Thursday, December 31, 2009

தாஸ மீரா லால கிரதர !


"ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே."

மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தும் வகையில், "ஹரி ஹரி ஹரீ" என்ற உருக்கமான அழைப்பினோடு ஒரு மீரா பஜனை, கண்ணனும் அபகரிப்பவன் (ஹரி) தான் என்ற வகையில் கண்ணன் பாடலில் தரப்படுகிறது. :)

"அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?" என்ற பாடலில் புகழப்பெற்ற அதே லீலைகளை இந்த ஹிந்தி மீரா பாடலிலும் காணலாம். எம்.எஸ் அம்மா அவர்களின் உருக வைக்கும் குரலில் இங்கே கேட்கலாம்.

ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||

த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||

பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||

பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||

ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||

யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும்  பாடி அடியாள் மீரா  கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள்.

2010 புத்தாண்டு தினத்தில் ஹரி அனைத்து உயிர்களின் துன்பங்களையும் களைய நாமும் அவன் அருள் வேண்டுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு !! :)

ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா

Sunday, December 27, 2009

கண்ணன் பாட்டிலே ஒரு மலையாளப் பாட்டு!

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில் பலநாள் கழித்து....அடியேன் வணக்கம்!

இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

பல இடங்களில் பலவாறு கொண்டாடப்பட்டாலும்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாகக் கொண்டாடப்படுவது! = இராப் பத்து!
திருவாய்மொழித் திருநாள்! எம்பெருமான், வடமொழி வேதங்களைச் சற்றே ஓரங்கட்டி, தீந்தமிழ்ப் பாசுரங்களை மட்டுமே இடைவிடாது கேட்கும் நாள்!

திருவாய் மொழிக்கு உருகாதார்
ஒருவாய் மொழிக்கும் உருகார்!முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடப் பாடல் - கிருஷ்ணா நீ பேகனே,
* தெலுங்குப் பாடல் - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரப் பாடல் - பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
* வடமொழிப் பாடல் - பாவன குரு/அமர ஜீவிதம்,
* இந்திப் பாடல்கள் - பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்று எப்போதாவது ஒன்னு ரெண்டு இதர மொழிப் பாடல்களும் வரும்!

அந்த வரிசையில், இன்று மிகவும் ஏகாந்தமான மலையாளப் பாடல் ஒன்று!
கேட்டுத் தான் பாருங்களேன்!
பொருள் சுமாரா உங்களுக்கே புரிஞ்சிரும்-ன்னு நினைக்கிறேன்! மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை அல்லவா?
எந்தா இன்னும் ஓர்க்குன்னு? யான் பறைஞ்சது மனசுலாயோ? ஈ நாள் வரை தமிழ் பாஷையிலே மட்டும் கானம் கழிஞ்சோ? :)

குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!

இங்கே கேட்டுக் கொண்டே பாடலில் கரையுங்கள்!குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும்போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!


தளரும் போல் ஆத்மாவாம் பஷூவே நின் நாவில்
அம்ருதம் போல் ஊஊறிடுக நாராயண நாமம்!


நெய்யுண்ணு பீதாம்பரம் ஈ சந்தயகள் ராவாம்
பையெல்லாம் வார்க்குன்னு பால் மாதுரி அல்லோ?

ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்
சுட்டுன்னுரு பீலி திருமுடியோ மழை மேகம்?


கருடன் போல் ஆகாசம் சிறகார் நீடும்போல்
வனமாலைகள் தீர்க்குன்னு மழை வில்லுகள் இப்போல்!

நிறக் கண்ணால் காணுன்னே எங்கெங்கும் சுவாமி
குருவாயூர் அப்பா நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்.....

நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்
நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்பாடல்: குருவாயூர் ஏகாதசி
தொகுப்பு (Album): வனமாலா
குரல்: K.J.யேசுதாஸ்
வரிகள்: ரமேசன் நாயர்
இசை: P.K.கேசவன் நம்பூதிரி


"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்"

= அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி? "வைகுந்த" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தாங்க காரணம்!
= வாரணம் தான் காரணம்!
வேண்டுமானால் இங்கே சென்று அந்த தனிக் கதையை வாசித்துக் கொள்ளவும்!

அது சரி, கண்ணன் பாட்டிலே மலையாளப் பாட்டு எப்படி இருந்துச்சி? ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்-ன்னு இருந்துச்சா? :)

இது போன்ற முயற்சிகளை, பன் மலர் மாலைகளை,
கண்ணன் பாட்டு அன்பர்கள் தொடர்ந்து செய்ய வேணுமாய்,
பணிவுடன் கேட்டு, அடியேன் அமைந்து விடுகிறேன்!

பயந்த தனி வழிக்குத் துணை,
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
பயந்த தனி வழியில்.....
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!!

தளரும் போல் ஆத்மாவுக்கு...
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! அவன் நாராயண நாமம்!!

7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.வழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.

கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.

பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"

குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,

செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்

செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்

ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி

எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.

***

Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg

Friday, December 25, 2009

யதுநந்தனா ! கோபாலா !

சாது ஜனங்கள் ஒன்று கூடினால் கிரிதாரிக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மீரா போன்ற ஒரு பக்தையின் தலைமையில் கூடுகிறது என்றால் கிரிதாரியின் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். இதோ இங்கே ஒரு அருமையான பஜனை பாடலை எல்லோரும் சேர்ந்து பாடிக் களிக்கிறார்கள். கண்ணனையும் குளிர வைக்கிறார்கள்.

அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்?  எங்கும் நிறைந்தவனே !

யானை அன்று "ஆதிமூலமே !"  என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !!

ஈனர்கள் சபையில் த்ரௌபதி கதற
மானம் காத்தனையே !! ஆஹா நீ !!

ப்ரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரணனே !

தாரணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதாதரனே ?

யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தாவன லோலா !

ஜெய தீன வத்ஸலா !!
ஜெய வேணுகான லோலா !!

வரதா !! அருள் தருவாய் வனமாலீ !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!

மீராவின் காலத்தில் அந்த சாதுக்கள் கூட்டத்தில் சேர்ந்து பாடும் பாக்கியம் செய்யாவிடினும், இதோ இங்கே மறுபடி எம்.எஸ் அம்மாவின் குரலில் நம்மை மீரா வழி நடத்துகிறாள்.

இந்தப் பாடல் மிகவும்  ப்ரபலமான (அதாவது எனக்கு மிகவும் பிடித்த :)) ஹிந்தி மீரா பஜன் ஒன்றின் திரண்ட பொருளை தழுவியதாகக் கொள்ளலாம்.  கிரிதாரியின் அருளால்  பின்னர் ஒரு பதிவில் அந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வரும்.  ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா


Wednesday, December 23, 2009

பாதத் தாமரைகள் நொந்திட...
....பார் தனில் என்னை தேடி வந்தவன் !

மனதை வருடும் ஒரு மெல்லிய பாடல். மார்கழி நன்னாளில் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். :)

கவிஞர்: அமரர் கல்கி
ராகம்: ஹரிகாம்போதி

வண்டாடும் சோலை தனிலே
கண்டெனதுள்ளம் கொண்டான் சகியே !

கொண்டல் போலும் வண்ணன் உடையான் !
கோகுலம் தந்த பாலன் அவனோ !!

பாதத் தாமரைகள் நொந்திட
பார் தனில் என்னை தேடி வந்தவன் !
மாதவன் மதுரை மைந்தன்
மறைகள் பரவும் மாயன் அவனோ !! (வண்டாடும்)

பாடலை திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் தேனினும் இனிய குரலில் இங்கு கேட்கலாம். ராதே கிருஷ்ணா !!

~
கிரிதாரியின்,
ராதா

Tuesday, December 22, 2009

6.கண்ணன் நடைபழகுதல்.றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg

5.கண்ணனைத் தாலாட்டல்.போது நழுவியது; போக்கிடம் இன்றிநிலா
மாது தழுவினாள் மேகத்தை; - சாதுக்கள்
சத்திரம் ஏகினர்; சாமவேளை ஆனது;
ரத்தினமே கண்வள ராயோ.

தேன்வாழப் பூவிருக்கத் தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க வந்ததென்ன - நான்வாழ
ராசாதி ராசாவா! ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.

மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும் - தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில் செம்பவளக் கண்ணாநீ
கொஞ்ச கணமேனும் தூங்கு.

யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்! - குமுதம்
மலர்ந்து விரிந்து மதியில் நனையும்;
தளர்ந்து மகனே உறங்கு.

***

Image Courtesy :: http://jsk247.wordpress.com/category/bal-krishna/

நீ இரங்காயெனில் புகல் ஏது ?
இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)

"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)
[பக்த மீராவின் அடிகளை தலையில் சுமந்து,  தாயாரை அடைந்து அதன் பின்னரே கண்ணன் பாடல்கள் வருமாம். :)]

கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆதி

பல்லவி:
நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)

அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!

சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி,  என்னை கடைக்கணியே !!

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)
பாடலை திருமதி  எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  அவர்களின் இனிய குரலில் இங்கு கேட்கலாம்.
நம்மைப் பெற்ற தாயாரின் அன்பை இந்த  மார்கழியில் நினைவோம்.~
கிரிதாரியின்,
ராதா

Monday, December 21, 2009

பேய்ப் பெண்ணே !மார்கழி - 07

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!கேயாரெஸின் விளக்கம் இங்கே.


ஆனைச் சாத்தன் பறவையெல்லாம்
பேசும் பேச்சுகள் கேட்கலையோ?
நறுங்குழல் ஆய்ச்சியர் தயிர்கடையும்
ஓசை உனக்கு கேட்கலையோ?
வளையொடு அணிகளும் சேர்ந்திசைக்கும்
கலகல ஒலியும் கேட்கலையோ?
கேசவன் புகழைக் கேட்ட பின்னும்
உறங்கிக் கிடக்கும் பேய்ப் பெண்ணே!
ஒளிர்திரு மேனி உடையவளே!
உடனே கதவைத் திறவாயே!

--கவிநயா

இந்த பாடலைக் குறித்து ஷைலஜா அக்கா:

இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது.
ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!

விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது

ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!

ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவர்களாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய் வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அது புரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!

இறைசிந்தனையைத் தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்!
அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பெரியாழ்வார் திருமொழி 1-2 -2

இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.படத்துக்கு நன்றி: aazhvarmozhi.blogspot.com

Sunday, December 20, 2009

வெண்ணிலாவே!
வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

எங்கள் கண்களில் வசிக்க வா!

சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)

இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.

(மீரா பஜன் -1)

பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||

மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||


மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||

அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||


சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||

மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||


(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)


அந்தமில் அழக, நந்தலால,

கண்ணில் வசிக்க வா, கண்ண, பால


மோகன மூர்த்தி

சியாமள சீர்த்தி

நயனம் விரி நேர்த்தி


மயிற்பீலி மங்கலம்

மகரமீன் குண்டலம் - நெற்றி

திலக முகமண்டலம்


ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்

தீங்குழல் பொழியும் இன்சுரம்

பேரெழில் வைஜயந்தி உறை உரம்


உயிரை கவர் உதரம் - அதனில்

மோகன கிண்கிணி மதுரம்

இன்னிசைக்கும் நூபுரம்


மீரா இதய பூபாலன்

அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த

கன்றுகள் கோபாலன்.


இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
Baso More - M S Su...


~
கிரிதாரியின்,
ராதா

Saturday, December 19, 2009

4.கண்ணனுக்குப் பாலூட்டல்.தாய்மை உணர்ந்த தருணமே, ஏந்திய
சேய்மை விரல்தடவிச் செவ்விதழ் - வாய்மை
படர்ந்துப் பெருகியப் பாலைக் குடிக்கத்
தொடர்ந்துத் தொடர்ந்த கணம்.

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

மென்விரல் கொண்டகை மெல்லியதாய் ஓர்மாரை
என்குரல் தேங்கத் தடவுவான் - வெண்மணல்
குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்.

முகிலில் ஒருபொழுது மூழ்கும் கடலில்,
தகிக்கும் அனலில் மற்றும் - முகிழ்க்கும்
குலைகளாய்ப் பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது.***

Image Courtesy :: http://the-artist-varma.com/ravivarma_images/rrv3.jpg
and http://www.exoticindiaart.com/artimages/ep20.jpg

Friday, December 18, 2009

3.கண்ணனை அலங்கரித்தல்.போலே இருப்பதென பேசுவதும் ஏலாது
மாலே மணியன் மகுடமுதல் - காலே
அணிந்த கொலுசு அதுவரை ஆழ்வார்
பணிந்த சுவடு பதிந்து.

ஈரச் சிகைகளை இன்னும் உலர்த்திட்டுப்
பாரம் குறையப் புகைகாட்டி - தீரம்
புகட்டிய பைம்பொன் பதித்த இறகால்
முகமே மின்னும் ஒளிர்ந்து.

கொஞ்சம் பவளம் இடையிடை முத்துக்கள்
எஞ்சும் இடத்தினில் வைரங்கள் - பஞ்சுக்
கழுத்தினைக் கட்டியக் கயிறது பட்டுப்
பழுத்தன கைகள் தடவி.

தங்கப் பதக்கம் கரங்கள் புயத்தினில்
மங்காத ஆரம் மணிக்கட்டில் - பொங்கும்
ஒளித்துளி மின்ன ஒளிரும் வளையம்
மிளிரும் அவன்தன் விரலில்.

பட்டுநூலால் ஓராடை பக்குவமாய்ச் சுற்றிப்பின்
கட்டி இறக்கி முடிச்சிட்டு - சுட்டியின்
குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு.

பாதம் கொலுசுடன் ஜல்ஜல் எழுப்ப
மீதம் விரல்மோ திரம்வழி - மோதும்
பலவொலி கிண்கிணி கிண்கிணி கன்றுகள்
பலவந்துப் பார்க்கும் இயல்பு.

நெற்றிக்குப் பொட்டிட்டு நீள்புருவம் கண்இமைகள்
சுற்றிலும் மையெழுதிச் சுந்தரனின் - வெற்றித்
திருமுகத்தில் வைத்த வலதுகன்னப் பொட்டு
ஒருமுகமாய்ப் பிள்ளைக்குத் திருட்டி.

மோகனனின் மேனி எழிற்சிதறல், மாமலை
யோகிக்கும் சேர்த்த அலங்காரம் - போதாமல்
புன்னகை செய்யும் பரந்தாமன் கண்டதும்
தன்னையே நீங்கினாள் தாய்.

***

Image Courtesy :: http://dr-narasinha-kamath.sulekha.com/mstore/Dr-Narasinha-Kamath/albums/default/Krishna2.jpg

Thursday, December 17, 2009

2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.சுமந்து கொணர்ந்த சுகமான சாந்தைக்
கமகமக்கும் வாசப் புகையில் - சமப்படுத்திப்

பச்சைப் பயிற்றுமாவில் பாங்காய்க் கலந்திட்டுக்
கச்சை முடிச்சிட்டுக் கண்ணனின் - உச்சியில்

காய்த்த சுடுஎண்ணெய்ச் சேர்த்துச் சுருள்முடியில்
தேய்த்து நுரைத்திட்டாள் தாயாக - வாய்த்த

யமுனைநதித் தீரத்தின் யாதவ அம்மை
அமுதெனப்பால் தந்த யசோதா. - குமுறும்

முகில்வண்ணன் கொஞ்சும் முகுந்தன் முகத்தில்
அகிற்புகை சாற்றி அளவாய்ச் - சகிக்கும்

கடலைமா வைப்பயத்தம் மாவுடன் கூட்டி
உடலில் தடவிட்டு ஊறிக் - குடத்தில்

நதியெடுத்துக் கோபாலன் மேனியைக் கொஞ்சம்
புதிதாக்க ஊற்றிப் புறத்தை - அதிரூபம்

பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!

***

Image Courtesy :: http://images.exoticindiaart.com/hindu/little_krishna_gets_a_bath_ha39.jpg

கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)

Wednesday, December 16, 2009

1.கண்ணன் கோகுலம் வருதல்.

திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

***

விநாயகர் துதி.பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.

கலைமகள் துதி.புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.

கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.

குரு வணக்கம்.மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.

1.கண்ணன் கோகுலம் வருதல்.கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து

பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த

இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின

நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து

நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்

அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத

வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!

***

Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg

Tuesday, December 15, 2009

எந்தன் கண்ணனைக் கண்டீரா?மார்கழி-02

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!

நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!

பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!

கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!

உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?

கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!

காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!

குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்

புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
எந்தன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?

--கவிநயா

அப்புறம் என்ன ஆச்சு? - 2.ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!

ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?

***

கவிநயா அக்கா, சென்ற பதிவில் கேட்ட 'அப்புறம் என்ன ஆச்சு?'விற்குப் பதில் தெரியாம, '.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)

Monday, December 14, 2009

அப்புறம் என்ன ஆச்சு?

வாங்க வாங்க! மார்கழியைக் கொண்டாட வாங்க!
மாலவனைக் கொண்டாட வாங்க! அவனோட
மங்கை நல்லாளைக் கொண்டாட வாங்க!


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.ந்தக் குட்டிக் கிருஷ்ணனைப் பாருங்க... அவன் தான் எப்பேர்ப்பட்ட அழகு! கொழுக் மொழுக்னு! துறுதுறு கண்ணும், கூரான மூக்கும், பவழச் செவ்வாயும், கொழுகொழு கன்னங்களும்.... அடடா... அவனைப் பார்த்தாலே அவனை இறுகக் கட்டி அணைச்சு முத்து முத்தா கொடுத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குல்ல! அந்த கண்ணன் ஏற்கனவே இருக்கற அழகு பத்தாதுன்னு மேற்கொண்டு அழகு படுத்தி விட்டிருக்கா அவன் அம்மா.

சுருள் சுருளா, கருகருன்னு இருக்கிற தலை முடியில மயிலறகு. நெற்றில பொட்டு. கண்ணுல மை. கன்னத்துல திருஷ்டிப் பொட்டு வேற. இடுப்புல மஞ்சள் பட்டாடை. கால்ல கிண்கிணிச் சலங்கை. கைல அவனை விடப் பெரீசா ஒரு புல்லாங்குழல்!

அவன் சுறுசுறுப்பா ஓடிக்கிட்டும், மழலை மொழி பேசிக்கிட்டும், குறும்பு பண்ணிக்கிட்டும் இருக்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவன் பக்கத்துல இருக்கும்போது கால் கூட தானா அவனை தொடர்ந்துகிட்டே இருக்கும். கண்ணோ அவனைத் தவிர வேற எதயும் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். வாயும் தன் பங்குக்கு அவன் பேரைத் தவிர எதையும் சொல்லாது. இப்படி எல்லா புலன்களையும் ஒருங்கே கவர்ந்துக்கிற அப்படி ஒரு செல்லம் அவன்!

அவனைப் பெற்ற பேற்றை நினைச்சுக்கிட்டே, அந்த சுகத்தை அனுபவிக்கறதுக்காக, மூச்சை ஆழமா இழுத்து, ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் கண்ண மூடினா, அவன் அம்மா யசோதா. அடுத்த நொடி, அந்தப் பய காணாம போயிட்டான்! உடனே பதறிட்டா. எழுந்து ஓடி ஓடி. 'கண்ணா.... கண்ணா"ன்னு கூப்பிட்டு, தேடித் தேடி சலிச்சுட்டா. எங்கேதான் போனானோ இந்தக் குறும்புக் கண்ணன்?

அவனை நினைச்ச உடனேயே உதடு தானா புன்னகைக்குது! மனசு கோவத்தை நினைவுபடுத்திக்கிட்டு, "ஏய் உதடே, உனக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு?!" அப்படின்னு மெரட்டுது. "வரட்டும் அவன். என்ன செய்யறேன் பாரு இன்னிக்கு?" அப்படின்னு கறுவுது. மறுபடியும் தேடல் தொடருது.

அதோ.... அங்க... அந்த மரத்துக்கு கொஞ்சம் பின்னால மஞ்சள் துணி மாதிரி தெரியுதே... கிட்ட போய் பார்க்கலாம். பூனை மாதிரி சத்தம் செய்யாம போய் பாக்கிறா யசோதா. கண்ணன் இன்னும் ரெண்டு தோழர்களோட சேர்ந்து மண்ணு தின்னுக்கிட்டிருக்கான்!

வந்ததே கோவம் அந்தம்மாவுக்கு! பூனை மாதிரி போனவ புலி மாதிரி உறுமி, "வாடா இங்கே"ன்னு காதப் புடிச்சு திருகி, அழைச்சுக்கிட்டு வந்தா. "இம்புட்டு வெண்ணெயும் தயிரும் மோருமா சாப்பிடறியே. நான் குடுக்கிறது பத்தாதுன்னு, இருக்கிற வீட்ல எல்லாம் திருடி வேற சாப்பிடற. அதுவும் பத்தலையா ஒனக்கு? மண்ணு வேற வேணுமா? துப்பு... துப்பு!"

நீல நிறக் குழந்தையோட காது செக்கெச் செவேல்னு ஆயிருச்சு. "நானா மண்ணு தின்னேன்? மண்ணும் திங்கல, ஒண்ணும் திங்கலயே. மண்ணுன்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே...", அப்படிங்கிற மாதிரி ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறான் குழந்தை.

"என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி நிக்கிற? வாயை இப்ப தெறக்க போறியா இல்லையா?"

அவனோட சின்ன வாயை வலுக்கட்டாயமா திறக்கிறா! அப்புறம் என்ன ஆச்சுன்னுதான் உங்களுக்கே தெரியுமே!


--கவிநயா

Friday, October 23, 2009

ஆடாது, அசங்காது வா...!!வான முகிலின் மேனியில் வாரிதி பொழிந்தது போலும், பாயும் நதியில் தன் நிறம் கண்டு கருவங்கொண்ட நீல மேகப் பிம்பத்தில் வெண் நுரை ததும்பியது போலும், கரையில் கொழித்திருக்கும் நாணல் புதர்களைத் தலையாட்டிச் செல்லும் தென்றலின் குளுமை போலும், பாறைகளின் மேல் முழுக்கியும், தழுவியும், பக்கவாட்டில் சரிந்தும் சலசலத்துப் பாய்கின்ற நதி நீரோட்டம் போலும் சின்னக் கண்ணன் தவழ்கிறான்.

தாவித் தாவித் துள்ளியோடி, தம் சின்னக் கண்களை வெருண்டி, குச்சிப் பாதங்களால் குதித்துச் செல்லம் கொண்டாடிப் பறந்தோடும் புள்ளிமானின் குறும்புக் கண்களைக் கொண்டவனாயும், செம்பவளம், வெம்பவளம் இரண்டையும் தனித்தனியாய்க் கண்டிருந்த கண்களுக்கு செம்பவள இதழ்களின் உள்ளே வெம்பவள முத்தென பற்களைப் பதுக்கிப் புன்னகைத்து உயிர் மயக்கம் தருவானாயும், இருளின் வர்ணமா, இருள் இவனின் வர்ணமா என்று குழம்பித் தெளியும் வண்ணம் சுருள் குழல்கள் காற்றில் அசைந்தாடுவனாயும், எத்துணை புன்யம் செய்தனையப்பா, எங்கள் குழந்தைக் கண்ணன் கூந்தல் மீது குத்தி நின்றாய் நீ என்று கேட்கத்தக்க பச்சை மயிற்பீலி காற்றில் சிரித்தாட, கண்ணன் தவழ்ந்து வருகிறான்.

அழகன் இவன் அமுதன் குரல் இனியன், குழல் இசைப் பிழியன் என ஆசைத் ததும்பத் ததும்ப மொழிகள் பொழிகையில் ஆனந்தப் புன்னகைச் சிந்தி, மலர் இதழ்கள் போல் சிரம் கிளைத்த செவி மடல்களில் அணிந்த காதணிகளில் ஒளிப் பிரசவித்து, 'என்னை அள்ளிக் கொள்ள மாட்டாயா?' என்று பூங்கரங்களை நீட்டி விரல்களை அசைத்து காற்றைத் தடவித் தடவி மீட்டி, எங்கணும் இனிமை பொங்கிப் பிரவாகித்து ஓடம் குழறலாய் 'அம்மா... அம்மா...' என்றழைத்து தவழ்ந்து வருகிறான் கண்ணன்..!

ஆயர்பாடி ஆநிரைகள் கொடுத்து நிறைந்த பொன் பானைகளில் வெண்ணுரை பொங்க பால் வரும்; அந்த பாலைக் கடைகையில் கண்ணன் எண்ணங்களை நினைக்கையில் மனதில் இருந்து கிளர்ந்து எழும் அருள் காதல் போல் வெண்ணெய் திரண்டு வரும்; அந்த வெண்ணெய் உண்டு உண்டு, பாலமுதென மென்மை படர்ந்த கொழுத்த கன்னங்கள் அசைய அசைய, 'அம்மா... அம்மா...' என்றழைக்கிறான்.

மேகத்திற்குப் பொட்டிட்டது யாரோ? அவன் கண்களுக்கு மையிட்டது யாரோ? கருணை மழை பொழியப் பொழிய விழி நனைந்து மையெல்லாம் அடியார் துயர் போல் கரைந்து ஓடுகிறதே! இவனைக் காணாத கணமெல்லாம் முள்ளின் மேல் படுக்கை போலும், நெருப்பின் மேல் நடக்கை போலும் தகிக்கிறதை அறிந்து, தம் கருணைப் பார்வையை செலுத்துகிறான்; அதனை கணத்தின் நுண்ணிய பொழுதும் மறைக்கின்ற வகையில் மேலிமை, கீழிமையைக் கவ்வுகிறதே!

திருநெற்றியில் நாமம் இட்டதும், புருவங்களில் வர்ணப் பொட்டுகள் வைத்தும் இவனை அழகுபடுத்தியது யார்? அழகே உனக்கே அழகா? சிணுங்கியபடி நீ பசு போல் நடந்து வருகையில், உண்மைப் பசுக்கள் எல்லாம் உன்னழகைப் பருகிப் பருகி 'ம்மா... ம்மா...' எனக் குழற, நீயும் 'அம்மா... அம்மா...' என்றழைக்க என் கைகள் உன்னை அள்ளிக் கொள்ள நீள்வதென்ன?

இதழ்ச் சிரிப்பு அழகா, இளஞ் சிவப்பு இதழ் அழகா என்று குழம்பிப் போய் நிற்கின்ற போது நீ சிரிக்கின்றாய். ஆகா! மனமயக்கம் கொள்ள வைக்கின்ற மதுரச் சிரிப்படா உனது! ஆசை மோகம் கிளர்ந்தெழ உனை அணைத்துக் கொள்ள பாய்ந்து வருகையில் உனது பெருஞ்சிரிப்பு, குறுஞ்சிரிப்பாய் குவிகின்ற புள்ளியில் கிறங்கி நிற்கிறேனடா!

இவன் பூங்கழுத்தில் யாரது மணியாரங்களும், முத்து மாலைகளும், பொன்னாபரணங்களும், ஜொலிக்கும் வெள்ளி நகைகளும் சூட்டி அழகுபடுத்திப் பார்ப்பது? அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியா? இல்லையே, அவள் அன்பெனும் நார் எடுத்து, அவளது கனவுகளை மலர்களாய்த் தொடுத்து, காதலெனும் தேரில் விடுத்து, தன்னையே என் கண்ணனுக்குக் கொடுப்பவள் ஆயிற்றே! இவன் ஆரம் தாங்குமா, இந்நகைகளின் கனத்தை? ஒற்றை விரலால் கோவர்த்தனகிரி தாங்கும் வல்லமை உள்ளவனானாலும் தாயுள்ளம் தவிக்கின்றதே! என் மனதின் தவிப்புணர்ந்தும், தலையசைத்து தன்னகை கழட்டாமல் கூட புன்னகையும் அணிந்து கொண்டு அலைக்கழிக்கின்றானே, என் செய்வேன்...?

இரு பிஞ்சுக் கைகளில், அஞ்சு விரல்களில் மோதிரம் வேண்டாமடா உனக்கு! குழல் ஒன்று போதுமே! எழில் கொஞ்சும் ஆபரணங்கள் தத்தம் வாழ்பயனைப் பெற உன் மேனியில் விளையாடுகின்றன. இடுப்பில் ஒட்டியாணமும், பாதங்களில் கிலுகிலுக்கும் ஒலிக் கொலுசும், வளைகளும், மரகதக் கற்களும், பால் ஒளியன்ன வெள்ளிக் கழல்களும் ஜொலிக்கின்ற சின்னக் கண்ணனை அள்ளி அணைக்கையில் மகாகவி போல் 'உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடா'!

மதன மோகன ஸ்வரூபா, மதி மயக்கக் கொஞ்சும் குறுஞ்சிரிப்பழகா, இணை சொல்லவியலா இளங்கன்றென துள்ளி வரும் பிள்ளாய், துணை நீயென என் மனம் சொல்ல உன்னைத் தூக்கி அணைக்கையில் ஜென்மம் அர்த்தம் கொள்ள, ஒரு குழந்தையென குதூகலிக்கும் குமரக் குறும்பா,

நீ ஆடாது, அசங்காது வா...!

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 22, 2009

ப்ரஸன்ன வதனாம்...!வானம் கழுவியது போல் விரிந்திருந்தது. கீழ்த் திசையின் முடுக்குகளில் இருந்து வெண்ணொளிக் கீற்றுகள் விசிறியடிக்கத் தொடங்கின. நீரலைகள் நிரம்பித் தள்ளாடும் பெரும் ஒரு நீளப் புடவையாய் மினுக்கியது யமுனா நதி.அதன் மேனியெங்கும் விடியல் இன்னும் பூக்கத் தொடங்கியிராத விண்ணின் நீலக் கரைசல் பிம்பங்கள் மிதந்தன. நிலவொன்று தனியே தன் பாட்டுக்கு ஊஞ்சலாய்த் தொங்கியது. பின்னும், நிரம்பிய நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டே இருந்த காற்றில் குளிர் கலந்திருந்தது.

மரங்களின், கிளைகளின், இலைகளின், நரம்புகளின் மேல் இரவு தடவிக் கொண்டிருந்த தாலாட்டின் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த பனிப் படலங்கள் சோம்பல் முறித்தன. விளிம்புகளில் நிறைந்திருந்த ஈரங்கள் சுருண்டு, உருண்டு ஒன்று சேர்ந்து, ஒற்றைத் துளியாகி, சூரியனின் பெரும் உறிஞ்சலுக்கு ஏங்கத் தொடங்கின.

சின்னச் சின்னக் குருவிகளும், பறவைகளும், புள்ளினங்களும் பெரும் உற்சாகத்தோடு வாரித் தெறித்த அரிசிமணிகளாய் வானில் ஏகிச் சீழ்க்கையடித்துப் பறந்தன. பனித்துளி சுமக்கும் பூக்களின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள் 'கீச்சு..கீச்சென' கூறிக் கொண்டே சுற்றத் தொடங்கின. எறும்புகள் தமக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே வரிசை தவறாமல் எங்கோ விரைந்தன. புறாக்கள் தத்தம் சிம்மாசன இறக்கைகளை விரித்து, அலகால் விட்டு விட்டுக் கோதின. 'ட்ரூச்சு...ட்ரூச்சு..' என எழுப்பிக் கொண்டு மைனாக்கள் நதி மேல் பறந்தன. காக்கைகள் மெல்ல குதித்து, நடந்து, கரையோர அலைகளில் தலை முழுக்கிச் சிலிர்த்தன.

துளிக் கண்கள் திறந்து பார்த்த கூட்டிலிருந்த குஞ்சுகள், இன்னும் தாயின் மென் சூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன. தனித்த குயில் மட்டும் தன் கண்ணாடிக் குரலில் மெதுவாகக் கூவத் துவங்கியதும், கூடவே மற்றொரு மதுரக் குழல் இசையும் சேர்ந்திசைக்கத் தொடங்கியது.

அந்த சுகந்த குழல் நாதம் எழும்பிய புல்லாங்குழல் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளையின் கீழும் ஒரு முத்துப் பரல் ஆடியது. அதன் முனையில் ஒரு வைரமாலை பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தடவித் தடவி மென்மையான பூவிசை கொடுத்த விரல்கள் யாருடையவை..? அந்த விரல்கள் விளைந்திருந்த கைகளில் தங்கச் சாந்தைப் பூசியது யார்..? அந்த விரல்களின் ஒவ்வொரு கோடுகளும் பதிந்த பின் குழல் பொன்னானதா இல்லை குழலின் குரலைத் தடவி அவன் உள்ளங்கைகள் மின்னுகின்றனவா..? யாரவன்..?

முதலில் ஒரு மயில் இறகுக் கொத்து தெரிகின்றது. அதன் நீலக் கண் ஏன் இத்தனை உல்லாசமாய்க் காற்றில் ஆடுகின்றது..? அதன் ஒவ்வொரு பிசிறுகளும் அத்தனை தன்மையாய் தன் சின்னஞ்சிறு இழைகளும் குற்குறுக்க, எத்தனை கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றது. பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்தது போல் அல்லவா இருக்கின்றது..? அது தன் ஒற்றைக் காலால் நிற்கின்ற மகுடம் மட்டும் என்னவாம்..?

மரகதமும், மஞ்சள் பொன் வண்ணமும், செம்பவளமும், ரூபமும், இடையில் பாயும் வெள்ளி நரம்புகளும், தொட்டுத் தொட்டுக் கோர்த்த மணிமாலைகளும் கொண்ட இந்த க்ரீடம், இரவிலும் ஜ்வலிக்கும் சந்திரகாந்தக் கல்லால் செய்யப்பட்டதா..?

இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?

இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன. அந்த தோடுகள்...!! அவை செய்த பாக்கியம் தான் என்ன..! இந்த காந்த இசையைக் கேட்பதற்கேற்ப ஆடி ஆடி மயக்கம் கொண்டு கிளர்கின்றன அல்லவா..?

இது என்ன...!! இரு பெரும் களிறுகள் மதர்த்துப் போய் ஒன்றையொன்று எதிர்த்துக் கிளர்ந்து நிற்கின்றனவே..! ஓ..!! அவை இவன் புருவங்களா..!!

காலையில் கதிரவன் வரும் முன் வெள்ளிக் கரங்கள் திசையெங்கும் பாயும். அது போல் இவன் இமைகளில் துளித் துளி முடிக் குட்டிகள் முளைத்திருக்கின்றனவே..!! மேலும், கீழும் இமைகள் ஒன்றையொன்று கவ்வும் போது, அந்த கண்களை அல்லவா மறைத்து விடுகின்றன.!

கண்கள்..!! அவன் கண்கள்...!!!

கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?

வெண்ணெய் பூசிய கன்னங்களோ அவை இல்லை, கோபியர் கொடுத்த முத்தங்களால் கனிந்த அன்னம் கள்ளோ..?

அந்த நாசியை ஏது சொல்குவேன்..?

செவ்விதழ்களை என்ன சொல்வேன்..? அந்தி மாலை நிறம் என்றா..? ஆதவன் தெறிக்கும் சுவை என்றா..? அழகு தளும்பித் தளும்பி உருக்கும் அதரங்களை என்ன சொல்வேன்..?prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM

(who is of smiling face, bestower of all fortunes,
whose hands are ready to rescue anyone from fear,
who is adorned by various ornaments with precious stones)

Puer natus est nobis,
et filius datus est nobis:
cujus emperium super humerum...

For to us a child is born,
to us a son is given:
and the government will be upon his shoulder..
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun
But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us

*

ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்

(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)

நமக்கு ஒரு குழந்தை பிறந்தான்;
மகனாக கொடுக்கப்பட்டான்.
சாம்ராஜ்யம் அவன் தோள்களில் கொடுக்கப்படும்.

ஒரு நாள் நீ வந்தாய்.
நீதான் அவன் என்று அறிந்தேன்.
மழையும் நீயே! மாகதிரும் நீயே!
எனக்கு இரண்டும் வேண்டும்,
ஏனெனில் எனக்கு நீ வேண்டும்.

நீதான் அவன்.

என் வாழ்நாள் முழுதும்
கனா கண்டு கொண்டிருந்தேன்.
இருளாக இருக்கும் போது,
நீயே என் வெளிச்சமாக வருவாய்.

ஆனால், மறந்து விடாதே!
நம் வழிகாட்டி எப்போதும் யாரெனில்
நமக்குள்ளிருக்கும் குழந்தையே..!!

***

ப்ரஸன்ன வதனாம் - எந்தப் பாடலில் வரும் வரி என்று நினைவுக்கு வந்து விட்டதா..? :)

***

ஆல்பம் :: எனிக்மா.
பாடல் :: The Child in Us(நமக்குள்ளிருக்கும் குழந்தை.)
இசை :: Michael Cretu

Friday, October 09, 2009

இராதாப்ரேமி..!யர்பாடியின் பொன் அந்தி மாலை நேரம் அது.

யமுனை நதி சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதன் நீரலைகள் காற்றின் மென் தீண்டல்களின் போதெல்லாம் அசைந்தாடி, நளினமான இளம் பெண்ணின் இடை போல வளைந்து நகர்ந்து, நகர்ந்து செம்மண் கரைகளின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. அதன் கரைகளின் வளர்ந்திருந்த நாணல் செடிகள், மாலைக் கால ஊதற் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. படிக்கட்டுகளில் விரவியிருந்த ஈரம் அவ்வப்போது, வந்து மோதிய சிலுசிலுப்புத் தென்றலில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றது. வெண்மை நிற நுரைகளைக் கண்ட சிறுவர்கள் வெண்ணெய் என்று நினைத்து அள்ளி அள்ளித் தின்கிறார்கள். கண்ணன் வாழும் ஊரின் கரைகளைத் தொட்டுக் கடக்கும் நதியின் நுரைகள் அல்லவா..? அவையும் இனிக்கின்றன.

நதியின் அக்கரையில் இருந்து ஆரம்பிக்கின்றது ஒரு வனம். பலவித மரங்கள், காற்றுக்கு அடையாளம் தரும் பலவித மணம் பூக்கும் மலர்கள், பசுமையான புற்செடிகள், மூங்கில்கள், குளங்கள், மலைகள். இயற்கையின் முழுமையான அன்பான அரவணைப்பில் கட்டுண்டிருக்கும் காடு அது. மாலை ஆகி விட்டதல்லவா..? ஆநிரைகள் மேய்த்த யாதவச் சிறுவர்கள் களைப்புடன் மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பசுக்களும், மாடுகளும், ஆடுகளும் கூட தமது எஜமானர்களோடு முட்டாமல், மோதாமல் தமக்குள் இரகசியங்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ ஒரு தேமதுரக் குழலோசை கேட்கின்றது.

வேறு யாராக இருக்க முடியும்..? சூரியனைத் தவிர கதிர் ஒளி தர யாரால் முடியும்..? சிலுசிலுவென ஈரம் கலந்த குளிரைத் தர தென்றல் காற்றையன்றி வேறு யாரால் இயலும்..? உச்சி முகடுகளில் இருந்து கிளம்பி ஒவ்வொரு மலராய் முத்தமிட்டு தேன் அள்ளி சேகரித்து, சேர்த்து வைத்து இனிக்க இனிக்கச் சொட்டுச் சொட்டாய்க் கொடுக்கத் தேனீக்களால் அன்றி வேறு யார் செய்ய முடியும்..? கேட்பவர் அத்தனை பேரையும், கிறங்கச் செய்து, விழிகளில் நீர் பெருகச் செய்து, அந்த மயக்கத்தில் மனதில் மிதக்கின்ற கசடுகளையும் கவலைகளையும் கனமிழக்கச் செய்யும் அந்த கண்ணனை அன்றி யாரால் அத்தகைய குழலோசையை வழங்க முடியும்..?

வனத்தின் மரங்களின் இடுக்குகளில் எல்லாம் சின்னச் சின்னதாய்க் கூடுகள் இருக்கின்றன. அவற்றின் கையகல இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் தத்தம் குட்டிகளோடு இருக்கின்றன. அவை அத்தனையும் அந்த நாத ஓசையில் மயங்கி சிறகடிக்கவும் மறந்து பொட்டுக் கண்கள் மூடி இருக்கின்றன. நதியில் வரும் நீரோட்டத்தை எதிர்த்தும், அதன் வழியோடு சென்றும் துள்ளித் திரியும் மீன்களும் அந்த குழல் இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நீரில் இருந்து மேலே மேலே எம்பித் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. அப்போது நதியைப் பார்த்தால், அதன் மேல் மழைக் கம்பிகள் விழும் போது எப்படி துளிகள் தெறிக்குமோ, அப்படி காட்சியளிக்கின்றது. அந்த மச்சங்களுக்கெல்லாம் தரையில் வாழும் ஜீவன்களைக் கண்டு பொறாமையாய் இருக்கின்றது. பின்னே என்ன, தரை உயிர்கள் எல்லாம் நொடி அளவும் இடைவெளி இன்றி உயிர் மயக்கும் இசையைக் கேட்கின்றன அல்லவா..?

நதியின் கரைகளில் படர்ந்திருக்கும் தாமரை இலைகளின் மேல் தவளைகள் தாவித் தாவி விளையாடுகின்றன. காற்றில் எம்பிக் குதிக்கும் மீன்களுக்கு அவற்றைக் காணும் போது, தம்மைக் கிண்டல் செய்கின்றனவோ என்று தோன்றியது. மீன்களின் சந்தேகத்தை உணர்ந்தது போல், தவளைகள் வேறோர் இடத்தைக் காட்டின. அங்கே பாம்புகள் மயக்கத்தில் தலை அசைத்து, தத்தம் வால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. 'கால்களே இல்லாத பாம்புகளே, உற்சாகத்தில் ஊறிக் கிடக்கும் போது, அவற்றைப் பற்றிய பயமில்லாமல், நான்கு கால்களோடு நாங்களும் மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டிருக்கிறோம்..' என்று சொல்லின போலும்..!

மரங்களின் கிளைத்திருந்த இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருகின்றன. அவையும் இசையை இரசிக்கின்றன. கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் யாவும் மொத்தமாக இசையமுதை அள்ளி அள்ளி அருந்திக் கொண்டிருக்கின்றன.

காற்றின் அணுக்களை எல்லாம் நிரப்பி, கானத்தால் கருவம் கொண்டலையச் செய்கின்ற கண்ணனது குழலிசை ஆயர்பாடியுள் மட்டும் செல்லாமல் இருக்குமா..? அப்படி செல்லாமல் இருக்கத் தென்றல் காற்று தான் விட்டு விடுமா என்ன..?

வளது வீட்டின் பின்கட்டில் தோட்டம் இருக்கின்றது. வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகளைக் கடந்தால் தோட்டம். இராதா முதலாம் படிக்கட்டின் மேல் அமர்ந்திருக்கின்றாள். அங்கிருக்கும் ஒரு நெடும் தூணின் மேல் சாய்ந்திருக்கிறாள். அவளது கைகள், ஆசையோடு வளர்க்கும் புள்ளிமானுக்குப் புற்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால அவள் கவனம் அங்கே இல்லை. அந்த மான், இந்த மானின் நிலையைப் புரிந்து கொண்டது. மேலும் அவளைத் தொல்லை பண்ணாது, தானே புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதனை அறியாத இராதா, ஒவ்வொரு புல்லாக எடுத்துப் போட்டுக் கொண்டே, மேலும் அந்த மானிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"அடியே..! எத்தனை கொடுத்தும் தின்று கொண்டே இருக்கின்றாயே..? இத்தோடு மூன்று கட்டுகள் புற்களைக் கொடுத்தாயிற்று. இன்னும் பசி அடங்கவில்லையா உனக்கு..? நீ சாதாரண மான் தானா..? இல்லை ஒரு காலத்தில் யமுனை நதியில் பெரும்பசி எடுத்து வந்தவர்களை எல்லாம் தின்ற காளிங்கனின் அவதாரமா..?" காளிங்கனை நினைத்ததும் அந்த பாம்பரசனை நடனமாடிக் கொன்ற ஒரு தீரனது நினைவு அவளுக்குள் எழுந்தது. கையில் இருந்த புற்களைக் கண்ணீர்த் துளிகள் நனைத்தன.

தெருவில் ஒரு கிழவியின் குரல் கேட்டது."தயிர்...பால்...வெண்ணை...வெண்ணை..." வெண்ணைக் குரல் இந்தப் பெண்ணைத் தீண்டியவுடன் அவள் எண்ணத்தை நிரப்பியது ஒரு கள்ளனின் குழந்தை முகம். அதில் எப்போதும் ததும்பும் குறும்புப் புன்னகை.

இராதைக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது அவள் இதே தோட்டத்தில் மான்களோடும், மயில்களோடும், புறாக்களோடும், குயில்களோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். குயில்கள் ஒரு சமயம் 'கூ...கூ..'வெனக் கூவும். இராதை அகமகிழ்ந்து அவற்றைத் தடவிக் கொடுப்பாள். அதனைக் கண்டு, மயில்களும் தாமும் தடவல் பெற வேண்டும் என்பதற்காக, அவற்றால் இயன்ற அளவிற்கு கோரமாக அகவும். விழுந்து விழுந்து சிரிக்கும் இராதை, அவற்றையும் ஓடிப் போய்த் தடவுவாள். மகிழ்ந்து போகும் மயில்கள் தேகம் சிலிர்த்து, தோகை ஒன்றைக் கொடுக்கும். அப்படி கிடைத்த தோகைகளை இராதை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுவாள், ஒரு மாயவனுக்கு கொடுப்பதற்காக! தாம் கொடுக்கத் தோகை ஏதும் இல்லையே என்று சோகத்தில் குயில்கள் மேலும் கூவும். இப்போது இராதை இங்கும் ஓடி வருவாள்.

இந்த விளையாட்டை அவளது தோளின் மேல் அமர்ந்து வெண்புறாக்கள் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். இது போன்ற சிறுபிள்ளைத்தனங்களில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்ற இறுமாப்போடு புள்ளிமான்கள் அவை பாட்டுக்குத் தத்தம் புல் மேய்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அப்போது, அவளது படுக்கையறையில் சத்தம் கேட்டது. யாரோ புகுவது போல! சிறிது நேரத்தில் அந்த சத்தம் அடங்கி அமைதியாகி விட்டது. யாரோ புகுந்து மறைந்திருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது. 'யாராயிருக்கும்..?' என்ற சந்தேகத்தோடு இராதா தோட்டத்தில் இருந்து நீங்கி, அவளது அறையை நோக்கிச் செல்லும் போது, எதிரே பக்கத்து வீட்டுக்காரி வந்தாள். பின்புற வாசல் வழியாக உள்நுழைந்தாள் போலும்!

"இராதா..! இராதா..! கண்ணன் இங்கு வந்தானா..?" என்று கேட்டாள்.

புரிந்து விட்டது. அவளது அறைக்குள் நுழைந்தவன் அவனே தான்.

"ஏனக்கா..?" என்று கேட்டாள் இராதா.

"என்னவென்று சொல்வதம்மா..! இந்தப் பயலின் குறும்புகள் வர வர அதிகமாகிக் கொண்டே வருகின்றது. வளர வளர பொறுப்பு வரும். நந்தகோபரின் இல்லப் பெயர் சொல்லுமாறு வளர்வான் என்று பார்த்தால் இவன் இன்னும் சிறுவனாகிக் கொண்டே போகின்றான். போன வாரம் இவன் எங்கள் வீட்டுச் சமையலறையில் தரையில் வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரங்களை உருட்டி, உடைத்து, தின்று விட்டுப் போயிருக்கிறான். இவனுக்குப் பயந்து, அதற்கப்பால் தரையிலேயே பாத்திரங்களை வைப்பதில்லை. எல்லாவற்றையும் இறுக்க மூடி பரண் மேல் வைத்து விட்டு வெளியே சென்று விடுவேன். இன்று வந்து பார்த்தால், அந்த கள்ளன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா..? பரணின் மீதேறி எல்லாவற்றையும் தின்று விட்டு, ஒரு பூனையை வேறு அங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறான். இவன் தின்றது போக மிச்சம் மீதி இருந்தவற்றையாவது நாங்கள் பயன்படுத்துவோம். இப்போது அவன் கொண்டு வந்த பூனை, மிச்சம் மீதியையும் வழித்து தின்று விட்டிருக்கின்றது. இந்த முறை இவனைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பிடித்து நேராக நந்தகோபரிடமே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறேன். அவனை மட்டுமல்ல, அந்த திருட்டுப் பூனையையும் பிடித்துக் கொடுக்கப் போகிறேன். யசோதையிடம் சொல்லி ஒரு பயனுமில்லை..! நான் துரத்திக் கொண்டு வரும் போது, அவன் இங்கே வந்தது போல் இருந்தது. வந்தானா..?" என்று பெருமூச்சு விட்டாள்.

இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட்டன.

இராதை யோசித்து, "இல்லையக்கா..! அவன் இங்கே வரவில்லை..! நான் இங்கே தானே இருக்கிறேன். அவன் வரவில்லை..!" என்றாள்.

"கவனமாய் இரம்மா..! அந்தக் கள்ளன் பொல்லாதவன். இங்கே வந்து உன்னிடமிருந்தும் ஏதேனும் திருடிக் கொண்டு போய் விடுவான்..!" என்று சொல்லி விட்டுப் போனாள் அவள்.

'இன்னும் என்னிடமிருந்து எதைத் தான் திருட வேண்டியிருக்கின்றது அவன்..? என் பரிமள இதயத்தையும், உறக்கத்தையும் ஏற்கனவே களவாடிக் கொண்டு விட்டான். மிச்சமிருப்பது என் உயிர் மட்டும் தானே..!' பெருமூச்செறிந்தாள் இராதா.

பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, இராதா அவளது அறைக்குச் சென்றாள். அதன் வாசலில் நின்று கொண்டு, உள்ளே பார்த்து கூவினாள்.

"யாரது என் அறைக்குள்ளே..? வெளியே வந்து விட்டால், அவர்கள் விரும்பிய பொருள் தரப்படும். நினைவிருக்கட்டும். எங்கள் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து பெற்ற வெண்ணெய் எங்கள் வீட்டில் நான்கைந்து உறிகள் நிறைய இருக்கின்றன. உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண்டுமெனில் அவர்களே வெளியே வர வேண்டும்.." என்றாள்.

"அவள் போய் விட்டாளா..?" என்று உள்ளே இருந்து குரல் கேட்டது. கூடவே, "மியாவ்..."

அவனே தான்.

"போயாயிற்று..!" என்றாள் இராதா.

கண்ணன் வெளியே வந்தான்.

ஆஹா..! அவன் வந்த கோலம் தான் என்ன அழகு..? நள்ளிரவில் வானம் முழுதும் கரியதாக இருளென இருக்கும். ஒரே ஒரு வெண்ணிலா மட்டும் பளீரென வெண்மையாய்க் காட்சியளிக்கும். ஆங்காங்கே புள்ளிப் புள்ளியாய் நட்சத்திரங்கள் மினுக்கும். அது போல கண்ணனது திரு கருமுகத்தில் உதடுகள் மட்டும் இப்போது தான் உண்ட வெண்ணெயின் வெண்மை நிறத்திலும், கன்னங்களில் எல்லாம் வெண்ணெய்த் தெறிப்புகளும் இருந்தன.

வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சிறு பொட்டுத் துளிகளாய் இருக்கும். அந்த முகில்கள் போல, ஆடைகள் கலைந்திருந்தன. அவற்றின் மேல் வியர்வைத் துளிகள் பொட்டுப் பொட்டாய் துளிர்த்திருந்தன.

அவன் கைகளில் ஒரு பூனை. வெளியே வந்தவுடன், வெளிச்சம் கண்டு மிரண்ட அது, அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து, 'தப்பித்தோம்; பிழைத்தோம். அப்பா கண்ணா..! நீ கூப்பிட்டாய் என்று வந்து, நான்கு சொட்டு வெண்ணெய் தின்பதற்குள் உயிருக்குப் பயந்து ஓட வேண்டியதாகி விட்டது. இன்றோடு நீ இருக்கும் திசைக்கே ஒரு வணக்கம்!' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்தது.

"இராதா..! நல்லவேளை நீ காப்பாற்றினாய். இவளிடம் சிக்கி இருந்தேன் என்றால், என் நிலைமை என்ன ஆகி இருக்கும். அப்பாவிடம் கூட்டிப் போயிருப்பாள். நான் ஆநிரை மேய்க்கப் போகாமல், வெண்ணெய் திருடுகிறேன் என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். போகட்டும். வெளியே வந்தால் ஏதோ தருவதாகச் சொன்னாயே..? என்ன அது காட்டு..?" என்று கேட்டான் கண்ணன்.

அதுவரை கைகளில் மறைத்து வைத்திருந்த மயில் தோகைகளை நீட்டினாள், இராதா. தோட்டத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக வீசிய காற்றுக்கு அந்த பசிய தோகைகள் அசைந்தாடின.

"ஆஹா..! இராதா..! எத்தனை அழகு..! எத்தனை அருமை..! கொடு..! எனக்கு மிகப் பிடித்தமானதையே நீ கொடுக்கிறாய்..! அருகே வா..! என்னை அவளிடமிருந்து காப்பாற்றியதற்கும், பரிசு கொடுப்பதற்கும் உனக்கு ஒன்று தருகிறேன். வா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான், அந்த மாயன்.

மிக அருகில் சென்று நின்றவுடன், கண்ணன் அவளது செழுமையான பொன்னிறக் கன்னத்தில், தன் இதழ்களைப் பதித்தான்.

சடாரென அவளை விட்டு, ஓடி வெளியே மறைந்தான்.

கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறாள்? " வெண் சங்கே..? அந்த மாதவனின் செவ்விதழ்ச்சுவையும், நறுமணமும் எது போல் இருக்கும்..? பச்சைக் கருப்பூரத்தின் வாசம் போலவா..? சிவந்த தாமரைப்பூவின் மணம் போலவா..? அவனது இதழ் ஸ்பரிசம் தித்திப்பாய் இருக்குமா..?" என்று!

அப்படி ஒரு இனிய சுந்தரனது திருவாய்ச் சுவையோடு இப்போது உண்ட வெண்ணெய் மணமும், சுவையும், இராதையின் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது.

இராதையின் கன்னத்தில் கண்ணன் பதித்த வெண்ணெய்ச் சுவடு எது போல் இருக்கின்றது தெரியுமா? வழக்கமாக அழகான குழந்தைகளின் மேல் திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக கருப்புப் பொட்டு வைப்பார்கள். ஆனால இராதையின் கன்னத்தில் இருந்த வெண் வெண்ணெய் உதட்டுச் சுவடானது, அவளது அழகுக்குத் திருஷ்டி போல் அமைந்தது எனில், அவளது திருவடிவழகைத் தான் எவ்விதம் இயம்ப..?

அன்றிலிருந்து இராதைக்கு வெண்ணெய் பற்றி நினைத்தாலோ, யாரேனும் சொல்வதைக் கேட்டாலோ, இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும். கண்ணீர் பெருக்குவாள்.

ஆயர்பாடியுள் கண்ணனது கான நாதத்தைச் சுமந்து நுழைந்த காற்று, இராதையின் தோட்டத்திலும் புகுந்து மயக்கியது. இராதையின் செவிகளிலும் குழைந்து இனித்தது.

இராதை அகமகிழ்ந்தாள். இது யாருடைய குரல் என்பது தெரியாதா..? குழலே அவனது குரல் அல்லவா..?

நெடுங்காலம் பிரிந்திருந்த கடலை நோக்கி நதி அப்படி ஓடுவதில்லை; இரவெல்லாம் தனித்துக் கவலையோடிருந்த பனித்துளி காலைக் கதிரை நோக்கி அப்படி பாய்வதில்லை; பள்ளத்தில் பாயும் பேரருவி அவ்வளவு ஆக்ரோஷத்துடன் விழுவதில்லை; இராதை அப்படி ஓடினாள்.

முனா நதிக்கரையின் இக்கரையில் ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு நந்தவனம் அமைந்திருக்கின்றது. பெயரிலேயே தெரிகின்றது அல்லவா..? அது நந்தனது வனம். நந்தன் மகனது வனம். எத்தனை பூக்கள்; எத்தனை பழங்கள்; எத்தனை ரீங்காரமிடுகின்ற வண்டுகள்; தாமரையும், அல்லியும் மாறி மாறிப் பூத்துக் குதூகலிக்கின்ற பொய்கை ஒன்று மத்தியில் உள்ளது. ஆங்காங்கே மர மேடைகள். வேலிகளை எல்லாம் வளைத்து பூக்கொடிகள்! மரங்களை எல்லாம் கட்டி அணைத்து காய் காய்க்கும் கொடிகள். பறவைகள் எல்லாம் பேடைகளோடு கூடிக் கலந்து, நீலவானில் ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் பெருவனம் அது..!

அங்கே கண்ணன் வீற்றிருக்கிறான். கண்களை மூடி அவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருகிலேயே ஒருத்தி தம்புரா வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி மிருதங்கத்தால் காற்றை அதிரச் செய்து கொண்டிருக்கிறாள். ஒருத்தி தாமரைத் தண்டுகளை அள்ளி அள்ளி அவனது காலடியில் அமர்ந்திருக்கிறாள். மற்றுமொருத்தியோ, பறித்த மலர்களில் திருப்தியுறாமல், மேலும் மரங்களில் இருந்தும் பல வர்ணப் பூக்களை அள்ளிக் கொண்டிருக்கிறாள்.

இராதை ஓடி வந்து கண்ணன் அருகில் அமர்ந்து தலை குனிந்து அமர்கிறாள்.

தாமரை சூரியன் வரும் வரை எங்கே அவன் என்று தேடிக் கொண்டேயிருக்கும். அவன் வந்து விட்டாலோ, வெட்கம் வந்து தலை கவிழ்ந்து கொள்ளும்; கதிரவன் அவனது பொன் கிரணங்களால் மெல்ல மெல்ல அவளைத் தட்டி எழுப்பி இதழ் திறக்க வைப்பான்.

அல்லி மாலை வரும் வரை எங்கே சந்திரன் இன்னும் காணவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்; மாலையில் அந்த குளிர் அழகன் வந்து தனது வெண்ணொளியால் அல்லியை மடல் அவிழ்ப்பான்.

அது போல் இராதையும் இப்போது கண்ணனின் அருகிலே வெட்கத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

கண்ணன் தனது புல்லாங்குழலை ஒருபுறம் வைத்து விட்டு, தனது ஒரு கையால் அவளது தோளைத் தடவிக் கொடுக்கிறான். மறுகையால் அவளது திருமுகத்தைத் தாங்கி எடுக்கிறான். இராதை இன்னும் வெட்கப்படுகிறாள்.

"இராதா..! இராதா..! இங்கே பாரேன்..! என் உள்ளங்கையைப் பார். அது சிவந்திருக்கின்றது. அது எதனால் தெரியுமா? உன் முகத்தில் இருந்து நான் வழித்துக் கொண்ட வெட்கத்தால் தான். ஆனாலும் என்ன ஆச்சரியம்? எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித்தெடுத்தாலும், வெட்கம் உன் திருமுகத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்றது. பிற்காலத்தில் பாஞ்சாலிக்கு கொடுக்க வேண்டிய அட்சய பாத்திரத்திற்கு உன் முகமே நல்ல உதாரணம். இராதா..! என் உதடுகளும் சிவந்திருக்கின்றன, பார்த்தாயா? அது எதனால் தெரியுமா..? உன் வெட்கம் நிறைந்த என் கைகளை முத்தமிட்டேன். அதனால் தான்.

இங்கே எத்தனை தாமரை மலர்கள் இருக்கின்றன, பார்த்தாயா..? அவை எல்லாம் நீ அணிந்துள்ள இந்த மென் நிற உடைக்குத் துளியும் சமானமாகவில்லையே..? மலையின் மஞ்சள் கிரணங்கள் எங்கிருந்து அவற்றின் பொன்னிறத்தைப் பெறுகின்றன என்ற என் ஐயமும் இப்போது நீங்கி விட்டது. உன் அழகில் பட்டு எதிரொலிக்கும் பொன்னிற ஒளி தானே அது..?

நான் ஆயர்பாடியை நீங்கி, துவாரகையில் நிலைபெற்று விட்டேன் என்று நினைத்துக் கலங்கினாயா கண்ணே..? உயிர் இங்கே இருக்கும் போது வெறும் உடல் அங்கே என்ன செய்ய முடியும்..? மழை இங்கே பெய்து கொண்டிருக்கும் போது வர்ண வானவில் மட்டும் அங்கே தோன்றுவது எங்ஙனம்..? பொருள் இங்கே ஆயர்பாடியுள் இருக்கும் போது வார்த்தை அங்கே சென்று ஆவதென்ன..?

இங்கே பார்..! உன் தோட்டத்து மயில் தோகைகள் தான் என் சிகையை அலங்கரிக்கின்றன. உன் வனத்து மலர்மாலைகள் தான் என் மேனியோடு தழுவி இருக்கின்றன.

இனியும் நீ பேசாதிருந்தால், நான் குழலிசைப்பேன்...!!"

கண்ணன் அவனது புல்லாங்குழல் எடுத்து இனிமையாக வாசிக்கத் துவங்குகிறான். அதைக் கேட்டதும் இராதை கண்களில் ஆனந்தம் பெருக, கண்ணனது திருமார்பில் சாய்கிறாள்.

இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்ன வேலை..?

வாருங்கள் போகலாம்..!

***யமுனா நதிக்கரையில்
கண்ணன் என்னைச் சீண்டினான்..!

என் கைமணிக்கட்டுகளைச்
செல்லமாக வளைத்தான்..!

(யமுனா)

ஒரு சிறு கல்லெடுத்து
என் மேல் எறிந்தான்.

நான் கொண்டுவந்த
தண்ணீர்ப்பானையை உடைத்தான்.

தண்ணீர்ப்பானையை
உடைத்தான்.

என் உடைகளை முழுக்க
நனையச் செய்து விட்டான்.

(யமுனா)

அவன் கண்களைக் கொண்டு
ஒரு வசீகரம் காட்டினான்.

என்
இதயத்தை வென்றான்.

என்
இதயத்தை வென்றான்.

ஒரு பார்வையால்
என்னை மறைத்த

திரைகளைத்
திறந்து விட்டான்.

நதிக்கரைகளில்
கண்ணன் என்னைச் சீண்டினான்..!

(யமுனா)


தேன்கூடு : மொகல்-ஏ-ஆஸம்.
படைத்தேன் : கே.ஆஸிஃப்.
இசைத்தேன் : நெளஷாத்.
மொழிந்தேன் : ஷகீல் பதயுனி.
பொழிந்தேன் : லதா மங்கேஷ்கர்.
அசைந்தேன் : மது..மது..மதுபாலா மற்றும் பலர்-1.
பார்த்தேன் : ப்ரித்விராஜ், திலீப்குமார், நீங்கள் மற்றும் பலர்-2.

Sunday, October 04, 2009

என்று வருவான்?


கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்
கண்ணன் அவன் வருவான் என காத்திருக்கும் பொழுதில்...

மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்
மன்னன் அவன் வருவான் என மயங்கி நிற்கும் பொழுதில்...

கீழ்வானம் ப்ரசவிக்க கதிரவன் வெளி வந்தான்
காத்திருக்கும் மலர்கள் கண்டு களிப்புடனே சிரித்தான்

ஆள வந்த அரசன் போல வானில் வலம் வந்தான்
பகலின் பெரிய தீபம் போல உலகிற் கொளி தந்தான் -

ஆனால் -
கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அவன் முகமலரின் அழகைமனம் கருவண்டாய்ச் சுற்ற - அந்த
நினைவுக் கள்ளின் போதையிலே தான்மயங்கிச் சொக்க

அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க
அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அந்தி நேரம் வந்த போதும் ஆதவன்பின் மறைந்த போதும்
வெள்ளை நிலா வான் வெளியில் வீதி உலா வந்த போதும்

விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

என்றேனும் வருவானோ? ஏக்கம்தீர்த் திடுவானோ?
வாடுகின்ற ராதையவள் வாட்டம்போக்க வருவானோ?


-- கவிநயா

*காய்மை == பொறாமை

பி.கு. வசந்துடைய பதிவுகளை பார்த்து இந்த கவிதையை இட ஆவல் பிறந்தது. இது அந்த காலத்தில் என் வலைபூவில் இட்டது. யாரும் அவ்வளவாக படிக்கலை அப்போ...

Wednesday, September 30, 2009

யமுனே நின்னுட நெஞ்சில்...!ரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.

வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும் அப்பிக் கொண்டு நகர்ந்தது. மதியத்தின் கதிரவனின் ஆதுரத் தீண்டல்களால் கன்றிப் போய்ச் சிவந்திருந்த பூக்களும், காய்களும், கனிகளும் வீசத் தொடங்கும் மாலைத் தென்றலில் மயங்கி அசைந்து கொண்டிருந்தன. தூர மலை முகடுகளின் உச்சிகளில் மொட்டு விட்ட செந்தாமரை போல் சிவப்புப் பொன்னிறம் பூத்திருந்தது.

பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக் கையில் கிடைத்த பூக்களை எல்லாம் கிள்ளிப் பார்த்தது; பெரும் மரங்களின் கடும் மேனியின் மீதெல்லாம் மோதிக் கொண்டது; ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.

விழிகளை இமை எப்போதும் காத்திருக்கும். ஆனாலும் இமை அசந்திருக்கும் போது பார்த்து கண்ணீர் கரை புரண்டு ஓடோடி வரும். போல், காதல் நிரம்பி மனத்தில் ததும்பிக் கொண்டிருக்கும். ஒரு சிறு கீறல், பூங்காற்றின் ஒரு சிறு கூறல் பட்டதும் பொங்கி வழிகின்றது, கோபியரிடமிருந்து..!

அந்த இராசத் திருமகனைக் காணாது விழித்திருக்கும் போதெல்லாம் வீணாய்த் தோன்றுகின்றது என்கிறாள் ஒருத்தி! அந்தக் கார்மேகவர்ணனை நினையாது கழித்திருக்கும் போதெல்லாம் காடுண்ட இருளென நகர்வதேயில்லை என்கிறாள் மாற்றொருத்தி! முட்டி போட்டுக் கொண்டு பால் கறக்கையில், நம்மை முட்டிக் கொண்டு, தாய் மடியை முட்டி, முட்டி அமுதருந்தும் கன்றினைப் போல் எந்நிலையிலும் நினைவுகளை முட்டி, தட்டி கிளம்பி கிறுகிறுக்க வைக்கின்றது அவன் திருமுகம் என்கிறாள் ஒருத்தி! தோப்புகளைத் தாண்டிச் செல்கையில் வீசும் ஊதற்காற்று அவன் திருவாய் ஊதும் காற்று போல் இசை எழுப்பி மேனியைச் சிலிர்க்கச் செய்கின்றது என்கிறாள் மற்றும் ஒருத்தி!

மோகன வர்ணமென எடுத்துப் பூசிக் கொள்கின்றது அவன் பிரிதலில் நான் கொள்ளும் நிறத்தை மாலை வானம் என்றாள் நாணத்தால் சிரம் கவிழ்ந்து, ஒருத்தி! குளிக்கையில் மஞ்சள் அள்ளி பூசுகையில், மனதில் ஒரு சிரிப்பு பூக்கச் செய்கின்றன அவன் விரல்கள் விளையாடிய தடங்கள் என்று வெட்கிக் கூறிச் சிரித்தாள், இன்னும் மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி!

இன்னும் இன்னும் காற்றின் காதுகளுக்கும், யமுனை ஆற்றின் அலைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொண்ட கதைகளை கோபியர் கூறிக் கொண்டே இருக்க, கண்ணன் அங்கு வந்தான்.

லையாமாருதம் வருகையில் நாணலென்ன செய்யும்? பேரலை காதலுடன் பொங்கி வருகையில் கரையோர வெண் சங்கு என்ன செய்யும்? இரவின் குளிர் இசைப் பாடி வருகையில் கானகத்தின் சிறு கிளைகள் என் செய்ய முடியும்? மதுர கானமென இசைத்துக் கொண்டே அந்தக் கள்ளன் வருகையில், காதலின் மனங்கள் தான் என்ன செய்ய முடியும்?

மெல்ல மெல்ல தன் இதழ்கள் திறக்கையில் சுற்றிக் கொண்டே இருந்த தேனீ, இன்பத்தின் பேரெல்லைக்கே சென்று தேன் துகள் குடத்தில் தலைக் குப்புற விழுதல் போலும், வான் மஞ்சள் இராகங்கள் வாசிக்கையில் நந்தவனத்தின் புஷ்பங்கள் பூத்து கலகலவென சிரித்து மகிழ்தல் போலும், சின்னச் சின்னதாய் அலைகள் வந்து மோதுகையில் சிலிர்த்து சிலிர்த்து கலகலக்கும் கரையோர பூச்சிகள் போலும், அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.

பனித்துகள்களைக் கொண்டையாய் அணிந்து கொள்ள தயார்ப் படுத்திக் கொண்டிருந்த, பச்சைப் பசும்புற்கள் எல்லாம், தரையோடு ஆழப் புதையும் வகையில் யாவரும் ஓடோடி அந்த மாயனைச் சூழ்ந்தனர்.

மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.

பலவண்ண மலர்கள் பொலபொலவென தங்கள் சந்திரக் காதலனை வரவேற்கப் பூக்கத் தொடங்கின. வெண்ணிலாவின் நிறத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இந்த கரியனைக் கண்ட மாத்திரத்தில் சற்று குழம்பினாலும், தெளிவுற்று தம் கைகளால் கொப்பி அடிக்கத் தொடங்கின.

கோபியர் மட்டும் சும்மா இருந்தனரா...?

ந்த லீலைக் காதலனின் கன்னங்களைப் பிடித்து இழுப்பதும்; அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்; அவன் கரங்களைப் பிடித்து தம் புறம் இழுத்து அணைப்பதும்; அவன் சிவந்த இதழ்களால் தினம் தினம், நிதம் நிதம் சுவைத்து, அவன் மூச்சுக் காற்றால் உயிர் பெற்று கருவத்தால் இசை பரப்பி, இசை பெறும் குழலாய்த் தாம் ஆக மாட்டோமா என்ற பெருமூச்சோடும்; அவன் மணிமார்பில் தவழும் பூமாலையின் ஒரு பூவாக மாட்டோமா என்ற ஆசையோடும்; அவனோடு விளையாடத் தொடங்கினர்.

அந்த இராச லீலை மன்னனின் விளையாட்டுக்களைத் தான் என்னவென்று சொல்லுவது?

பூக்கள் கிளைத்து மணம் வீசும் கன்னியின் கூந்தலைக் கலைத்துப் போடுகிறான். தன் கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஒருத்தியின் முகத்தில் கொட்டி விடுகிறான். தன் குழலைப் பிடுங்க வரும் ஒருத்தியின் கைகளுக்கு அக்குழலாலேயே அடி ஒன்று வைக்கிறான். தன் பின் வந்து அணைக்க முயன்ற ஒருத்தியைப் பயமுறுத்த திடுமென திரும்பிப் பழிப்புக் காட்ட, அந்த மதுரமான திருமுகத்தில் பரவசமுற்று தடரென விழுகின்றாள், அவள்.

கொப்பி விளையாடி மகிழ்விக்கிறான். கைகளைப் பிடித்து சுழலாட்டம் செய்கிறான். நடனம் ஆடுகிறான். முதுகோடு சாய்ந்து கொண்டு பாடுகிறான். ஒருத்திக்கு தலை நிறைய பூக்கள் வைக்கிறான். ஒருத்தியின் தலையின் பூக்களைப் பறித்து, அவளது முகமெங்கும் ஊதுகிறான். நாதப் பெருங்குழலில் உயிர் உருக்கும் பூங்கானம் இசைக்கிறான்.

இராச லீலைகளை மெல்ல மெல்ல அவன் அரங்கேற்றுகையில் வெட்கத்துடன், வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றும் நிறம் மாறத் தொடங்கியது.

சந்திரமதியும் எட்டிப் பார்த்து, கள்ளத்தனத்தோடு சிரிக்க, வெட்கத்தால் கூச்சப்பட்ட கோபியர் உற்சாகப் பரவசத்திலும், உல்லாச சஞ்சாரத்திலும் யமுனையைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறார்கள்.

'யமுனே நின்னுட நெஞ்சில்.....'

Get this widget | Track details | eSnips Social DNA
***
பாடல் : யமுனே நின்னுட நெஞ்சில்...
மொழி : மலையாளம்
படம் : யாத்ரா
படம் வெளியான ஆண்டு : கி.பி. 1985 :)
கோர்ப்பவர் : இளையராஜா
(குரல்) சேர்ப்பவர் : ஜானகி.எஸ்.
ஈர்ப்பவர் : ஷோபனா மற்றும் பலர்.
பார்ப்பவர் : நீங்கள், மம்முட்டி மற்றும் பலர்.
:)

Tuesday, September 29, 2009

கிருஷ்ணா - இராதா.மோகன இரவின் பின்னிலாக் காலம். கருவானத்தின் மேகக் கிழிசல்களில் பரவியிருக்கின்ற வெண் ஒளித்துகள்கள் நிலவின் இருப்பைச் சொல்கின்றன. கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.

நள்ளிரவின் கூதற்காற்று என் மனம் போலவே சோக கீதம் பாடிக்கொண்டு வீசுகின்றது. அலையடித்துக் கொண்டிருக்கும் குளிர்க் குளத்தின் இயக்கங்களும் நின்று போய் விட்டன. நான் யாரிடம் என் வேதனையைக் கூறுவேன்?

கோரைப் புற்கள் கூடு கட்டிக் கொண்டுள்ள நீலக் குளமே, உன்னிடம் தான் கூற வேண்டும். என் இதயக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட மதன மோகனைப் போல் உன்னால் என்னைப் பிரிந்து சென்று விட முடியாதல்லவா..?

இல்லை..! இல்லை..! நீயும் என்னை விட்டுச் சென்று விடுவாய். என்னை விட்டு மட்டுமா..? யாருமற்ற தனிமையின் இரவுக் காலங்களில் மட்டும், பால் ஒளியைப் பொழியும் நிலவைச் சுமந்து களித்திருப்பாய். பகல் நேரம் வர வேண்டியது தான். இரவில் கொஞ்சிக் குலாவிய நிலவை மறந்து கதிரோடு சென்று ஒட்டிக் கொள்வாய். பாவம் நிலவு! என்னைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வர வேண்டும்.

முன்னொரு பிறவி என்று சொல்லத்தக்க காலம் உனக்கு நினைவிருக்கின்றதா?

து ஒரு மழைக் காலம். மேற்கின் மலைத் தொடர்களில் பொழிந்த செம்மண் நீர் எல்லாம் பாய்ந்து நிறைந்த நீர் நிலைகள். நீல ஆம்பல்கள், செந்தாமரைகள், பச்சை நிறத்தில் எங்கும் படர்ந்த ஆகாயத் தாமரைகள் என்று நாங்கள் அணிகின்ற ஆடைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் நீயும் அணிந்திருந்தாய். நம் தெருவெங்கும் ஈரம் பூத்திருந்தது. மாலை நேரங்களில் ஒளியால் நிரப்பும் சிறிசிறு விளக்குகள் கொண்ட எங்கள் வீடுகளை விட்டு, வெண்ணிலவின் ஒளியில் குளிக்கின்ற உன்னைத் தேடி வந்து கதை பேசுவோம்.

ஆஹா! என்னவென்று சொல்லுவேன்? அந்த மாயக் கண்ணன் அப்போது நம்மோடு இருந்தான். குளக்கரையில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடை புகுவான். இடையைக் கிள்ளுவான். பொல்லாப் பிள்ளையாய் குளத்தில் இறங்கி, நீரை வாரி, வாரி எங்கள் மேல் இறைப்பான். நீயும் அலைகளால் ஆடி அதைக் கண்டு சிரிப்பாய். நாங்கள் கரைமண்ணை எடுத்து அவன் மேல் வீச, அதை அப்படியே விழுங்குவான். எங்கள் கூந்தல் பூக்களை அள்ளி, முகமெங்கும் தூவுவான்.

மரத்தின் மேல் ஏறி அமர்ந்து உலுக்குகையில், மாலையில் பெய்த ஈரத் துளிகள் எங்கள் மேல் தெறிக்கக் கண்டு விழுந்து,விழுந்து சிரிப்பான்.

'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறோம்' என்று சொல்லிப் புறப்படுகையில், மண்ணை அள்ளிப் பூசிக் கொண்டு, 'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறேன்' என்று விஷமச் சிரிப்புச் சிரிப்பான். மீறி யசோதாவிடம் சொல்லச் செல்கையில், ஓடிவந்து கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வான்.

கள்ளை உண்டவர் பிறகு நடக்க முடியுமோ? தேனை உண்ட வண்டு பிறகு பறக்க விரும்புமோ? அந்த மாதவனின் இதழ் பட்ட பின் அந்த நினைவில், முன்னர் நடந்தது, பின்னர் நடப்பதும் நினைவில் இருக்குமோ?

பின்பொரு நாள், நாங்கள் அந்தக் கோபாலனின் குறும்புகளைப் பேசியவாறு குளிக்க வந்தோம். அந்த மதுசூதனன் எங்கிருந்து கண்டானோ? எப்படி அறிந்தானோ? யார் சொன்னாரோ?, இந்த மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான். நாங்கள் அதைக் கவனியாமல், குளிக்கப் புகுந்தோம்.

கண்ட மாத்திரத்திலேயே, காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் கண்ணனுக்கு எங்கள் ஆடைகளையும் கவர்வதா கடினம்?. நாங்களும் பலவாறு துதித்தோம்.

'அட கண்ணா! மணிவண்ணா! கோவர்த்தனகிரி நாதா! காளிங்க ஸம்ஹாரி! குழலூதும் கோவிந்தா! ஆடைகளை கொடுத்து விடப்பா! கோபியர் கொஞ்சும் ரமணா! நீ என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். வெண்ணெய் வேண்டுமா? இனி நீ உறியடித்து பானைகளை உருட்டி, உடைத்து உண்ண வேண்டாம். நாங்களே உனக்கு ஊட்டி விடுகிறோம். ஹே! கோபாலா! உன் இனிமையான குழல் ஓசையில், பசுக்களும், ஆடுகளும், இடையர்களும், வன மரங்களும், பறவைகளும், விலங்குகளும், மலையும், காற்றும் மட்டும் மயங்கி நின்று விடுவதில்லை. நாங்களும் எங்கள் வேலையை விட்டு மெய் மறந்து விடுகிறோம். உன் வாசிப்பைக் கேட்டுக் கொண்டு தயிர் கடைகையில், வெண்ணெய் பொங்கிப் பெருகுகிறது. கிருஷ்ணா! உன் நாத ஓசையில் மயங்காத பேரும் உண்டோ? இதோ, இந்தக் குளத்தை கேட்டுப் பார்! சளசளவெனத் துள்ளிக் குதிக்கும் மீன்களும் அமைதியாகின்றன. அதோ அந்த மலையைக் கேட்டுப் பார்! மேலே வந்து மோதுகின்ற கருமேகங்களும், அமைதியாய் நின்று விடுகின்றன.யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்ற கிரகங்களும், சூரியனும், பிரபஞ்ச வெளியும் நின்று விடுகின்றன. அத்தகைய கருணை மகாப் பிரபு! நீ விளையாட கோபியர்கள் நாங்களா கிடைத்தோம்? எங்கள் மனத்தைக் கவர்ந்து விட்ட நாதா, இப்போது எங்கள் மானத்தையும் கவர வந்துள்ளாயோ? ஹே, கருமேக வர்ணா! ஆடைகளைக் கொடுத்து விடப்பா' என்று வேண்டினோம்.

இன்னும் பலவாறெல்லாம் வேண்டிக் கொண்ட பின் தான், அந்த அருமைப் பிள்ளை, ஆடைகளைக் கொடுத்தான். நீயும் கண்டு கொண்டுதானே இருந்தாய்?

ந்த நாட்களெல்லாம் ஒரு கனவாய்ச் சென்று விட்டன. இப்போது நமது மனம் கவர்ந்த மோகனன், ஒரு இராஜ்ஜியத்தின் தலைவன். அந்த நந்த கோபன் குமரன், பல பெரும் சேனைகளுக்கெல்லம் தளபதி. இனி அவன் நம் கோகுலத்திற்கு வருவானா? அவனை எண்ணி,எண்ணி கோபியர்களும், நானும் அந்த நிலவைப் போல் தேய்ந்து கொண்டே வருவதை அறிவானா? அந்த மன்னனைக் காணாமல் மற்றுமொரு இரவு கரைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிலவே, அவன் மாட மாளிகையின் உப்பரிகைகளில் நிற்கும் போது, சொல்வாயா? கூச்சம் சிறிதும் இல்லாமல், ஆடையைத் தள்ளி விட்டுச் செல்லும் தென்றல் காற்றே, அவனைத் தீண்டும் போதெல்லாம், கோபிகைவனத்தில், இராதா அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயா?

யாரது..? யாரது? என்னைத் தொடுவது?

ஆ..! ஆ..! யார் நீலமேக வண்ணனா? என் உள்ளம் கவர்ந்த மன்னனா? ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான். துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ? இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.ஹே பிரபு! இன்னும் ஏன் முதுகுப் புறம் மறைந்து நிற்கிறீர்?

மதனராஜ! உனது மந்தகாசம் பெய்யும் புன்னகையில் அமுதம் உண்ணும் பாக்கியத்தை அருள மாட்டீரா? மஹராஜ! இரவின் கூரையில் வந்து கூடு கட்டி விட்டு, விடிகையில் பறந்து செல்கின்ற கனவு அல்லவே, நீர் இப்போது வந்தது? இனி என்னைப் பிரிய மாட்டீர் அல்லவா?

மோகன குமாரா! பாலாய்ப் பொழியும் நள்ளிரவு நேரத்தில் உன் அருகாமையில் பூங்குழல் எடுத்து எனக்காகக் கொஞ்சம் இசையும். தயவித்து என் வேண்டுகோளுக்கு இசையும். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டபின், உனக்காக உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் எனக்காகவும், இந்தக் குளத்துக்காகவும், இசைக்க மாட்டீரா?

மீரா பாடல்கள்.

Monday, September 28, 2009

மதுரச் சிற்பம்.ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றதில் சிந்தித்தவை சிந்தின.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொண்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு ஜரிகை விளிம்பாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிரைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது.

உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்?' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன்பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்!

யர்பாடியில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அல்லவா அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது..!

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை..!"

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP