Saturday, May 07, 2011

'வண்டு'த்துதி

                                          'வண்டு'த்துதி

                                     [shanmatha+sthapanacharya.jpg] 


'சங்கர ஜெயந்தி'யான இன்று சங்கரர் பெருக்கிய
  புனித கவிகங்கையிலிருந்து சில துளிகளையாவது
  ப்ரோக்ஷணம் செய்து கொள்வோம்,வாங்க!
      சங்கரரின் 'வண்டு' ஸ்தோத்ரம்

                 [வண்டுத்துதி பற்றிய எனது இந்தப்பதிவைப்   படிப்போர்க்கு  
                       ஒரு  'கொசு'(ரு)த்துதியும் விளக்கமும் இலவசம்!!]
                
               முதலில் இந்தத்துதியின் ஆறு ஸ்லோகங்களை 
   பொருட்சுருக்கத்துடன் அளிக்கிறேன்;இதைப் படித்ததும், இந்த
   ஸ்தோத்திரத்தைப்பற்றி அறியாதவர்கள் ,

  "ஸ்தோத்ரத்துக்கும் வண்டுக்கும் என்ன சம்பந்தம்?"
   "இதுலே வண்டைப்பற்றி  எதுவுமே இல்லையே?" 

   என்று வினாக் கணைகள்   விடுவீர்கள்!   
  
                                பொறுமை!பொறுமை!!

                        நிதானமாகக் கீழுள்ள ஒவ்வொரு  சொல்லையும்
  பக்தியோடு படித்து விடுங்களேன்!

   வண்டுப்புதிருக்கு விடையும் உங்களுக்காகக்  காத்திருக்கு!                                            ஷட் பதீ  (விஷ்ணு ஸ்தோத்ரம்) 

         (1 )  அவிநய-மபநய விஷ்ணோ
                 தமய மந  :சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் I
                 பூத -தயாம் விஸ்தாராய
                 தாரய சம்ஸார-ஸாகரத :  
                                                                       
 "  ஹே    விஷ்ணுவே!பணிவின்மையைப் போக்குவாய்!
    மன அடக்கமும்,(பலவித வேட்கைகள் எனும் கானல்
   நீர் நோக்கி இந்திரியங்கள் ஓடாதபடி)புலனடக்கமும்
    அருள்வாய்!
   அனைத்துயிருக்கும் தயைகாட்டும் பரந்தமனமருள்வாய்!
   பிறவிக்கடல் தாண்டிக் கடைதேறக்கருணை  புரிவாய்!"

           (2 ) திவ்ய-துநீ மகரந்தே
                  பரிமள பரிபோக சச்சிதானந்தே I
                 ஸ்ரீபதி பதாரவிந்தே
                பவ-பய-கேத-ச்சிதே வந்தே
  
   "புனித கங்கை எனும் தேனைச்சொரிவதும்,
    பரமானந்தம் எனும் பரிமள சுகந்தத்தால் 
    சுகமளிப்பதுமான  ஸ்ரீபதியின் சரண கமலத்தை,
    சம்ஸாரபயத்தையும் துக்கத்தையும் சிதைக்க  
    வல்லதான  பாதாரவிந்தத்தை  நமஸ்கரிக்கிறேன்."

         (3 )ஸத்யபி பேதாபகமே
              நாத தவாஹம் ந மாமகீனஸ் -த்வம் I
              ஸமுத்ரோ ஹி தரங்க :
             க்வசந ஸமுத்ரோ ந தாரங்க :

    "பகவானே!நீயும் நானும் வேறில்லை என்றாலும்
      நீ என்னுடைமை என்பது தவறே;
      நான் உன்னுடைமை என்பதே மெய்;
      நீ மகா சாகரமென்றால் நான் அதில்
      ஒரு சின்ன அலை ;ஜீவாத்மாவான நான்தான்  உன்னைச்
      சார்ந்தவனே அன்றி ,பரமாத்வான நீ என்னைச்
      சார்ந்திருப்பவனல்ல"

           (4 )உத்த்ருத -நக நகபிதனுஜ
                தனுஜகுலாமித்ர மித்ர-சசி -த்ருஷ்டே I
               த்ருஷ்டே பவதி ப்ரபவதி
               ந பவதி கிம் பவ -திரஸ்கார :
    "மலையைத் தாங்கியவனே!(அம்ருதம் எடுக்கக் கடல்
      கடைந்தபோது ஆமை அவதாரத்தில் மந்தரமலை
      சுமந்தவன்,கோகுலத்தில் இந்திரனின் சதியால் 
      பெய்த பேய்மழையிலிருந்து  மக்களைக்காக்க
       கோவர்தனகிரியைக் குடையாய்ச் சுமந்தான்)
     மலையைப் பிளந்த இந்திரனுக்கு இளையோனே!
     (இந்திரன் முதலான  தேவர்களின் பெற்றோரான
       கஷ்யப அதிதி தம்பதிக்குபிள்ளையாக அவதரித்தவர்தான்
       வாமனர்!)அசுரர்களின் பகைவனே!சூரிய சந்திரரை
       இரு கண்களாகக் கொண்டவனே!உன் தரிசனம்
        கிடைத்துவிட்டால்,பிறவிப்பிணி
        போகாமலிருக்கமுடியுமா?"

                (5 )   மத்ஸ்யாதிபி-ரவதாரை -
                         ரவதாரவதா-வதா ஸதா வஸுதாம் I
                         பரமேஸ்வர பரிபால்யோ
                         பவதாபவ -தாப-பீதோஹம் II
       " மீனவதாரம் முதலான பல அவதாரங்களாக
        இறங்கிவந்து உலகைக் காக்கும் பகவானே!
        சம்ஸாரத்தில்  மூழ்கி  பீதியடைந்திருக்கும் 
        என்னையும் காத்தருளவேண்டும்."

                (6 ) தாமோதர குணமந்திர
                      சுந்தர -வதநாரவிந்த கோவிந்த I      
                       பவ-ஜலதி-மதன மந்தர 
                      பரமம் -தர-மபனய த்வம் மே II    " ஹே,தாமோதரா!குணக்குன்றே!அழகிய கமலவதனமுடைய
  கோவிந்தா!சம்ஸார சாகரத்தைக் கடைந்து ஆத்மதத்வமெனும்
 அம்ருதத்தை  எடுக்க மத்தான மந்தரமலையாய் இருப்பவனே!
 என்னைக்கலங்கவைக்கும் சம்ஸாரபயத்தைப் 
 போக்கியருள்வாய்!"
                                                  
                                        படித்தாகிவிட்டதா?


      "ஷட் பதீ " என்ற  தலைப்பைக்   கவனித்தீர்களா?
        அதிலேயே பாதி விடை ஓளிந்திருக்கு!


      பொருள்  ( 1 )  ஷட் = ஆறு  , பதீ =பதங்கள்/ஸ்லோகங்கள்
                                 ஷட்பதீ =ஆறு பதங்களுள்ள ஸ்தோத்ரம். 

       பொருள் (2 )ஷட்பதீ =ஆறு காலுள்ள  ஜீவஜந்து.-(வண்டு)


       சங்கரர் என்ற மஹாகவி  நமக்குள் பக்தியூட்டுவதற்காக
       செய்த யுக்தி தான் இந்த  ஸ்லேடை  நயமுள்ள தலைப்பு!!
   ['வண்டுத்துதி' என்ற தலைப்பு  தூண்டும் ஆர்வத்தையும் ஆவலையும்,ஒரு
       சாதாரண தலைப்பு தூண்டி இருக்க முடியுமா ?]


        பலஸ்ருதி போல் அமைந்துள்ள ஏழாவது ஸ்லோகத்தைப்
        படித்தால் மீதி விஷயமும் புரிந்துவிடும்!


                   ஏழாவது ஸ்லோகமும் அதன் விளக்கமும் இதோ :


 (7 )நாராயண கருணாமய சரணம் கரவாணி
       தாவகௌ சரணௌ!  
       இதி ஷட்பதீ மதீயே வதன-ஸரோஜே ஸதா வஸது II


                           


    "நாராயணனே!கருணாமயமானவனே!உன்னிரு
      திருவடிகளைத்தஞ்சமடைகிறேன்;
     இந்த ஆறுஸ்லோகங்கள்(ஷட்பதீ) எந்தன் வதனம்
     எனும் தாமரையில் எப்பொழுதும் வசிக்கட்டும்"
  
                          ''இதி ஷட்பதீ....'' எனும் கடைசி  வரியில்,


      'பதீ '="ஸ்லோகங்கள்" என்று கொண்டால்


      ''இந்த ஆறு சுலோகங்களும் என் வதனத்தாமரையில்
       எப்போதும் இருக்கட்டும்''   என்றிருக்க,


     'பதீ' '= ''சொற்கள்"  என்று பொருள் கொண்டாலும்,
     "இந்த ஆறு சொற்களும்  என் வதனத்தாமரையில்  
       எப்போதும் இருக்கட்டும்" என்று  பொருளமையுமாறு
       சொல்லாடல் செய்திருக்கிறார்  சங்கரர்!


                                    எந்த ஆறு சொற்கள்? 


 "கருணாமயமான நாராயணா! உன் இணையடியில்
  சரண் புகுகிறேன்" என்ற பொருளமைந்த
"நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ!"         
  என்ற ஆறு சொற்கள்!


                 முதல் ஆறு ச்லோகங்களையோ அல்லது ஏழாவது
    ஸ்லோகத்தின் ஆறு சொற்கள் கொண்ட முதல் வரியையோ
    எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால்,அந்த ஆறு  
     ஸ்லோகத்தில் நாம் வேண்டுவதெல்லாம் நிறைவேறும் 
    என்று சொல்லாமல்   சொல்கிற பலஸ்ருதியாக 
     அமைந்திருக்கிறது ஏழாவது சுலோகம்.


                                              அதெல்லாம் சரிதான் !!
     ஆனால் வினயத்திற்கோர் உதாரணமாக விளங்கிய
     சங்கரர், "வதன சரோஜே " என்று தன் வதனத்தைத்  தானே
     தாமரையோடு ஏன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்?


            இதன் காரணவிளக்கமே வண்டுப்புதிரையும்  முழுமையாக 
   அவிழ்த்துவிடுவதைப்  பார்ப்போம் வாங்க!

         "ஷட்பதீ"என்றால் ஆறுபத ஸ்தோத்ரம்  என்ற  பொருளோடு,
    வண்டு  என்றோர்  பொருளுமுண்டு  என்று  பார்த்தோமல்லவா?   
  
               "இந்த  ஆறுபதங்கள்   ஸதா   என் வதனத்திலிருக்கட்டும்!"
   என்று சொல்ல வந்த சங்கரர், ஷட் பதீயின்  வண்டு எனும்  
   இரண்டாம் பொருளையும் மனத்தில் கொண்டு
   
                      "வண்டு  (ஷட்பதீ) ஸதா இருக்கிற இடமாக என்  
            வதனம் இருக்க வேண்டுமானால் அது தாமரையாக
        இருந்தால் தானே முடியும்?" என்றெண்ணியவராய்,
        "வதன சரோஜே"என்று போட்டுவிட்டார்! 

  

                  ஸ்ரீபதியின் பாதாரவிந்தம்பற்றி ஸதா பேசிக்
    கொண்டிருக்கும் ஒருவரின் வதனம் தூய கமலமாக இருப்பதும் 
    இயற்கைதானே?


             ''வண்டு ஸ்தோத்ரம்''என்ற நாமகரணம் எப்படி
           இந்த ஸ்தோத்ரத்திற்குப் பொருத்தம் என்று இப்போ  
          தெளிவாயிருக்குமே!

ஜெய ஜெய சங்கர!ஹர ஹர சங்கர!
   
                 அடுத்தபடியாக,நான் இலவசம் என்று அறிவித்த 
     "கொசு[ரு]" ஸ்தோத்ரத்தைப் பார்ப்போமா?


                                        'கொசு'த்துதி

                                       சக்ர ப்ரமண-கரத்வாத்
                                       குத்ருஷ்டிபிர்  -தூரவர்ஜ்யமாநத்வாத்
                                       ச்ருத்யந்த -கேலநத்வாத்
                                       மசக த்வாமேவ மாதவம் மந்யே II 


                   இந்த சின்ன நாலுவரி ஸ்லோகத்தில் ஓங்கி
            உலகளந்த உத்தமனையும்,கொசுவையும்
           குறித்து,இரு பொருள்பட  பாடி இருக்கிறார் பெயர்
           தெரியாத ஒரு சம்ஸ்க்ருதப் புலவர்!

        (ஸ்லேடைச்சொற்கள் பச்சை வண்ணத்திலும் அதற்கான
         இரு பொருள்களில் விஷ்ணுவைப்பற்றிய பொருள்
         செவ்வண்ணத்திலும்  கொசுவைக்குறிக்கும் பொருள்
         நீலவண்ணத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன)


                


         பொருட்சுருக்கம்:     "ஏ கொசுவே! 
சக்ரப்ரமணம் செய்தல் (சக்கரம் சுற்றுதல் /-வட்டமடித்தல் ),    
குத்ருஷ்டி(துர்நோக்கம் /-கண்வலி)உள்ளவர்களை 
தூரப்போகச்செய்தல்,
ச்ருத்யந்தத்தில் (வேதாந்தத்தில் /-காதோரத்தில்)
ஆனந்தமாக வளையவந்து விளையாடுதல்,
ஆகிய காரியங்களை நீ செய்வதால்,
உன்னையே மகாவிஷ்ணுவாக நினைக்கிறேன் ! !"

         
                                                         

           ''இத்தனூண்டு கவியில் இவ்ளோ ச்லேடையா?''ன்னு
         வாய் பிளந்துட்டீங்களா? கொசு பூந்துடப்போறது!
         
             இந்தக் கவிஞரைப்போல் கொசுவைக் கேசவனாய்
         நினைக்கும்  பக்குவமிருந்தால்   நோ ப்ராப்ளம் ! 

             கேசவன் நம்முள் புகுந்துவிட்டால்,அதற்குமேல் நமக்கு
           வேறென்ன வேண்டும் ?


[நன்றி:ர கணபதியின் 'தெய்வத்தின் குரல்' (3 ,4 ) இல் பரமாச்சாரியாரின் உபன்யாசங்கள் ]
disclaimer:images taken from google search
       
    
8 comments :

தி. ரா. ச.(T.R.C.) said...

வண்டாடும் சோலை தனிலே கண்டேன்
கண்ணனை
நன்றி

Lalitha Mittal said...

வருகைக்கு நன்றி;வண்டாடும் சோலையில் அவனைக்கண்ட உங்கள் வருகையால் ஆனந்தமடைந்தேன்

குமரன் (Kumaran) said...

த்வயம் என்னும் இரு வரி சுலோகத்தை அறிந்திருந்திருந்தேன். இன்று ஒரு வரியில் அதனைக் கூறும் சுலோகத்தை அறிந்தேன். நன்றி அம்மா.

Lalitha Mittal said...

பின்னூட்டத்திற்கு நன்றி குமரன்.

இராஜராஜேஸ்வரி said...

'இந்த ஆறு சுலோகங்களும் என் வதனத்தாமரையில்
எப்போதும் இருக்கட்டும்'' //
அருமையான கருத்துள்ள பாடலை மனத்தாமரையில் மலரச் செய்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

Lalitha Mittal said...

உங்கள் பாராட்டுக்களை சங்கரரின் திருவடித்தாமரைகளில் சமர்ப்பிக்கிறேன்;வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

Narasimmarin Naalaayiram said...

நீ மகா சாகரமென்றால் நான் அதில்
ஒரு சின்ன அலை ;ஜீவாத்மாவான நான்தான் உன்னைச்
சார்ந்தவனே அன்றி ,பரமாத்வான நீ என்னைச்
சார்ந்திருப்பவனல்ல"

புரியாத சமஸ்க்ரிதம் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி .:)
ஆதி சங்கரரின் அருமையான எம்பெருமான் மேல் பாடப்பட்ட வரிகளை தமிழில் கொடுத்தமைக்கு நன்றி . ஒவ்வொன்றும் அட்டகாசம் .
ஸ்ரீ ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்

Lalitha Mittal said...

எம்மொழியிலும் மெய்ப்பொருள் காணும் திறந்த,பரந்தமனம் தமிழர்களுக்கே உரிய து ;வருகைதந்து பின்னூட்டமும் அளித்த ந.நா .அவர்களே!மனமார்ந்த நன்றி!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP