1.கண்ணன் கோகுலம் வருதல்.
திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.
***
விநாயகர் துதி.
பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.
கலைமகள் துதி.
புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.
கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.
குரு வணக்கம்.
மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.
1.கண்ணன் கோகுலம் வருதல்.
கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து
பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த
இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின
நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து
நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்
அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத
வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!
***
Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg
12 comments :
அட்டகாசமான ஆரம்பம்...தொடரட்டும்...
//தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்//
துவக்கமே அட்டகாசம்!
//களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு//
சூப்பர்!
//என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை//
என்னுடைய அத்தனை ஆசிரியர்களையும் வணங்கிக் கொள்கிறேன்!
என்னைஉரு வாக்கியவர் ஆசனார்க்(கு) கண்ணா
உன்னைஉருக் காட்டுவாய் நீ!
//வரவர கோகுலம் வந்தான் - மரகத
வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!//
அப்படியே சுமந்து வருவது தெரிகிறது!
நல்லா வந்திருக்கு வசந்த்!
அந்தாதி முறையிலும் வெண்பா முயற்சி பண்ணுங்க!
முதலாழ்வார்கள் பாணியில் கலக்கிருவீங்க!
நான் இன்னும் துதி பாடல்களிலேயே இருக்கிறேன். :)
இவ்வளவு அழகா வெண்பா எழுதறீங்களே வசந்த்! எல்லாமே வெகு அழகு. குறிப்பா கலைவாணி துதி ரொம்ப பிடிச்சது. கண்ணன் கோகுலம் வருதலில் தமிழ் கொஞ்சுகிறது. அருமை!
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். :)
***
அன்பு கே.ஆர்.எஸ்...
நன்றிகள். விநாயகர் துதி மற்றும் குரு வணக்கத்தில் இருக்கும் சில உள் வார்த்தை விளையாட்டுகளை யாராவது கண்டு சொல்கிறார்களா என்று ஆர்வமாக இருக்கிறேன். :) நீங்கள் திருப்பாவையும் கொடுப்பது ஜில்லென்று இருக்கின்றது. :)
***
அன்பு ராதா...
துதிப் பாடல்களையும் தாண்டி வாங்க..!! :)
***
அன்பு கவிநயா அக்கா...
ரொம்ப நன்றிகள் அக்கா..! வெண்பா எழுதும் பெருமை எல்லாம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கேச் சேர வேண்டும். இந்தத் தளத்தில் தான் கற்றுக் கொண்டேன். ஆங்காங்கே பின்னூட்டங்களாக எழுதிய வெண்பாக்கள் வரவியிருக்கின்றன. தொகுக்க வேண்டும்.:)
எனக்கே பிடித்த ஓர் ஆசிரியப்பாவையும் சொல்லி உங்களுக்கும் பிடிக்க வைக்க விரும்புகிறேன்.
பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை!"
நன்றிகள்.
அழகழகாய் வெண்பாக்கள்! நன்றாக இருக்கின்றன வசந்தா!
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர்; போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்
மார்கழித் திங்கள் நிறைமதி நாளாகிய நல்ல நாள் இன்று. மார்கழி நீராட வருகின்றவர்களே. சிறந்த அணிகலங்கள் அணிந்தவர்களே வாருங்கள்.
செல்வம் பொங்கும் திருவாய்ப்பாடியின் செல்வ சிறுமியர்களே! கூர்மையான வேலைக் கொண்டு தீயவர்களை அழிக்கும் தொழிலையுடைய நந்தகோபனின் திருக்குமரனும்
நீண்ட அழகிய கண்களையுடைய யசோதையின் சிங்கக்குட்டியும் கரியமேகம் போல் உடலைக் கொண்டவனும் சிவந்த கண்களைக் கொண்டவனும் கதிரவனைப் போலும் மதியைப் போன்றும் முகத்தை உடையவனும் ஆன
நாராயணனே நமக்கே விருப்பங்களையெல்லாம் அருளுவான். உலகத்தவர் போற்றும் படி நீராடுவோம்.
பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!
அன்பு குமரன்...
நன்றிகள் ஐயா..!! :)
//பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை!"//
ச்வீட்! ரொம்ப அழகா இருக்கு.
வெண்பா எழுத முந்தி கத்துக்கிட்டேன், இப்ப எல்லாம் மறந்து போச்சு. அகரம் அமுதாவுடைய தளமும் பார்த்திருக்கேன்.
//வசந்தா!//
இதுல ஏதோ பொடி வச்சிருக்க மாதிரி இருக்கே? :)
அன்பு கவிநயா அக்கா...
மிக்க நன்றிகள். 'வசந்தா' என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது..? கண்ணன் என்னை அவன் 'வசம் தா' என்றல்லவா அழைக்கிறான்..!!! :)