அப்புறம் என்ன ஆச்சு? - 2.
பளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.
இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.
ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.
கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.
அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.
நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.
தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?
நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.
யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?
வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!
அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?
இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.
ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?
கையில் கழியோடு யசோதை வருகிறாள்.
"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"
ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.
புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!
பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!
ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?
***
கவிநயா அக்கா, சென்ற பதிவில் கேட்ட 'அப்புறம் என்ன ஆச்சு?'விற்குப் பதில் தெரியாம, '.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)
13 comments :
//ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?//
அருமையாக உள்ளது. :)
"கன்னல் இலட்டு வத்தொடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்;..." (பெரியாழ்வார் திருமொழி)
பாவம் யசோதா ! மாங்கு மாங்கு என்று எல்லாம் செய்து வைத்தாலும், அதனை எல்லாம் சாப்பிடாமல் பிறர் வீடு புகுந்து வம்பு வளர்த்துக் கொண்டு வருகிறான். அதில் தான் கிரிதாரிக்கும் அவன் நண்பர்களுக்கும் தனி ருசி. :)
//.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)//
ஏ.. மனமோகனா! உன் மஹா மாயாவின் லீலைகளை உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! இந்த அப்பாவி என் செய்வேன்? :))
வசந்த் இட்ட பதிவை,வெண்ணெயும் மறந்து, மூன்று முறை படிப்பேன்! :)
//கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்//
வரமாட்டேன்! இங்கு தான் இருப்பேன்!
இங்கே தான் அந்தக் குருந்த மரத்தின் மேல் அந்தத் துணிக் களவாடி இருக்கிறான்! :)
அவன் வஸ்திரங்களை ஒளிக்கத் திட்டம் போடுகிறான்!
அந்த மும்முரத்தில், நான் அவன் வஸ்திரத்தை வளைக்கப் பார்க்கிறேன்! உத்திரீயத்தை உதறப் பார்க்கிறேன்! மஞ்சள் பீதாம்பரத்தை மறைக்கப் பார்க்கிறேன்! :)
பெண்-மானம் காத்த மாதவன் மானத்தை நான் காக்கிறேன்! :)
//பளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.//
இங்கே தொடங்கி உங்கள் வர்ணனை ஒவ்வொன்றும் கொள்ளை அழகு வசந்த்!
நல்ல வேளை. கே.ஆர்.எஸ். 'என்ற' அப்பாவிக்குன்னு சொல்லலை; அதனால நானும் அந்த 'போன்ற'வுல சேர்ந்துக்கறேன். :-)
//வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!//
Very nice read. :-)
I am unable to point out anything specific. Whenever you describe Brindhavan, its fantastic. :-)
அன்பு இராதா...
நன்றிகள். ஆமாம், பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'இலட்டு' நம்ம லாலா கடை லட்டு தானே..? ஆஹா படிக்கும் போதே நாவூறுகிறதே.!!
அன்பு கே.ஆர்.எஸ்...
மஹா மாயையின் முன் நீங்களும் மண்டியிட்டு விட்டீர்களா...? பெண் மானம் காக்கும் கண்ணன் மானம் கேயாரெஸ் காக்கிறாரா...! ப்ரமாதம்..!!! :)
அன்பு கவிநயா அக்கா...
உங்கள் பதிவைப் பார்த்த பின் தான் இதைப் பதிய வேண்டும் என்று தோன்றியது. அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்...!!
ஹேய் இங்க பாருங்கய்யா... குமரனும் அப்பாவியாம்..!!! சொல்லவே இல்ல...?? :)
அன்பு ராதா...
உங்களுக்கு பிருந்தாவனம் பிடிக்காமல் போகுமா என்ன..? :)