Friday, December 29, 2006

19. சோலைமலைக் கும்மி - மார்கழி ஏகாதசி சிறப்புப் பதிவு!

மதுரைப் பக்கம், சோலமல தெரியுங்களா சாமீ?
சோலை மலை = திருமாலிருஞ்சோலை
திருமால் இருஞ் சோலை; அது நறுஞ் சோலை.
இழும் என இழிதரும் அருவி, பழமுதிர்ச் சோலை! திவ்ய தேசம்!

அட, நம்ம அழகர் கோவிலைச் சொல்றீங்களா! கள்ளழகர் தெரியாதா என்ன?
ஆண்டாள் விரும்பிய கள்ளழகன், இந்தக் கோவிலில் இருப்பவன்!
பரமசுவாமி, சுந்தரராஜன் என்று பெயர்; கொஞ்சு தமிழில் கள்ளழகர்!


29567009_tirumaliruncholai

2005112600220301

அவனைப் பற்றிய கும்மிப் பாட்டு ஒன்று கிடைத்தது! எழுதியவர் யார் என்று தெரியவில்லை! ஆனால் அழகர் கோவில், மதுரைப் பக்கம் பரவலாகப் பாடப்படும் கும்மியாம்!
இதை கண்ணன் பாட்டு வலைப்பூவுக்காக அனுப்பினார் நம் நண்பர் மெளலி சார். மதுரையம்பதி என்று பின்னூட்டம் இடுவார்!

இயலுடன் இசை சேர்ந்தால் கொண்டாட்டம் தானே!
யார் பாடித் தருவது என்று யோசித்தேன்; கண்ணனை யாசித்தேன்! பாட்டை வாசித்தேன்!
வாசிப்பதும், வடிவான குரலில் பாடுவதும் ஒன்றாகி விட முடியுமா?

வல்லி சிம்ஹன் என்கிற நம் வல்லியம்மாவைத் தான் நம் எல்லாருக்கும் தெரியுமே!
தற்போது குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா வந்துள்ளார்.
அவர் பொறுமையா, அழகா, மெட்டு போட்டு பாடிக் கொடுத்துள்ளார்! நீங்களே கேளுங்க!சோலைமலைக் கும்மி

மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி


நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி


சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி


kallar_ekanthaseva
கள்ளழகர் ஏகாந்த சேவை

தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
சோலை மலைத் திருமாலை வணங்கியே
சுந்தர ராஜனைக் கும்மி யடி


கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன்
கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!


நல்ல கணவன் வேண்டி மார்கழி நோன்பு இருப்பது தானே தத்துவம், வழக்கம்!
அன்று ஆண்டாள் செய்ததை, அப்படியே நாட்டுப்புற வழக்கமாக செய்யும் இந்தச் சோலைமலைப் பெண்களைப் பாருங்கள்!
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி
என்றல்லவா பாடுகிறார்கள்! என்ன அழகான கும்மி!
இன்னொரு முறை கேட்டு, நாமும் பாடி ஆடலாம் வாங்க!


மார்கழி 15 - எல்லே இளங்கிளியே - பதினைந்தாம் பாமாலை.

கண்ணன் பாட்டு வலைப்பூவில் இது போன்ற கூட்டு முயற்சிகள் சிறக்க வேண்டும் என்று அந்தக் கண்ணனையே வேண்டுவோம்!
நன்றி வல்லியம்மா, நன்றி மெளலி சார்!

பல அன்பர்கள், பாடல் வரிகளும், ஒலிச் சுட்டி்களும், தனி மடலில் தந்த வண்ணம் உள்ளார்கள்!
அவர்கள் எல்லார்க்கும் இந்த வைகுந்த ஏகாதசி நன்னாளில் நன்றி!
ஒவ்வொன்றாகப் பதிவில் இடுகிறோம்; இடும் முன்னர் தங்களுக்குத் தனி மடலிலும் தெரியப்படுத்துகிறோம்!

62 comments :

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
பாடல் அருமை. நன்றி வல்லி.
அவனோ கள்ளன்; அழகன்; கள்ளழகன்.

//மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி//

நம் மலையுச்சியாம் தலையிலே அவன் சந்தணம், மல்லிகை ஆகிய கலந்த வாசத்தோடு வாசம் செய்திருப்பது உண்மையே!

குமரன் (Kumaran) said...

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்

வெளியே இருப்பவர்கள்: இது என்ன வியப்பு? இளங்கிளி போன்றவளே! இன்னும் உறங்குகிறாயா?

உள்ளே இருப்பவள்: சில் என்று கூச்சலிட்டு அழைக்காதீர்கள் பெண்களே. வந்து கொண்டே இருக்கிறேன்.

வெளியே இருப்பவர்கள்: இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது நாங்கள் வந்து எழுப்பினால் கூச்சல் இடுகிறோமா? வாய்வன்மை உடையவள் தான் நீ. முன்பே உன் வாயாடித் தன்மையை நாங்கள் அறிவோம்.

உள்ளே இருப்பவள்: வாய்வன்மை உடையவர்கள் நீங்களே. சரி. நானே தான் ஆயிடுக.

வெளியே இருப்பவர்கள்: விரைவில் நீ வருவாய். உனக்கு இன்னும் வேறு என்ன வேலை இருக்கிறது?

உள்ளே இருப்பவள்: எல்லாரும் வந்தாரா?

வெளியே இருப்பவர்கள்: வந்தார். நீயே வந்து எண்ணிக் கொள். வன்மையுடைய குவலயாபீடமென்னும் யானையைக் கொன்றவனை, எல்லாப் பகைவர்களின் பகையையும் அழிக்க வல்லானை, மாயனைப் பாடுவாய்.

சாத்வீகன் said...

அருமையான பாடல்.

நன்றி வல்லிசிம்ஹன். தாங்கள் பாடிய விதமும் அருமை.

கும்மிப் பாடல்களின் சிறப்பே பாடுதற்கு பக்கத்துணையாய் எந்த வாத்திய இசையும் தேவைப்படாத அதன் தன்மையே.

நன்றிகள்.

ஷைலஜா said...

கண்ணபிரான் ரவி!
ஏகாதசி நாளுக்கு உகந்த பாடல். வல்லி சிம்ஹனின் இனிய குரலில் இதமாக இருக்கிறது.
அளித்த உங்களுக்கு நன்றி.
ஷைலஜா

Anonymous said...

அடடா! வல்லி என்றாலே பாடல்தான் போலும் (வேதவல்லி அவர்களின் திருவாய்மொழி கீதம்). என்ன அழகான உச்சரிப்பு! எளிய, யாரும் பின்பற்றக்கூடிய மெட்டு. வாழ்த்துக்கள். நீங்களே 'கோதை நாச்சியார் தாலாட்டையும்' பாடிக் கொடுத்துடுங்களேன். கண்ணபிரானுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது புரியும்.

பாட்டைக் கவனித்தீர்களா? ஆழ்வார்களின் வர்ணனை எப்படி வான்மழை மடுவில் சேர்வதுபோல் வந்து கலப்பதை. அழகரின் கன்னம் கண்ணாடி என்பது திவாய்மொழி :-) மேலும், கருப்பண்ணசாமி எனும் வாயிற்காப்போன் 'விஷ்ணுபூதம்மெனப்படுவோன். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் கோயிற்சாவியை இவனிடம் கொடுத்துவிடுவது வழக்கம். இப்போது அரசின் பூதங்கள் அதைச் செய்கின்றன என நம்புகிறேன்;-0

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரவி,
பாடப் பாட ராகம் என்பார்கள்.

பாடாமல் இருந்த என்னையும் பாட வைத்துவிட்டது கண்ணபிரானின் மகிமை.
நன்றி ரவி,.பாடல் நல்லபடியாக வெளிவந்துஇருக்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said:
பாடாமல் இருந்த என்னையும் பாட வைத்துவிட்டது கண்ணபிரானின் மகிமை.//

திருமலைவாசன் கண்ணனின் மகிமையே மகிமை!
முதல் முறை குளிரினால் தொண்டை கம்மி இருந்தாலும், இரண்டே முயற்சிகளில் அதை எல்லாம் தூர விரட்டினீர்களே! அடியேன் அறிவேனே!

பாடலை noise reduction செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் அருமையாக அமைந்ததும் அவன் அருளே! கூடவே தாளம் தட்டியதும் இன்னும் எடுப்பாக அமைந்து விட்டது!

//நன்றி ரவி,.பாடல் நல்லபடியாக வெளிவந்துஇருக்கு.//

அருமையாப் பாடி இருக்கீங்க வல்லியம்மா! குழந்தைக் கனிவான குரலில் பாடி, ஏகாதசி நன்னாளைச் சிறப்பித்துள்ளீர்கள்! இதுவன்றோ கைங்கர்யம்! நன்றி என்பதை நாங்க உங்களுக்குச் சொல்லணும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக//

குமரன் - இதைக் கவனித்தீர்களா?
இன்றைய பாசுரத்தில் வல்லி என்று வருகிறது!
வல்லியம்மா பாருங்க - :-))))

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா அருமையன பாடல். வல்லி அம்மாவின் குரலில் கும்மி எடுப்பாக உள்ளது . அதுவும் தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
அருமையாண் வரிகள். வல்லியம்மாவுக்கும் நன்றி. ரவிக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா அருமையன பாடல். வல்லி அம்மாவின் குரலில் கும்மி எடுப்பாக உள்ளது . அதுவும் தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
அருமையாண் வரிகள். வல்லியம்மாவுக்கும் நன்றி. ரவிக்கும் நன்றி

Anonymous said...

கே.ஆர்.எஸ், மற்றும் வல்லியம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.....பதிவு மிக அருமையாக வந்திருக்கிறது....

அந்தப்பாடலை அழகாக பாட ஆள் தேர்ந்தெடுத்து, அதற்கு ஒரு அருமையான முன்னுரையுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

இந்த மாதிரி, அடிக்கடி தொந்தரவு தரப்படும்....ஹி.ஹி

மெளலி

வல்லிசிம்ஹன் said...

கண்ணபிரான், வல்லி என்றால் கொடி என்றும் பொருள்.நம் சரீரத்துக்கு அது பொருந்தாஅது:-0)
இத்தனை தமிழ் அறிந்தவர்கள் முன்னிலையில் என் குரல் எடுபட வேண்டுமே என்று நினைத்தேன்.

அழகன் எனக்கு என்றும் இனியவன்.அதனாலேயே இந்தப் பாடல் இங்கே பாட வாய்ப்புக் கிடைத்ததோ என்னவோ.
எழுதியவர் யாரோ.கொடுத்தவர் மதுரையம்பதி மௌலி.
பாடியது ஒரு காலத்தில் மதுரையில்
பிறந்தகம் கொண்ட திருவேங்கடவல்லியாகிய நான்.
ஞானவெட்டியானுக்கு நன்றி.,

வல்லிசிம்ஹன் said...

குமரன் நீங்கள் சொன்ன இளங்கிளிகள் இப்போதைக்கு நாம்தான். இப்போதுதானே தமிழ் அமுதம் பருக ஆரம்பிக்கிறோம்(வலையில்)!!
ஷைலஜா, எனக்கு இசைப் பயிற்சி கொடுத்த என் பெற்றோரை வணங்குகிறேன்.
பாடாமல் விட்டுக் கூட , கொஞ்சம் ஒத்துழைத்த என் சாரீரத்திற்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் சார்,
என்னை மிகுதியாகச் சொன்னாலும் காதுகளுக்கு இனிமையாகத் தான் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்.

மனம் நிறைந்த நன்றி.
சாத்வீகன் ஐயா,ரசித்துக் கேட்டதற்கு நன்றி. இங்கே சத்தமில்லாத அறையைத் தேர்ந்து எடுக்க ,நேரம் அமைய, நாழிகை ஆகிவிட்டது.மனசாரப் பாராட்டி இருக்கிறீர்கள். வலையில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்கள் குமரன்,கண்ணபிரான்,துளசி,தேசிகன் எல்லோரும்.
அவர்கள் கொடுத்த ஊக்கம் தான் என்னை இதுவரை கொண்டுவிட்டு இருக்கிறது.
ரவிக்கு என்றும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

ரங்கா - Ranga said...

அருமைனான பாடல் - அழகான குரல். தொலைபேசியில் கூப்பிடுகிறேன் - விபரமாகப் பேசுவதற்கு.

ரங்கா.

கீதா சாம்பசிவம் said...

பாட்டும் நல்லா இருக்கு, மெட்டும் நல்லா இருக்கு. வல்லிக்கும், இந்தப் பாட்டை அனுப்பிய மதுரை அம்பதிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

முக்கோடி ஏகாதசி என்றாலே முகுந்தன் அரங்கனைத் தானே எல்லாரும் நினைப்பார்கள். சுந்தரத்தோளுடையான், பேரழகன், அழகர்சாமி, அழகரசன், பரி மேல் வரும் அழகன், எங்கள் கள்ளழகரை நினைத்தீர்களே. வாழ்க இரவிசங்கர். வாழ்க வாழ்க.

வைகுண்ட ஏகாதசி அன்று இந்த இனிய பாடலை இனிய குரலில் கேட்டு வாராவாரம் சென்று வந்த திருமாலிருஞ்சோலைக்குச் சென்று வந்தேன். பாடலைக் கொடுத்த திரு.மௌலி அவர்களும் பாடிய திருமதி. வல்லி அம்மா அவர்களுக்கும் இதனை ஒருங்கிணைத்து கண்ணன் பாட்டில் இட்ட இரவிசங்கர் கண்ணபிரானுக்கும் அடியேனின் ஆயிரம் கோடி வணங்கங்கள்.

இன்னுமோர் நூற்றாண்டு இரும்.

குமரன் (Kumaran) said...

திருமாலிருஞ்சோலைமலை என்றேன்; என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றார் நம்மாழ்வார். முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று தொடங்கி அவரே பத்து பாசுரங்களால் இந்த தோளழகன், தாளழகன், குழலழகன், பேரழகன் புகழ் பாடினார்.

குமரன் (Kumaran) said...

நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?

என்றாள் கோதை. அன்று அவள் சொன்னபடி நூறு தடாவில் வெண்ணெய்யும் நூறு தடாவில் அக்கார அடிசிலும் அழகனுக்குப் படைத்து அவளால் 'அண்ணாரே' என்று அழைக்கப் பெற்றாரே உடையவர் இராமானுஜர்.

குமரன் (Kumaran) said...

அழகிய தோளுடையானைப் பற்றி பாடும்போது இந்த கும்மிப் பாட்டு மாயன் என்றே தொடங்குவதைப் பார்க்கும் போது ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன. மாயவன் தமிழர் வாழ்வில் எவ்வளவு தூரம் பின்னிப் பினைந்துள்ளான் என்பதை இது காட்டுகிறது.

மாயன் அழகு மலை மேலே என்றும் மல்லிகைப் பூவாசம் வீசுதடி - மதுரை என்றால் நினைவிற்கு வருவது மல்லி தானே. :-) மதுரை குண்டு மல்லி மாயன் அழகு மலை மேலே என்றும் மணம் வீசுவதில் என்ன வியப்பு? (சிலேடையைக் காண்போர் காண்க).

மல்லிகை, இருவாட்சி, மருக்கொழுந்து என்று பல பூக்களைப் பற்றி பாடுகிறாளே கோதை அழகர்மலையைப் பாடும் போது.

குமரன் (Kumaran) said...

நாயன் அவன் புகழே பாடி - இங்கே நாயகன் நாயன் என்று சுருங்கிவிட்டதோ? அவன் புகழே பாடி என்னும் போது நாராயணனே நமக்கே என்று ஏகாரம் இட்டாலே கோதை. அது நினைவிற்கு வருகிறது. வேறு யார் புகழும் இல்லை; எதன் புகழும் இல்லை - அவன் புகழே பாடி.

இள நங்கையரே கும்மி அடிங்கடி - இந்த கும்மிப்பாட்டும் ஒருவேளை கோதை தான் எழுதினாளோ? இன்றைய கோதைத் தமிழில் 'இளங்கிளியே' என்றும் 'நங்கைமீர்' என்றும் சொன்னாளே. அந்தச் சொற்களே இந்த வரிகளிலும் வருகிறதே.

குமரன் (Kumaran) said...

நந்தன் மதலையை கும்பிடுவோம்; அந்த நாரணன் தாளையே நம்பிடுவோம் - நந்தகோபன் குமரன்; நாராயணனே; போன்றவை இங்கேயும் எதிரொலிக்கின்றன.

செந்திரு மார்பனை சுந்தர ராஜனை செந்தமிழ் பாடியே கும்மியடி - நாரணன் என்று அவன் பெயரை மட்டும் சொன்னால் எப்படி? அதனால் தாயாருடன் அவனுக்கு இருக்கும் என்றும் பிரிக்க இயலாத உறவைச் சொல்லிவிட்டார்கள். அப்படி தாயாருடன் தொடர்பு இருப்பதால் தானே அவன் சுந்தரராஜன்? :-)

குமரன் (Kumaran) said...

சிறு வயதில் பல முறை சிந்தித்ததுண்டு. கருப்பண்ண சாமி என்று கதவைக் கும்பிடுகிறோமே என்று. சாத்தின கதவு திறக்காமல், என்றும் சந்தன காப்பு கலையாமல், சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை சரணம் என்றே கும்மியடி. அடியேன் தந்தையார் அழகரை வணங்கும் போது இருக்கும் பயபக்தியை விட பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வணங்கும் போது இருக்கும் பயபக்தியை இப்போதும் ஒவ்வொரு முறை அவரோடு அழகர் கோவிலுக்குச் செல்லும் போது கண்டிருக்கிறேன். கண்கண்ட தெய்வம் கருப்பண்ணசாமி. சுத்துப்பட்டு எட்டுபட்டிகளிலும் நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் இன்றும் சத்தியம் செய்து பல வழக்குகளைத் தீர்க்க கருப்பண்ணசாமியிடம் தான் வருகிறார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சத்தியம் காக்கும் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியே சரணம் சரணம்.

Anonymous said...

இன்று வைகுண்ட ஏகாதசியா? அப்ப இன்னைக்கு தூக்குல யாரையாவது போட்டா அவங்களும் வைகுண்டம் போய்விடுவார்களா?

வல்லிசிம்ஹன் said...

குமரன்,கோதையின் பாட்டு, கண்ணன்பாட்டு இவைகளூக்குக் குமரனின் பின்னூட்ட மாலை
எல்லாமே அழகு.
எழுதியவர் கூட இவ்வளவு யோசித்து இருப்பாரோ என்னவோ.
மௌலி அவர்களுக்கு மீண்டும் நன்றி.

SK said...

"வல்லி, உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!!" [இன்று!]

:))

என்ன ஒரு இனிமையான குரலில், மௌலியின் கருணையால், ரவியின் உயிர்ப்பால் நமக்கெல்லாம் இந்த நன்னாளில்!

அரங்கனே போற்றி!

SK said...

"அங்கு" ஆட்டம்! "இங்கு" பாட்டமா!

பலே! பலே!

SP.VR.சுப்பையா said...

//செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மியடி//

கிராமத்து மககளின் கும்மிப்பாடல்கள்
வழிவழியாய் வருபவை!

கேட்பவர்களுக்கும் ஒரு ஈர்ப்பு
ஏற்படத்தான் செய்கிறது!

ஓகை said...

மாயனைப் போற்றியொரு கும்மி அதன்
தாயனை நாமறி யோமே!
பாயவும் ரவிசங்கர் பதிவில் மௌலி
ராயனும் அனுப்பிவைத்தாரே!
சேயதும் மயங்கிடும் குரலில் வல்லி
நேயமாய்ப் பாடிவைத்தாரே!

நாமக்கல் சிபி said...

பாடல் அருமையாக இருந்தது ரவி!!!

இதை எங்களுக்களித்த மௌளி அவர்களுக்கும் வல்லி அம்மா அவர்களுக்கும் நன்றிகள் பல!!!

ஓம் நமோ நாராயணாய நமக!!!

ஜெயஸ்ரீ said...

கும்மிப்பாடல் அருமை. வல்லியம்மாவின் குரலில் கேட்கக்கேட்க ஆனந்தம்.


பாடல் வரிகளை அளித்த மௌலி அவர்களுக்கும், பாடிய வல்லியம்மாவுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் கோடி நன்றிகள்.

பாட்டுக்கு குமரனின் விளக்கம் இனிமை சேர்த்தது. வல்லியம்மா சொன்னது போல் எழுதியவரே இவ்வளவு ஆழ்ந்து யோசித்திருக்க மாட்டார்.

ஷைலஜா said...

ஆஹா ஓகை கும்மிப்பா மரபில் எழுதி அசத்திட்டிங்களே!
ஷைலஜா

செல்வன் said...

கண்ணபிரான்,

கள்ளழகர் கோயிலுக்கு பலமுறை சென்றிருக்க்றேன்.என் வாழ்வின் முக்கிய வேண்டுதல்கள் அங்கு தான் நிறைவேறியிருக்கின்றன.

உங்களுக்கும் வல்லி சிம்மன் அம்மாவுக்கும் என் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே சார் அமாம் கும்மி எப்பவோ 45 வருடங்களுக்கு முன்னால் கோலாட்ட ஜவந்தரை என்று ஒன்று நடக்கும்.அப்போது பாடி ஆடினதுக்கு அப்புறம் இப்போது கண்ணபிரான் பதிவுபார்த்து
உங்கள் ஆடேலோர் எம்பாவாய் கேட்டு
மனசு ஆடாமல் என்ன செய்யும்?:-)

வல்லிசிம்ஹன் said...

கேட்டுச் சொன்னதற்கு நன்றி ஜெயஸ்ரீ.
முதலில் தயங்கிப் பின்னர் ரவியின் சொல்கேட்டுப் பாடினேன்.நல்ல
வார்த்தைகளுக்கு எவ்வளவு மதிப்பு.!

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா,ஓகை,செல்வன் எல்லோருக்கும் நன்றி.
இடம் கொடுத்த ரவிக்கும் நன்றி.

Anonymous said...

பதிவுலகில் நான் புதியவன், படிப்பதுமட்டுமே....என்னுடைய கோரிக்கையையும் கேட்டு பதிவிட இணைந்தது மட்டுமின்றி, வல்லியம்மா மூலமாக அருமையாக பாடவைத்தமைக்கு கண்ணபிரானுக்கு நன்றி, வல்லியம்மாவிற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.....

மெளலி....

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஞானவெட்டியான் said...
நம் மலையுச்சியாம் தலையிலே அவன் சந்தணம், மல்லிகை ஆகிய கலந்த வாசத்தோடு வாசம் செய்திருப்பது உண்மையே!//

எளிய பாட்டில் இவ்வளவு ஆழமான் தத்துவம்! நன்றி ஞானம் ஐயா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சாத்வீகன் said...
அருமையான பாடல்.
நன்றி வல்லிசிம்ஹன். தாங்கள் பாடிய விதமும் அருமை.//

சாத்வீகன், நன்றி.

//கும்மிப் பாடல்களின் சிறப்பே பாடுதற்கு பக்கத்துணையாய் எந்த வாத்திய இசையும் தேவைப்படாத அதன் தன்மையே//

அப்படியே ஒரு பள்ளுப் பாட்டும் நீங்க எழுதிக் கொடுங்க சாத்வீகன்! உங்க வரிகளும் அருமையா இருக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
கண்ணபிரான் ரவி!
ஏகாதசி நாளுக்கு உகந்த பாடல். வல்லி சிம்ஹனின் இனிய குரலில் இதமாக இருக்கிறது.
அளித்த உங்களுக்கு நன்றி.
ஷைலஜா//

அடுத்து ஷைலஜா அவர்களின் இனிய குரலில் என்று அறிவிப்பு செய்து விடலாமா? :-)))
நன்றி ஷைலஜா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// நா.கண்ணன் said...
நீங்களே 'கோதை நாச்சியார் தாலாட்டையும்' பாடிக் கொடுத்துடுங்களேன். கண்ணபிரானுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது புரியும்//

கண்டிப்பாக ஒவ்வொன்றாக முயலலாம் கண்ணன் சார்! நீங்கள் ரசித்துக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி!

//அழகரின் கன்னம் கண்ணாடி என்பது திவாய்மொழி//

அட ஆமாம்!

//இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் கோயிற்சாவியை இவனிடம் கொடுத்துவிடுவது வழக்கம். இப்போது அரசின் பூதங்கள் அதைச் செய்கின்றன என நம்புகிறேன்//

பட்டினத்தில் பூதம் கதை தான் நினைவுக்கு வருகிறது! :-))
கருப்பண்ண சாமி சத்திய சொரூபி! வழக்கு தீர்க்கும் தர்மராஜர் ஆயிற்றே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆஹா அருமையன பாடல். வல்லி அம்மாவின் குரலில் கும்மி எடுப்பாக உள்ளது . அதுவும் தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
அருமையாண் வரிகள்//

ஆமாம் திராச!
நாட்டுப்புறப் பாட்டில் எளிமைக்காக இனிமை குறைந்து விடவில்லை பாருங்கள்! நன்றி தாங்கள் ரசித்துக் கேட்டமைக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Mathuraiampathi said...
அந்தப்பாடலை அழகாக பாட ஆள் தேர்ந்தெடுத்து, அதற்கு ஒரு அருமையான முன்னுரையுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.//

மெளலி சார்! பாட்டை அனுப்பி பிள்ளையார் சுழி போட்டவரே நீங்க தானே! அருமையான பாடல் வரிகள் சார்!

எந்த மெட்டு போடலாம் என்று அவசியமே இல்லாமல், பாட்டிலேயே மெட்டும் அமைந்தது தான் சிறப்பு!

//இந்த மாதிரி, அடிக்கடி தொந்தரவு தரப்படும்....ஹி.ஹி//

ஆகா, அடுத்த தொந்தரவு எப்போதோ?:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ரங்கா - Ranga said...
அருமைனான பாடல் - அழகான குரல். தொலைபேசியில் கூப்பிடுகிறேன் - விபரமாகப் பேசுவதற்கு//

நன்றி ரங்கா சார்! வல்லிம்மாவைத் தானே சொல்கிறீர்கள்
"தொலைபேசியில் கூப்பிடுகிறேன்" என்று!:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
பாட்டும் நல்லா இருக்கு, மெட்டும் நல்லா இருக்கு. வல்லிக்கும், இந்தப் பாட்டை அனுப்பிய மதுரை அம்பதிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி கீதாம்மா! ரசித்துக் கேட்டமைக்கு நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எங்கள் கள்ளழகரை நினைத்தீர்களே. வாழ்க இரவிசங்கர். வாழ்க வாழ்க//

சொந்த ஊர்ஸ் பெருமாள் என்றவுடன் குமரன் முகத்தில் மகிழ்ச்சியைப் பாருங்கள்! :-))

//பாடலைக் கொடுத்த திரு.மௌலி அவர்களும் பாடிய திருமதி. வல்லி அம்மா அவர்களுக்கும் இதனை ஒருங்கிணைத்து கண்ணன் பாட்டில் இட்ட இரவிசங்கர் கண்ணபிரானுக்கும் அடியேனின் ஆயிரம் கோடி வணங்கங்கள்.
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.//

இதை மனமொப்பி ரசித்த குமரன் அவர்களே!
எம்மோடு நீரும் இன்னுமோர் நூற்றாண்டு இரும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆண்டாள் சொன்னபடி நூறு தடாவில் வெண்ணெய்யும் நூறு தடாவில் அக்கார அடிசிலும் அழகனுக்குப் படைத்து அவளால் 'அண்ணாரே' என்று அழைக்கப் பெற்றாரே உடையவர் இராமானுஜர்//

ஆமாம் குமரன்! அந்தக் கதையையும் அப்புறம் விரிவாகச் சொல்லுங்கள்!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
இந்த கும்மிப் பாட்டு மாயன் என்றே தொடங்குவதைப் பார்க்கும் போது ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன. மாயவன் தமிழர் வாழ்வில் எவ்வளவு தூரம் பின்னிப் பினைந்துள்ளான் என்பதை இது காட்டுகிறது//

உண்மை, குமரன்!
மாயவன் தமிழ்க்கடவுளே! இதை நிறுவித் தான் சொல்ல வேண்டும் என்பதே இல்லை!

நாட்டுப்புறப் பாடல்களை ஒரு ரவுண்டு வந்தாலே சொல்லி விடலாம்!


ஜிராவையும் ஒரு முறை எங்க கிராமத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்! அங்கே எங்க குப்பம்மாவும், பாண்டியம்மாவும் பாடுவாங்க பாருங்க பாட்டு, அத்தனையும் மாயன், மாயவன் என்றே இருக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இள நங்கையரே கும்மி அடிங்கடி - இந்த கும்மிப்பாட்டும் ஒருவேளை கோதை தான் எழுதினாளோ?//

ஆண்டாள் கும்மிப் பாட்டு எழுதினாளோ இல்லையோ, ஆனால் நிச்சயம் அதில் மனம் பறிகொடுத்து இருக்கிறாள்!

நாச்சியார் திருமொழியில் கும்மியில் வரும் குறிப்புகள் போலவே வரும்! ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதலாம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
அடியேன் தந்தையார் அழகரை வணங்கும் போது இருக்கும் பயபக்தியை விட பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வணங்கும் போது இருக்கும் பயபக்தியை இப்போதும் ஒவ்வொரு முறை அவரோடு அழகர் கோவிலுக்குச் செல்லும் போது கண்டிருக்கிறேன்//

முற்றிலும் உண்மை குமரன்!
காவல் தெய்வங்கள் பலர் பெருமாளுக்குப் பல தலங்களில் அன்புத் தொண்டு செய்கிறார்கள்!

திருவரங்கம், திருப்பதியிலும் இது போன்று தெய்வங்கள் உண்டு! திருவரங்கத்தில் கொற்றவை என்று வணங்கப்படும் பெண் தெய்வம்!

முதல் தொண்டர்கள் அல்லவா?
முதல் வணக்கமும் அவர்களுக்கே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
இன்று வைகுண்ட ஏகாதசியா? அப்ப இன்னைக்கு தூக்குல யாரையாவது போட்டா அவங்களும் வைகுண்டம் போய்விடுவார்களா?//

வணக்கம் அனானிமஸ்! தாமதமாய் வந்ததுக்கு மன்னிக்கவும்!

தூக்குல போடப்படும் நண்பர், ஆகா இன்று ஏகாதசியா என்று தங்களைப் போலவே காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, பழையதை மறந்து, மானசீகமாக மன்னிப்பு கேட்டு, எம்பெருமானையே நினைத்து, உளமாரத் தொழுதால் கருணைக் கடல் தடை சொல்வானா என்ன?

நற்பேறாவது நிச்சயம் அருள்வான்!
அதுவும் உடையவர் சம்பந்தமாய் அருளவே செய்வான்!

தங்கள் வருகைக்கு நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SK said...
"வல்லி, உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!!" [இன்று!]
என்ன ஒரு இனிமையான குரலில், மௌலியின் கருணையால், ரவியின் உயிர்ப்பால் நமக்கெல்லாம் இந்த நன்னாளில்!//

நன்றி SK ஐயா!
அரங்கனே போற்றி! அலைமகள் அன்னையே போற்றி போற்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SK said...
"அங்கு" ஆட்டம்! "இங்கு" பாட்டமா!
பலே! பலே!//

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
திருவெம்பாவையில் நீர் ஆட்டம்!
கண்ணன் பாட்டில் தமிழ்ப் பாட்டம்!
நம் எல்லாருக்கும் கொண்டாட்டம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
கிராமத்து மககளின் கும்மிப்பாடல்கள்
வழிவழியாய் வருபவை!
கேட்பவர்களுக்கும் ஒரு ஈர்ப்பு
ஏற்படத்தான் செய்கிறது!//

ஆமாம் சுப்பையா சார்!
வழிவழியாய் அதுவும் எதுவும் எழுதி வைத்துக் கொள்ளாமல் வருபவை!
இதுவும் எழுதாக் கிளவி தான்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஓகை said...
மாயனைப் போற்றியொரு கும்மி அதன்
தாயனை நாமறி யோமே!
பாயவும் ரவிசங்கர் பதிவில் மௌலி
ராயனும் அனுப்பிவைத்தாரே!
சேயதும் மயங்கிடும் குரலில் வல்லி
நேயமாய்ப் பாடிவைத்தாரே!//

சூப்பர்!
அடுத்த கும்மிப் பாட்டு ரவுண்டுக்கு நம்ம ஓகை ஐயா இருக்க பயம் ஏன்!
அவரே ஒரு கும்மிப்பாட்டை யாத்து விடுவாரே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
பாடல் அருமையாக இருந்தது ரவி!!!
இதை எங்களுக்களித்த மௌளி அவர்களுக்கும் வல்லி அம்மா அவர்களுக்கும் நன்றிகள் பல!!!//

நன்றி பாலாஜி!
ஓம் நமோ நாராயணாய!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜெயஸ்ரீ said...
பாடல் வரிகளை அளித்த மௌலி அவர்களுக்கும், பாடிய வல்லியம்மாவுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் கோடி நன்றிகள்.//

நன்றி ஜெயஸ்ரீ!

//பாட்டுக்கு குமரனின் விளக்கம் இனிமை சேர்த்தது. வல்லியம்மா சொன்னது போல் எழுதியவரே இவ்வளவு ஆழ்ந்து யோசித்திருக்க மாட்டார்//

அது தான் நம்ம குமரனுடைய speciality! மெய்யாலுமே கலக்கிட்டாரு! என்ன இருந்தாலும் ஊர்ஸ் பாசம் ஆச்சே! சும்மாவா? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//செல்வன் said...
கண்ணபிரான்,
கள்ளழகர் கோயிலுக்கு பலமுறை சென்றிருக்க்றேன்.என் வாழ்வின் முக்கிய வேண்டுதல்கள் அங்கு தான் நிறைவேறியிருக்கின்றன.//

ஆகா, செல்வன்!
வாங்க, வீட்டில் அனைவரும் நலமா!
கள்ளழகருக்குக் கடன்பட்டு இருக்கீங்கன்னு சொல்றீங்க! :-))

நன்றி செல்வன்! வருகைக்கும், கருத்துக்கும்!

மதுமிதா said...

நன்றி வல்லி, கண்ணபிரான்
வல்லி எப்ப வர்றீங்க
நேரிலும் கேட்கனும் உங்கள் பாடலை

Anonymous said...

REALLY NICE
I DON'T KNOW HOW TO WRITE IN TAMIL.
I HV REQUESTED MALLI KUMARAN ON THIS.
SRINIVASAN MADURAI

வல்லிசிம்ஹன் said...

வாங்க மதுமிதா,
தமிழ்ப் புத்தாண்டுக்கு சென்னை வவேண்டும் என்று நினைக்கிறேன்.
வழியில் இரண்டு கடல்கள்.
ஒண்ணு பக்கத்தில் பேத்தி இருக்கிறாள்.
அவளையும் பார்க்காமல் போனால் மனசு கேக்காது.:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said:
REALLY NICE
I DON'T KNOW HOW TO WRITE IN TAMIL.
I HV REQUESTED MALLI KUMARAN ON THIS.
//

நன்றி ஸ்ரீநிவாசன் சார்! தமிழில் எழுதுவதும் எளிதாகத் தான் இருக்கும் பாருங்க!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP