Monday, December 15, 2014

காதல் சொன்னானோ?

மால் வண்ணனைப் போற்றும் மார்கழிக்கு வந்தனம்!

சுப்பு தாத்தா பீம்ப்ளாஸ் ராகத்தில் உணர்வுபூர்வமாகப் பாடியதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


செக்கச் சிவந்த வானம் போல

செவ்வரளிப் பூவைப் போல

தொட்டுச் சிவந்த மலரைப் போல

வெட்கிச் சிவந்தாயோ, கண்ணே

வெட்கிச் சிவந்தாயோ?



கண்ணன் வந்தானோ, உந்தன்

மன்னன் வந்தானோ, அவன்

கருவிழியால் உன் மனதைத்

திருடிச் சென்றானோ?



மாயம் செய்தானோ, அவன்

மயக்கம் தந்தானோ, அவன்

மயிலிறகாய் உன் மனதை

வருடி விட்டானோ?



காதல் சொன்னானோ, உந்தன்

காதில் சொன்னானோ, அவன்

குழலைத் தொட்ட இதழினால் உன்

இதழைத் தொட்டானோ?



மாலையிட்டானோ, அவன்

மயங்கி விட்டானோ, உந்தன்

கட்டழகுக் கனிச் சிரிப்பில்

கிறங்கி விட்டானோ?



சிலிர்க்க விட்டானோ, கன்னஞ்

சிவக்க விட்டானோ, அவன்

சின்னச் சின்னக் குறும்பு செய்து

சிணுங்க விட்டானோ?



உள்ளந் தொட்டானோ, உந்தன்

உயிரைத் தொட்டானோ, அவன்

உன்னுடனே ஒன்றெனவே

கலந்து விட்டானோ?

--கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP