Wednesday, May 02, 2007

ஆற்றில் இறங்கினார் அழகர்....

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து வைகை வடபால்
திருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே

பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான்
இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன்
பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி
இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்

28 comments :

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
அழகர் தரிசனத்திற்கு நன்றி.

முதல் பாடலின் முதல் 2 வரிகள் குருகூர் பிரானுடையது என்று தெரியும். அடுத்த 2 வரிகள் தங்களுடையதா ? :)
இரண்டாவது பாடல் அழகாக உள்ளது !

எ.அ.பாலா

வல்லிசிம்ஹன் said...

பூரண நிலாவைப் பார்த்ததும் நினைத்தேன்.

அழகர் வந்திருப்பார். மதுரை பூரித்து இருக்கும்.
அம்மா அப்பா திருமணம்
மகன் வருகை என்றூ தொலைக்காட்சியிலாவது பார்த்திருக்கலாமே
என்று நினைத்தேன்.
இங்கேயே வந்து விட்டார்.
நன்றி ரவி.குமரன்

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி பாலா. முதல் பாட்டின் இரண்டரை அடிகள் நம்மாழ்வார் பாசுரம். பின்னர் உள்ளவை தன்னைத் தானே அடியேன் மூலம் எம்பெருமான் பாடிக்கொண்டது.

குமரன் (Kumaran) said...

வல்லியம்மா. சிவமுருகன் பதிவையோ தினமலரையோ பாருங்கள். சித்திரைத்திருவிழாப் படங்கள் நிறைய இருக்கின்றன.

ஷைலஜா said...

அருமையான படங்கள்.அழகின் தரிசனம் இதுதானோ?
நின்றபிராணன் சுழலும் முன்னேநெஞ்சமே நினையாய் என பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் அழகர் அந்தாதியில் பாடியமாதிரி அப்போதைக்கு இப்போதே அழகனை, மாலிருஞ் சோலை மாலனை நினைத்துக்கொள்வோம்.அருள் பெற வேண்டிக்கொள்வோம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்//

ஆகா
அழகர் ஆற்றில் மட்டுமா இறங்கினான்?
நம் எல்லோர் மனத்திலும் அல்லவா இறங்கினான்!
என்ன, அங்கு ஆற்றை விட்டுப் பின்னர் நீங்கி விடுவான்.
ஆனால் இங்கு நீங்காது நெஞ்சில் நிலைத்திருப்பான்!

அழகான பாடல் குமரன்!
அழகான படங்கள்!
அழகான அழகர்!
அழகோ அழகு!
இதுவும் அழகுகள் (வைகை) ஆறு தான்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே
-ஆண்டாள்

ஆவத்தனம் என்று
அமரர்களும் நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்
திருமால் இருஞ்சோலையே
-பெரியாழ்வார்

பத்தர் ஆவியைப் பால்மதி யை,அணித்
தொத்தை, மாலிருஞ் சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை,சென்று விண்ணகர்க் காண்டுமே
-திருமங்கையாழ்வார்

வலம்செய்து வைகல் வலங்கழியாதே,
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே
-நம்மாழ்வார்

கள்ளழகப் பிரானே!
கோவிந்தா, கோவிந்தா!!!

குமரன் (Kumaran) said...

உண்மை திருவரங்கப்ரியா.

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். இன்று காலை சிவமுருகனின் பதிவைக் கண்டவுடனே நம்மாழ்வாரின் பாசுர வரிகள் மனத்தில் ஓடின. பின் தானே மற்ற வரிகளும் வந்தன.

குமரன் (Kumaran) said...

நீங்கள் பாடிய பாசுரங்களுடன் இன்னொரு பாசுரமும் என் நினைவிற்கு வந்தது.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே

திருமுடியாகிய சோதியாக உன் திருமுகச்சோதி மலர்ந்ததுவோ? உன் திருவடிச் சோதியே நீ நின்ற தாமரையாக அலர்ந்ததுவோ? பஞ்சுச் சோதியாகிய உன் திருவாடைகளும் பல அணிகலன்களுமாக உன் பசும்பொன் திருமேனி சோதி மாறியதோ? விளக்கமாகச் சொல்வாய் திருமாலே.

(இரவிசங்கர். பாசுரங்கள் சொன்னால் விளக்கமும் சொல்ல வேண்டும் என்ற விதி ஒன்று இருக்கிறது. விதியின் படி நீங்கள் இட்ட பாசுரங்களுக்குப் பொருள் சொல்லுங்கள்) :-)

கீதா சாம்பசிவம் said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. வர வர நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியமாட்டேங்குது. :-)

G.Ragavan said...

மதுரைச் சித்திரைத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டுத் திருவிழா என்று சொல்லலாம். திருமாலிருஞ்சோலையிலிருந்து கிளம்பி ஊரூராக எதிர்சேவை ஏற்றுக்கொண்டு வந்து பொங்கும் பூம்புனல் (ஒருகாலத்தில்) வைகையில் இறங்கி...அப்படியே உலகத்து உயிர்களின் உளத்தில் இறங்கிடும் கள்ளழகர் மாட்சியே மாட்சி. காணக்கொடுத்தமைக்கு நன்றி பல.

சிறுவயதில் நாங்கள் மதுரையில் சில ஆண்டுகள் இருந்தோம். அப்பொழுது சித்திரைத் திருவிழாவையும் பொருட்காட்சியையும் மிகவும் அனுபவித்திருக்கிறோம்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இராகவன். தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னங்களான பல திருவிழாக்களில் மதுரைச் சித்திரைத் திருவிழாவிற்கு ஒரு தனியிடம் உண்டு.

சித்திரைப் பொருட்காட்சி பற்றிய சிறு வயது நினைவுகள் எத்தனை உண்டு. பொருட்காட்சி என்றால் அந்தப் பெரிய அப்பளமும் வானளாவிய ராட்டினமும் தான் நினைவிற்கு வருகின்றன.

இராம் said...

/கீதாம்மா. வர வர நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியமாட்டேங்குது. :-)//

ததா,

அவங்க திருவிழா பார்க்கமுடியாமே பொருமிறாங்களாம் :)))

என்னோட பதிவிலே சொன்னமாதிரி இங்க நீங்களும் அதே பண்ணிட்டிங்க :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பெரும்பாலான பாசுரங்கள் தற்காலத் தமிழ் போல் எளிமையாகத் தான் உள்ளதே என்று விட்டுவிட்டேன் குமரன்.

உண்மையச் சொல்லப் போனா, வெட்டி போட்ட "தில்லாலங்கடி தாங்கு" கண்ணன் பாட்டுக்குத் தான் பொருள் புரியல...அதுவும் பல சொற்களுக்கு.

அவர் மேலோட்டமா சொல்லி எஸ்கேப் ஆயிட்டாரு!
நானும் சரி, அதற்கு உடந்தையாய் இருந்த நாமளே, சும்மா போட்டுக் குடையக் கூடாதுன்னு விட்டுட்டேன்:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே
-ஆண்டாள்

இது பற்றி நீங்க முன்னமே ஒரு பதிவு போட்டதா ஞாபகம். ஆனா அப்பல்லாம் நானு ப்ளாக்-னு என்னன்னு தெரியாத ஞான சூன்யம் :-);

அதாச்சும்
இது ஒரு விளையாட்டுப் பாட்டு.
கூடல் என்பது ஒத்தையா/ரெட்டையா விளையாட்டு.
கை நிறைய மஞ்சள் கிழங்கோ, புளியங்கொட்டையோ வைத்து ஒத்தையா/ரெட்டையா விளையாடுவது.
ரெட்டை வந்தா சக்ஸஸ்!

ஞானிகள் பலர் கை தொழும் தேவன்,
கேட்டது கொடுக்கும் வள்ளல், திருமால் இருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் வாழும் என் அழகிய மணவாளன்,
அவன் பள்ளி கொள்ளும் போது அவன் கால்களைப் பிடித்து விடும் பேறு எனக்குக் கிடைக்க வேணுமே!
நீ கூடிடு கூடலே - கூடல் ஆடிப் ரெட்டை வருதாப் பாக்கலாம் வாங்கடீ.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆவத்தனம் என்று
அமரர்களும் நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்
திருமால் இருஞ்சோலையே
-பெரியாழ்வார்

இது மிக எளிய பாடல் தான்
ஒரே ஒரு சொல் தான் புதிது.
ஆவத்தனம் = வருங்கால வைப்பு நிதி;
அதாச்சும் பின்னால் வரப் போகும் தெரியாத/புரியாத தேவைக்கு எல்லாம், இப்போதே ஒதுக்கி வைக்கும் நிதி.
இதைச் சொல் ஒரு சொல்லில் இடலாமா?:-)

அப்பேர்பட்ட அமரர்களும் நன்முனிவர்களுமே பின்னால் என்ன வரப்போகிறதோ என்று தெரியாமல், அப்போதைக்கு இப்போதே சேமித்து (சேவித்து) வைக்கிறார்கள்.
அப்படியிருக்க சாமான்யர்களான நாம் சேமிக்க (சேவிக்க) வேண்டாமா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பத்தர் ஆவியைப் பால்மதி யை,அணித்
தொத்தை, மாலிருஞ் சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை,சென்று விண்ணகர்க் காண்டுமே
-திருமங்கையாழ்வார்

பக்தருக்கு எல்லாம் ஆவி
பால் போல், நிலவு போல் நமக்குக் குளிர்பவன்
பூங்கொத்து (அணித் தொத்து) போல எல்லாரிடமும் ஒன்றி இருப்பவன்
அவனை
மாலிருஞ் சோலைக்குப் போய்த் தொழுது,
பின்னர் அந்த
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை, சென்று திருவிண்ணகர் என்னும் தலத்தில் காண்போம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வலம்செய்து வைகல் வலங்கழியாதே,
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே
-நம்மாழ்வார்

தினமும் அங்கே வலம் வந்து, அங்கேயே தங்கி (வைகல்), ஆன்ம பலத்தை விட்டுவிடாது, சேவை செய்யும் அன்பர்கள் உள்ள கோவில் மாலிருஞ் சோலை!
அங்கு வானவரும் வலம் வருகின்றனர்.
அங்கு நாமும் வலம் செய்து, வணங்குவோம்; அதை வழக்கமாயும் கொள்வோம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கள்ளழகனை நினைத்தவுடன் டக்கென்று மனதில் தோன்றிய, மாலிருஞ்சோலை பற்றிய பாசுரங்கள் என்பதால் தான் உடனே இட்டு விட்டேன் குமரன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராமசந்திரமூர்த்தி. உங்க பதிவுல பார்த்துப் புரிந்து கொண்டேன். அவங்களை மாதிரி நானும் உங்களைப் பாத்துப் பொரும வேண்டியது தான். நீங்க மட்டும் தானே திருவிழாவுக்குப் போனது?

குமரன் (Kumaran) said...

ஹிஹி. எனக்கும் வெட்டி சொன்ன விளக்கத்துல நிறைய புரியலை. ஆனா அவரே இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லியிருக்காரு. சொன்ன வரைக்கும் நல்லா இருக்கு. இதுக்கு மேல கிண்டவேண்டாம்னு கேக்கலை. :-)

தற்காலத் தமிழ்னாலும் நமக்குப் புரியாதுன்னு ஓடறவங்க நெறைய பேரு இருக்காங்க இரவிசங்கர். அவங்களுக்காகவாவது பொருள் சொல்லணும். சொன்னதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். முன்பு கோதைத் தமிழில் இந்தப் பாசுரத்திற்குப் பொருள் சொல்லியிருக்கிறேன். கோதைத் தமிழில் எழுதுவதற்காக நாச்சியார் திருமொழி படித்த போது முதன் முதலாக அப்போது தான் இந்தக் கூடல் பாசுரங்களைப் படித்தேன். அருமையாக இருந்தது.

குமரன் (Kumaran) said...

ஆவத்தனம் என்ற சொல் புரியாமல் இருந்தது. (இப்போதும் இந்தச் சொல்லின் பிறப்பு எப்படி என்று புரியவில்லை). வைத்தமாநிதி என்று படித்திருக்கிறேன். அதே போல் தான் ஆவத்தனம் என்று அறிந்து கொண்டேன். சொற்பிறப்பினைப் பற்றித் தெரிந்து கொண்டால் கட்டாயம் சொல் ஒரு சொல்லில் சொல்லலாம்.

குமரன் (Kumaran) said...

இந்தத் திருமங்கையாழ்வாரோட ஒரே தொல்லை. ஒரு ஊருக்குப் போனா அந்த ஊரு சாமியை மட்டும் பாடிட்டுப் பேசாம இருக்க மாட்டார். எங்கயோ இருக்குற இன்னொரு சாமி நினைவுக்கு வந்துரும். அவரையும் இவரையும் சேத்துப் பாடுவார். 108 திவ்ய தேசங்கள்ல பல ஊர் வந்ததே இவரால தான்னு நினைக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

நம்மாழ்வார் பாசுரத்தில் அழகைப் பாருங்கள். அந்தாதி பாடுற அதே நேரத்தில் எதுகை மோனை அழகோட பாடுவார்; அது மட்டும் இல்லாம இப்படி ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பிப் போட்டு அழகு படுத்துவார். இந்தக் காலக் கவிஞர்கள் எல்லாம் அவர்கிட்ட தான் கத்துக்கணும்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். மாலிருஞ்சோலை மணாளனை நினைத்தவுடன் தமிழ் தானாகப் பாய்ந்து வரும். தமிழும் அழகு. அவனும் அழகு.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP