Monday, March 07, 2011

குக்கூ கனவு

சுப்புத் தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா! கேட்டுக்கிட்டே வாசிங்க!



ஒற்றைக் குயிலொன்று ஒருமரத்தில் நின்று
குக்கூ கூவென்று கூவுதடி;
கண்ணன்கை வேய்ங்குழல் தானென்று மயங்கி
சின்னக் குயில்கூத் தாடுதடி!

புற்றுக்குள் ளிருந்து நாகமொன்று வந்து
சீறிப் படமெடுத் தாடுதடி;
சென்னியில் நர்த்தனம் செய்வான் கண்ணனென்று
கற்பனை அதற்கு ஓடுதடி!

கானமயில்களு திர்த்திட்ட தோகைகள்
காற்றினி லேறிவிரை யுதடி;
மாயக்கண்ணன் தன்னைச் சூடிக்கொள்வா னென்ற
எண்ணத்தி லேவிளை யாடுதடி!

வானமெங்கும் சின்னச் சின்னக் கருமேகம்
சூல்கொண்டு மெள்ளவே நாணுதடி;
நீலகண்ணன் தன்னைப் போர்த்திக் கொள்வானென்ற
நிச்சயத் துடனே தோணுதடி!

பட்டுப் பூச்சிகளும் இட்டமுடன் வந்து
பட்டுத் துகிலாக வேண்டுதடி;
இட்டமுடன் அந்தக் குட்டிக் கண்ணன்தம்மை
ஆடையாக்கிக் கொள்ள ஏங்குதடி!

மல்லிகை மந்தாரம் பாரிஜாத மெல்லாம்
மலர்ந்திதழ் விரித்துச் சிரிக்குதடி;
தங்கஎழில் கண்ணன் வண்ணமணி மார்பில்
தவழ்ந்திடக் கனவு காணுதடி!

--கவிநயா

7 comments :

Lalitha Mittal said...

தென்றலில் மிதந்த தேனிசை கேட்டங்கு
கன்றுக்கூட்டமொன்று கூடுதடி;
பிஞ்சுக்கரத்தாலே சின்னக்கண்ணன் தம்மை
கொஞ்சித்தடவிடத் தேடுதடி

Sankar said...

ரொம்ப அழகு அக்கா! :)

தமிழ் said...

அருமை அக்கா

கனவு விரிக்கிறது
காட்சி தெரிகிறது

Kavinaya said...

உங்கள் வரிகள் ரொம்பவே அழகு லலிதாம்மா :)

Kavinaya said...

மிக்க நன்றி, சங்கர், திகழ் :)

Radha said...

சில நாட்கள் முன்னர் வடபழனி முருகர் கோயிலில், கோயில் கம்பத்தில் தேனீக்கள் மயில் வடிவத்திலும் வேல் வடிவத்திலும் ஒரு சேர அமர்ந்து மக்களை ஆச்சர்யப்படுத்தின. தினமலர் மற்றும் சில தமிழ் நாளிதழ்களில் இந்த செய்தியை படங்களுடன் வெளியிட்டு இருந்தனர். இங்கே இந்தப் பாடல்...அருமை.

Kavinaya said...

//சில நாட்கள் முன்னர் வடபழனி முருகர் கோயிலில், கோயில் கம்பத்தில் தேனீக்கள் மயில் வடிவத்திலும் வேல் வடிவத்திலும் ஒரு சேர அமர்ந்து மக்களை ஆச்சர்யப்படுத்தின.//

அப்படியா. அந்த விஷயம் எனக்கு தெரியலை :(

ரொம்ப நாளா ராதாவைக் காணலையேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நலம்தானே?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP