Monday, April 18, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஹரிதாசர்கள் பாட்டுன்னா எப்படி இருக்கும்?


கிருஷ்ணா நீ பேகனே பாரோ.


அல்லி நோடலு ராமா இல்லி நோடலு ராமா.


இப்படி பெரும்பாலும் மிகவும் எளிமையாக, கன்னடமே தெரியலேன்னாக்கூட தட்டுத் தடுமாறி, ஓரளவுக்கு புரிஞ்சிக்கக்கூடியதா இருக்கும். ஆனா, இன்னிக்கு பார்க்கப் போகிற பாடல் அப்படி இல்லை.


ஸ்ரீ கனகதாசர் எழுதியுள்ள - ஈதநீக வாசுதேவனு - என்ற இந்த பாடல் - முழுக்க முழுக்க குறியீடுகளால் நிரம்பியுள்ளது. மற்ற பாடல்களைப் போல் எளிதாக விளக்கமுடியாமல் எவ்வளவு விரிவாக சொல்ல வேண்டியிருக்குன்னு நீங்களே பாருங்க. ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து எழுதி, அதன் பொருளை புரிந்து கொண்டு, பிறகு மொத்த சரணத்தையும் ரசிச்சி அனுபவிக்குமாறு இருக்கும். மொதல்லே இந்த பாடலையும், அதன் பொருளையும் பாத்துடுலாம்.


****


ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா


தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)


உலகத்தைக் காக்கும் கடவுள், இந்த வாசுதேவன் இவனே


தன் பக்தனுக்காக தேரேறி சாரதியாக சென்றவன் இவனே


தனுஜேயாள்வ தன்னநய்யன பிதன முந்தே கௌரவேந்திரன


அனுஜயாளிதவன சிரவ கத்தரிசுதா


அனுஜயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்தா ருக்மன


அனுஜயாளிதவன மூர்த்தியன்னு நோடிரோ (ஈதநீக)


சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜயத்ரதனின் தலையை துண்டிப்பேன் - இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சொன்ன அர்ஜுனனை தீக்குளிக்காமல் காத்த ஸ்ரீ வாசுதேவனின் அழகான மூர்த்தியை பாருங்கள் (ஈதநீக)


க்ரூரனாத பணிபபான தருணிஜனு நிரீக்ஷிசி யாக


வீரநெஜ்ஜே எசுகே ஒப்புதன்னு ஈக்ஷிசி


தாருணிய பததளொங்கி சரண பஜப நரன காய்தா


பாரகர்த்தனாத தேவ ஈத நோடிரோ (ஈதநீக)


சூரிய புத்திரனான கர்ணன் போரின்போது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் எய்தபோது பூமியை காலால் அழுத்தி தேரை கீழே அழுத்தி அர்ஜுனனைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணனை பாருங்கள் (ஈதநீக)


வ்யோமகேஷ இப்ப தெஷேய ஆமஹா மஹிமேயுள்ள


சாமஜவனு ஏறி பருவ சக்தியனு ஈக்ஷிசி


பிரேமதிந்தா எரவநோட்டி டிங்கரிகன காய்தா


சார்வபௌம படதாதி கேசவன நோடிரோ (ஈதநீக)


ஈசன் இருக்கும் திசையிலிருந்து மிகவும் பலம் பொருந்திய யானையின் மீதேறி வந்து சண்டையிட்ட (பகதத்தனின்) விஷ்ணு அஸ்திரத்தை தன் மார்பில் மாலையாக ஏந்தி அர்ஜுனனைக் காத்த அந்த கேசவனை பாருங்கள் (ஈதநீக)


***


என்னடா, பாட்டுக்கும் பொருளுக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரியே தெரியலையேன்னு நினைக்கிறீங்களா? பொறுமை பொறுமை.


விளக்கத்துக்கு போவதற்கு முன், இந்த பாட்டின் காணொளியை பாத்துடுவோம். PBS தன் அருமையான குரலில் மிகமிக பக்தி/ உணர்ச்சிபூர்வமாக பாடி, ராஜ்குமார் நடித்துள்ள காட்சியில் இந்தப் பாடல்.***


இப்போ பாடலின் விளக்கம். முதலில் பல்லவி, பிறகு ஒவ்வொரு சரணமா பார்க்கலாம். ரெடி? ஜூட்.


பல்லவி:


அருஞ்சொற்பொருள்:


ஈத = இவர்


ஈக = இப்போ


தாசகொலிது = தாச + கொலிது = பக்தன், இந்த இடத்தில், அர்ஜுனன். So, அர்ஜுனனைக் காப்பாற்ற


தேஜி = குதிரை


விளக்கம்:


தன் பக்தன் அர்ஜுனனைக் காப்பாற்ற, தேரிலேறி பார்த்த-சாரதியாய் சென்ற, இந்த உலகத்தை ரட்சிக்கும் வாசுதேவன் இவனே.


சரணம் 1:


அருஞ்சொற்பொருள்:


தனுஜே = த + அனுஜே = அரக்கன் + சகோதரி = அரக்கனின் சகோதரி = (மகாபாரதத்தில் வரும்) ஹிடிம்பா


ஆள்வ தன்னநய்யன பிதன = ஆள்வ + அண்ண + அய்யன + பிதன = கணவனின் அண்ணனின் தந்தையின் தந்தை. அதாவது, ஹிடிம்பாவின் கணவன் பீமன், அவர் அண்ணன் தருமர், அவர் தந்தை யமதேவன் (அம்சம்), அவர் தந்தை சூரியதேவன்.


கௌரவேந்திரன அனுஜெயாளிதவன = கௌரவேந்திரனின் + அனுஜே + ஆளிதவன. அதாவது, துரியோதனின் + சகோதரியின் + கணவனின் = ஜயத்ரதனின்


மூன்றாம் வரி:


அனுஜெயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்த


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (கிருஷ்ணனின் சகோதரி) சுபத்ராவின் கணவன் அர்ஜுனன்.


பெங்கி = நெருப்பு


முட்டதந்தே = சுடாமல்,


எரிக்காமல் காய்த = காப்பாற்றிய அதாவது, அர்ஜுனனை நெருப்பு சுடாமல் காப்பாற்றிய


நான்காம் வரி:


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (ருக்மனின்) சகோதரி ருக்மிணி. அவர் கணவர் கிருஷ்ணன்.


மூர்த்தியன்னு நோடிரோ = ரூபத்தை பாருங்கள்.விளக்கக் கதை:


சக்கர வியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யு, வெளியில் வர முடியாதவாறு அந்த வியூகத்தை மூடிய ஜெயத்ரதனே, அபிமன்யுவின் மரணத்திற்கு காரணம் என்ற அர்ஜுனன், அடுத்த நாள் மாலைக்குள், ஜயத்ரதனை கொல்வேன் என்று சபதம் செய்தான். அப்படி கொல்ல முடியாவிடில், அன்று மாலையே நெருப்பில் குதித்து தன்னுயிரையும் மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பின்னர் கிருஷ்ணனின் உதவியால், ஜயத்ரதனை கொன்றான் அர்ஜுனன். இப்படியாக, அர்ஜுனன் உயிருக்கு பங்கம் வராமல், அர்ஜுனனைக் காப்பாற்றினான் கிருஷ்ணன்.


சரணம் 2 :


அருஞ்சொற்பொருள்:


க்ரூரனாத = மிகவும் அபாயமான


பணிபபான = பணிப + பாண = நாகம் + அஸ்திரம் = நாகாஸ்திரம்


தருணிஜனு = தருணி + ஜனு = சூரியனுக்கு + பிறந்த. அதாவது, சூரியனுக்கு பிறந்த, கர்ணன்.


நிரீக்ஷிசி = தக்க சமயத்துக்கு, தக்க சமயத்தில்


வீரநெஜ்ஜே எசுகே = மிகவும் வீரத்துடன், எய்த அம்பு


பப்புதன்னு = வருவதை


ஈக்ஷிசி = பார்த்து


தாருணிய பததளொங்கி = பூமியை காலால் அழுத்தி


சரண பசப நரன காய்த = சரணாகதி செய்த நரனை (அர்ஜுனனை) காப்பாற்றிய


பாரகர்த்த = அனைத்து செயல்களுக்கும் காரணமானவன். அதாவது, பிறப்பு, இறப்பு, காத்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமான


விளக்கக் கதை:


நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் மட்டும்தான் பிரயோகிக்க வேண்டுமென்றும், அதுவும் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டுமென்றும், கர்ணனிடம் குந்தி வரம் பெற்றிருந்தார். அதன்படி, கர்ணன் அதை பிரயோகிக்கும்போது, அர்ஜுனனைக் காக்க வேண்டி, கிருஷ்ணன், பூமியை அழுத்தி, தேரை சற்று கீழே அழுத்தி, அர்ஜுனன் மார்புக்கு வந்த அந்த நாகாஸ்திரத்தை, கிரீடத்தில் படுமாறு செய்து, அர்ஜுனனைக் காப்பாற்றினார்.


சரணம் 3 :


அருஞ்சொற்பொருள்:


வ்யோமகேஷ = வ்யோம + கேஷ = காற்று + முடி. அதாவது, தன் தலைமுடியை காற்றில் வலை போல் விரித்து, பாய்ந்து வரும் கங்கையை அடக்கியதால், சிவனுக்கு 'வ்யோமகேசன்' என்று பெயர்.


இப்ப தெஷேய = இருக்கும் திசையில்.


சாமஜ = யானை


சக்திய = (இந்த இடத்தில்) நாராயண அஸ்திரம்


எரவநோட்டி = இடையில் (நடுவில்) புகுந்து


டிங்கரிகன = தாசனை (பக்தனை)


விளக்கக் கதை:


சிவன் இருக்கும் திசை. அதாவது கைலாயம் இருக்கும் திசை வடகிழக்கு. அந்த திசையில் இருந்த ப்ரக்ஜ்யோதிஷா என்னும் ஊரின் அரசன் பகதத்தன். தன் யானையான 'சுப்ரதீபன்' மீதேறி, கௌரவர்கள் சார்பாக போரிட்ட மாவீரன். அந்தப் போரில் ஒரு முறை, பகதத்தன், வைஷ்ணவாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை ஏவ, அதனால் அர்ஜுனனுக்கு கண்டிப்பாக மரணம் ஏற்படுமென்று தெரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், நடுவில் புகுந்து அதை தன் மார்பில் ஏற்றார். அது அவர் கழுத்தில் மாலையாக விழுந்தது.


***


அவ்வளவுதான். இப்படியாக, இந்த பாட்டில், அர்ஜுனனைக் காப்பாற்றிய கிருஷ்ணனின் மகிமையை புகழ்ந்து பாடியுள்ளார் ஸ்ரீ கனகதாசர். இப்போ மறுபடி அந்த காணொளியை பாருங்கள். சூப்பரா புரியும்.


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


***


8 comments :

ச்சின்னப் பையன் said...

என் கணினி பிரச்சனையால் பதிவில் படங்கள் ஓட்ட முடியவில்லை. உங்கள் மனதில் இருக்கும் கண்ணனை, பதிவிலும் பார்த்ததாக நினைத்துக் கொள்ளவும்! நன்றி.

பாரத்... பாரதி... said...

திவ்வியமான பாடல் பற்றிய பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாட்டு குழப்பமே இல்லையே!
ச்சின்னப்பையன் விளக்கம் தான் சுத்திச் சுத்திக் குழப்பி அடித்தது! :)))

அழகான கதைப் பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி ச்சின்னப்பையன்!
தனுஜேயாள்வ-அனுஜயாளி வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அதே மெட்டிலான கனகக்கவி இதோ:

இவனே இவனே வாசு தேவனே
உலகைக் காக்கும் நேச நேயனே!
அன்பன் பொருட்டு தேரை ஓட்டிய
அன்பின் எல்லை என்றும் நாட்டிய
(இவனே இவனே வாசுதேவனே)

சோதரியின் கணவன் அண்ணன், தந்தை-தந்தை மறையும் முன்னே
சோதரியின் கணவன் அரவக், கொடியன் பேரில் விரித்த வலையில்
சோதரியின் கணவன் விசயன், விசனத் தீயில் வீழும் முன்னே
சோதரியின் கணவன் கரியன், காத்தவன்-அவன் இவனே இவனே!
(இவனே இவனே வாசுதேவனே)

அரவின் அணையும் அரக்கப் பரக்க அச்சமூட்டியே வந்திட
ஆதவன் மகன் ஏவிடும் கணை, வாசவன் மகன் கண்டிட
மாதவன் அடி மேவிடும் படி, தேரைத் தேர்ந்(து) அழுத்திட
தீதவன் அதைத் தீர்த்து சேர்த்து, ஈர்த்திடும்-அவன் இவனே இவனே!
(இவனே இவனே வாசுதேவனே)

ஈசனின் திசை நகர அரசன், ஆனையின் பல அமர முரசன்
வீசினன் திரு மாலின் அணையை, வீர மறவன் விசயன் மீதே
நேசன் உயிரைக் காக்கத் தன்மேல், நேரே அழிவை ஏற்ற நாதன்
தாசன் கனகன் தாங்கிப் பணியும், தாமன் பரந் தாமன் இவனே
(இவனே இவனே வாசுதேவனே)

Lalitha Mittal said...

மூலக்கவிதை பிரம்ம்ம்மாதம்!கே.ஆர் .எஸ்ஸின் தமிழ்"கனக கவி"சூப்ப்ப்பர்!!

Sankar said...

மிக்க நன்றி .. அழகான பதிவு

jaisankar jaganathan said...

மிக்க நன்றி .. அழகான பதிவு

குமரன் (Kumaran) said...

விளக்கம் நன்றாக இருக்கிறது ச்சின்னப்பையன். நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP