எந்தன் கண்ணனைக் கண்டீரா?
மார்கழி-02
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!
நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!
பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!
கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!
உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?
கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!
காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!
குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்
புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
எந்தன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?
--கவிநயா
11 comments :
அன்பு கவிநயா அக்கா...
எளிமை..! அருமை...! இனிமை...!! பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படித்தது போல் இனிப்பாய் இருக்கின்றது.
//அவனைக் கண்டால் சொல்வீரா?
கண்டிப்பாகக் கண்ணனைக் கண்டால் சொல்லி விட்டுத் தன் மறுவேலை..!! :)
//புல்லாங் குழலை ஊதும் எந்தன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?//
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினிய கண்ணனைக் கண்டோம்
கவின்மொழியாள் கவியில் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்...
அருமை அருமை கவிக்கா.. பாடல்கள் கண்ணனிடம் கொஞ்சுகின்றன
//பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;//
ஆமாம்-கா! அதிலென்ன சந்தேகம்? என் கண்ணன் பத்தரை (பக்தரை) மாற்றும் தங்கமே தான்! :)
//இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!//
ஹா ஹா ஹா
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆகுதோ? :)
இன்னிக்கி உண்டான திருப்பாவையைக் கொடுக்கலீயா-க்கா? :)
//எளிமை..! அருமை...! இனிமை...!! //
Repeating the above words. :)
~
Radha
padaththil kaanum kannanaik kaana panakkaararkalee mudiyum
//பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படித்தது போல் இனிப்பாய் இருக்கின்றது.//
வசந்த்! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? :) ரசித்தமைக்கு நன்றிகள்.
//கண்டிப்பாகக் கண்ணனைக் கண்டால் சொல்லி விட்டுத் தன் மறுவேலை..!! :)//
வெயிட்டிங்...! :)
//கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினிய கண்ணனைக் கண்டோம்
கவின்மொழியாள் கவியில் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்...//
ராகவ், கவிதையா பொழியறீங்க :) அழகா இருக்கு.
//அருமை அருமை கவிக்கா.. பாடல்கள் கண்ணனிடம் கொஞ்சுகின்றன//
கண்ணன்னாலே கொஞ்சல் தன்னால வந்திடுது. மிக்க நன்றி ராகவ்.
//என் கண்ணன் பத்தரை (பக்தரை) மாற்றும் தங்கமே தான்! :)//
அது சரி... இப்படியெல்லாம் சொல்லாட கண்ணனாலதானே முடியும்? :)
//ஹா ஹா ஹா
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆகுதோ? :)//
ரசித்தமைக்கு நன்றி கண்ணா.
//இன்னிக்கி உண்டான திருப்பாவையைக் கொடுக்கலீயா-க்கா? :)//
சேர்த்துட்டேன், ஆனா நீங்க என்ன மறுபடி ஆரம்பிச்சிருக்கீங்க போல... வசந்த் பதிவில் பார்த்தேன்...
//எளிமை..! அருமை...! இனிமை...!! //
Repeating the above words. :)//
மிக்க நன்றி ராதா!