மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்!
திருக்கோவில்களில் தெய்வத் திருநீராட்டின் போது ஓதப்படும் வேத மந்திரங்களில் முதன்மையானது புருஷ சூக்தம்.
'ஸஹஸ்ர சீருஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்' என்று ஆயிரம் தலைகள் உடையவன், ஆயிரம் கண்களை உடையவன், ஆயிரம் கால்களை உடையவன் என்று தொடங்கும் புருஷ சூக்தத்தில் இறைவன் புருஷ: என்ற பொதுப் பெயராலேயே சொல்லப்படுகிறான். ஆனால் அப்படி பொதுப்பெயராலேயே சொல்லும் வேதமும் 'ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீ:ச பத்ன்யௌ' என்று 'அவனுக்கு பூமியும் லக்ஷ்மியும் பத்தினிகள்' என்று மறைமுகமாக அவன் அடையாளத்தைச் சொல்லிவிடுகிறது.
அதே போல் எப்போதும் பிரம்மத் தியானத்திலேயே இருந்த அவதூதராக விளங்கிய சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரும் 'மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்' என்று பிரம்மம் என்ற பொதுப்பெயராலேயே இறைவனை இந்தப் பாட்டில் குறித்தாலும் 'மயிற்பீலி அணிந்தவன், திருமகள் கேள்வன், குழலை இசைப்பவன்' என்று இறைவனின் அடையாளங்களைக் கூறிவிடுகிறார். அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரரும் பிரம்மம் எனில் யார் என்பதை ஆதிசங்கரரைப் போல் மிகத் தெளிவாக இந்தப் பாட்டில் கூறுகிறார்.
மானஸ ஸஞ்சரரே! – பி3ரம்மனி
மானஸ ஸஞ்சரரே!
மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில்
மனமே சஞ்சரிப்பாய்!
மத3சிகி பிஞ்சா அலங்க்ருத சிகு3ரே
மஹநீய க2போ3ல விஜித முகு3ரே (மானஸ)
மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி (மனமே)
ஸ்ரீரமணீ குச து3ர்க விஹாரே
ஸேவக2 ஜன மந்தி3ர மந்தா3ரே
பரமஹம்ஸ முக சந்த்ர சகோ3ரே
பரிபூரித முரளீரவதா3ரே (மானஸ)
திருமகள் தனமெனும் மதிலுக்குள் அலைபவன்
அடியவர் வேண்டுதல் தருவதில் தருவவன்
பரமஹம்சர் முகம் பருகிடும் பறவையன்
உலகினில் பரவிடும் குழலினின் இசையவன் (மனமே)
தனிமையில் இயற்கைச் சூழலில் இந்தப் பாட்டின் ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துக் கேட்டால் ஒரு மாபெரும் தியானம் கைகூடுவதைக் கண்டிருக்கிறேன். அதனால் தானோ என்னவோ இந்தப் பாடலைப் பாடாத இசைவாணர்களே இல்லை என்று சொல்லும் வகையில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இசைவாணர்கள் பலரும் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கிருக்கும் காணொளிகளில் கண்டு கேட்டு மகிழுங்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடித் தரவேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கு! :-)
10 comments :
//அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரரும் பிரம்மம் எனில் யார் என்பதை ஆதிசங்கரரைப் போல் மிகத் தெளிவாக இந்தப் பாட்டில் கூறுகிறார்//
பிரம்மம் எனில் யார்? = இந்தப் பாட்டில் தெளிவாகச் சொல்லுறாங்களா? எங்கே? எனக்கு ஒன்னும் தெளிவாத் தெரியலையே! :)
எனக்கும் தெளிவது போல் தெரிவியுங்கள் குமரன்!
சங்கராபரணம் படத்தில் எனக்கு பிடிச்ச பாட்டு! அதுவும் குட்டிப் பையன் அழகாத் திக்கித் திக்கி மறக்க, தூக்கத்திலும், குரு அடியெடுத்துக் கொடுக்கும் பாட்டு! குரு-ன்னா இப்படில்ல இருக்கணும்! எனக்கும் அந்தக் குட்டிப் பையன் போல யார் கிட்டவாச்சும் போய்க் கத்துக்கணும் போல இருக்கு!
//தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடித் தரவேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கு! :-)//
முருகா! அதான், நீங்களே தமிழில் மொழியாக்கி இருக்கீங்களே!
மெட்டு மாறாமல் மொழியாக்கினீங்களா-ன்னு பார்க்க, கொஞ்சம் பாடிக் காட்டுங்க!
அஞ்சு குரலில் அதேபாட்டை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அலுக்கவேயில்லை...
பழனி பஞ்சாம்ருதம்போல்.
நன்றி :)
வேதங்கள் என்றைக்கு எதையாவது தெளிவாகச் சொல்லியிருக்கிறது இரவி? எல்லாம் மறை பொருள் தான். பெயரே மறை என்று வைத்துவிட்டார்கள். இதில் அடியேன் எதைத் தெளிவாகச் சொல்லுவது? கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்ன்னு வேற சொல்லியிருக்காங்க. அதுக்கும் எனக்குப் பொருள் விளங்கலை இன்னும்.
மெட்டு, இராகம் எல்லாம் உங்களுக்கு என்னை விட நல்லா தெரியுமே இரவி. அதனால தான் உங்களைக் கேக்குறேன்.
பஞ்சாம்ருதமா? சரியா சொன்னீங்க லலிதாம்மா.
நன்றி இராஜேஷ்.
முந்தியெல்லாம் சில பேரு வருகைப்பதிவுன்னு பின்னூட்டம் போடுவாங்க. அது எனக்கு பிடிக்கும். வந்து படிச்சாங்கன்னு தெரியுமில்ல?! உங்க வருகைப்பதிவுக்கும் நன்றி. :-)
//வேதங்கள் என்றைக்கு எதையாவது தெளிவாகச் சொல்லியிருக்கிறது இரவி?//
ஹிஹி...அதான்
செய்ய "தமிழ்"மாலைகள் யாம் தெளிய ஓதி
"தெளியாத மறைநிலங்கள்" தெளிகின்றோமே!
இதைச் சொல்றவரு நான் இல்லைப்பா! வடமொழி வித்தகர்கள் என் கிட்ட சண்டைக்கு வராதீக! :)
இதைச் சொல்றவரு, உச்சி மேல் வைத்துக் கொண்டாடப்படும், பல வடமொழிக் கிரந்தங்களைச் செய்த வேதாந்த தேசிகர்!
//இறைவன் புருஷ: என்ற பொதுப் பெயராலேயே சொல்லப்படுகிறான். ஆனால் அப்படி பொதுப்பெயராலேயே சொல்லும் வேதமும்//
இதுக்குத் தான் திராவிட வேதம் வேணும்-ங்கிறது!:)
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
அட, திராவிட வேதம் கூட, வடமொழி வேதம் மாதிரி, யாரு, என்னா-ன்னு சொல்லாம குழப்புதே? :)
ஹிஹி! வேதம் தமிழ் செய்தான்-ன்னா சும்மாவா? அந்த ஒரிஜினல் வேதம் எப்படி இருந்துச்சி-ன்னு காட்ட வேணாமா?
சுரர் அறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன் முதல் ஆயவை முழுதுண்ட "பரபரன்"
புரம் ஒரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் ஐயன் எனவுலகு அழித்து அமைத்து உளனே.
இப்போ, அரன், ஐயன்-ன்னு எல்லாம் பேரைச் சொன்னாலும், பரம் என்பதின் பேரை மட்டும் சொல்லாமச் சொல்லி...
உளன் எனில் உளன் அவன், உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன், அருவம் இவ் வுருவுகள்
....
எண்பெருக்கம் நலத்து--"ஒண்பொருள்" ஈறில
வண்புகழ் "நாரணன்"--திண்கழல் சேரே!!!
இப்போ பேரைச் சொல்லியாச்சா? :)))
ஆஹா. தெரியாம எதையோ சொல்லிட்டேனா? 'புத்தி'யில இருக்குறது வெளிய வந்திருச்சே! :-)