Thursday, December 20, 2012

பள்ளி கொண்டது போதும், வா!சுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி அசத்தி இருப்பது இங்கே! மிக்க நன்றி தாத்தா!


வாசல் பார்த்துக் காத்திருக்கேனே வண்ணக் கண்ணா வா!
நேசந் தன்னை வாசம் பார்க்க செல்லக் கண்ணா வா!
கோகுலத்தில் வாசம் செய்யும் சின்னக் கண்ணா வா!
கோபியரை விட்டு இந்தக் கோதைக்காக வா!

விரும்பிய தெல்லாம் விரும்பிக் கொடுக்கும்
கரும்பினி யோனே வா!
கருங்குழல் இலேசாய்க் காற்றில் அசைய
கருமே னியனே வா!

பாதச் சிலம்பு கட்டியம் கூற
பட்டுக் கண்ணா வா!
வேதப் பொருளே பேதைக்காக
வேகம் கொண்டு வா!

கள்ளச் சகடம் உதைத்த பாதம்
மெள்ளப் பிடிக்கவா?
வெள்ளத் தரவை விட்டு என்றன்
உள்ளத் திருக்க வா!

கள்ளச் சிரிப்பால் அடியவர் தம்மின்
உள்ளம் கவர்ந்த வா!
பள்ளி கொண்டது போதும் கண்ணா,
துள்ளி எழுந்து வா!


--கவிநயா

Monday, December 10, 2012

திருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்

 பாரதியாரின் பிறந்தநாளான (December-11th) இன்று
பாஞ்சாலி சபதத்தில் திருதராட்டிரனின் மனத்தில்
பகைமையைத் தூண்டிவிடும்எண்ணத்துடன் சகுனி,
வேள்வியில் பாண்டவர் கெளரவரை மதிக்காமல்
 கண்ணனுக்கு முதலுபசாரம் செய்ததைச் சொல்ல,
திருதராட்டிரன் 'கண்ணனே முதலுபசாரம் பெறத்
தகுதியுள்ளவன்' என்று கண்ணனைப் புகழும் பகுதி கீழே :

    [Bharathi.jpg]

திருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்


'கண்ணனை ஏதெனக் கொண்டனை?-அவன்
காலிற் சிறிதுகளொப்பவர் -நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முள்ளே -பிறர்
யாருமிலை யெனல் காணுவாய் .'

"ஆதிப்பரம்பொருள் நாரணன் ;-தெளி
வாகிய பொற்கடல் மீதிலே -நல்ல
சோதிப்பணாமுடியாயிரம் -கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் -ஒரு
போதத் துயில் கொளும் நாயகன் ,-கலை
போந்து புவிமிசை தோன்றினான் -இந்தச்
சீதக்குவளை விழியினான் "-என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர் .'

'நானெனும் ஆணவந் தள்ளலும் -இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் -பர
மோனநிலையின் நடத்தலும் -ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் -நடு
வான கருமங்கள் செய்தலும் -உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் -பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
உள்ளம் அருளில் நெகுதலும் ,'

'ஆயிரங்கால முயற்சியால் -பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே -தம்மைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல் ,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத் -தெய்வ
மாண்புடையாரென்று போற்றுங்காண் !-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல் ,-கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?'

Monday, November 26, 2012

இராதா மது.லைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது? தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ?

என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?

தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?

உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?

எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?

கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?

சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?

கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.

குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.

காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.

காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.

இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?

Monday, September 10, 2012

வேய்ங்குழல்


[Bharathi.jpg]
பாரதியாரின் நினைவுநாளில் [11th september]
    எனக்குப்பிடித்த பாரதி  பாடல்களில் ஒன்று
    கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

வேய்ங்குழல்

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக்
             கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி
மன்றினின்று வருகுவதோ?-என்றன்
             மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)
அலையொலித்திடும் தெய்வ -யமுனை
              யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
             எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக்
             காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
            நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
              பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
             வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
                காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
                யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

Monday, August 20, 2012

பாலக்ருஷ்ணனுக்குத் தாலாட்டு


பாலக்ருஷ்ணனுக்குத் தாலாட்டு

(subbusir sings:
http://www.youtube.com/watch?v=sQgyPEYPuHo&feature=em-share_video_user )

வெண்ணையுண்ணும் கண்ணனது கண்ணிரண்டும் சொக்குதடி.
மண்ணைத்தின்னும் மன்னனிவன் கண்ணுறங்கும் நேரமடி.
மீராவின் கிரிதரனைத் தாலாட்ட வாருங்கடி!
"ஆராரோ ஆரிரரோ ஆராரோ" பாடுங்கடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]

தொட்டிலினை அதிராமல் மெதுவாக ஆட்டுங்கடி!
கொட்டாவி விடும்போது கிட்டவந்து பாருங்கடி!
யசோதை கண்டுசொன்ன காட்சிதனைக்காணுங்கடி!
கேசவன் கண்துயிலத் தாலாட்டுப்பாடுங்கடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]


குழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி!
அழகைக்கவிபாட தமிழும் திணறுதடி!
பட்டுக்கன்னம் தொட்டநெஞ்சம் தட்டாமலை ஆடுதடி!
மொட்டவிழ்ந்த அதரம் ஒருமெட்டுப்பாடத்தூண்டுதடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]

Thursday, August 16, 2012

கண்ணா வருவாயோ?
சுப்பு தாத்தாவின் சுகமான ராகத்தில் இங்கே: அவரே 'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்' மெட்டில் பாடியது இங்கே: மிக மிக நன்றி தாத்தா!

 
காற்றினில் அலைகின்ற கருங் குழலும் – அவன்
கனியிதழ் தழுவிய தீங் குழலும்,
போற்றி வரும் பக்தர் மனங் கவரும் – அவனை
ஏற்றி ஏற்றி எங்கள் தமிழ் வளரும்!

கனக மணிச் சதங்கை பாதம் தழுவும் – அவன்
கமலப் பிஞ்சுப் பாதம் பூமி தவழும்;
மார்பினில் பாதம் பட மெய் சிலிர்க்கும் – அவன்
வாயினில் தேனொழுக மனம் களிக்கும்!

வெண்ணெயள்ளி உண்டவனைக் கண்டதுமே
வெண்ணெயினைப் போல உள்ளம் உருகிடுமே;
அள்ளியள்ளி அணைத்திட ஏங்கிடுமே
அங்கமெல்லாம் அன்பு வெள்ளம் ஊறிடுமே!

சின்னக் கண்ணா என்னிடத்தில் வருவாயோ?
செவ்விதழால் முத்து ஒன்று தருவாயோ?
உள்ளத்தினைக் கடைந்தன்பு வெண்ணெயெடுத்தேன்;
ஓடி வந்து உண்டு மனம் மகிழ்வாயோ?


--கவிநயா


Tuesday, August 07, 2012

குழல்காரன்!வினங்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதென்றால் வெகு பிரியம், குட்டிக் கிருஷ்ணனுக்கு! பட்டுப் போன்ற மென்மையுடன் கொழு கொழுவென்று இருக்கும் மாடுகளை ஒவ்வொன்றாக ஆசையுடன் தடவிக் கொடுப்பான். சின்னஞ்சிறு கன்றுகளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுவான். கன்றோடு கன்றாக பாலருந்துவான். கன்றோடு கன்றாக படுத்துறங்குவான். மேய்ந்து முடிந்ததும், மாடுகளே அவனைத் தேடி வந்து விடும். தங்கள் மூக்கால் அவனை இலேசாக உரசி எழுப்பி, தம் முதுகின் மீது அமரச் செய்து, அவைகளே அவனை வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்!

மேய்ச்சலுக்குப் போகும் போது, மாடுகளை இந்தப் புறம் மேய விட்டு, பிள்ளைகள் எல்லோரும் அந்தப் புறம் விளையாடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான், பிள்ளைகள் கண்ணாமூச்சி ஆடத் தீர்மானித்தார்கள். “அதோ… அந்த மரத்தை ஓடிப் போய் தொட்டு விட்டுத் திரும்ப வேண்டும். கடைசியில் வருகிறவன்தான் ஒளிந்திருப்பவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்”, என்று கிருஷ்ணன் சொன்னதற்கிணங்க, எல்லோரும் ஓடிப் போய் தூரத்தில் இருந்த அந்த மரத்தைத் தொட்டு விட்டுத் திரும்ப வந்தார்கள். சுதாமன் தான் கடைசியாய் வந்தான்.

சுதாமன் கண்களை இறுக மூடிக் கொண்டு, “ஒன்று…இரண்டு…மூன்று…” என்று எண்ணத் தொடங்க, எல்லோரும் ஓடிச் சென்று மரத்துக்குப் பின்னால், புதருக்குப் பின்னால், பாறைக்குப் பின்னால், இப்படி அவரவருக்குத் தோன்றிய இடங்களில் ஒளிந்து கொண்டர்கள். கிருஷ்ணன் மட்டும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அவர்களை விட்டுச் சிறிது தூரம் விலகி வந்து விட்டான்!

அவன் வந்து சேர்ந்த இடம்தான் என்ன அழகு! இயற்கை அன்னை தன் அன்பையெல்லாம் அந்த இடத்திலேயே பொழிந்து விட்டிருந்தாளோ என்று நினைக்கும்படி இருந்தது அந்த இடம். அழகான தாமரைக் குளம் ஒன்று. சுற்றிலும் பலவிதமான மரங்கள் அடர்ந்திருந்தன. வித விதமான செடிகளும், புதர்களும் மண்டியிருந்தன. நெடிதுயர்ந்த மூங்கில் மரங்கள் குனிந்து பூமியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. நட்புணர்வோடு, மகிழ்ச்சியாக சுற்றி வந்தன, வண்ண வண்ணப் பறவைகள். அந்த இடத்தைப் பார்த்தவுடன் குட்டிக் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்து விட்டது. எங்கே ஒளிந்து கொள்ளலாம் என்று அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தான்… அதோ அந்தப் பெரிய மரத்தின் பின்னால் ஒளியலாம் என்று அங்கே சென்றான்.

இதற்குள் சுதாமன் எல்லாப் பிள்ளைகளையும் கண்டு பிடித்து விட்டிருந்தான், கிருஷ்ணனைத் தவிர. தெரிந்த இடங்களிலெல்லாம் தேடிக் களைத்து, இப்போது எல்லோரும் சேர்ந்து, கொஞ்சம் கவலையுடனேயே கிருஷ்ணனைத் தேட ஆரம்பித்திருந்தார்கள்.

இங்கே, கிருஷ்ணனைத் தன்னிடம் வைத்திருந்த மரத்திற்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது! “உலகாளும் பரந்தாமன் என்னிடத்தில் இருக்கிறான்!” அது இலேசாக, “கிசுகிசு”வென்று, தன் பக்கத்தில் இருந்த மரத்திற்கு சேதி சொன்னது. அது, தன் பக்கத்தில் இருந்த மலர்ச்செடிக்குச் சொன்னது. அது, தன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மயிலிடம் சொன்னது. இப்படியாக, காட்டுத் தீ போல் அந்தப் பகுதி முழுவதும் கிருஷ்ணன் வந்திருக்கும் செய்தி, ஒரு நொடியில் பரவி விட்டது!


அமைதியாக இருந்த குளத்தில், இப்போது தாமரை மலர்கள் ‘குப்’பென்று பூத்தன. மல்லிகை, மந்தாரை மலர்கள் மலர்ந்து சிரிக்க, பாரிஜாத மலர்களும் பூத்துக் குலுங்கி, மணம் பரப்பின. குயில்களெல்லாம் சந்தோஷ கீதம் இசைத்தன. மயில்கள் எல்லாம் ஒன்று கூடி, தம் தோகையை விரித்தாடி, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. மூங்கில் மரங்களுக்கிடையில் புகுந்த காற்று, தன் பங்கிற்கு இனிமையான இசையொலி எழுப்பியது. மயில்கள் ஆடுவதைப் பார்த்து, அடடா, நாம்தான் நம் வேலையை மறந்து விட்டோம் போலும் என நினைத்து, வானத்தில் கருமேகங்கள் ஒன்றாகக் கூடி, மலர்த் தூவலாக, மழைத் தூறல் ஆரம்பித்தது.

இவ்வளவு கலாட்டாவும், சப்தங்களும், காற்றில் கலந்து வந்த மலர்களின் மணமும், கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் கவனத்தைக் கவர்ந்தது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அவனைக் கண்டு பிடித்து விட்டார்கள்!

“கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று அவனைச் சுற்றி ஒரே ஆட்டமும் கொண்டாட்டமும்தான்! ஆனால் கிருஷ்ணனின் முகத்தில் மட்டும் எந்த சந்தோஷமும் இல்லை! மாறாக, அவனுடைய அழகான முகத்தில் கோபத்தின் ரேகை இலேசாக எட்டிப் பார்த்தது.

கிருஷ்ணன் தன்னைச் சுற்றிலும் தலைகீழாக மாறிவிட்டிருந்த இயற்கையைப் பார்த்தான். இந்த இயற்கையல்லவா நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டது என்று எண்ணமிட்டான். சின்னக் கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்துக் கொண்டு சுற்றிலும் ஒரு முறை கோபப் பார்வை பார்த்தான். அவன் நண்பர்களும் கூட இலேசான அச்சத்துடன் அமைதியாக நின்றிருந்தார்கள்.

அவன் கோபத்தைக் கண்டு இத்தனை நேரம் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்த அத்தனை உயிரினங்களும் நடுங்கி விட்டன! எல்லாம் ஓடி வந்து கிருஷ்ணனைப் பணிந்தன.

“கிருஷ்ணா… எங்களை மன்னித்து விடு. உன்னைக் கண்ட பரவசத்தில் எங்களையே நாங்கள் மறந்து, இவ்வாறு செய்து விட்டோம். உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எங்களிடம் இல்லை”.

“அதெப்படி! என்ன சொன்னாலும் நீங்கள் செய்தது தவறுதான்!” கிருஷ்ணனின் கோபம் மாறியதாகத் தெரியவில்லை.

மூங்கிலிடை புகுந்த காற்றும், மூங்கிலும், குயிலும், மயிலும், மரங்களும், மலர்களும், தாமரைகளும், எல்லாம் சேர்ந்து, “கிருஷ்ணா. உனக்கு இன்னும் கோபம் தீரவில்லையென்றால், எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு. ஏற்றுக் கொள்கிறோம்”, என்று கண்ணீருடன் தலை வணங்கின.

இப்போது குட்டிக் கிருஷ்ணனின் எழில் வதனத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. “ஆம், உங்கள் அனைவருக்குமே கண்டிப்பாக தண்டனை உண்டு!” என்றான்.

“மயிலே! இனி உன் இறகுகளை நான் என் முடியில் அணிந்து கொள்ளப் போகிறேன்!”

“மலர்களே! நீங்கள் எல்லோரும் சேர்ந்து மாலையாகி*, என் மார்பில் தவழ வேண்டும்!”

“மூங்கில் மரமே! உன்னிடம் காற்று புகுந்து எழுப்பிய இனிய நாதத்தை இனி நானே எழுப்புவேன். காற்றே, நீ என்னிலிருந்து எழுந்து மூங்கிலில் புகுந்து அதற்கு உதவுவாய்! மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன். குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன்!”


ஆகா, தண்டனையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! மகிழ்ச்சி வெள்ளம் அந்த வனமெங்கும் பொங்கி ஆர்ப்பரித்தது! அனைத்து உயிர்களும் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனைப் பணிந்து வணங்கின.

பிறகு கிருஷ்ணன் தன் நண்பர்களை நோக்கி, “நீங்கள் எல்லாம் என்னைக் கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியே! இவ்வளவு நேரமும் உங்கள் அனைவரிடமும் சும்மாதான் விளையாடினேன்!” என்று கூறி தன் திருக்கரங்களினால் அவர்களைத் தீண்டி, தன் திருமேனியுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்!

ஆம்! அடியவர்களிடம் அகப்படுவதுதான் அந்தப் பொல்லாத கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே!


--கவிநயா

*வனமாலியின் வைஜெயந்தி மாலை என்பது மல்லிகை, மந்தாரை, தாமரை, மற்றும் பாரிஜாத மலர்களால் ஆனது என்று வாசித்த நினைவு.

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்! 

நன்றி: வல்லமை
படங்களுக்கு நன்றி: http://shirdisaibaba100.blogspot.in/2011/06/lord-krishna-beautiful-childhood-photos.html
 

Monday, July 23, 2012

யார் இந்தப் பெண்?வாழுகிறாள்; ஆனால் வாடுகிறாள்
பாடுகிறாள்; அதிலும் வாடுகிறாள்
நாடுகிறாள்; அவனைத் தேடுகிறாள்
தேடுகிறாள்; மீண்டும் வாடுகிறாள்

இந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.

கனவிலேயே நிலைத்திருக்கும் கண்கள்.
அவன் நினைவிலேயே நிலைத்திருக்கும் நெஞ்சம்.
அவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.
அவன் சுவையிலேயே கனிந்திருக்கும் இதழ்கள்.

இந்தப் பெண்ணின் உலகமே வேறு.

ஆடியிலும் அவன் வதனம்.
பாடி வரும் அவன் வேய்ங்குழல்.
தொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே
எடுத்துச் சூடிக் கொள்ளும் அவன் தோள்கள்.

இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


--கவிநயா

Monday, June 11, 2012

காலம் என்று வரும்?


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மிக்க நன்றி தாத்தா!


எனக்கு -
உன் கன்னத்தோடு கன்னம் வைக்கும் காலம் வருமோ? – உன்றன்
உள்ளங் கையில் ஓய்வெடுக்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சின்னப் பூவின் வண்ணம் பார்க்க ஆசை வருமோ? – இந்த
வண்ணப் பூவின் வாசம் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் பட்டுப் பாதம் தொட்டுப் பார்க்கும் காலம் வருமோ? – உன்றன்
கட்டுக்குள்ளே கண்ணுறங்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சிட்டுப் போன்ற பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – என்றன்
கட்டுக் கொள்ளாக் காதல் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் இதழைத் தழுவும் குழலாய் மாறும் காலம் வருமோ? – உன்றன்
குழலைத் தீண்டும் தென்றலாகும் நேரம் வருமோ?


உனக்கு -
உருகும் இந்தப் பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – உயிர்
கருகும் முன் என் கண்ணீர் வந்து சேதி சொல்லுமோ?


--கவிநயா

Wednesday, May 09, 2012

புலியைக் கேட்ட பூனையின் மியாவ்...!

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

அவன் பூவிதழில் புன்னகைத்து

புனைவிழியில் புல்லரித்து

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்

காரிருளில் வெள்ளைநிலா

பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...

வண்ணமயில் தோகை யொன்றை

கண்ணன் முகம் தாங்கியதை

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

ராதை மனம் கண்டு அந்த

கோதையுடன் மோகனத்தின்

பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...

தளிர் ஊடி வரும் காற்றின்

குளிர் ஊதலிலே நாதம்தரும்

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

முன்னம் வந்த ராத்திரியில்

மூடவந்த முகத்திரையில்

முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...

புலர் வெள்ளி வரும் வேளை வரை

புல்நுனி நீர் தீரும் வரை

புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

Sunday, April 29, 2012

செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!

 'சர்வம் நீயே' வலையில் சென்ற ஆண்டு பதிவிட்ட கண்ணன் பாட்டு  

இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:
செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!


புல்லை துளைத்தன்று குழல்

மெல்லிசையால் மயக்கியவா!

செல்லாக் காசான எந்தன்

உள்ளத்திலே துளையிட்டு,

மெல்ல மெல்ல உள்புகுந்து,

சொல்லெடுத்துத் தந்துவிட்டு,

சொல்லாமல் கொள்ளாமல்

செல்லத்திட்டமிட்டாயா?

அன்பென்னுங் கல்லிட்டு

அடைத்துவிட்டேன் துளையை!

பொல்லாத போக்கிரியே !

செல்ல வழி ஏதுமில்லை!

தொல்லை செய்யாமல்,ஒரு

நல்லபிள்ளைபோல,எந்தன்

செல்லப்பிள்ளை போல,எந்தன்

உள்ளத்திலே உறங்கிவிடு!

Sunday, April 15, 2012

முத்தம் ஒன்று தந்தால் என்ன?சுப்பு தாத்தா கேட்டவுடனேயே கானடா ராகத்தில்  பாடித் தந்து விட்டார்! மிக்க நன்றி தாத்தா!


முத்தம் ஒன்று தந்தால் என்ன, ஆகாதோ? - என்
சித்தம் எல்லாம் நீயேதானே தெரியாதோ?
பித்துக் கொண்டேன் உன்மேல் என்று அறியாயோ? - என்
பக்திப் பூவைச் சூடிக் கொண்டால் ஆகாதோ?

கண்ணால் உன்னைப் பார்த்துப் பார்த்து
காதால் புகழைக் கேட்டுக் கேட்டு
நெஞ்சச் சிறையில் உன்னை வைத்தேன் அறியாயோ? - உனையே
தஞ்சம் என்று கொண்ட என்னை மறந்தாயோ?

உன்றன் பட்டுப் பாதம் கொஞ்சம்
என்னைத் தொட்டால் துயரம் தீரும்
பற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ?
சற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm

Friday, April 13, 2012

நகுமோமு கநலேனி - 3

டிஸ்கி: இது மற்றும் ஒரு பழைய ரெக்கார்டிங்க். யாருக்கேனும் பின்னாளில் பயன்படலாம்.

யூட்யூப்-ல் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோ என்றால் வேறு சில வரைமுறைகள் உள்ளன போல. ஆதலால் இரண்டு வீடியோக்களாக பதிய வேண்டியதாயிற்று.


"முந்தைய இரண்டு பதிவுகளும் இந்தப் பதிவும் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ தியாகராஜரின் உயிராகத் திகழ்ந்த சீதாராமருக்கு அர்ப்பணம்." என்று எழுத ஆசை...ஆனால் ராம நவமி முடிந்து ரொம்ப்ப்ப்ப நாளாயிற்றே...அந்த காரணத்தாலும், பாடல் கிரிதாரியை நினைவுபடுத்துவதாலும், இந்தப் பதிவுகள் அத்தனையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

காலையில் இது போன்ற இசையை லேப்-டாப்பில் போட்டுவிட்டு அலுவலக மெயில்கள் பார்ப்பது, பதில் எழுதுவது போன்ற வேலையில் ஈடுபடுவது வழக்கம்...ஆனால் இந்த நாதஸ்வர இசை செய்யும் வேலையை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. :-) ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எல்லாவற்றையும் மறந்து விடலாம்...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  :-)

Monday, April 09, 2012

நகுமோமு கநலேனி - 2


ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ

நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ

ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ

ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)

[பொருள்]
ஸ்ரீ ரகுவீர !  உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா? கிரிதாரியே ! உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே ! வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா? பரமாத்ம ! அகிலாண்டவா ! எவரிடம் முறையிடுவேன் ! தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் !

Sunday, April 08, 2012

நகுமோமு கநலேனி - 1டிஸ்கி: இது ஒரு மிகப் பழைய ரெக்கார்டிங்க். பத்து நிமிடங்கள் முழுமையாக ஒதுக்கிவிட்டு பொறுமையாக கேட்க வேண்டிய ஒன்று. அவசர கதியில் கேட்டோம் என்றால் பிடிக்காமல் போகலாம். பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)


ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய "நகுமோமு கநலேனி" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...
~
கிரிதாரியின்,
ராதா

Saturday, March 31, 2012


ராமநாம மகிமை
 (ராமநவமியான இன்று  அப்புனிதநாமமுள்ள ஒரு மினி
   பஜனையாவது பாடணும்னு மனத்தில் படவே எனக்கு
   சுமாராத்தெரிந்த மெட்டில் பாடிட்டேன்;தாங்கமுடியாதவர்கள்      மன்னிக்கவும்!எல்லோருக்கும் ராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!!)
 

தூய அன்பில் தோய்ந்து சொல்லு
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீ ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

எங்குமின்பம் பெருகச் சொல்லு ,ராம்,ராம்,ராம்,
பொங்கும் மங்களம் தங்கச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

துன்பம் யாவும் தொலையச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ஜன்மம் கடைதேறச்சொல்லு ,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

தோத்திரமாய்த் தொடர்ந்து சொல்லு,ராம்,ராம்,ராம்,
நாத்தழும்பு ஏறச்சொல்லு ராம்,ராம்,ராம்.
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.


தூய அன்பில் தோய்ந்து சொல்லு
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,

ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

Wednesday, March 28, 2012

குமரன் பிறந்தநாள்! - தமிழில்...அதரம் மதுரம் வதனம் மதுரம்!

நேற்று ((Mar 28)...
பதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்!

குமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...
...நான்-முருகவன் சார்பாகவும்,
அனைவர் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு!சுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்
- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன் = இனியவை எட்டு

எம்.எஸ்.அம்மாவின் குரலில் இங்கே, கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மெட்டு மாறாமல் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்; நன்றி!

ஸ்ரீ-ஹரீ-ஓம்

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
-----------------------

பிற கலைஞர்களின் இசையில்:

Cinema:
*வாணி ஜெயராம் - கன்னடப் படத்தில் (மலைய மாருதா)

Classical:
*விஜய் யேசுதாஸ்
*யேசுதாஸ்

*மும்பை ஜெயஸ்ரீ
*அனுராதா பட்வால்

*Fusion
*குஜராத்தி-பஜன்

Tuesday, March 06, 2012

கிரிதாரியுடன் ஹோலி

           

மக்கே உரிய எளியநடையில் நமக்களித்த பல
ஆன்மிகப் படைப்புக்கள் மூலம் என் ஒவ்வொரு
பதிவுக்கும் தூண்டுதலாய் இருந்த அமரர் ரா.கணபதி
அவர்களது "காற்றினிலே வரும் கீதம் "என்ற
மீராவைப்பற்றிய படைப்பில் எனக்குக் கிடைத்த
"ஹோரி கேலத் ஹை கிரிதாரி" எனும்
மீரா பஜனைத் தழுவிய என் தமிழ் ஹோலி கீதம் கீழே :
---------------------------------------

கிரிதாரியுடன் ஹோலிஹோரி கேலத் ஹை கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

முரளி சங்கு பஜத் டப் ந்யாரோ,
ஸங்கு ஜுவதி ப்ரஜ்னாரீ |

வேய்ங்குழலூதி மத்தளந்தட்டி
பூம்பாவையர் புடைசூழ
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

சந்தன் கேசர் சிரகத் மோகன் ,
அப்னே ஹாத் பிஹாரி |

சந்தனத்துகளைக் கைகளாலள்ளி
மங்கையர் மேனியில் பூசி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


பரி பரி மூட்டி குலால் லால் சஹுன்
தேத் சபன் பை டாரி |

வண்ணப்பொடியை பிடிப்பிடியாய் எடுத்து
கன்னியர் மேல் வாரியடித்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


சேல் சபீலே நவல் கான்ஹ ஸங்கு
ஸயாமா பிராண் பியாரி |

செல்லமாய் வஞ்சியரை வளையவந்து
சல்லாபித்துள்ளம் கவர்ந்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


காவத் சார் தமார் ராக் தஹ்ன்
தை-தை கல் கர்தாரி |

தமார் பண்ணிலின்ப கானம்பாடி
கைதட்டிக் குதித்துக் கூத்தாடி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


மீரா கே பிரபு கிர்தர் மில் கயே ,
மோகன் லால் பிஹாரி |

கண்ணாளனை மீரா கண்டனளின்று !
களிக்கின்றாள் அவனைக் கலந்து !
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


            

Monday, January 30, 2012

ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)

இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...

"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு" என அண்ணல் கேட்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!

இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!


ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்

அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------திரெளபதி கி  லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)

திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------

பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,

தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)


சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன்,  சாபம் தொலைந்திட,

அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)

--------

பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,

துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)


காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,

துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)

வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!

Saturday, January 28, 2012

என் கண்ணனைக் கண்டாயா?


மண்ணே மரமே செடியே கொடியே
கண்ணனைக் கண்டாயா - என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
சமைந்து நின்றாயா – நீ
சமாதி கொண்டாயா?

புல்லே பூவே புதரே என்றன்
கண்ணனைக் கண்டாயா – என்
கள்வனைக் கண்டாயா?

கள்வனைக் கண்ட காரணத்தால்
மெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்
அரும்ப நின்றாயா?

மலையே மடுவே குன்றே குடிலே
கண்ணனைக் கண்டாயா – என்
மன்னனைக் கண்டாயா?

மன்னனைக் கண்ட காரணத்தாலே
மலைத்து நின்றாயா – நீயும்
சிலையாய் ஆனாயா?

மழையே வெயிலே பனியே என்றன்
கண்ணனைக் கண்டாயா – அவன்
கனிமுகங் கண்டாயா?

கனிமுகங் கண்ட காரணத்தாலே
பனியெனக் கரைந்தாயா – உன்
மனதினை இழந்தாயா?

மயிலே குயிலே கிளியே வளியே
கண்ணனைக் கண்டாயா – என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
மயக்கம் கொண்டாயா – உன்னை
மறந்து நின்றாயா?

இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!


--கவிநயா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP