Tuesday, February 01, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!

நாம் இன்று பார்க்கப் போகும் பாடலின் ஆசிரியர், த்வைத சித்தாந்தத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மகான். தாஸர். வேத, புராண, இதிகாசங்கள் அனைத்தின் சாரத்தையும், சர்வோத்தமனான பரந்தாமனின் பேர், குணம், அவதாரங்கள், சிறப்பு ஆகிய அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எளிய கன்னடத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தவர்.

யார் அவர்? அவர்தான் - நாரதரின் மறுபிறவி என்று கருதப்படும் - ஸ்ரீ புரந்தரதாஸர்.


எதுக்கு இன்னிக்கு அவர் பாடலை எடுத்துக்கிட்டோம்? ஏன்னா, இன்று ஒரு சிறந்த தினம். புஷ்ய மாத அமாவாசையான இன்றுதான் ஸ்ரீ புரந்தரதாஸரின் புண்ய தினம். ஆராதனை. உலகெங்கிலுமுள்ள தாஸரின் தாஸர்கள் அவரது பாடல்களை பாடி கடவுளை வழிபடும் நன்னாள்.

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய த்வைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாஸராயரின் பிரதம சீடர் நம்ம புரந்தரதாஸர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை பக்தி மார்க்கத்திற்கு திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று எண்ணற்ற பாடல்களை பாடியவர்.


கடவுளை தன் தலைவனாக, நண்பனாக, குழந்தையாக இன்னும் பல்வேறு ரூபங்களில் நினைத்து, வர்ணித்து, உருகி அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள். அட, இதேதானே நம்ம தமிழ் ஆழ்வார்களும் செய்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணும். மிகச் சரி. தமிழில் ஆழ்வார்கள் என்றால் கன்னடத்தில் ஹரி-தாஸர்கள். அதாவது ஹரிதாஸர்கள். (இதில் புரந்ததாஸர், கனகதாஸர்னு வரிசையா நிறைய பேர் இருக்காங்க).

மறுபடி புரந்தரதாஸருக்கே வருவோம்.

**

பக்தியில் ஐந்து விதமான பக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

தாஸ்ய பாவம் - கடவுளை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் நினைத்து வழிபடுவது; பாடுவது.

சக்ய பாவம் - கடவுளை நண்பனாக நினைத்து வழிபடுவது.

மதுர பாவம் - கடவுளை கணவனாக நினைத்து பாடுவது. (கோபிகைகள் கண்ணனை நினைத்து உருகுவது இதில் வரும்).

வாத்ஸல்ய பாவம் - கடவுளை ஒரு குழந்தையாக நினைத்துக் கொள்ளுவது.

சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.

நம்ம தாஸர் (மற்ற அனைத்து தாஸர்களைப் போலவே), மேலே சொன்ன இந்த ஐந்து பாவங்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.


இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் - தாஸ்ய பாவத்தை சார்ந்தது.

அதாவது கடவுள் என்பவன்

தலைவன்.
முதலாளி.
அனைத்திற்கும், அனைவருக்கும் மேலானவன்.
சர்வோத்தமன்.

நானோ

அவன் தாஸன்
வேலைக்காரன்.
தலைவன் என்ன சொல்வானோ, அதை நான் செய்வேன்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை அவனே பார்த்து கொடுப்பான்.

இப்படியான உத்தமமான நிலைதான் தாஸ்ய மனோபாவம்.

இப்போ இந்த பாடலையும், அதன் பொருளையும் பாருங்க. உங்களுக்கே புரியும்.

**

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)


Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)


கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)


காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

**

இப்படி தாஸ்ய பாவத்தில் உருகி பாடியிருக்கும் புரந்தரதாஸரின் பாடலை யாரு பாடினா பொருத்தமாயிருக்கும்?

தினந்தோறும் அந்த வேங்கடரமணனையே ‘சுப்ரபாதம்’ சொல்லி எழுப்பும் - அந்த திருப்பதி வேங்கடவனின் காலடியிலேயே நிரந்தரமாய் தங்கி சேவை புரியும் - நம்ம எம்.எஸ்.அம்மாதான். வேறே யாரு?. பாடலின் முழுமையான அர்த்தத்தை புரிந்தவாறு, ஆத்மார்த்தமான பக்தியுடன் அம்மா பாடுவதை பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தாஸன மாடிகோ என்ன..





**

ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!


**

நன்றி
ச்சின்னப் பையன்
http://dasar-songs.blogspot.com

**

24 comments :

R. Gopi said...

சரியான பாட்டு.

எனக்கு ஜகதோத்தாரனா ரொம்பப் பிடிக்கும்.

நீங்க ச்சின்ன பையன் இல்லை. பெரிய பையன்:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழைப்பினை ஏற்றுக் கொண்டு, புரந்தரதாசரின் ஆராதனை நாள் அன்று, கண்ணன் பாட்டிலே இட்டமைக்கு நன்றி ச்சின்னப்பையன்!

கண்ணன் பாட்டுக்கு உங்களுக்கு இங்கு அனைவர் சார்பாகவும் நல்வரவு சொல்லிக் கொள்கிறோம்!

தனி மடலில் குழுவுக்கு அறிமுகப்படுத்த எண்ணி இருந்தேன்! வேறு சில பணிகளால், இப்போதே இதையே அறிமுகமாகச் செய்து விடுகிறேன்! கண்ணன் பாட்டில், தாச நாமாக்கள் என்னும் தாசபாசுரங்கள் தழைத்து ஓங்கட்டும்! அடியவர்கள் கூடி இருந்து குளிரட்டும்!

வருக வருக!

கோமதி அரசு said...

//எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.//

இது தான் எப்போதும் எல்லோருக்கும் வேண்டும்.

அரிய பொக்கிஷத்திலிருந்து தாராளாமாய் கொடுத்த நீங்கள் பெரியவர் தான்.
நன்றி.

Radha said...

அருமையான ஒரு புரந்தர தாசர் பாடலுடன் குழுவிற்கு புதிதாக வருகை தந்திருக்கும் உங்களுக்கு நமஸ்காரம் மற்றும் நல்வரவு.
அற்புதமான பாடல். பொருள் புரியாமலேயே ஆனால் மிகவும் பிடிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையாக பொருள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா !

In Love With Krishna said...

//ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!
//
:))
Beautiful song. Thanks :)

In Love With Krishna said...

//சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.//
A little doubt..
Feelings-e illama bhakti eppadi?
Nenjathin ullirundhu varuvadhu dhaana bhakti?
Appa eppadi unarchivasappadaama irukka mudiyum?

Lalitha Mittal said...

chikka udugaa[chinnappaiyyan],
thumba chennaagithe[romba nannaa irukku]!

சின்னப் பையன் said...

நன்றி கோபி.
அந்த விட்டலனுக்கு முன்னால் நான் என்றென்றைக்கும் ச்சின்னப்பையன் தான்.. :-))

வாய்ப்புக்கு நன்றி KRS .

நன்றி கோமதி அரசு. அட, 'அவர்' நம்மை நேராக்கூட பார்க்கவேணாம்.. அந்த கடைக்கண்ணில் பார்த்தாலே போதுமே.. அதுவே பேரானந்தம்தானே..

நன்றி ராதா. பெரியவங்க எல்லாம் இருக்கும் இந்த குழுவில் இந்த ச்சின்னப்பையனையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

வாங்க ச்சின்னப்பையன். அருமையான பாடல். தாசரின் ஆராதனையன்று தந்ததற்கு நன்றி. பொருளுடன் படித்துக் கொண்டே பாடலைக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி.

சின்னப் பையன் said...

நன்றி In Love with Krishna:

Emotion is not devotion.

பக்தின்றது 'தைல தாரேயந்தே மனசு கொடோ' அதாவது எண்ணையை ஊத்தினா எப்படி கொஞ்சமும் அப்படி இப்படி நகராமே சீரா விழுமோ அப்படி இருக்க வேண்டியது. உணர்ச்சி வசப்பட்டா அது நடக்காது. மனசு நம்ம கட்டுப்பாட்டிலேயே இருக்காது.

உணர்ச்சின்னு சொன்னா ரெண்டு விதம். காம, குரோத, மத, மாச்சரியங்களுக்கு கட்டுப்படாமல், அன்பு, பரிவு, தயை, சந்தோஷம் இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். இந்த அன்பு முதலான உணர்ச்சிகள் எப்போ வரும்னா, பக்தி இருந்தா வரும். அதாவது Devotion leads to (மேற்சொன்ன) Emotion.

இது என்னுடைய புரிதல்.

சின்னப் பையன் said...

நன்றி Lalitha Mittal.

தொட்டவாறு மத்யே ஈ சிக்க உடுகா.. தும்ப சந்தோஷா.. (பெரியவங்க நடுவில் இந்த ச்சி.பை)

நன்றி குமரன்.

In Love With Krishna said...

@ச்சின்னப் பையன்: Unga view-kku nandri. :)
i may be wrong, but enakku ennavo "emotion" dhaan "devotion"-nnu thonudhu.
Neenga 5 "bhaavam" soneenga.
bhaavam=feelings
Inge dasar sonnadhu avarukku (Perumal-kku) kattupatta "feelings".
Aandal's emotion=love.
Azhwargalum urugi urugi dhaan Peruma-ai paadinaanga.
"Devotion" (dictionary meaning)-To put one's heart completely into/ to give oneself unto
---
"Perumal azhaga irukaare!"-nnu manasu dhaan kudhikkum=happiness
Kannorathil "Tears"= bewilderment.
Avarai paarkavillai, kaanavillai= Grief
ippadi, nammudaya ella emotions-kkum avare reason aavadhu dhaan bhakti enbadhu en "chinnna karuthu".
----
So, "shantha bhaavam" eppadi?
Adhu dhaan innum puriyala.
"Bhaavam"=unarchi
appa eppadi :unarchivasapadaadha unarchi-ya??
----
P.S:
ippadi argue pannuvadhukku sorry.
Unga post superb-aa irundhudhu. :))
My doubs never leave me! :(

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

மிக அருமையான பாடல் , அருமையான விளக்கம் .
நன்றி சின்னப்பையன் .

சின்னப் பையன் said...

In Love with Krishna:

Emotionனும் Devotionனும் வெவ்வேறேன்னு ராஜாஜி-ஜி சொன்ன linkஐ மிஸ் பண்ணிட்டேன்.. இன்னும் தேடிங்..

அதுவரை. இந்த பக்கத்தில் 6வது பேராவை பார்க்கவும்.
http://www.swami-krishnananda.org/bgita/bgita_35.html

**

இதே மாதிரி கேள்விகளை என் பக்கத்தில் வந்தும் கேளுங்களேன்.:-)
dasar-songs.blogspot.com

Kavinaya said...

அருமையான பாடலை பொருளுடன் அழகாகத் தந்தமைக்கு மிக்க நன்றி. கண்ணன் பாட்டுக்கு நல்வரவு!

நாடி நாடி நரசிங்கா! said...

thanks:)

Raghav said...

நல்வரவு ச்சின்னப்பையன்.. அருமையான பாடலை தமிழில் மொழிபெயர்ப்புடன் தந்தமைக்கு நன்றி..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@KK & @ச்சின்னப் பையன்

//Emotionனும் Devotionனும் வெவ்வேறேன்னு ராஜாஜி-ஜி சொன்ன linkஐ மிஸ் பண்ணிட்டேன்.. இன்னும் தேடிங்..//

:)

One of these hymns is the famous Bhaja govindaM.
The way of devotion, is not different from the way of knowledge or gnyana.

When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom.

When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakthi.

Knowledge, when it becomes fully mature is bhakthi.
If it doesnot get transformed into bhakthi, such knowledge is useless tinsel.

To believe that gnyana and bhakthi, knowledge and devotion are different from each other, is ignorance.
- Rajaji's prelude to Bhaja Govindam sung by MS Subbulakshmi

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதே மாதிரி கேள்விகளை என் பக்கத்தில் வந்தும் கேளுங்களேன்.:-)//

உங்க பக்கமா? சத்யா, இது தாங்க உங்க பக்கம்! :)

அடியார்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு அவனும் இன்பமாய் இருக்கிறான்!
அவன் எங்கு இன்பமாய் இருக்கிறானோ, அதுவே உங்க பக்கம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@KK & @ச்சின்னப் பையன்

Can I join the fun, with your permission? :)

//Emotion is not devotion.
பக்தின்றது 'தைல தாரேயந்தே மனசு கொடோ' அதாவது எண்ணையை ஊத்தினா எப்படி கொஞ்சமும் அப்படி இப்படி நகராமே சீரா விழுமோ அப்படி இருக்க வேண்டியது//

அது எண்ணெயோட குணம்!
தண்ணியைப் போய், அதே போலே விழேன்-ன்னா விழுமா? இல்லை தண்ணி தான் எண்ணெயா எப்பவாச்சும் மாறுமா? :))
அப்போ தண்ணியாலே எல்லாம் பக்தி பண்ணவே முடியாதா என்ற கேள்வி வருகிறது அல்லவா?

@KK
You should note one point! What Sathya or Rajaji said here, is like advaita perspective.
Itz not Kannan's words! Itz just Rajaji's thinking!
People differ, so do their focus! Variety is the spice of life :)

"Emotion is NOT devotion"!-ன்னு சொன்னதுக்கு Emotion ஆகலாமா? :)
Dont worry! I will say "Emotion is also Devotion"! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Devotion leads to (மேற்சொன்ன) Emotion//

அன்பு, காதல் எல்லாம் ஒரு பக்கம் நல்ல உணர்ச்சிகள்! (Emotion)
காமம், கோபம் எல்லாம் பொதுவாக நல்ல உணர்ச்சிகள் இல்லை!
- இப்படிச் சொன்னாலும், எல்லா உணர்ச்சிகளுமே கலந்து கலந்து தான் நடைமுறையில் உள்ளது அல்லவா? அவ்வளவு சுலபமாகப் பிரிக்க முடிவதில்லை அல்லவா?

கண்ணனின் அன்பில் இருக்கும் தாய்க்குக் கூட, கண்ணனுக்கு ஊறு செய்பவர்கள் வந்தால் கோபம் வருகிறதே! :)
கண்ணப்ப நாயனார் கோபமும் பட்டார்! இயலாமையும் பட்டார் அல்லவா! திருமங்கை வழிப்பறியே செய்தார் அல்லவா!

So, itz only "theoretical" to segregate emotions and "define" bhakthi!
In real, Bhakthi cannot be defined!

Emotion is NOT bhakthi-ன்னும் சொல்ல முடியாது!
Emotion is ONLY bhakthi-ன்னும் சொல்ல முடியாது!
--------------------------

பக்தி என்ற ஒன்று வந்தால் தான், மற்ற நல்ல உணர்வுகள் வரும், 1st Devotion - that leads to Good Emotions என்பது ஒரு கொள்கை/புரிந்துணர்வு மட்டுமே!

சுவாமி கிருஷ்ணானந்தா அந்தச் சுட்டியில் தமது புரிந்துணர்வுகளை ஞானத்தின் மேல் கட்டுகிறார்! தைல தாரா போல் சிதறாமல் ஒழுகினால் பக்தி என்பது ஒரு புரிதல்! ஞானப் புரிதல்! = அத்வைத நிலை!
இராஜாஜி அவர்கள் பேசுவதும் அஃதே!

ஆனால், எப்போதும் அப்படி எண்ணெய் போல் ஒழுக முடியுமா? எண்ணெய் ஒழுகும், தண்ணி அப்படி ஒழுகுமா? அப்போ தண்ணிக்கு எல்லாம் பக்தி செய்ய முடியாதா என்ற கேள்வியெல்லாம் வரும்! பூஜை அறையைத் தாண்டியும் பூஜை 24 மணி நேரமும் சதா நடந்து கொண்டே இருக்க வேணும் என்று அவர் சொல்வது சிறந்தது தான்! ஆனால் Reality? நடக்குமா? ஒரு சிலரால் மட்டுமே அது இயலும் அல்லவா? அப்படியென்றால் ஒரு சிலர் மட்டுமே பக்தி செய்கிறார்கள் என்றாகி விடும்! எம்பெருமான் குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே குழந்தைகள்-ன்னு சொல்ல முடியுமா? :)

அதனால் தான், இப்படி விதிகள்/Definition என்று base செய்யாமல், reality-ஐ base செய்து விசிட்டாத்வைதம் (விதப்பொருமை) உருவானது!
ஞானம், எண்ணெய் போல் சிதறாமல் இருப்பதும் பக்தி தான் என்றாலும், அது மட்டுமே பக்தி அல்ல என்றும் சொன்னது! எளிய உணர்ச்சி வசப்படலும் பக்தி தான், as long as there is focus/பார்வை!

இது சங்கத் தமிழில் சிலப்பதிகாரத்தில் குரவைக் கூத்தில் சொல்வது!
இதுவே ஆழ்வார் பாசுரங்களாக, குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழியில்...
இதுவே விசிட்டாத்வைத நெறியாகவும் நாளடைவில் விரிந்தது! = Taking Reality also into account!

எம்பெருமானின் அணைப்பு முனிவர்களுக்கோ, ஞானிகளுக்கோ கிட்ட வில்லை! குகனுக்கும், சபரிக்கும், குரங்குக்கும், அசுரனுக்கும் தான் கிட்டியது!

எண்ணெய் போல் சிதறாமல் இருக்கத் தியானம் பழகிய ஆனந்தாக்கள், சுவாமிஜிக்கள் எல்லாம் சில கட்டங்களில் தவறி விடுவது, இந்த Realityஐ கணக்கில் கொள்ளாததால் தான்! எளிய உணர்ச்சி வசப்படலும் பக்தி தான், as long as there is focus/பார்வை! தியானமோ அல்லது plain emotions-ஓ, எதுவாயினும், எம்பெருமானை மையமாக(focus) வைத்து விட்டால், ஐயோ அவனுக்குப் பிடித்தாற் போல் நடந்து கொள்ளப் பார்ப்போம்-ன்னு ஒரு நினைப்பாச்சும் இருக்கும்! ஆனந்தாக்கள் உருவாக மாட்டார்கள்! :)

ஒரு பெரிய வட்டம்/circle!
அதில் எது ஆரம்பப் புள்ளி? முடிவுப் புள்ளி? Devotion leads to Emotion-ன்னு சொல்லத் தான் முடியுமா?
ஒன்னே ஒன்னு சொல்ல முடியும்! அந்த வட்டத்தின் மையம் = அவன்!
அவனைச் சுற்றியே அந்தச் சக்கரம்/வட்டம்/or circle or whatever!

So, itz only "theoretical" to segregate emotions and "define" bhakthi!
In real, Bhakthi cannot be defined!

Bhakthi encompasses "everything"!
No segregation!
So, be assured, being emotional is also bhakthi :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆங் சொல்ல மறுந்துட்டேனே!
பதிவின் நாயகரான புரந்தரதாசர், பக்தி வெள்ளத்தின் ஊற்று!
அதனால் தான் உணர்ச்சி வசப்படாத சாந்த பாவம் தான் முதலில்; அதுவே இதர பாவங்களான வாத்சல்யம், தாஸ்யம், சைக்யம், மதுரங்களுக்கு இட்டுச் செல்லும் என்று சொல்லவில்லை! அனைத்து பாவங்களுமே கலந்த விசிட்டாத்வைத/த்வைத நிலையில் கீர்த்தனைகளை எழுதினார்!

புரந்தரா, அடியேனைப் புறந் தள்ளாது புரந்தரா!
புரந்தரதாசர் திருவடிகளே சரணம்!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் சின்னப்பையன் . தியகராஜ கீர்த்தனைகள் என்று சொல்லும்போது தாஸர் நாமாக்கள் என்றுதான் சொல்லுவது வழக்கம். நாம சங்கீர்த்தனம்தான் மிகவும் உயர்ந்தது என்பதை குறிப்பதால் இருக்கும்.சங்கீத பிதமஹரான தாஸர்வாளின் பாட்டுக்கு அர்த்தத்துடன் அளித்தமைக்கு நன்றி. தொடரட்டும் இசைப்பணி.

ஷைலஜா said...

எங்க கர்னாடகா கலைஞரை தெய்வத்திருவருள் பெற்றவரை எவ்ளோ தாமதமா பார்க்கிறேன்! அருமை அருமை! தொட்டமளூரில் புரந்தரதாசர் பாடவும் கண்ணன் வெண்ணை உண்ணும் பாலகனாய் தவழ்ந்து வந்தகோலத்தில் இன்னமும் காட்சி அளிக்கிறாரே!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP