பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)
பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)
சுந்தரகாண்டம் (பாகம்-4 )
சர்க்கம்-21-முதல் -27-வரை
செவியுற்ற சீதை சினந்தனராம்;
தீயைத் தொட்டதுபோல் துடித்தனராம்.
அரக்கன்முன் துரும்பினைப் போட்டனராம்;
அதற்கவன் சமமெனக் காட்டினராம்.
"ராமரே,பதி!"எனக்கூவினராம்;
நெருங்கினால் அழிவெனச் சீறினராம்.
'ராமபாணம்'பற்றி விளக்கினராம்;
"தோல்வி திண்ணம்"என சபித்தனராம்.
செவியுற்ற ராவணன் வெகுண்டனராம்;
இரண்டுமாத கெடு வைத்தனராம்.
முடியுமுன் இணங்கிடக் கூறினராம்;
மறுத்தால் மரணமெனக் கூவினராம்.
அன்னையோ அஞ்சாமல் நின்றனராம்;
"அழிவுக்கு வழி இது"என்றனராம்.
கோபத்தால் ராவணன் கொதித்தனராம்;
அங்குமிங்கும் நிலையற்றலைந்தனராம்.
கோர அரக்கியரை விளித்தனராம்;
செல்ல மனமின்றி நகர்ந்தனராம் ;
மாளிகை நோக்கி நடந்தனராம்.
அரக்கியர் அன்னையைச் சூழ்ந்தனராம்;
ராமரை இழிச்சொல்லால் இகழ்ந்தனராம்.
ராவணனின் புகழ் பாடினராம்;
சீதையோ செவிகளை மூடினராம்.
அவள்மனத்தை மாற்ற முயன்றனராம்;
தோல்வியடைந்து சலிப்புற்றனராம்.
கடுஞ்சொல் கூறிக் கடிந்தனராம்;
மைதிலி மென்மனமொடிந்தனராம்.
தீச்சொல் தாளாது துடித்தனராம்;
மௌனமாய்க் கண்ணீர் வடித்தனராம்.
தாயைத் தீயர் பயமுறுத்தினராம்;
மன்னனை மணக்க வற்புறுத்தினராம்.
மைதிலி பொறுமை இழந்தனராம்;
"ராமரே பதி" என முழங்கினராம்.
சிம்சுபா மரம் நோக்கி நடந்தனராம்.
தீயோர் அவளைப்பின் தொடர்ந்தனராம்.
கையினில் ஆயுதம் எடுத்தனராம்;
கொன்று தின்றுவிடத் துடித்தனராம்.
கண்ட நம்நாயகி கலங்கினராம்;
ஆயினும் தன்னிலை பிறழ்ந்திலராம்.
அரக்கனை மணந்திட மறுத்தனராம்;
கொன்று விழுங்கும்படி உரைத்தனராம்.
தனது தலையெழுத்தை நொந்தனராம்;
துன்பந்தாங்காது தொய்ந்தனராம் .
கணவரின் பிரிவால் வருந்தினராம்;
இணையும் நம்பிக்கை இழந்தனராம்.
அரக்கனை எண்ணி நடுங்கினராம்;
உயிர்விட முடிவு எடுத்தனராம்.
அங்கொரு முதியவள் வந்தனராம்;
திரிசடை என்பது அவள் பெயராம்.
சீதையின் சிறப்பினை அறிந்தவராம்;
அரக்கியர் ஏச்சினை அடக்கினராம்.
கனவொன்று கண்டதாய் உரைத்தனராம்;
கனவினில் நிகழ்ந்ததை விளக்கினராம்.
ராமரைக் கனவினில் கண்டனராம்;
"அரியோ?"என ஐயம் கொண்டனராம்.
வில்லேந்தி ராமர் வந்தனராம்;
தசமுகனுடன் போர் புரிந்தனராம்.
தோல்வியுற்றரசர் இறந்தனராம்;
ராமருடன் சீதை இணைந்தனராம்.
அரக்கர் அனைவரும் அழிந்தனராம்.;
விபீஷணர் வேந்தராய் அமர்ந்தனராம்.
(ராம ராம ஜெய.....சீதாராம்)
1 comments :
இராமா நாமம் நம்மையெல்லாம்
பாடலுமாய்,படமுமாய்,பாட்டுமாய்
பரவசம் அடைய வைக்கிறது