்காக!

என்னைக் கொஞ்சம் உன்னைப் போல
மாற்றுவாயோ எனக்காக
உனக்குப் பதிலாய் தாம்புக் கயிற்றில்
கட்டுப் படுவேன் அதற்காக!

நிழலைப் போல உன்னைத் தொடர்ந்து
பணிகள் செய்வேன் உனக்காக
உயிரும் நோக உலகுக்கெல்லாம்
உழைத்தாய் கண்ணா அதற்காக!

கட்டுக் கொள்ளாக் காதல் கொண்ட
பேதை இங்கே உனக்காக
மீண்டும் மீண்டும் பிறக்கக் கூடச்
சலியேன் கண்ணா அதற்காக!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/sakthi/2011/09/ztrlmz/images/p25.jpg

Saturday, July 20, 2013

அரங்க "வாலி" - சீரங்க ரங்க!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அவர் பொன்னுடலுக்கு.. நம் கரம் கூப்பிய அஞ்சலி!




வாலிக்கு மிகவும் பிடித்தமான = திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!
அந்த அரங்கம் கொஞ்சும் பாடலாக = இந்த அஞ்சலி!

அருமையான வாலி வரிகள்!
சொந்த ஊர்ப் பாசத்துல.. கங்கையை விடப் புனிதமான காவேரியாம்!:))
அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்குறாரு!

வாலி, இந்தப் பாடலில், சில ஆழ்வார் பாசுரங்களை, நேரடியாவே எடுத்து ஆண்டிருப்பாரு!

* ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் 
= "சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை" (நம்மாழ்வார்)
* கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் 
= "கங்கையிற் புனிதமாய காவேரி நடுவில் பாட்டு, பொங்கு நீர் புரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் (தொண்டரடிப்பொடியாழ்வார்)


இந்த இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார்; அதுவும் வீணை bit ஒன்னு வரும்!
கோவில் தூண்களை அப்படியே Fast Motion-இல் காட்டுவார்கள்! அப்போ ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!

அப்படியே அரங்கம் என்னும் சுரங்கத்தில் கிறங்கிப் போவீர்கள்!


பாடலுக்கு முன்னுள்ள தொகையறா: 

(கங்கா சங்காச காவேரி 
ஸ்ரீ ரங்கேச மனோஹரி 
கல்யாண காரி கலுசாரி
நமஸ்தேஷூ சுகாசரி)


சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!


இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, 

தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;


அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

(சீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!


நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி

(சீரங்க)

வரிகள்: வாலி
படம்: மகாநதி
குரல்: SPB, மகாநதி ஷோபனா
இசை: இளையராஜா
ராகம்: அம்ச த்வனி




கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் -ன்னு வாலி எழுதியதற்காக, மதப் பற்றுள்ளவர்கள் யாரும் கோவிச்சிக்க வேணாம்:)
அது வாலி வரி அல்ல! ஆழ்வார் வரி = கங்கையிற் புனிதமாய காவேரி;

ஏன்?

எல்லாரும், "காசி, காசி" -ன்னு சொல்லுவாய்ங்க; மதமும் அப்படித் தான் சொல்லுது!
காசியில் இறக்கணும்; காசியில் கரைக்கணும் -ன்னு எல்லாம், பல மத நம்பிக்கைச் சடங்குகள்! ஆற்றையே சேற்றில் தள்ளும் போக்குகள்!

ஆனால் இம்புட்டு "புனிதம்" மிக்க காசி = 108 திவ்ய தேசமா?
இல்லை!
ஏன் இல்லை?

ஸ்தலம் , மூர்த்தி,  தீர்த்தம், விருக்ஷம் -ன்னு  மத்த எவ்ளோ "புராணங்கள்" இருந்தாலும், அவை திவ்ய தேசங்கள் அல்ல!
ஆழ்வாரின் "ஈரத் தமிழ்" = அதைப் பெற்றால் மட்டுமே திவ்ய தேசம்! இல்லீன்னா வெறும் தேசம்!

கருவறையில் தமிழ் ஒலிக்கும் அரங்கம்!
வேதம் தமிழ்ச் செய்த அரங்கம்!
அந்த அரங்கத்தில் வந்து உதித்த = வாலி வாழ்க!!


இச்சுவை வாலி தந்த, இன்பநல் தமிழை ஏற்று, 
அச்சுவை மோட்சம் ஈவாய், அரங்க மா நகருளானே!

Monday, July 08, 2013

இளையராஜா: என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

இளையராஜா இசையில், "இவன்" என்றொரு படம் வந்தது!
பார்த்திபன் படம்!
படத்தில், ராஜாவின் விரல்கள் பாய்ந்து பாய்ந்து மீட்டும் புல்லாங்குழல்!

சிந்து பைரவி முதலான பல படங்களில், இளையராஜா கர்நாடக இசையைத் தந்தாலும்...,
அதை ஓரளவு "மெல்"லிசையாக்கியே ஓட விட்டிருப்பார்; பாடகர்களும் மரபிசைப் பாடகர்கள் அல்லர்!

ஆனால், இந்தப் பாட்டில் =?
அதை, அதாகவே  ஓடவிட்டு, "மரபிலே இசை கொஞ்சும்" ராஜா!

அட, படத்தில், சுப்புடு நடிக்க ஒப்புக் கொண்டதே = ராஜாவுக்காகத் தானே?
இது விமர்சகர் சுப்புடுவின் "வியப்பிலும் வியப்பே"!

* "ரீதி கெளளை" முதற்கொண்டு, பலப்பல ராகங்கள்... ராஜாவின் பாதையில்!
* ஆனால், இந்தப் பாட்டிலோ, "சிம்மேந்திர மத்யமம்";
ராஜாவின் ராகங்கள் -ன்னு ஆய்வே செய்வார்கள் அறிந்தவர்கள்; (நான் அறியாதவன்)

"அசைந்தாடும் மயிலொன்று காணும்" என்கிற பாட்டு போல் களம் அமைக்கும் ராஜா! - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

* வேய் = மூங்கில்
* வேய்ங் குழல் = மூங்கிலால் செய்த குழல்!

உலோகத்திலும் குழல் செய்வாங்க! ஆனா மூங்கில் குழலே = புல்லாங்குழல்!
புல் + ஆம் + குழல்!

மூங்கில் = புல் வகைத் தாவரம் (Bamboo is a type of grass)
அந்தப் புல்லில் + இருந்து + குழைந்து எழுமிசை = புல் + ஆம் +குழல்!



புல்லாங்குழலில் எழுவது = காதலா? காமமா?
* மனதின் இசையா?
* மங்கையைக் கவரவே எழுப்பும் இசையா?

ஏதோ ஒன்னு... ஆனா பெரும்பாலும் அது துன்பத்தில் எழும் இசை!
ஐய்யய்யோ!
கண்ணன் குழலிசை துன்பம் தரக் கூடியதா என்ன?

= ஆடு மாடுகளுக்கெல்லாம் இன்பம் தரும் இசை...
= அவளுக்கு மட்டும் எப்போதும் துன்பம் தரும் இசை...

ஆண்டாள், இன்பத்தில் சங்கையும், துன்பத்தில் குழலையும் பாடுகின்றாள்!

* முதலிரவுக்குக் காத்திருக்கும் பெண்ணாக = சங்கில் நிறைந்திருக்கும் அவன் எச்சில் ருசி
* அவனைக் காணாத பெண்ணாக = புல்லாங்குழலில் குறைந்திருக்கும் அவன் எச்சில் ஈரம்

இப்படியான புல்லாங்குழல்...
இவளையும், இவனையும் என்ன செய்தது?? கேளுங்கள்!




என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே!

நாளும்...சுக நாதம்...தந்து
அனல் மெழுகாய், இந்த இள மனம் இளகிடவே
(என்னை என்ன செய்தாய்)
-----

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னைக் கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
யாரோ…?அவன் யாரோ…?
யமுனா நதி தீரத்தில்... அமர்ந்தொரு இசைக் கலையால்
(என்னை என்ன செய்தாய்)

************************************************
மழைக் கம்பி குத்தாமல் இருக்க
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது; 
உன் குரல் அருவிக் குற்றாலம்

கானம் கேட்க கண் மூடப் போய்க்
காணாமலே போனேன் நான்;
விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ எனத்
தட்டுத் தடுமாறித் தேடிக்
காதுகளால் இரைந்து கிடக்கும்
உன் கால்-அடிவாரம் வந்தடைந்தேன்

அடடா... தாளமிடும் கைக்கும், தட்டப்படும் உன் தொடைக்கும் 
இடையே நான்...
சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன்!

ஏதோ காது கொடுக்க வந்தவன், 
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ!
************************************************

மூங்கில் போலே, விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய், மனதினைத் துளைத்தாய் நீயே!
தூங்கும் யாழாய்த், தனிமையில் தோகை இருக்க
மீட்டும் விரலாய், நரம்பினில் நடந்தாய் நீயே!

வண்ண மலர் உண்டு! வெள்ளி அலை உண்டு!
வருடிடும் காற்றென உலவப் போ!
பற்றும் கொடியொன்று, பசும் புல் மடியுண்டு
நீர்த் துளியைப் போல் தழுவப் போ!

இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ?
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ?
(என்னை என்ன செய்தாய்)

படம்: இவன்
குரல்: சுதா ரகுநாதன்
வரி: வாலி
இசை: இளையராஜா

சுதா ரகுநாதனின் மரபிசையில் என்றுமே எனக்கு மதிப்புண்டு! சினிமாவிலும் சுதா பாடி இருக்காங்க (மார்னிங் ராகா, மந்திரப் புன்னகை, உளியின் ஓசை, வாரணமாயிரம்...)

தவறாக எண்ண வேண்டாம்;
இந்தப் பாடலை மட்டும் - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே - சுதா ரகுநாதனுக்குப் பதிலாக...
சுசீலாம்மா (or more than that) வாணி ஜெயராம் பாடி இருந்தால் எப்படி இருக்கும்?

மனசுக்குள் ஒரு பூ பூக்குது! யோசித்துப் பார்க்கிறேன்; அந்தப் புல்லாங்குழலையே கேட்கின்றேன்!


ஒரு சின்னப் பின்னுரை:

என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே? -ன்னு முருகனைக் கேட்க எனக்கு மனசுக்குள்ளொரு ஏக்கம்!

*கோதையோ, ராதையோ = கண்ணனைக் கேட்கலாம்!
*ஆனால் நான் யாரைக் கேட்பது? = முருகனைத் தானே!

ஆனா, முருகன், புல்லாங்குழல் வாசிப்பானா?
வா-சிப்பான்!
"குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்" -ன்னு திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடுறாரு!

அதனால் வாசிப்பான்!
அவனை  யாசிப்பேன்!
முருகா - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
முருகா - எனக்கும் உனக்கும் ஒரு இன்பம் இல்லையே!



Monday, June 24, 2013

MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"

* இன்று திரையிசைச் சக்கரவர்த்தி MSV அவர்களின் பிறந்தநாள்! (Jun24)

"பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து"   - இந்தக் குறளுக்கு - எழுத்து அசை, சீர் தளை, அடி தொடை -ன்னு முழுக்க முழுக்க எடுத்துக்காட்டு = MSV; பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

* கண்ணனின் தாசன், கண்ணதாசனுக்கும் இன்றே பிறந்தநாள்! (Jun24)
Happy Birthday Kannadasa!

Photo Credit: Sabesan, MSVtimes
என்னவொரு ஒற்றுமை! MSV & Kannadasan!
"எலே பணிவுள்ள விஸ்வநாதா, நீ விஜய"வாடா"-வைக் கூட, விஜய"வாங்க" -ன்னு தான் சொல்லுவியா?" -ன்னு MSVயை ஓட்டிய கவிஞர்:)

இந்த நாளில், lemme re-publish a post from 2008!
Sick & In Hosp. Dont have energy to write a new post; So...pardon for the re-post;


எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க?-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா = ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆ...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ்ச் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி-ன்னாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"

"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அவனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்!
சண்டை வேணாம்-னு தூது போவாரே? ஆனா, போயி தூண்டிட்டு வந்து சூப்பராச் சண்டை போடுவாரே! அவரே தான்!":)

"அடங் கொக்க மக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா?"-ன்னு இசை அமைக்க...
இளையராஜா, "பாவன குரு-பவன-புரா"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதையெல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"


இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது!

வெகு ஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

*இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை அமைக்கும்!
*தோசைத் தட்டும் தோடி பாடும்!
- அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!:)

எந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல?
எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!
Photo Credit: Subha Photo & Ragasudha

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி,
கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்!
ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா..
எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்! ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்!
போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்!
ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!:(

* அந்தச் சமயத்தில் வந்த படம் தான் = மெல்லத் திறந்தது கதவு!
* ராஜா-MSV ஒற்றுமைக்காக = மெல்லத் திறந்தது கதவு!




இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப்பட்டது!
*ஏற்கனவே கிருஷ்ண கானம் Album-இல் = MSV இசையமைப்பில், ராஜா பாடி இருப்பாரு;
*தாய் மூகாம்பிகை படத்திலோ = ராஜா இசையமைப்பில், MSV பாடி இருப்பாரு;

ஆனால், இருவரும் "இசை அமைப்பிலேயே" ஒன்றிணைவது??
= மெல்லத் திறந்தது கதவு!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு!
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?

அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா meaning தான் புரியலை!
பாவன குரு-பவன-புரா...

எம்.எஸ்.வி = பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பின்னணி-க்கு = இளையராஜா இசை அமைப்பாரு! (opening/interlude)

இப்படி ஒரு Gentleman Agreement போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! எல்லாப் பாடல்களும் ஹிட் தான்!
And you have all of them: Susheelamma, Janaki, Chitra, SP Sailaja, Sasirekha:)

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!:)

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!


1) முதலில் MSV இசை, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு - Note the துள்ளல் instrument beats in prelude/ interludes - typical Raja style; whereas humble single beat melody ("chak chak") - throught the song in MSV style:)

குழலூதும் கண்ணனுக்குக், குயில் பாடும் பாட்டு கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான், உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!


இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?


என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!


சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரி ஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?


வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!


மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: கங்கை அமரன் (can some one dbl chk?)
இசை: MSV (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)


இப்போ Role Change!
2) ராஜா இசையமைக்க, MSV பின்னணி!
** பாவன குரு பவன புரா! Same MSV style in the beginning/end, whereas Non conservative style of Raja throughout the lines; Tabla beats, for a carnatic song!


பாவன குரு - பவன புராதி - ஈசம் ஆச்ரயே!

ஜீவன தர சங்காசம், 
கிருஷ்ணம் கோ லோகேசம்!
பாவித நாரத கிரீசம், 

திரி புவனா வனவேசம்!!
(பாவன குரு)

பூஜித விதி புரந்தரம், 
ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், 

அஜித முதாரம்!! - கிருஷ்ணா

ஸ்மர சத சுபகா (ஆ)காரம், 

நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், 

லலிதா சோதரம் பரம்!!
(பாவன குரு)

(இந்தப் பாட்டின் Melody சூப்பரா இருக்குப்பா, Tabla-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)

குரல்: சித்ரா
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), MSV (பின்னணிக்கு),

ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா & Juvenile Fantasy = "my அமலா"!:)

இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!

என்றாலும்...
படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)

Friday, June 21, 2013

பெரியாழ்வார் பிறந்தநாள்: பல்லாண்டு பல்லாண்டு!

"பல்லாண்டு பல்லாண்டு" = இந்தப் பாட்டு தெரியுமா?

ஓ... ஆழ்வார் படத்தில், தல அஜீத் பாடுவாரே! அந்தச் சினிமாப் பாட்டு தானே?

அதே அதே!
* ஆனா பாட்டுக்குத் தலை அசைத்தது மட்டுமே = தல!
* மத்தபடி, பாட்டைப் பாடினது = தல-யை விடப் பெரிய தல!:)

பெரிய "தல" = பெரிய ஆழ்வார்
இயற்பெயர்: விட்டு சித்தன்; தெக்கத்தி வில்லிபுத்தூர்க்காரரு; simpleஆச் சொல்லணும்-ன்னா..
நம்ம தோழி ஆண்டாளோட (வளர்ப்பு) அப்பா! = தன் மகளைச் "சான்றோள்" எனக் கேட்ட தந்தை!

என் காதல் முருகனையும் பாடிய சில ஆழ்வார்களுள் ஒருவர் - வள்ளி கொழுநன்;
"டேய் கண்ணா, ஒழுங்காத் தேய்ச்சிக் குளி; இல்ல, உன் ஆளு ஒன்னையப் பாத்துச் சிரிப்பா"-ன்னு பயமுறுத்தியவரு:) = நப்பின்னை காணில் சிரிக்கும்


அவரோட பிறந்த நாள் தான் இன்னிக்கி - ஆனியில் சுவாதி (Jun 20)
ஆனி மாசம் சுவாதி = அவரு; ஆடி மாசம் சுவாதி = நானு:)

சரி... அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லீருவோம்; "ஒரு குறையும் இல்லாம, நல்லா இரு" -ன்னு ஆண்டவனையே வாழ்த்துனவரு ஆச்சே!
*Happy Birthday Periazhwar!
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியாழ்வாரே!

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் -ன்னு... இன்னிக்கி அவனவன் வயசைக் கொறைச்சிக்கிறான்:)
ஆனா வாழ்த்த = "வயசு" தேவையில்ல; "மனசு" தான் தேவை!

அதான், ஆண்டவனை விட.. வயசில், கல்வியில், செல்வத்தில், அதிகாரத்தில்..
எல்லாத்திலுமே சின்னவரான ஆழ்வார்,
பெரியவரான இறைவனையே = "நல்லா இரு" -ன்னு வாழ்த்துறாரு!

ஆனா... இறைவனை விட ஒன்றே ஒன்றில் மட்டும் இவரு பெரியவரு; எதில்? = அன்பில்!
(... -பொங்கும், 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்)


"பல்லாண்டு பல்லாண்டு" = இந்த 1000 yr song, பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! ஆனா, இதே பாட்டை..
*சினிமா,
*Dance
*தமிழ்ப் பண்ணிசை,
*கோயில் ஓதல்,
* SPB -ன்னு, பலப்பல குரலில் கேட்போம் இன்னிக்கி!
----------

* AP Nagarajan இயக்கிய திருமால் பெருமை படத்தில், சீர்காழியார்


இசை: கேவி. மகாதேவன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: திருமால் பெருமை
வரிகள்: பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! 
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு!!
(உன் தோள் வலிமை = மல் (எ) வலிமை; 
ஆனா உனக்கும்-எங்களுக்கும், காப்பு = தோள் அல்லதிருவடிகளே!)

அடியோமோடும் நின்னோடும் 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! = (நானும் நீயும்)
வடிவாய் நின் வல மார்பினில்       
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! = (அன்னை திருமகளும்)

வடிவார் சோதி வலத்து உறையும்      
சுடர் ஆழியும் பல்லாண்டு! = (சக்கரமும்)
படை போர் புக்கு முழுங்கும் - அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!! = (சங்கும்)

* ஆழ்வார் படத்தில்... (உன்னி கிருஷ்ணன் & செந்தில் தாஸ்; Music by Srikanth Deva)
வடைமாலை கோக்கும் போது, அஜீத் தங்கை நைசா ஒரு வடை உருவ,
சாமிக் குத்தம் -ன்னு அஜீத் அவளை ஓங்கித் தட்டிட்டு, Sideல தான் வாயில் லபக்கும் காட்சி - so cute Ajeeth!:)
  

*தமிழ்ப் பண்ணிசை வடிவில்....
 

* SPB குரலில் (album) கேட்க, இங்கே

* "அரையர் சேவை" வடிவில் - அரையர் ஸ்ரீராம பாரதி & துணைவியார்
 

* கோயிலில் வேதம் ஓதும் "தொனியில்"... தமிழ் ஓதல்
 


* பல்லாயிரத்தாண்டு = x1,000
* பல கோடி = x10,000,000
* நூறாயிரம் = 100,000

சுவைக் குறிப்பு (Tid bits):

1. தமிழில், "லட்சம்" (இலட்சம்) என்ற சொல் இல்லை; நூறாயிரம் என்பதே சரி

2. திவ்ய பிரபந்தம் என்ற பெயர் பின்னாளில் வந்தது; ஆழ்வார்கள் யாரும் அந்தப் பெயரை வைக்கவில்லை;
திவ்ய பிரபந்தம் = "அருளிச் செயல்" என்பதே தூய தமிழ்ப் பெயர்;

3. காலத்தால் மூத்த முதலாழ்வார் (பொய்கை ஆழ்வார்), "உலகம்" -ன்னு வச்சி தொடங்குன பாட்டு தான், முதல் பாசுரம் (வையம் தகளியா வார்கடலே) !
ஆனா, எல்லாப் பாசுரங்களையும் பின்னாளில் வரிசைப்படுத்தும் போது, "பல்லாண்டு" -ன்னு மங்களகரமா வரிசைப்படுத்தியதால்...

பெரியாழ்வாரின் இந்தக் கவிதையே, திவ்யப் பிரபந்தத்தில், முதல் பாட்டாக அமைந்து விடுகிறது!

(எப்படி வேதத்துக்கு = "ஓம்" என்பது துவக்கமோ,
தமிழ் வேதத்துக்குப் = "பல்லாண்டு" என்பது துவக்கம்!
வேதத்துக்கு ஓமென்னுமாப் போலே, உள்ளதுக்கெல்லாம் சுருக்காய். தான் மங்கலம் ஆதலால்..ன்னு அருளிச் செயல் ஈடு!)


After a year looong gap, writing in Kannan Songs;
TMS triggered it; Dank u புல்லாங்குழல் குடுத்த TMS குரலே!

Thursday, June 20, 2013

முத்தம் தாடா கண்ணா!



சின்னச் சின்னச் சின்னக் கண்ணா
கன்னம் மின்னும் மணி வண்ணா
கன்னங் கரு விழி கள்ள விழியாக
வெண்ணெயுண்ட கண்ணா வாடா, வந்து
வெல்ல முத்தம் ஒன்று தாடா!

கற்றைக் குழல் காற்றை அளைய, அதில்
ஒற்றைக் குழல் நெற்றி தயங்க
தோகை மயிற் பீலி வாகாய் அசைந்திட
நேராய் என்னிடத்தில் வாடா, வந்து
ஜோராய் முத்தம் ஒன்று தாடா!

பாதச் சதங்கைகள் கிணுங்க, அதில்
ஏழு ஸ்வரங்களும் மயங்க
மார்பில் தவழ்கின்ற ஆரம் அசைந்திட
மானைப் போலத் துள்ளி வாடா, வந்து
வாயில் முத்தம் ஒன்று தாடா!

தேவர் அசுரரும் வணங்க, அன்னை
யசோதையோ கொஞ்சிப் பிணங்க
ஏழுலோக முன்றன் வாயில் காட்டிய பின்
ஓடி என்னிடத்தில் வாடா, வந்து
கோடி முத்தங்களைத் தாடா!


-கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP