உடலே பண்டரி உயிரே விட்டலன்!
இதோ இன்னொரு வைஷ்ணவாத்வைதி! விசிஷ்டாத்வைதி என்று தான் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லை! எதுவாக இருந்தாலும் இவர் ஒரு பேரடியார்! மராட்டிய ஆழ்வார்! சந்த் ஏகநாதர்!
மராட்டிய பக்தர்கள் பாடிய அபங்கங்களை முதலில் கேட்டது நாரத கான சபாவில். அவ்வளவாகப் புரியவில்லையே என்று தான் தோன்றியது. 'புரியணுமா? அப்படின்னா மராத்தி தெரியணுமே. உனக்குத் தெரியுமா?' என்று கேட்காதீர்கள். அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் புரிவதால் மொத்தமாக ஒரு புரிதல் கிடைக்கும் சில வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கும் போது. அது போல் அபங்கங்களும் புரியும் என்று நினைத்தேன்.
ஏகநாதரின் இந்தப் பாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நல்லவர் என்னைப் போன்றவர்களுக்காகவே இந்தக் காணொளியில் பாடலின் பொருளை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இரண்டும் சேர்ந்து இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள உதவியது. 'எனக்கு புரியவில்லை. உங்களுக்கு என்ன புரிந்தது. தெளிவாக விளக்குங்கள்' என்று இரவிசங்கர் தூண்டில் போடுவார். இந்த மீன் மாட்டாது. :-)
வைஷ்ணவாத்வைதி என்று சொன்னேனல்லவா? ஏன் என்று கேட்கத் தோன்றியதா? தோன்றாவிட்டாலும் பரவாயில்லை. சொல்லுகிறேன். :-)
பாடலின் முதல் வரியைப் பாருங்கள். ஆத்மா ஹா விட்டல என்கிறார். ஆத்மாவே இறைவன் என்பது அத்வைதம் தானே!
அப்படி சொல்லமுடியாது என்று இன்னொரு குரல் கேட்கிறது. எனக்குள்ளிருந்து. ஆத்மாவின் குரலா? இல்லையில்லை. அறிவின் குரல் தான். அனுபவத்தின் குரலும் இல்லை.
யாருக்கு உலகம் உடலோ, யார் உலகத்திற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.
யாருக்கு ஆத்மா உடலோ, யார் ஆத்மாவிற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.
இவை வேதங்கள் சொல்பவை.
முப்பெரும் பொருட்கள் உண்டு. இயற்கை, உயிர், இறைவன் என்பவை அவை. மூன்றும் வெவ்வேறானவை. ஆனால் இயற்கைக்கும் உயிருக்கும் உயிராக இருப்பவன் இறைவன். இயற்கையையும் உயிர்களையும் விசேஷணமாக, தன்னில் அடங்கிய மெய்ப்பொருள்களாகக் கொண்டு தான் மட்டுமே இருப்பவன் இறைவன்! அந்த வகையில் இறை என்பது மட்டுமே மெய்ப்பொருள்.
இப்படி விளக்குவது தானே விசிஷ்டாத்வைதம்.
ஏகநாதரின் இந்தப் பாடலை அந்த வகையிலும் விளக்கலாமே?
விளக்கலாம் தான். ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? பாடலைக் கேட்டு அந்தப் பாடல் சொல்வதை அனுபவத்தில் கொண்டு வர இறையருள் கிட்டினால் போதாதா? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்புறுவோம்.
காயா ஹீ பண்டரி ஆத்மா ஹா விட்டல
நாந்த3தோ கேவல பாண்டுரங்க!
உடலே பண்டரி உயிரே விட்டலன்
உள்ளே இருப்பவன் பாண்டுரங்கனே!
பா3வ ப3க்தி பீ3மா உதக தே வாஹே
ப2ரவா ஸோப3தாஹே பாண்டுரங்க! (காயா)
அன்பு பக்தி பீமா நீரின் ஊற்றே
உண்டு தாகம் தீர்பவன் பாண்டுரங்கனே! (உடலே)
த2யா க்ஷமா ஷாந்தி ஹேஜி வாளுவந்த
மிளாலாச தா4ட வைஷ்ணவாஞ்சா! (காயா)
ஈரம் பொறை அமைதி சேரும் மண்ணின் மீதே
சேரும் அன்பர் கூட்டம் கூடுவதை போலே! (உடலே)
ஞான த்3யான பூஜா விவேக ஆனந்த
ஹாஜி வேணுநாத ஸோபி3தசே! (காயா)
ஞானம் தியானம் பூஜை அறிவு ஆனந்தம்
அமையும் என்னில் குழலோசை போலே! (உடலே)
த2ச இந்த்ரியாஞ்சா ஏக மேள கேலா
ஐசா கோபால்காலா ஹோத அசே! (காயா)
பத்து புலன்களும் ஒன்றே ஆக்கி
தந்தேன் பசுபதிக்கே படையலாக! (உடலே)
தே2கிலீ பண்டரி தே2ஹி ஜனி வனி
ஏகா ஜனார்த்தனி வாரி கரி! (காயா)
காண்கிறேன் பண்டரி என்னில் உன்னில் எங்கும்
இதுவே யாத்திரை போகும் இடமே! (உடலே)
இந்தப் பாடலின் தமிழ்ப்பெயர்ப்பையும் பாடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கே!
16 comments :
அருமையா இருக்கு விளக்கம் குமரன்
அபாங்கம் அபாரம்!
அபாங்க கீதம் அபாரம்
அபயம் ஆத்மஹா விட்டலம்!
ஏகநாத கீதம் ஏகாந்தம்
ஏகம் ஏகம் விட்டலாஞ்சனம்!
//ஏகநாதரின் இந்தப் பாடலை அந்த வகையிலும் விளக்கலாமே?//
:)
வலிந்து விளக்கத் தேவையே இல்லாமல், ஏகநாதர் மிக அழகாக அவரே சொல்லி விடுகிறாரே! வெறும் ஆத்மா ஹா விட்டல என்பதைத் "தனியாகப் பார்க்கும் போது" தான் மனம் மயங்குகிறது! :) ஆனால் கூடவே காயா ஹீ பண்டரி என்றும் சொல்வதை நைசாக விட்டு விடுகிறோம்! :)
காயா ஹீ பண்டரி ஆத்மா ஹா விட்டல
உடலே பண்டரி உயிரே விட்டலன்
உடல் பண்டரீபுரமாக இருப்பதால், அந்த உடலில் தங்கும் உயிராக விட்டலன் இருக்கின்றான்! அப்படியானால் ஜீவாத்மா தான் விட்டலனா? அந்த உயிர் அந்த உடலில் மட்டும் தான் இருக்கிறதா? திருவரங்கம், திருமலை, திருச்செந்தூர் என்று பல உடல்களிலும் அதே உயிர் இருக்கிறதே! அது எப்படி? அதான் அடுத்த வரியில்.....
நாந்த3தோ கேவல பாண்டுரங்க!
உள்ளே இருப்பவன் பாண்டுரங்கனே!
"உள்ளே" இருப்பவன் பாண்டுரங்கன் என்று சொல்லி விடுகிறார்! "கேவல" பாண்டுரங்கனாம்! ஒரேயொரு பாண்டுரங்கன்! அவன் ஆத்மா ஹா விட்டல உள்ளே இருக்கிறான்!
உடம்பு பண்டரி!
உயிர் விட்டலன்!
உள்ளே பாண்டுரங்கன்!
உடம்பு வேங்கடம்
உயிர் எந்தை
உள்ளே பாண்டுரங்கன்!
என்ன, முப்பொருள் (விசிஷ்ட-அத்வைதம்) தானே வந்து விடுகிறது அல்லவா? :)
//இந்தப் பாடலின் தமிழ்ப்பெயர்ப்பையும் பாடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கே!//
ஆகா! நான் இராகவ மீன்! சிக்குமோ சீக்கிரம்? :)
//வைஷ்ணவாத்வைதி என்று சொன்னேனல்லவா? ஏன் என்று கேட்கத் தோன்றியதா?
தோன்றாவிட்டாலும் பரவாயில்லை. சொல்லுகிறேன். :-)//
பார்த்தீங்களா? "மக்களுக்குத் தோன்றாவிட்டாலும் நான் சொல்லுறேன்"-ன்னு சொல்லி மீன் சிக்கி விட்டது! :)
குமரமீன் திருவடிகளே சரணம்!
//பாடலைக் கேட்டு அந்தப் பாடல் சொல்வதை அனுபவத்தில் கொண்டு வர இறையருள் கிட்டினால் போதாதா?//
பாடலை கேட்க கூட கொடுப்பினை இல்லையே. :-(( [வீட்டில் கணினி வேலை செய்யவில்லை. சரி செய்ய நேரம் இன்னும் வரவில்லை. ]
http://srisaikala.blogspot.com
என்ற ப்ளாக்கில் 'விட்டலன்'
என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டேன்;
அடுத்த சில நாளில் விட்டலன் இவ்வளவு அழகாக மீண்டும் மீண்டும் தரிசனம் கொடுத்துவிட்டானே!
பாட்டு அருமையோ அருமை!இனிமையோ இனிமை!!
வருகைப் பதிவு ! :-)
நன்றி ஜெய்சங்கர்.
இரவி, இராகவ மீனும் சிக்கியதே! அடியேன் எந்த இடத்தில் விளக்கத்தை விளக்காமல் நிறுத்தினேனோ அந்த இடத்தில் இருந்து தொடங்கி விளக்கம் தந்திருக்கிறீர்களே. பாண்டுரங்கனே என்ற ஏகாரத்தின் விளக்கம் சொன்னாலே போதுமே முப்பொருளுண்மைக்கு. :-)
காயா 'ஹீ', ஆத்மா 'ஹா'வுக்கும் விளக்கம் இருக்குமே?! நீங்கள் சொல்லாவிட்டால் இராதா சொல்வார்! :-)
வருகைப்பதிவிற்கு நன்றி இராதா. :-) விரைவில் கணினியைச் சரி செய்துப் பாடலைக் கேளுங்கள். தவறவிடக்கூடாத பாடல்.
உண்மை அம்மா. அருமையோ அருமை. இனிமையோ இனிமை தான்.
//அபாங்க கீதம் அபாரம்
அபயம் ஆத்மஹா விட்டலம்!
ஏகநாத கீதம் ஏகாந்தம்
ஏகம் ஏகம் விட்டலாஞ்சனம்!//
இதைக் கவனிக்கலியா? இது ஒரு கற்பினுக்கினிய விற்பன்னர் பாடிய சுலோகமாக்கும்! :) யாரு? :)
அபங்களுக்கு எப்பவுமே தனி விதமான அழகு இருக்கு அண்ணா! நன்றி.
நன்றி சங்கர்.