Sunday, December 20, 2009

வெண்ணிலாவே!
வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

17 comments :

அண்ணாமலையான் said...

பிரமாதம் போங்க...

உயிரோடை said...

க‌ண்ணக்கான‌ க‌விமாலை அருமை. பாராட்டுக‌ள் க‌விந‌யா

Raghav said...

அருமை அருமை..

Raghav said...

வெண்ணிலாவும் கருநிலா கண்ணனின் அழகில் மயங்கிக்கிடக்கும் என்பதால் கட்டாயம் புரிந்துகொள்ளும்.

திகழ் said...

அருமை

Radha said...

நிறைய இனிமையான சினிமா பாடல்களை நினைவூட்டுகிறது. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ//

சூப்பரு!

//அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக//

சூப்பரோ சூப்பரு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?//

ஹிஹி!
நல்லாருக்கு-க்கா!

ஆனா என் தோழி இப்படியெல்லாம் அழுவ மாட்டா! கோபியரைப் பார்த்து விட்டு கோதையை மறந்தாயோ-ன்னு கெஞ்ச மாட்டா!
டேய், மாலே செய்யும் மணாளா, ஏலாப் பொய் சொல்லும் ஏலக்காய், மாளாப் பொய் சொல்லும் மாங்காய்-ன்னு தலையிலே நச்-ன்னு ஒரு குட்டு வைப்பா! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மார்கழி-06

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்
----------------------------------

பறவைகள் எல்லாம் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன பார். கருடனின் தலைவனான பெருமாளின் கோயிலில்
வெண்ணிற சங்கின் பெரிம் ஓசை கேட்கவில்லையா?

சிறு பெண்ணே எழுந்திடுவாய். பேயின் முலைப்பாலை உண்டு
கள்ளமாக வந்த சகடத்தை அது நொறுங்கிப் போகும்படி காலால் உதைத்து

பாற்கடலில் பாம்பணை மேல் துயில் கொண்ட உலகங்களுக்கெல்லாம் விதை போன்றவனை
உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெதுவாக எழுந்து ஹரி ஹரி என்று சொல்லும் பெரும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்விக்கிறது.

பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!

குமரன் (Kumaran) said...

பாடலும் அருமை, படமும் அருமை அக்கா. இராதை கருவண்டிடம் கண்ணனைப் பற்றி கேட்டதைப் படம் காட்டுகிறது; அதே கேள்விகளை பாடல் வெண்ணிலவிடம் கேட்கிறது.

கவிநயா said...

//பிரமாதம் போங்க...//

மிக்க நன்றி அண்ணாமலையான்.

கவிநயா said...

//க‌ண்ணக்கான‌ க‌விமாலை அருமை. பாராட்டுக‌ள் க‌விந‌யா//

மிக்க நன்றி உயிரோடை.

கவிநயா said...

//அருமை அருமை..//

மிக்க நன்றி ராகவ்.

//வெண்ணிலாவும் கருநிலா கண்ணனின் //

ஆகா, அழகாச் சொன்னீங்க :)

கவிநயா said...

//அருமை//

மிக்க நன்றி திகழ்.

கவிநயா said...

//நிறைய இனிமையான சினிமா பாடல்களை நினைவூட்டுகிறது. :)//

ஆமால்ல? :)

மிக்க நன்றி ராதா.

கவிநயா said...

//சூப்பரோ சூப்பரு!//

எனக்குமே பிடிச்ச இயல்பா வந்து விழுந்த வரிகளை நீங்களும் ரசித்திருப்பதில் மகிழ்ச்சி கண்ணா :)

//ஆனா என் தோழி இப்படியெல்லாம் அழுவ மாட்டா! கோபியரைப் பார்த்து விட்டு கோதையை மறந்தாயோ-ன்னு கெஞ்ச மாட்டா!
டேய், மாலே செய்யும் மணாளா, ஏலாப் பொய் சொல்லும் ஏலக்காய், மாளாப் பொய் சொல்லும் மாங்காய்-ன்னு தலையிலே நச்-ன்னு ஒரு குட்டு வைப்பா! :))//

அது சரி... இது உங்க தோழி கோதை இல்லை, வேற ஒரு பாவம் கோதைன்னு வச்சுக்கோங்க :)

வாசிப்பிற்கு நன்றி கண்ணா.

கவிநயா said...

//பாடலும் அருமை, படமும் அருமை அக்கா. இராதை கருவண்டிடம் கண்ணனைப் பற்றி கேட்டதைப் படம் காட்டுகிறது; அதே கேள்விகளை பாடல் வெண்ணிலவிடம் கேட்கிறது.//

மிக்க நன்றி குமரா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP