Friday, December 31, 2010

New Year! துளசி தளம்! உன்னால் முடியும் தம்பி!

அனைவருக்கும் & கண்ணன் பாட்டு நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011
புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)




அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)

சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு "சந்தோஷமுகா" பாட்டு(லு) இப்புடு சூஸ்தாவா? :)

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கு ஏற்றவாறு,
ஒரு அழகிய தியாகராஜ கீர்த்தனை!
அதை மெட்டு மாறாமல், தமிழாக்கி இதோ! = சந்தோஷமுகா! சந்தோஷமுகா!

சந்தோஷம்-ன்னா கூடவே துளசி தளம் வருது பாருங்க! :)
அலைச்சலுக்கும், பெரும் காத்திருப்புக்கும் பிறகு, காற்றில் மெல்லீசாய் வரும் துளசி வாசமே ஒரு தனி சந்தோஷம் தானே!
கூடவே பல பூக்களின் வாசமும் பாட்டில் வீசுது! கேட்டுக்கிட்டே படிங்க!


துளசி தளமுலசே
சந்தோஷமுகா...பூஜிந்து

துளசி தளம் அதினால்
மகிழ்ச்சியுடன்...பூசித்து

பலுமாரு சிறகாலமு
பரமாத்முனி பாதமுலனு
(துளசி தளமுலசே)

பல்லாண்டு பல்லாண்டே
பெருமாளின் திருவடிக்கே!
(துளசி தளம் அதினால்)

சரசீருஹ புன்னாக சம்பக
பாடல குருவக
கரவீர மல்லிக சுகந்த
ராஜ சுமமுல
(துளசி தளமுலசே)

தாமரை புன்னையும் சண்பகமும் - தரு
பாதிரி குருந்தை மலருடனே
அரளியும் மல்லியும் மணங்கமழும் -என்
மனம் மலர் பூக்கள் பலவுடனே
(துளசி தளம் அதினால்)

தரணி வி ஒக்க பர்யாயமு
தர்மாத்முனி சாகேத
புர வாசுனி ஸ்ரீ ராமுனி
வர தியாகராஜ நுதுனி
(துளசி தளமுலசே)

தரணியில் எழுஎழு பிறவி தனில் - அற
ஆழியை அயோத்தி ஆள்பவனை
மனமதில் வாழுமென் ராகவனை - உனை
தியாக ராசன் தினம் பாடி மகிழவே
(துளசி தளம் அதினால்)



பாட்டில் வரீசையா, பல பூக்களைச் சொல்லி அர்ச்சிக்கிறாரே தியாகராஜர்!
லேடீஸ் & ஜென்டில் லேடீஸ்...
அத்தனை பூவையும் நோட் பண்ணீங்களா?
அதுல, சில பூவை எல்லாம் கண்ணுல பார்த்தாச்சும் இருக்கீங்களா? :))

1. தாமரை
2. புன்னை
3. சண்பகம்
4. பாதிரி
5. குருந்தை
6. அரளி
7. மல்லி
8. துளசீ தளம்
&
9. மனப் பூ


எனக்குக் கடைசிப் பூவை நல்லாவே தெரியும்-ப்பா! ஏன்-ன்னா அது தான் நான் சொல்லும் பேச்சைக் கேட்கவே கேட்காது! :)



உம்.....தமிழாக்கம் என்பதால் என்னோட குரலில் கேட்டீங்க! உங்க விதி! :)
ஆனா மூலப் பாடலை நல்ல குரலில்...இசைக் கருவிகளில் கேட்போமா? One Stop Shop for this Song!

திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி! ஜேசுதாஸ் குரலில்...



* நித்ய ஸ்ரீ
* Hyderabad Brothers

படம்: ப்ரணய காலம் (Dont Miss; Again Yesudass, but in a different tone)



வீணை:



கொல்கத்தா கலா-சித்ரா




மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)துளசி தளமுலசே, சந்தோஷமுகா....

Thursday, December 30, 2010

உனது பாதம் துணையே !



இது ஒரு மெகா ஓ.பி பதிவு. இந்தப் பதிவை, மார்கழியில்  உருப்படியா பதிவு எதுவும் போடாது வீடியோ மட்டுமே போட்டு ஒப்பேத்தறவங்களுக்கும், பதிவுகளை எல்லாம் draft-லையே வெச்சு அழகு பார்க்கறவங்களுக்கும், கும்பகோணம் கோயில் பாசுரம் வேணும்னு கேட்டு, பதிவு போட்ட பின்னாடி காணாம போனவங்களுக்கும், "எந்த ஊர் முருகன்?" அப்படின்னு டகால்டி பதிவு போட்டவங்களுக்கும், பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" பற்றி சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கும், கடைசியாக, ஆனால் மிக மிக முக்கியமாக, ராதாவின் தங்கத்திற்கும் அர்ப்பணம்.

பாடலை இங்கே கேட்கலாம். பாடல் வரிகள் எங்க? அப்படின்னு கேக்கறீங்களா? இருப்பது இரண்டு வரிகள். அதுல ஒண்ணு பதிவின் தலைப்பா அமைஞ்சிடிச்சு. இன்னொன்னு என்னன்னு பாடலை கேட்டு தெரிஞ்சிகோங்க. :-)


~
கிரிதாரியின்,
ராதா
டிஸ்கி1: பொறுமை இல்லாதவர்கள் ஒரு நிமிடம் தாண்டி கேட்கவும்.
டிஸ்கி2: தீவிர திருமால் பக்தர்கள் மூன்று நிமிடங்கள் தாண்டி கேட்கவும்.


madhavipanthal.podbean.com

உனது பாதம் துணையே!
ஓராறு முகனே!
தேவாதி தேவனே!

Sunday, December 26, 2010

கிளியே....குழறிக் குழறி அழைத்தாயோ?

என்னவோ எல்லாரும் அரங்கன் திருமால் ஆயிரம் நாமங்கள் ஆழ்வார்கள் ஆண்டாள் அப்படீன்னு மட்டுமே இங்க பேசிட்டே இருக்கீங்களே மார்கழில ஒரு மாசிலா ஜீவனை யாராவது நினச்சிப்பார்த்தீங்களா?! அது மட்டும் இல்லேன்னா அரங்கனாவது திருவரங்கக்கோயிலாவது!

அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! நல்லவேளை ஆண்டாள் அதை தன்னோட ஒரு பாட்டுல கூவி அழைச்சா தோழியை அழைக்கிறமாதிரி! அதெப்படிங்க அழகான அதை மறக்கலாம்?

அழகா இருப்பதால்தான அதை ஆண்டாள் கையில் வச்சிருக்க்கா மீனாட்சியும் அதுக்கு இடம் கொடுத்திருக்கா! ஓ என்ன அதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கதானே? ஆமாம் கிளிதான் அது!தத்தைன்னும் சொல்வாங்க தூயதமிழ்ல!

இடிந்த அரங்கன் கோயிலைத் தர்மவர்மனுக்கு கிளி தான் காட்டிக் கொடுத்தது! கிளி மண்டபம் அதனால்தான் அரங்கத்தில் இருக்கு முன்னெல்லாம் தூணுக்குத்தூண் கூண்டு கட்டி கிளிகளை அதில் அடைச்சிருப்பாங்க ரங்கா ரங்கான்னு ஜோரா கத்தும் அவையெல்லாம். இப்போ சில வருஷங்களா கிளிமண்டபம் மட்டும் இருக்கு கிளிகள் இல்லை.

சரி ஆண்டாளுக்கு கிளி ஏன்?

அந்த காலத்தில் உயர்குடிப்பெண்கள் எல்லோருமே கிளிகளை வளர்ப்பது ஒரு இனிய பொழுதுபோக்கா இருந்ததாம்!

ஓர் அழகான காட்சி.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மரத்தில் உள்ள குயிலை ஆண்டாள் பார்க்கிறாள். கூவி அழைத்து கண்ணனை வரவழைத்தால் இதோ என் கையில் இருக்கும் கிளியை உன் தோழி ஆக்குவேன் என்கிறாள்.

இன்னடிசிலோடு பாலமுதூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந்தான் வரக்கூவாய்!

ஆண்டாள் அப்போது தோளில் கிளியை வைத்திருக்கலாம்

*** *** ***
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் இன்னொரு கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது

ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ ? பெண் மனசு பெண்ணுக்குத்தானே தெரியுமாம்?!

கிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குதுன்னு கே ஆர் எஸ் முன்ன என் பதிவில் வந்து இப்படி சொல்லி இருக்கார்!

ஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! (இதுவும் தகவல் உபயம்--கே ஆர் எஸ்)


கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,

நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி

ஆண்டாள் எனும் சோலையில் அருகம்புல்லாய்க்கூட இருக்க இயலாத நிலையில் ஆர்வம் காரணமாகவும் மார்கழில கிளிக்கு ஒரு பாடல் எழுதி அதைப்பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ஏதோ தெரிஞ்சதை எழுதி மெட்டும் போட்டு பாடியும் படுத்திருக்கேன் கேட்டு சொல்லுங்க என்ன?!

பாட்டு..


அரங்கா அரங்கா என அழைக்கும்
அழகுக்கிளியே நமஸ்காரம்(ஸ்ரீ)

மரங்கள்மீதும் மதில்கள்மீதும்
வானமளாவும் கோபுரத்தும்(ஸ்ரீ)

சோலைப்பசுமை தன்னிலவன்
சொக்கும் வனப்பைக்கண்டாயோ?
கோலக்கிளியே அவனை நீ
குழறிக் குழறி அழைத்தாயோ?(ஸ்ரீ)

நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)

தென்றல் காற்று சிரிக்குங்கால்
தேவன் குரலைக் கருதினையோ?
இன்றே வருவாய் எனவுருகி
இரங்கி இரங்கி அழைத்தாயோ?(ஸ்ரீ)

கரிய துளசி வனத்தினிலே
கண்ணன் மனத்தை உணர்ந்தாயோ?
உரியாய்! உடனே வா வென்றே
உருகி உருகி இசைத்தாயோ?(ஸ்ரீ)

மாவின் தளிரைக் கோதுகையில்
மாலின் அதரம் எண்ணினையோ?
ஆவியனையான் அணைத்திடவே
ஆசை பெருக அழைத்தாயோ?(ஸ்ரீ)

*****************************************************************

ஆராவமுதே...

 
[முகுந்தமாலா - 16 ]

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சய அச்யுதகதா: ஷ்ரோத்ரத்வய ! த்வம் ஷ்ருணு !
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர்-கச்ச அங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண ! முகுந்த பாத துளஸீம் மூர்த்தந் ! நமாதோக்ஷஜம் !


[பொருள்]
நாவே ! கேசவனைத் துதி செய்வாயாக; மனமே ! முராரியை பஜனை செய்வாயாக; கைகளே ! ஸ்ரீதரனுக்கு அர்ச்சனை செய்வீர்; காதுகளே ! அச்சுதனின் கதைகளைக் கேட்பீர்; கண்களே ! கிருஷ்ணனைக் காண்பீர்; கால்களே ! ஹரியின் ஆலயத்திற்கு செல்லுங்கள்; நாசியே ! முகுந்தனின் பாத துளசியை நுகர்வாயாக; தலையே ! நீ ஆண்டவனை வணங்குவாயாக !
[ ராகம் - கல்யாணி ]

ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே !
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே !


மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்த உயிர் பாசுரத்தை (திருவாய்மொழி 5-8-1) இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்:  சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.

Friday, December 24, 2010

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடவா !


[ ராகம் : வசந்தா ]
வார்புனல் அம்தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே.

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை 
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் !
தண் கடல் வட்டத்து உள்ளீரே !

மேலே உள்ள திருவாய்மொழி(3-5-8, 3--5-1)  பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
[ ராகம்: சங்கராபரணம் ] 
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
ஆறா அன்பில் அடியேன்உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

மேலே உள்ள திருவாய்மொழி(6-10-1, 6-10-2)  பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்:  சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.

Wednesday, December 22, 2010

பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்


[ஹரி பஜனை]
(ராகம்: செஞ்சுருட்டி)
கேசவா ! நாராயண மாதவ கோவிந்தா !
விஷ்ணு ! மதுஸுதனா ! த்ரிவிக்ரம வாமனா !
ஸ்ரீதரா ஹ்ருஷீகேசா பத்மநாபா தாமோதரா
அச்சுதா ! அனந்தா ! கோவிந்தா !


ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே.


அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே.

மேலே உள்ள திருவாய்மொழி பாசுரங்களை(9-3-1, 9-3-2) இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்:  சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.

[ விளக்கம்]
எங்கள் தலைவனான நாராயணன்  ஆயிரம் பேர்களைக் கொண்ட பெருமை வாய்ந்தவன். ஒரே ஒரு பெயர் மட்டும் போதும். அது ஓர் ஆயிரம் வழிகளில் ஏழு உலகங்களையும் காக்கும் வல்லமை உடையது. அழகு, மென்மை, கம்பீரம், கருணை, சமத்துவம் போன்றவற்றை வெளிப்படுத்தும் அவன் திருமேனியே கரிய காளமேகம் ஆனது. (ஓ! எங்கள் தலைவன் சீர் சொல்லி முடியாது.)

அவனே முன்பு இந்த உலகங்களைப் படைத்தான். முன்பு (வராஹ அவதாரம்) இந்த பூமியை இடந்தான். பிரளய காலத்தில் அவனே உலகங்களை தன் வயிற்றில் வைத்து காத்தான். மீண்டும் அவனே மறுபடியும் எல்லா உலகங்களையும் வெளியில் இட்டான்.அவனே முன்பு திரிவிக்ரமனாக எல்லா உலகங்களையும் அளந்தான். நாராயணனும் அவனே. இந்திரனும் அவனே. பிரம்மாவும் அவனே. பரமசிவனும் அவனே. மற்றும் எல்லாமும் (etc etc) அவனே என்று அறிந்தோம்.

(சொற்பொருள்)
பீடு - பெருமை
அளித்தல் - காத்தல்
ஞாலம் - உலகம்

Sunday, December 19, 2010

அமலனாதிபிரான்


அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
(அமலனாதிபிரான் -1)

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரத்தை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை பள்ளிக்கரணை திருநாராயணன் கோயில் அரையர் சுவாமி ஸ்ரீ ராம பாரதி மற்றும் அவரது துணைவியார். 

[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !

(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்

[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.

அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.

Friday, December 17, 2010

வைகுண்டம் ரங்க மந்திரம்!








ஸ்ரீரங்கம்! நினைத்தாலே இனிக்கும் பெயர்!

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்வன் கேண்மினோ
என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோல யார் என்ன நினைத்துக்கொண்டாலும் சொல்லத்தான் வேண்டும் ஆம், அரங்கன் என்றபெயரைக்கேட்கும்போது உடலில் மின் அலைகள் பாய்வதை உணரமுடிவதுபோல வேறெந்தப்பெயரும் தாக்குவதில்லைதான்!

திரும்பத்திரும்ப திருவரங்கம் போகிறாயே அலுக்கவில்லையா என்று சிலர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் அரங்கன் புதிதாய் நம்மை பிறக்கவைக்கிறானே !

நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறானே?

இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக நாதமுனிகள் என்னும் வைணவம்தந்த வைரமணியைப்பற்றி சில வரிகள் கூறவேண்டும்.

காலத்தின் மாற்றத்தால் ஆழ்வாரின் பாசுரங்களும் திருவாய்மொழியும் நாதமுனிகள் காலத்தில் காணாமல்போயிருக்க கவலைகொண்டவர் நம்மாழ்வாரின் சந்நிதிமுன்பு நின்றார்.

யோகத்தில் ஆழ்ந்தவர், ஆழ்வார்கள் ஆண்டாள் முதலியோரின் பாடல்களை நம்மாழ்வாரிடமிருந்து க்ரஹித்துக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தவர் அவைகளை இசை என்றும் இயல் என்றும் பிரித்து தாள் சகிதம் பண்ணுடைய இசைப்பாக்களை சேவிக்க மார்கழி சுகல்பட்ச ஏகாதசிக்கு முந்தின பத்துநாட்கள் திருவாய்மொழி தவிர மற்ற ஆழ்வார்களுடைய இசைப்பாக்களையும் ஏகாதசிமுதல் அடுத்த பத்துநாட்களில் இராப்பத்து பொழுதில் திருவாய்மொழியையும் இராபத்து முடிந்த மறுநாள் இயற்பா முழுவதையும் சேவிக்க வேண்டுமென்றும் சிலமுக்கியபாடல்களை அபிநயித்துக் காட்டவேண்டும் என்றும் ஹிரண்யவதம் ராவணவதம் வாமன க்ருஷ்ணாவதாரங்கள் போன்ற சிலமுக்கிய அம்சங்களைப் பாமரர்கள் எளிதில்புரிந்துகொள்ளும்பொருட்டு நாடகரூபமாய் அபிநயித்துக்காட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தார்.



அப்படிச்செய்ததும் நம்மாழ்வாரின் திரு உள்ளத்தை அனுசரித்தே செய்யப்பட்டதாய் தெரிகிறது எப்படியென்றால் நம்மாழ்வார் பாடின ’தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பாடிநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே ’ என்னும் பாசுரத்தை அனுசரித்து இருப்பதால் என்கிறார்கள் பெரியோர்.

வைகுண்டம் என்பது ஸ்ரீரங்கமே என்று சொல்லுகிறபடி வைகுண்டத்தில் உள்ள எல்லாம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காட்டிக்கொடுக்கவே இந்தத்திருநாள் நடக்கிறது


வைகுண்டஏகாதசி ஏன் வருஷாவருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலைத்திறக்கிறார்கள் ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? இதற்கான தத்துவம் தான் என்ன என்பதை

கொஞ்சம் பார்க்கலாம்!

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப்பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள்முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பதுபோல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளது

இந்த உஸ்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியைவிட்டுப்புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்

ரஙக்நாதன் தனனை சேவிக்க வருபவர்களை ’மம மாயா துரத்யயா...’ என்னுடைய மாயைகளை கடக்க முடியாதென்று சொன்னேன் அவை மண் பொன் பெண் ஆசைகள் !இதில்பெண்ணாசையை வெல்வது மிகவும் கடினமானது நான் போட்ட மோகினிவேஷத்தில் மயக்கத்தில் அசுரர்கள் அமிர்தத்தை இழந்தார்கள் ஆகவே பெண்ணாசையில் மனம் மயங்காமல் நாளை நான் காட்டிக்கொடுக்கும் மார்க்கத்தில் என்னோடு வந்தீர்களானால் வைகுந்தம் நிச்சயம் ’ என் உபதேசிப்பதாகும்

மோகினி அலங்கார தத்துவம் இதுதான்.

இராப்பத்து உத்சவதில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில் திருமாமணி மண்டப்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணிமண்டதின்படி கட்டப்பட்டுள்ளதால் அதே பெயர் இதற்கும்! இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால் இது இராப்பத்து என்றாகிறது.


தவிர வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப்பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய;சூழ்விசும்பணிமுகில் ;எனும் பத்துபாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. பரமபதத்திற்கு செல்லும் முமூஷுவாய் ரங்கநாதனே நடிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானதுமூடப்படும்.

அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி என்ற பாசுரப்படி இந்தக்கதவுகள் மூடப்படுகின்றன. பகவானை சிந்தித்து அவ்னருளைப் பெற இச்சிக்கும் முமுஷு தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண்காதுமூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.

பெருமாள் புறப்படும்முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேதபாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார் அப்போது சந்நிதிவாசல்திறக்கப்படும் சிம்மகதி(ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் இதையெல்லாம் நம்மாழ்வார்பாடல்களில் காணலாம்.

பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்குமுகமாய் நின்று வாசல்கதவுகளைதிறக்கும்படி நியமித்தவுடன் அவைதிறக்கப்படும் சொர்க்கவாசல் என்பது இதுதான். சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணியில் ஒருகிணறு இருக்கிறது இங்கிருக்கும் நாலுகால் மண்டபத்தில் வேதவிண்ணப்ப்பமாகி பெருமாள் இந்தவாசலுக்குப்போனவுடன் அதுவரை சார்த்தி இருந்தபோர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது.


பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.

ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் ,விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவதுகாட்டப்படுகிறது ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .

ஆயிரங்கால் மண்டப்த்தின் திருமாமணிமண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி முக்தன் பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக்காட்டுகிறது

ஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும் ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ’என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!

அரங்கன் திருவடிகளே சரணம்!





--

ஹோலி


சங்கரின் குரலில்....


வண்ணங்கள் அள்ளி தெளிக்காதே கண்ணா
ஹோலியன்று புத்தாடை மேல்..

தோழியர் குழாம் கேலி செய்யும்..
உன் ஜாலம் கண்டால், மணிவண்ணா.. மாதவா.. கோவிந்தா !
(வண்ணங்கள் ...)

வானவில் மின்னி ஒளிர்ந்திடும் போதுன்..
காதலில் நனைந்திட காத்திருக்கையிலே,
வானவில் வண்ணங்கள் வாரியெடுத்தென்
எண்ணத்தை முறித்திட முடிவு செய்து..
(வண்ணங்கள் ...)

இந்த பாடலை கேட்க கீழ்காணும் இணைய முகவரியை தட்டினாலும் தட்டலாம்! :))

Wednesday, December 15, 2010

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஆங்கிலப் பாட்டு - ஐ.நா சபை!

கண்ணன் பாட்டிலே...இது 198ஆம் இடுகை! மார்கழிக் குளிர் இன்னும் இரண்டு இடுகைகளில்....உங்களை வேகமாகத் தாக்கப் போகிறது! :)

* முற்றிலும் தமிழ் வலைப்பூவான கண்ணன் பாட்டிலே,
* தமிழ்க் கடவுளான திருமாலுக்கு...
* இன்று அழகான ஆங்கில இடுகை! :)
* அதுவும் அழகான எம்.எஸ்.சுப்புலட்சுமியின், அழகான ஆங்கிலக் குரலில்... :)

அட, எம்.எஸ் ஆங்கிலத்தில் எல்லாம் பாடுவாங்களா என்ன?



Oct 23, 1966
நியூயார்க் நகரம், ஆனால் அமெரிக்க மண் அல்ல!

பன்னாட்டு எல்லை! International Territory!
கீழையாறு (East River) ஐ- பார்த்தாற் போல் உள்ள ஐ.நா சபைக் கட்டிடம்!

அதன் பொதுக் குழுவின் (General Assembly) ஆண்டுத் துவக்கம்!
International Cooperation Year - பன்னாட்டு ஒற்றுமை ஆண்டு...என்று அறிவித்து, துவங்குகிறார்கள்!

இதோ, ஐ.நா-வின் பொதுச் செயலர், யூ தான்ட் (U Thant) பேச எழுந்து விட்டார்......
சபையில் பாட, அழைப்பு விடுக்கிறார்!
யாரை? = இசை அரசி என்று சொல்லப்பட்ட ஒருவரை!

Secretary General, U Thant பேசுவதைக் கேளுங்கள்!



அறிமுக உரை முடிந்து, இதோ...முதன் முதலாக, இந்திய இசை, அதிலும் தமிழ் இசை...ஐ.நா-வில் ஒலிக்கப் போகிறது!
இளங்கோ அடிகளின், சிலப்பதிகாரம்.....பொருளதிகார மண்ணிலே!!!

ஆனால், இதெல்லாம், அமெரிக்க மண்ணில் எடுபடுமா? இவிங்களுக்குப் பாடினால் புரியுமா?
அதுவும் அமெரிக்கர்கள் மட்டும் அல்லாது, பன்னாட்டு மக்களும் உள்ளார்கள்!

இதோ....தன் குழுவினருடன்...
In the Center Stage of the General Assembly Hall of the United Nations...


ராதா விஸ்வநாதன் - துணைப் பாடகர்
வி.வி. சுப்ரமணியம் - வயலின்
டி.கே.மூர்த்தி - மிருதங்கம்
டி.எச். வினாயக ராம் - கடம்
விஜய ராஜேந்திரன் - தம்பூரா

&
Harold Stramm - Piano
திருமதி. எம். எஸ். சுப்புலட்சுமி....

சொடுக்கி, கேட்டுக் கொண்டே....மேலும் படியுங்கள்!

May the Lord, forgive our sins
And gather all the nations
Here under this Uniting Roof!

To give up hate and fear
And learn to understand
Here under this Uniting Roof!

They took the risks of war
and dying, wished us take
the better risks of peace
Here under this Uniting Roof!

The God in everyman
is an atom too
of measureless potential!
Let us learn to find it
And explode it into lasting peace
Here under this Uniting Roof!!

May the Lord forgive our sins
Inspiring us to peace on Earth
Here under this Uniting Roof!!!



மொத்த அவையினரும் ஏதோ மந்திரிச்சி விட்டது போல் கட்டுண்டு கிடக்க...
இசை.....
இனிக்கவும் இனித்தது! புரியவும் புரிந்தது! இனி, எல்லாமே பொழிவு தான்!

அன்றைய இரவு, இந்திய இசை முத்துக்கள் ஒவ்வொன்றாக உலக அரங்கேற....
1. ஸ்ரீரங்க புர விகாரா - முத்துசாமி தீட்சிதர்
2. சார சாக்ஷா - சுவாதித் திருநாள்
3. சிவ சிவ சிவ போ - ஜெய சாமராஜ உடையார்

4. ஜகதோ-உத்தாரணா - புரந்தரதாசர்
5. ஹரி தும் ஹரோ - பக்த மீரா
6. மைத்ரீம் பஜத - சந்திரசேகர சரஸ்வதிகள்

&...
7. வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்!

மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவைக் கூத்துப் பாட்டை, பழைய பண்ணோடு இசைந்து, இப்படியும் பாட முடியுமா? ஆகா!
எம்.எஸ் பாடிய பின் தான், பலருக்கும் இது சிலப்பதிகார வரிகள் என்றே தெரிந்தது!

நாராயணா என்னாத நாவென்ன நாவே,
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?

-என்றெல்லாம் இளங்கோவடிகள் அடுக்குவதை, எம்.எஸ் அடுக்கி அடுக்கிப் பாடப் பாட, மொத்த அரங்கமும், சங்கத் தமிழ் கேட்டு இனிதே நிறைந்தது...
கேட்டார் பிணிக்கும் தகையவே, கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்!





மறு நாள் காலை....
நியூயார்க் நகரத்து தினத் தாள்களுக்கு எப்பமே ஓவர் குசும்பு! என்ன சொல்லிற்றோ ஏது சொல்லிற்றோ-ன்னு பக்கங்களைப் புரட்டினால்...

The New York Times said:
"Subbulakshmi's vocal communication transcends words.
The cliché of `the voice used as an instrument' never seemed more appropriate.
It could fly flutteringly or carry on a lively dialogue with the accompanists.
Subbulakshmi and her ensemble are a revelation to Western ears.
Their return can be awaited only with eagerness."

Dr. W. Adriaansz, Professor of Music, University of Washington, wrote:
"For many, the concert by Mrs. Subbulakshmi meant their first encounter with the music of South India
and it was extremely gratifying that in her the necessary factors for the basis of a successful contact between her music and a new audience
- highly developed artistry as well as stage presence - were so convincingly present... without any doubt (she) belongs to the best representants of this music

Here is the link to New York Times Archive! நியூயார்க் டைம்ஸ்-இன், அந்தக் கால நாளிதழின் நகல்!

இதில் வேடிக்கை என்னவென்றால்....நியூயார்க் பத்திரிகைகள் எல்லாம் இப்படி எழுத, நம் இந்தியச் சங்கங்களில் உள்ள சாஸ்த்ரீய இசை-இலக்கண விற்பன்னர்கள், எம்.எஸ்-ஐ, திட்டி எழுதினார்கள்! :)

எதுக்குத் திட்டு?
= பின்னே, உலக அரங்கிலே தமிழ்ப் பாட்டு பாடினால்? :)
போதாக்குறைக்கு, ஆங்கிலத்திலா துவக்குவது நமது சாஸ்த்ரீய மரபை?
என்னமோ, வெள்ளைக்காரர்களுக்குப் புரிய வேணுமே என்பதற்காக, நம்ம பாரம்பர்யத்தை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டது போல் அல்லவா ஆகி விட்டது?
:)

அடப் பாவிங்களா! தமிழ் அர்ச்சனைக்கு சொல்லும் காரணங்களையே சொல்றீங்களே! ஊருக்குப் புது இசையை, புரியும் மொழியில் கொடுத்துத் தானே லயிப்பை உண்டாக்க முடியும்!
அப்படிப் பார்த்தா, வயலின் என்பதே நம்ம பாரம்பரியக் கருவியா என்ன? அதைத் தானே எல்லாக் கச்சேரிகளிலும் கட்டிக்கிட்டு இருக்கீய? :)


* இசைக்கு ச-ரி-க-ம என்று இலக்கணங்கள் இருக்கலாம்!
* குரல் மிகவும் முக்கியம்!
* பாட்டு வரிகள் முக்கியம்!
* இசை அமைப்பு முக்கியம்!
* மொழி புரிந்தால் மக்களின் ரசனை இன்னும் நன்றாக இருக்கும்!

ஆனால் ஆனால் ஆனால்....

* பட்டும் நகையும் என்று ஆடம்பரம் காட்டாது...
* சக வித்வான்களைத் திரும்பிப் பார்த்து, ஜால வித்தை செய்யாது...
* தான் தான் என்ற பெருமையும் மறந்து...
* ஒரு கட்டத்தில், பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்து...

சாஸ்த்ரீய சங்கீதத்திலே, பஜனை மாதிரி தாளமெல்லாம் வச்சிக்கிட்டாப் பாடுவது? என்ற கேலி எல்லாம் அடங்கிப் போய்...
குறை ஒன்றும் இல்லை கண்ணா, இறைவாஆஆஆ என்று....

பாட்டிலே, ஆத்ம சமர்ப்பணம் என்னும் சரணாகதி...
பித்தளைத் தாளங்களை, தன் மார்போடு சேர்த்துக் கொண்டு...
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...என்னும் போது

பாடுபவர் ஒன்றுகிறாரா?
இல்லை....
கேட்பவர்கள் சரணாகதி செய்கிறார்களா?

இது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை!
பாட்டின் "சாதுர்யங்களையும்" மறந்து,
அவனிடத்திலே தன்னை ஒப்புக் கொடுத்தால் தான், இப்படி அமைகிறது!


எம்.எஸ் அம்மா சிறு வயதில் அழகு என்று சொல்லுவார்கள்! தேவ தாசி குலம் அல்லவா என்றெல்லாம் சிலர் பேசுவார்கள்!
ஆனால் எனக்கென்னமோ, அவர் வயதாக வயதாகத் தான், அவர் முகம் அப்படி ஒளிர்கிறது! அப்படி அழகு! நீங்களே பாருங்கள்!



அன்றைய கால கட்டத்தில்,
* தமிழ்ப் பாடல்களைப் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவி விட்ட காலத்தில்...
* பல முன்னணி வித்வான்கள், சங்கீத அறிவு ஜீவிகளைப் பகைத்துக் கொள்ளத் தயங்கிய நேரத்தில்...
* துணிந்து நின்று.......தமிழ் இசைக்காகத் தன் குரலை "முதலில்" ஒலித்தவர் எம்.எஸ்!

* பின்னர், ஒவ்வொரு கலைஞராக, தமிழ் இசையைக் கொஞ்சம் கொஞ்சமாக மேடைகளில் "பரவலாக" புழங்கத் துவங்கினார்கள்!
* ஆழ்வார்களின் ஈரத் தமிழும், நாயன்மார்களின் தெய்வத் தமிழும், இசை மேடைகளில் இடம் கண்டன!

* ஒலிப்பது மட்டும் அல்லாமல், பின்னணியில் பல பாடல்களை ஆராய்ச்சி செய்து திரட்டி,
* சிலப்பதிகாரத்தைக் கூட, பொது மக்களுக்குக் கொடுத்து ரசிக்க வைக்க முடியும் என்பதை....
* பதிவுலக வாய்ப் பேச்சால்/மேடைப் பேச்சால் அல்லாது, செயலால் செய்து காட்டிய பெண்மணி!

அவர் மறைந்த சில நாட்களிலேயே, ஆந்திர அரசு மட்டுமே, திருப்பதி நுழைவிலே சிலை வைத்து, அவர் நினைவைப் போற்றியது!
அரசியல்வாதிக்கு, நடிகருக்கு - அதுவும் ஆண் நடிகருக்குச் சிலை உண்டு! ஆனால் முதன் முதலாக....ஒரு பெண் பாடகிக்கு....தமிழ் நாட்டப் பாடகிக்கு...தெலுங்கு மண்ணிலே சிலை!

எம். எஸ். அம்மா - நீக்கு வெய்யி தண்டாலு! கோடி சாஷ்டாங்காலு!

திருவேங்கடமுடையானின் தமிழ்ப் பாசுரம் எல்லாம் ஒலி வடிவம் கொடுத்து,
தமிழறிவு இல்லாத என் போன்றவர்களுக்கும்....
தெய்வத் தமிழைப் படிக்க மட்டுமல்லாது....
இசையால் தமிழை "அனுபவிக்கவும்" செய்த பெருமைக்கு...

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
உன்னால், இனி வரும் தமிழ்த் தலைமுறைகெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு!

(எம்.எஸ் நினைவு நாள் - Dec 11க்கு எழுத நினைத்து, இன்றே முடிந்தது)

Saturday, December 11, 2010

MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!

கண்ணன் பாட்டில் இது 197-ஆம் இடுகை!
இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :)
மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!




வழக்கமா, இந்தக் கேஆரெஸ் பய, சினிமாப் பாட்டைத் தான் கண்ணன் பாட்டில் போடுவான்! மீண்டும் கோகிலா படத்தில், கமல் பாடும் போது, "கண்ணா"-ன்னு ஒத்தைச் சொல் வந்துறக் கூடாது! அதையும் கண்ணன் பாட்டில் கொண்டாந்து போடும் அவன், இன்னிக்கி நம்ம திராச ஐயாவைப் பார்த்து திருந்திட்டான்! :)

திராச ஐயா தான், நல்ல மரபிசைப் பாடல்களை, கர்நாடக இசைப் பாடல்களை வலையேற்றுபவர்! அவர் வழியில், இன்னிக்கி கொஞ்சம் போல் திருந்தி...
இதோ எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாட்டு ஒன்னைப் பார்க்கலாம்!

எம்.எஸ்-க்கு என்றே சில பாடல்கள் அமைந்து விடும்!
வேறு யார் பாடினாலும், அதிலும் எம்.எஸ் சாயல் தான் இருக்கும்!
அப்படியான பாடல்களில் இது ஒன்று!

திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!
பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,
அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்கு...
கூடவே, தமிழில், மெட்டு மாறாமால், தர முயன்றுள்ளேன்!
பாடிப் பார்த்து, பொருளும் இசையும் பொருந்தி வருகிறதா-ன்னு சொல்லுங்க!

ஊஞ்சல் போய் வருவது போலவே, பாடலும் போய்ப் போய் வருகிறது! டோலாயாம் சல டோலாயாம்! ஆடு பொன்னூஞ்சல்!



இங்கே, எம்.எஸ் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரி: அன்னமாச்சார்யர்

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)



பாட்டை நாதசுரத்தில் கேட்கலீன்னா எப்படி? இதோ
நாதசுரம் - ஷேக் சின்ன மெளலானா

அப்படியே, இதர கலைஞர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன்
* மும்பை சகோதரிகள்
* சைந்தவி

எல்லாத்துக்கும் மேலா, எம்.எஸ் - B&W Video!
அப்பவே ரொம்ப அழகா இருக்காங்க! :)
ஊஞ்சல் வேகமாப் போவதை, கையால் அசைத்துக் காட்டிச் சிரிக்கிறாங்க! 0:22 இல் பாருங்க!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP