Saturday, December 10, 2011

பாஞ்சாலியின் பிரார்த்தனை

                                               
[Bharathi.jpg]   
             பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11.12.11)அவரது நினைவாக  பாஞ்சாலிசபதத்தில்  கணவர்களும்   
 உதவாத நிலையில்  பூரண சரணாகதி நிலையில்  
திரௌபதி கண்ணனை ப்ரார்த்திக்கும் பகுதி
கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

               பாஞ்சாலியின் பிரார்த்தனை  

                                              

"அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.


12 comments :

RAMVI said...

வையகம் காத்திடுவாய்!--கண்ணா! மணிவண்ணா,என்றன் மனச்சுடரே! ஐய,நின்பதமலரே --சரண் அரி,அரி, அரி, அரி, அரி.

அருமையான பகிர்வு.

Sankar said...

மிக்க நன்றி லலிதாம்மா! பாரதி பாரதிதான்!

In Love With Krishna said...

Thanks for this post! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Awesome Lines of Bharathi! Dank u lalithamma for remembering and posting this one:)

அரி, அரி, அரி! என்றாள்
கண்ணா அபயம்
உனக்கு அபயம் என்றாள்!!!

கண்ணா, எனக்கு அபயம் அருள்-ன்னு தானே சொல்லணும்?
எதுக்கு உனக்கு அபயம் என்றாள்?
சொல்லுங்க பார்ப்போம்:))

Lalitha Mittal said...

krs,
அரியை 'அபயம்' என்று பூரண சரணாகதி யடைந்தபின் அவளுடைய பயம் அவனைச் சேர்ந்தாச்சு !இப்போ அது அவனுடைய பயம் !அதற்கு அவனேதான் அபயமளிக்கணும்!சரியா?

Lalitha Mittal said...

ராம்விஜி,

வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!சங்கர்,

ரொம்பநாளா மிஸ்ஸிங் ;வருகைக்கு நன்றிILWK,

nice that you were able to enjoy this ;thank you!

sury said...

அது இங்கேயும் இருக்கிறது.
subbu rathinam

கவிநயா said...

'பசுங்குழந்தாய்'. எவ்ளோ செல்லம்!

பாரதியின் அருமையான வரிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி லலிதாம்மா.

Lalitha Mittal said...

ரசித்தேன் சுப்புசார் ;நன்றி!

Lalitha Mittal said...

thanks kavinaya,
பாஞ்சாலியின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டும் பாரதியின் தனித்தமிழ்நடை தமிழிலக்கியத்திற்குத் தனிப்பெருமை !

Radha said...

பாரதியார் பிறந்தநாளை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி லலிதாம்மா. (முன்பே பதிவினைப் படித்துவிட்டாலும் இப்பொழுது தான் பின்னூட்டம் இட வாய்ப்பு அமைந்தது.) மகாகவிக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் !

Lalitha Mittal said...

thanks radha![better late than never]

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP