Wednesday, February 11, 2009

கிராமத்துக் கும்மி! ஓடக்கார ராமா! கப்பல்கார கண்ணா!

கிராமத்துக் கும்மியில் பல வகை உண்டு! சாதாரண கிராம வாழ்க்கை பற்றியும் கும்மியில் பாடலாம்! கடினமான தத்துவத்தையும் சல்லீசா கும்மியில் சொல்லி விட்டுப் போயிறலாம்!

நண்பர் ராகவ் மற்றும் பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்களால், ஒரு அருமையான பாட்டு கிடைச்சுது! இதை அவிங்க ஊர்ல கும்மியா பாடுவாங்களா-ன்னு நமக்குத் தெரியாது!
ஆனால் இதே மெட்டில் அமைந்த பாடல்களை, எங்கூர்ல உடனே கும்மி ஆக்கீருவாங்க! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் அடிசேரா தார்!
பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!


ஐயன் வள்ளுவனின் குறளை, எப்படி கும்மியாக்குறாங்க பாருங்க!
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!

இப்போ தெரியுதுங்களா கும்மி மகாத்மியம்? ஏதோ நாட்டுப்புறக் கும்மி-ன்னு அவ்வளவு லேசா எடை போட்டுறாதீங்க! (பதிவுலக் கும்மி வேற! :)
பாட்டைப் பார்க்கலாமா? வாழைப்பந்தல் கிராமத்தில் எவனோ ஒரு கிராமத்தான் காச் மூச்-ன்னு பாடறான்! கேட்டுக்கிட்டே படியுங்கள்! :)
Gabcast! MadhaviPanthal #58




தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!
(தாண்டி விடலாம்)

சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்ட வேண்டியே
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது! - பேர்
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!
(தாண்டி விடலாம்)

இராமன் நல்ல ஓடக்காரன் தேடிப் பிடியுங்கள்!
கிருஷ்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்! - எங்கள்
கண்ணன் நல்ல கப்பல் என்றே கண்டு பிடியுங்கள்!

பாண்டுரங்கன் பெயரைச் சொல்லி படகில் ஏறுங்கள்!
பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்! - அவன்
பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்!

ராமா ராமா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
கிருஷ்ணா கிருஷ்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!


கண்ணா கண்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
பாண்டு ரங்கா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!


தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்!
(தாண்டி விடலாம்)



இந்தப் பாட்டின் வரிகளை நினைவில் இருந்து எழுதி அனுப்பிய
* நண்பர் ராகவ்-க்கும்,
* பரவஸ்து சுந்தர் அண்ணாவுக்கும்,
அடியோங்கள் நன்றி!

ஒவ்வொரு வரி பற்றியும், அவர்கள் ஊரான பரமக்குடி-எமனேஸ்வரத்தில் இதைப் பாடியது பற்றியும், அவிங்களே வந்து குறிப்பு தருவாங்க!
வாங்க எம(னேஸ்வரத்) தூதர்களே! :)

இந்தக் கும்மிப் பதிவில், இராமன்-கண்ணன் பேரைச் சொல்லி, அவரவர் தாராளமாக் கும்மி அடிக்கலாம்! அடிக்கணும்! வாங்க! :)

Wednesday, February 04, 2009

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - என்பவள் யார்?

இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு!
* இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க!
* தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க!
அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?

"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"

"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"

"இல்லை! இது பராசக்தி பாட்டு!"

"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்?
* இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
* இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "

"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
"பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"
-ன்னு எழுதறாரே!"

"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"

"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)

"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"

"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"



கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!
* அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
* அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை!
* அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!

கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்?
பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!

பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!
கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!

இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!

பாரதியும் அதையே செய்கிறான்!
பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!



பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!

திரைப்படங்களில்:
* கலைஞரின் நீதிக்குத் தண்டனை படத்தில் இருந்து...சொர்ணலதாவின் முதல் பாடல்-எம்.எஸ்.வி இசையில்
* மணமகள் படத்தில் இருந்து...எம்.எல்.வசந்தகுமாரி

தமிழிசை-கர்நாடக இசைகளில்:
* மகாநதி ஷோபனா
* சாக்சோஃபோன்
* மகராஜபுரம் சந்தானம்
(பாரதி இட்ட ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)
இந்தப் பாடல் ஒரு நவரசப் பாடல்! மகிழ்ச்சி-சோகம், சிரிப்பு-அழுகை, வெற்றி-ஏக்கம்-ன்னு விதம் விதமா பிரதிபலிக்கும்!
இதுவும் "கிருஷ்ணை" பாட்டே! "கிருஷ்ணன்" பாட்டே! கண்ணன் பாட்டே!


சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!


பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!

ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!


உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!

சொல்லும் மழலையிலே, கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!


இன்பக் கதைகளெல்லம், உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?


மார்பில் அணிவதற்கே, உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே, உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?


வாய்ப்பாட்டுகளில்:
* டி.என்.சேஷகோபாலன்
* செளம்யா
* உன்னி கிருஷ்ணன்
* பம்பாய் சகோதரிகள்

இசைக் கருவிகளில்:
* புல்லாங்குழல் - டி.ஆர்.மகாலிங்கம்
* மேண்டலின் - ஸ்ரீநிவாஸ்
* வீணை - ராஜேஷ் வைத்யா
* சாக்சோஃபோன் - கத்ரி கோபால்நாத்

நித்ய ஸ்ரீ
பாரதியார் பைரவியில் இதை இட்டாலும்...ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ராகமாக, ராக-மாலையாகப் பாடப்படுவதும் உண்டு!
காபி, மாண்ட், வசந்தா, திலாங், ஹிந்தோளம், நீலாமணி, நீலாம்பரி, வலாசி, மத்யமாவதி


TM கிருஷ்ணா - சஞ்சய் வாணன் (சின்னஞ் சிறு பையன் :)


வீணை சிட்டிபாபு


சுதா ரகுநாதன்


நடனம்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP