Sunday, October 04, 2009

என்று வருவான்?


கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்
கண்ணன் அவன் வருவான் என காத்திருக்கும் பொழுதில்...

மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்
மன்னன் அவன் வருவான் என மயங்கி நிற்கும் பொழுதில்...

கீழ்வானம் ப்ரசவிக்க கதிரவன் வெளி வந்தான்
காத்திருக்கும் மலர்கள் கண்டு களிப்புடனே சிரித்தான்

ஆள வந்த அரசன் போல வானில் வலம் வந்தான்
பகலின் பெரிய தீபம் போல உலகிற் கொளி தந்தான் -

ஆனால் -
கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அவன் முகமலரின் அழகைமனம் கருவண்டாய்ச் சுற்ற - அந்த
நினைவுக் கள்ளின் போதையிலே தான்மயங்கிச் சொக்க

அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க
அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அந்தி நேரம் வந்த போதும் ஆதவன்பின் மறைந்த போதும்
வெள்ளை நிலா வான் வெளியில் வீதி உலா வந்த போதும்

விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

என்றேனும் வருவானோ? ஏக்கம்தீர்த் திடுவானோ?
வாடுகின்ற ராதையவள் வாட்டம்போக்க வருவானோ?


-- கவிநயா

*காய்மை == பொறாமை

பி.கு. வசந்துடைய பதிவுகளை பார்த்து இந்த கவிதையை இட ஆவல் பிறந்தது. இது அந்த காலத்தில் என் வலைபூவில் இட்டது. யாரும் அவ்வளவாக படிக்கலை அப்போ...

14 comments :

மாதேவி said...

நல்ல கவிதை.

"கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்"

"மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்"

அழகுறும் வரிகள்.

Divyapriya said...

அழகான வரிகள், இனிமையான ஏக்கம் ததும்பும் கவிதை அழகு...

எனக்கும் பிடித்த வரிகள் இவை தான்

"கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்"

"மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்"

கிருஷ்ணமூர்த்தி said...

/என்றேனும் வருவானோ? ஏக்கம்தீர்த் திடுவானோ?
வாடுகின்ற ராதையவள் வாட்டம்போக்க வருவானோ?/

ராதை ஏங்கினது சரி!அவள் கண்ணனுக்காக மட்டுமே ஏங்கினாள்.

இப்ப நீங்க ஏங்கி மீள்பதிவு செய்தது எதுக்கு?

ராதையின் பாவனையில் ஒன்றிப்போகவா? இல்லை, இப்பவாவது இதை வலையில் கொஞ்சம் கண்டுக்கறாங்களா, இல்லையான்னு பார்க்கவா?

கவிநயா said...

//அழகுறும் வரிகள்.//

நன்றி மாதேவி :)

கவிநயா said...

//அழகான வரிகள், இனிமையான ஏக்கம் ததும்பும் கவிதை அழகு...///

நன்றி திவ்யப்ரியா :)

(பெயரை தவறா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க)

கவிநயா said...

//ராதையின் பாவனையில் ஒன்றிப்போகவா? இல்லை, இப்பவாவது இதை வலையில் கொஞ்சம் கண்டுக்கறாங்களா, இல்லையான்னு பார்க்கவா?//

ஹாஹா :) ரெண்டும்தான் கிருஷ்ணமூர்த்தி சார். வசந்த் பதிவுகளை படிச்சதும் கண்ணனின் நினைவு அதிகமாயிடுச்சு. அவனுக்காக ஏதாவது எழுதணும்னு இருந்தது, அதான் மீள் பதிவு. முடியறப்ப புதுசாவும் எழுதுவேன்!:)

வருகைக்கு நன்றி சார் :)

Radha said...

கவிதையும் ராதா-கிருஷ்ணன் படமும் அழகாய் உள்ளன.

இரா. வசந்த குமார். said...

கவிநயா அக்கா...

பாடலைப் பாடிப் பார்த்தேன்..! வளைய வேண்டிய இடத்திலெல்லாம் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள...! அழகாய்ப் பாட முடிகின்றது..!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அந்த நினைவின் ஒரு விளிம்பில்//

புரிஞ்சி போச்சே!
புரிஞ்சி போச்சே!
புரிஞ்சி போச்சே!

:)

அழகான கவி கவி-க்கா!

//அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க//

இந்தப் பொறாமை ரொம்ப நல்ல பொறாமையா இருக்கே! :)

//அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க//

மேகத்தைப் பார்த்து முகம் சுளிச்சா, பாவம் அது என்ன பண்ணும்? :)
மேக வண்ணன் பண்ணத் தப்புக்கு மேக அண்ணன் என்ன பண்ணுவான்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பி.கு. வசந்துடைய பதிவுகளை பார்த்து இந்த கவிதையை இட ஆவல் பிறந்தது. இது அந்த காலத்தில் என் வலைபூவில் இட்டது. யாரும் அவ்வளவாக படிக்கலை அப்போ...//

ஹிஹி!
அதான் இப்போ எல்லாரும் படிச்சிட்டாங்களே-க்கா!

அப்போ எல்லாரும் கண்ணன் கட்சியில் இருந்தாங்க!
ஆனா இப்போ வசந்த் வந்த பின்னால ராதை கட்சிக்கு மாறிட்டாய்ங்க! :)

கவிநயா said...

//கவிதையும் ராதா-கிருஷ்ணன் படமும் அழகாய் உள்ளன.//

மிக்க நன்றி ராதா.

கவிநயா said...

//பாடலைப் பாடிப் பார்த்தேன்..! வளைய வேண்டிய இடத்திலெல்லாம் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள...! அழகாய்ப் பாட முடிகின்றது..!//

ஆஹா, பாடிப் பார்த்தீங்களா? :) பதிவு செய்து அனுப்பித் தாங்களேன் வசந்த்... ரசித்தமைக்கு மிக்க நன்றி.

கவிநயா said...

//புரிஞ்சி போச்சே!
புரிஞ்சி போச்சே!
புரிஞ்சி போச்சே!

:)//

சரிதான் கண்ணா. வலைபூவின் பெயர் இந்த கவிதையிலிருந்துதான் வந்தது :)

//மேகத்தைப் பார்த்து முகம் சுளிச்சா, பாவம் அது என்ன பண்ணும்? :)//

அது எப்படி அவன் வண்ணத்தை பூசிக்கலாம்? எவ்ளோ பெரீய்ய தப்பு! :)

//அதான் இப்போ எல்லாரும் படிச்சிட்டாங்களே-க்கா!//

ஆமாம், சந்தோஷம்! :)

//அப்போ எல்லாரும் கண்ணன் கட்சியில் இருந்தாங்க!
ஆனா இப்போ வசந்த் வந்த பின்னால ராதை கட்சிக்கு மாறிட்டாய்ங்க! :)//

சரியா சொன்னீங்க :)

ரசனைக்கு நன்றி கண்ணா.

இரா. வசந்த குமார். said...

கவிநயா அக்கா...

ஆஹா... என் குரல்ல நீங்க பாட்டு கேட்டீங்கன்னா, அப்புறம் பாட்டு எழுதறதையே கொஞ்ச நாளுக்கு மறந்திடுவீங்க..! அவ்ளோ ச்ச்வீட் வாய்ஸ்..!:)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP