3.கண்ணனை அலங்கரித்தல்.
போலே இருப்பதென பேசுவதும் ஏலாது
மாலே மணியன் மகுடமுதல் - காலே
அணிந்த கொலுசு அதுவரை ஆழ்வார்
பணிந்த சுவடு பதிந்து.
ஈரச் சிகைகளை இன்னும் உலர்த்திட்டுப்
பாரம் குறையப் புகைகாட்டி - தீரம்
புகட்டிய பைம்பொன் பதித்த இறகால்
முகமே மின்னும் ஒளிர்ந்து.
கொஞ்சம் பவளம் இடையிடை முத்துக்கள்
எஞ்சும் இடத்தினில் வைரங்கள் - பஞ்சுக்
கழுத்தினைக் கட்டியக் கயிறது பட்டுப்
பழுத்தன கைகள் தடவி.
தங்கப் பதக்கம் கரங்கள் புயத்தினில்
மங்காத ஆரம் மணிக்கட்டில் - பொங்கும்
ஒளித்துளி மின்ன ஒளிரும் வளையம்
மிளிரும் அவன்தன் விரலில்.
பட்டுநூலால் ஓராடை பக்குவமாய்ச் சுற்றிப்பின்
கட்டி இறக்கி முடிச்சிட்டு - சுட்டியின்
குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு.
பாதம் கொலுசுடன் ஜல்ஜல் எழுப்ப
மீதம் விரல்மோ திரம்வழி - மோதும்
பலவொலி கிண்கிணி கிண்கிணி கன்றுகள்
பலவந்துப் பார்க்கும் இயல்பு.
நெற்றிக்குப் பொட்டிட்டு நீள்புருவம் கண்இமைகள்
சுற்றிலும் மையெழுதிச் சுந்தரனின் - வெற்றித்
திருமுகத்தில் வைத்த வலதுகன்னப் பொட்டு
ஒருமுகமாய்ப் பிள்ளைக்குத் திருட்டி.
மோகனனின் மேனி எழிற்சிதறல், மாமலை
யோகிக்கும் சேர்த்த அலங்காரம் - போதாமல்
புன்னகை செய்யும் பரந்தாமன் கண்டதும்
தன்னையே நீங்கினாள் தாய்.
***
Image Courtesy :: http://dr-narasinha-kamath.sulekha.com/mstore/Dr-Narasinha-Kamath/albums/default/Krishna2.jpg
10 comments :
//தன்னையே நீங்கினாள் தாய்//
உம்ம்ம்ம்ம்ம்...
தாய் தன்னையே நீங்கினாளா? அப்படீன்னா என்ன வசந்த்?
//குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு//
அழகோ அழகு!
வெட்கமே அழகு! :)
மார்கழி-03
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த உத்தமனாம் எம்பெருமானின் திருப்பெயர்களைப் பாடி
நாங்கள் நம் திருப்பாவை நோன்பிற்கு என்று சொல்லி உறுதி எடுத்துக் கொண்டு (சங்கல்பித்துக் கொண்டு) நீராடினால்
தீமைகள் எல்லாம் நீங்கி நாடு முழுவதும் மாதம் மும்முறை மழை பொழிந்து
ஓங்கி வளர்ந்து நிற்கும் பெருஞ் செந்நெல். அவற்றின் ஊடே கயல் மீன்கள் துள்ளும்.
குவளைப்பூ மொட்டில் புள்ளிகளையுடைய வண்டு தூங்கும்.
தயங்காமல் அருகில் அமர்ந்து பெருத்த முலைகளைப் பற்றி
பிழிந்து எடுக்க பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும் வள்ளல்களான பெரும்பசுக்கள்.
நீங்காத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும்!!!
பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!
அன்பு கே.ஆர்.எஸ்...
தன்னையே மறந்தாள் என்பது தான் தன்னையே நீங்கினாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
/*//குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு//
அழகோ அழகு!
வெட்கமே அழகு! :)*/
ஏனெனில் அந்த ஒட்டியாணம் தொடும் இடம் அப்படி வெட்கம் வரச்செய்யும் இடம் அல்லோ..? :)
I am getting interested in learning Venbaa grammar...:)
அற்புதமான கவிதை..இனிமையான வரிகள்...
அன்பு ராதா...
வாவ்..!! அடியேனின் சிறு வெண்பாக்கள் உங்களையும் வெண்பா இலக்கணம் கற்றுக் கொள்ள ஆர்வம் ஏற்படுத்தியிருக்கின்றதென்றால், அந்த கண்ணனின் அருளைத் தான் என்னவென்று சொல்வது...!!!
***
அன்பு திலகா...
மிக்க நன்றிகள்.
வெண்பா ஒவ்வொன்றும் இனிக்கிறது. அருமை வசந்த்.
என்னையும் நீங்கினேன் நான்!
அன்பு கவிநயா அக்கா...
மிக்க நன்றிகள்.
***
அன்பு குமரன்...
நன்றிகள்.