5.கண்ணனைத் தாலாட்டல்.
போது நழுவியது; போக்கிடம் இன்றிநிலா
மாது தழுவினாள் மேகத்தை; - சாதுக்கள்
சத்திரம் ஏகினர்; சாமவேளை ஆனது;
ரத்தினமே கண்வள ராயோ.
தேன்வாழப் பூவிருக்கத் தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க வந்ததென்ன - நான்வாழ
ராசாதி ராசாவா! ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.
மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும் - தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில் செம்பவளக் கண்ணாநீ
கொஞ்ச கணமேனும் தூங்கு.
யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்! - குமுதம்
மலர்ந்து விரிந்து மதியில் நனையும்;
தளர்ந்து மகனே உறங்கு.
***
Image Courtesy :: http://jsk247.wordpress.com/category/bal-krishna/
10 comments :
அட இப்படிக்கூட வசந்த் எழுதுவாரா?
நல்ல தெம்மாங்கு... எவ்வளவு செய்யுள் வந்தாலும், தெம்மாங்கின் சுகமே தனி, தாயின் சேலையால் விசிறியது போல..
தூக்கம் என்னையும் தழுவுகிறது இப்போது
//யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்!//
ச்வீட்! அனைத்து பாடல்களும் அழகு. குட்டிக் கண்ணன் மயங்கி தூங்கிருவான்!
பெரியாழ்வாரே தான்! ஐயமே இல்லை ஐயன்மீர்! பெரியாழ்வாரே தான்!
//பெரியாழ்வாரே தான்! ஐயமே இல்லை ஐயன்மீர்! பெரியாழ்வாரே தான்! //
Repeating Kumaran's words. :)
//ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.
//
வசந்த் அடடா.. எப்புடிக் கொஞ்சி தூங்கச் சொல்றீங்க.. உங்க கொஞ்சல் மொழியைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே கண்ணன் உறங்காமல் இருக்கிறான் போலும்..
தேன்வாழப் பூவிருக்கத்
தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க
வந்ததென்ன நான்வாழ
ராசாதி ராசா வா!
ரோசா ஒதட்டாலே
பேசாம கண் ஒறங்கு
பேசாம கண் ஒறங்கு
- வெண்பாவை இப்படி மாத்திப் போட்டா, எங்கள் விட்டு சித்தன் தெம்மாங்கே தான்! சூப்பரோ சூப்பர்!
//மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும்//
அப்படியே எங்கூரு வாழைப்பந்தல் பேச்சைய வெண்பாவுல கொண்டாந்துட்டீயளே வசந்த ராசா!
மேக்கால போனதுவும்
வேக்காட்ட வந்ததுவும்
-ன்னு இதுவல்லவோ நாட்டுப்பாடல் - நாட்டு வெண்பா! :)
//தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில்//
மேக்கால-வேக்காட்ட-க்கு ஈடாத் தேக்கால-வா? :))
எதுகை சூப்பர்! எது-கை? குடுங்க! :)
//கொஞ்ச கணமேனும் தூங்கு//
உன்னைக் கொஞ்ச, கணமேனும் தூங்கு! :)
மார்கழி-08
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
-----------------------------------
கிழக்கே வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் விடிந்த பிறகு மேய்ச்சலுக்குச் செல்லும் முன் வீட்டருகே இருக்கும் புற்களை
மேய்வதற்காக பரவி நிற்கின்றன பார். மற்ற பெண்கள்
நோன்பு செய்வதற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப் போகாமல் தடுத்து உன்னை
கூவி எழுப்ப வந்து நின்றோம். குதூகலமுடைய
பெண்ணே எழுந்திடுவாய். கண்ணனின் பெருமைகளைப் பாடி அவன் அருள் பெற்று
குதிரையின் வாயைப் பிளந்தவனை, கம்சனால் ஏவிவிடப்பட்ட மல்லரைக் கொன்ற
தேவாதி தேவனைச் சென்று நாம் வணங்கினால்
ஆகா என்று நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருளுவான்.
பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!
வசந்த்,
இது என்ன 1, 4 பத்திகள் ஒரு விதமாகவும், 2, 3 பத்திகள் ஒரு விதமாகவும் (வட்டார மொழி) தென்படுகிறதே?
இது போன்ற கவிதைகளுக்கு ஏதேனும் பெயர் உண்டா?
இல்லை என் பார்வையில் கோளாறா? :)
எது எப்படி இருந்தாலும் உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.
~
ராதா
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். தெம்மாங்கு பாடுவது நம்மையும் பிள்ளைகளாக்கி விடுகின்றது அல்லவா..?
***
அன்பு கவிநயா அக்கா...
குட்டிக் கண்ணன் உறங்குவதற்குத் தானே இத்தனை முஸ்தீபுகளும்..!!!
***
அன்பு குமரன்...
தங்கள் அன்புக்கு நன்றிகள்.
***
அன்பு ராதா...
//தங்கள் அன்புக்கு நன்றிகள்.
Repeating.:)
***
அன்பு ராகவ்...
அந்த மாயக் கள்ளன் செய்தாலும் செய்வான். அவ்வப்போது,'கண்ணா தூங்கிட்டையா..?' கேட்டு செக் செஞ்சுக்கணும்.! :)
***
அன்பு கே.ஆர்.எஸ்...
என்ன தான் ஊரூராச் சுத்திக்கிட்டு இருந்தாலும், இது காவிரித் தண்ணி குடிச்சு வளர்ந்த ஒடம்பு தானுங்களே..! அந்த கொங்கு வாசம் இல்லாமலிங்களா போகும்..!!! அப்பப்போ இந்த மாதிரி நம்மூரு பாஷயில எழுதறது தானுங்க நமக்கு ரீசார்ஜு..!! நெம்ப நன்னிங்க..!!
***
அன்பு ராதா...
நன்றிகள்.
அதுல என்னாச்சுன்னா, தாலாட்டற வெண்பாவையும் தாலாட்டும் சந்தம், அந்த எளிமைகளை வைத்து எழுத விரும்பினேன். அதற்கு நாட்டுப்புற மொழி தான் ஒத்து வரும். அப்படி 2, 3 எழுதி விட்டேன். பிறகு பார்த்தால், கே.ஆர்.எஸ். அந்தாதி என்று சொல்லி விட்டதால், 'போது' வைத்து துவங்கியாக வேண்டும் என்று ஒரு வெண்பாவை எழுதி முன்பாகச் சேர்த்தேன். கடைசி வெண்பா மிக மிக எளிமையாக இருக்கக் காரணம், 2,3-ல் யோசித்த நியூரான் குழப்பம் களைப்படைந்து விட்டது தான்.
இது போன்ற கவிதைகளுக்கு ஏதேனும் பெயர் இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. நம் வேலை எழுதிச் செல்வது மட்டுமே..! பெயர் வைப்பது, கேட்டகிரி பிரிப்பது எல்லாம் பெரியவர்கள் வேலை..! :)