Saturday, December 19, 2009

4.கண்ணனுக்குப் பாலூட்டல்.தாய்மை உணர்ந்த தருணமே, ஏந்திய
சேய்மை விரல்தடவிச் செவ்விதழ் - வாய்மை
படர்ந்துப் பெருகியப் பாலைக் குடிக்கத்
தொடர்ந்துத் தொடர்ந்த கணம்.

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

மென்விரல் கொண்டகை மெல்லியதாய் ஓர்மாரை
என்குரல் தேங்கத் தடவுவான் - வெண்மணல்
குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்.

முகிலில் ஒருபொழுது மூழ்கும் கடலில்,
தகிக்கும் அனலில் மற்றும் - முகிழ்க்கும்
குலைகளாய்ப் பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது.***

Image Courtesy :: http://the-artist-varma.com/ravivarma_images/rrv3.jpg
and http://www.exoticindiaart.com/artimages/ep20.jpg

11 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை//

வசந்த்...
நீங்க வெண்பா எழுதிய நேரம்...
இங்கே ஒரே பனி மழையாக் கொட்டிக்கிட்டு இருக்கு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

முலைப் பால் உண்ணும் காட்சி எப்பமே மலைப்பால் ஆழ்த்தும்!
குழந்தைக்கு முலை உண்ணச் சொல்லிக் கொடுக்காமலே, பிறந்த மாத்திரத்தில் தெரிந்து கொள்கிறதே!

கண்ணன் முலைப்பால் உண்ணும் காட்சியை இங்கு காட்டக் காட்ட...

கான மயிலாட = வசந்த்
கண்டிருந்த வான் கோழி = கேஆரெஸ்!
இதோ, நானும் முயல்கிறேன்...

அணிந்திடும் ஆரத்து மின்னலின் மினுப்பிலே
பணிந்திடு மோஅம் மார்பகம்? - தணிந்திடும்
நந்தனின் பசித்தீ அடங்கப் பனிமழை
தந்தனள் தாயவள் பால்.

ஆரங்களின் மினுமினுப்புக்கு எல்லாம் அடங்காத மார்பகங்கள்,
கண்ணனுக்காகவே, உன்னித்து எழுந்தன தடமுலைகள்!

நந்தனாகிய அவன் பசித் தீ அடங்கப் பனி மழை பொழிகிறதே!
அப்படிப் பொழியப் பொழியத் தந்தாளே பால்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெண்மணல் குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்//

சூப்பரோ சூப்பர்! மிக அழகான உவமை!

வெண்மணல் குன்று! அதில் உற்றுப் பெருகும் நேரம்!
அந்த ஊற்று நீரும் (பாலும்), ஊற்றைப் போலவே சற்று மென்-வெப்பம் தெரியும்!

வெண்மணற் குன்றிலே ஊற்று! - ஈற்றடியா முயற்சி பண்ணுங்க! அருமையான உவமை!
பிள்ளைக்கு மட்டுமல்லாது பெண்ணுக்கும் சேர்த்தே இவ் உவமை! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது//

இதுக்குப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்னிடம் இல்லையானாலும் பெரியாழ்வார் என்னும் பேதையிடம் வார்த்தை இருக்கு!

பணைத்தோள் இளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை
அணைத்தார் உண்டு கிடந்த இப்பிள்ளை

கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை - துஞ்ச வாய்வைத்த பிரானே!

அன்னே உன்னை அறிந்து கொண்டேன் - உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே! :)

இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ - உன்னை என்மகனே என்பர் நின்றார்!

அம்மா உன்னை அறிந்து கொண்டேன் - உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே! :)

கவிநயா said...

கருத்துச் சொல்லவும் தகுதியில்லை, கண்ணனின் கனிவினால் பெய்த (வெண்)பாமழை குறித்தே எனக்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மார்கழி-04

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம் பாவாய்
-----------------------------------

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே.

ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள்.

ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள்.

ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.

மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய்.

பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!

குமரன் (Kumaran) said...

மின்னாரம், தாய்க்கொண்டல், பசித்தீ, பால்மழை - பொருத்தமான உவமைகள் வசந்தா.

இன்னொரு பெரியாழ்வார் வந்தாரோ இப்புவியில்?!

தமிழ்ப்பறவை said...

மிக ரசித்தேன் வசந்த்...
வெண்மணல் குன்றில் ஊற்று...அபாரம்...
மொத்தப் பாவும் துள்ளித்தாவும் தமிழ்...

இரா. வசந்த குமார். said...

அன்பு கே.ஆர்.எஸ்...

மிக்க நன்றிகள். பனிமழையில் நனைந்து கொண்டே நீங்கள் எழுதிய வெண்பாவும் குளுகுளுவென இருக்கின்றது. பெரியாழ்வார் பாடல் அருமை.. அருமை...! (அம்ம நான் அஞ்சுமாறே என்ற திருவாசகப் பாடல் ஞாபகம் வந்தது!) :)

***

அன்பு கவிநயா அக்கா...

உங்களுக்கா தகுதி இல்லை..! தாராளமாகச் சொல்லலாம்..!

***

அன்பு குமரன்...

ஆஹா..!! இப்படியுமா வாழ்த்துவது..!! கே.ஆர்.எஸ்.ஊர்ப் பனிமழை மொத்தமும் என் மேல் விழுவது போல் உணர்கிறேன். எல்லாப் புகழும் அவனுக்கே..!! :)

***

அன்பு தமிழ்ப்பறவை...

துள்ளித் தாவும் தமிழ்..!!! நன்றிகள்..! :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP