Wednesday, March 10, 2010

குருவாயூரில் ஒரு தினம்.

குறிப்பு :: இக் கட்டுரை 2008ம் ஆண்டில் மார்ச் கடைசியில் சென்ற குருவாயூர்ப் பயணம் பற்றியது. Off the topic-ஆக கண்ணன் பதிவிற்கு இது தரமாயிருக்குமா என்று யோசித்தேன். எனினும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்று!

பாதையிலிருந்து விலகி குதிரை போஸ்டர்களில் நின்றாலும், சாட்டைக்காரன் சரியாக ஓட்டிச் சென்று விடுகிறான்.

***


(படம் நன்றி :: விக்கிபீடியா.)

"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."

இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான மணற்துகள்களைத் தெறித்து விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. தாமதம்.

வாங்கிய பத்திரிக்கைகளை மீண்டும் ஒரு முறை மேய்ந்து விட்டு, செல்லில் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். இரவு கவிழ்ந்து தம் மீது முகாம் இட்டிருந்ததை எவ்வளவு சொல்லியும் கேளாமல், இமைகள் தள்ளாடித் தள்ளாடி கண்களை மூடத் தடுமாறியதில் தெரிந்தது.

'மறந்து விடாதே. மறந்தும் இருந்து விடாதே. எப்படியாவது இன்று இரவு இந்த வண்டியைப் பிடித்தாக வேண்டும். எனவே தூங்காதே தம்பி தூங்காதே'.

நாளை காலை எப்படியாவது குருவாயூர் அடைந்தாக வேண்டும்.

வ்வாரம் சுற்றுலா எங்கே போவது என்று சிந்தித்துக் கொண்டே பல் குத்திக் கொண்டிருக்கையில், கால் வந்தது. இது Call. உறவினர் குடும்பம் குருவாயூர் செல்வதாக அறிந்தேன். ஆஹா ! ரொம்ப நல்லதாகப் போயிற்று. கண்ணனே நம்மைக் கூப்பிடுகிறான் போலும் என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே, 'நானும்.. நானும்' என்று ஒட்டிக் கொண்டேன்.

என்ன பிரச்னை என்றால் அவர்கள் ஏற்கனவே பயணச்சீட்டு பதிவு செய்து விட்டார்கள். 'சரி! நான் வேறு ஏதாவது முறையில் சனிக்கிழமை காலை குருவாயூர் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.

பேருந்தா, இரயிலா?

சில முறை பேருந்து வழியாகவே பயணம் செய்து விட்டதால், இம்முறை இரயில் என்று டிக் அடித்தேன். இரயிலில் மீண்டும் அன்ரிசர்வ்டு ப்ளாக்கில் செல்ல வேண்டும் என்ற எண்ணமே கொஞ்சம் திகிலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

சரியாக 00:30 மணியளவில் இரண்டாம் பிளாட்பார்ம் வந்தடைந்தது. முன்பே விசாரித்திருந்தேன். கடைக் காரர்கள் 'கூட்டம் எதுவும் அவ்வளவாக இருக்காது. எனவே அமர (அட.. உட்கார..)இடம் கிடைக்க பெரிய அளவில் சிரமம் இருக்காது' என்று கூறி இருந்தார்கள்.

ஆனால், என்ன பரிதாபம்! திருவனந்தபுரத்தில் நிறைய இறங்குவார்கள். இடம் கிடைத்து விடும் என்ற நினைப்பு பணால் ஆனது. எதிர்பார்த்த அளவில் கூட்டம் இறங்கவில்லை...இரங்கவில்லை.

சில ஆண்டுகளாக ஒரு பழக்கம்! இரயிலில் முன் பதிவற்ற பெட்டியில் பயணிக்கையில் சிட்டு பெற பெரிய அடிதடியே நடக்கும். அதில் எதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். அந்த சமயங்களில் மனித மனமும், மொழியும் எந்த அளவிற்கு தரை மட்டத்தையும் தாண்டி பாதாளம் அளவிற்கு பாயும் என்று தெரிந்து கொள்ளலாம். அழகுத் தமிழ் மொழியில் சண்டை போடுவதற்கு எத்தனை எத்தனை அற்புதமான வார்த்தைகள் இருக்கின்றன என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்றே? அதிலும் முக்கியமாக மதியம் 14:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கிளம்பும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸிலும், பின்னிரவு 22:30 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸிலும் முன்பதிவற்ற ப்ளாக்குகளில் ஏறி சீட்டு கிடைத்து அமர்ந்து விடுவது என்பது குதிரைக் களைப்பே!

ஆனால் எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்கு இன்று எங்கு சீட்டு கிடக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறாரோ அங்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் திடமான நம்பிக்கை உடையவன் ஆதலால், இடம் கிடைப்பது பற்றிய எந்த சிந்தனையும் இன்றி நின்று கொண்டிருப்பேன். நம்ப மாட்டீர்கள், எப்படியும் திருவள்ளூர் செல்வதற்குள் உட்கார இடம் கிடைத்து விடும். இது என் நம்பிக்கையை மேலும் மேலும் இறுக்கப் படுத்தி விடும்.

இன்றும் அப்படித்தான்! ஆனால் அவ்வளவாக அடிதடி எதுவும் நடக்கவில்லை. நானும் நின்று கொண்டிருந்து, பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின் அங்குமிங்கும் பார்வையை அலை பாய விட்டதில், ஓர் நீள் இருக்கையில் நான்கு பேர் மட்டும் அமர்ந்து உறக்கத்தின் பிடியில் உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அங்கு முனை அமர் நபரை எழுப்பி, மெல்லிய சிரிப்போடு 'கொஞ்சம் நகருங்கள்' என்று மெல்ல கேட்க, இடம் கிடைத்தது. இதில் சிரிப்பு எதற்கு என்றால், இரண்டு காரணங்கள். 1. புன்னகையோடு எதையும் கேட்பதில் மிகப் பெரும்பாலும் கேட்கும் பொருள் கிடைத்து விடும் என்று எங்கோ படித்த ஞாபகம். அப்போதிருந்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது கூட 'கொஞ்சம் சிரிச்ச மாதிரி' முகத்தை வைத்துக் கொள்வது என்று பழக்கப் படுத்திக் கொண்டாயிற்று. இது அலுவலக சூடான தருணங்களைக் கொஞ்சம் cool நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது. 2. அவரே தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி, 'ஒக்காரணும். நகருய்யா' என்றால் யாராக இருந்தாலும் கொஞ்சம் கடியாவார்கள். ஏதாவது முனகிக் கொண்டே தரலாம். அல்லது தரப்படாமலும் போக பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் நேரம் இரவு 1 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனவே தான் புன்னகை.

மனித மனம் தான் பெரிய குரங்காயிற்றே! கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தவுடன், 'இன்னும் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தால் தான் என்னவாம். நானும் கொஞ்சம் நல்லா உட்காருவேன் இல்லையா?' என்று நினைத்த கொஞ்ச நேரத்திற்குள் அதிலேயே படுத்துக் கொண்டிருந்த ஒருவர், எழுந்து அமரவே, இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்க, செளகரியமாக அமர்ந்தேன்.

இதற்கெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? இதெல்லாம் அவனது குழந்தைகள் மேல் அவன் காட்டுகின்ற அன்பின் அடையாளம் தானே! இருந்தாலும் 'போனாப் போகின்றது' என்று அவனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, கொண்டு வந்திருந்த 'ஒரு யோகியின் சுயசரிதத்தை' மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

எதிரெதிராய் முகம் பார்த்துக் கொண்டே வந்த கழிவறைகளின் அருகிலேயே அழுக்குப் பையோடு நாற்றமும், அழுக்கும் கொண்ட ஒரு பைத்தியக்காரர் / பிச்சைக்காரர். பெரும்பாலும் (அவரது) பயணம் முழுதும் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து வந்தார். எங்கே இறங்கினார் என்றே தெரியவில்லை. பாதியில் அவரைக் காணவில்லை.

பின் கண்களில் தூக்கம் சொக்கிக் அவ்வப்போது சாய்ந்து, தடாரென விழித்து, எழுந்து, நடந்து ஒருமாதிரி பயணித்துக் கொண்டே வந்தேன்.

வரிசையாகப் பல ஊர்கள். மஞ்சள் ஒளி விசிறியடித்துக் கதிர் எட்டிப் பார்க்க காற்றின் வாசம் எங்கும் 'ச்ச்சும்மா குளிருதுல்ல' என்ற வகையில் பனிப்புகை பரவி இருந்தது. எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, இரிஞாலக் குடா என்று கடந்து ஏழு மணி நேரத்தில் குருவாயூர் வந்தடைந்து பெருமூச்சிட்டது இரயில்.

பயணம் முழுதும் செல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வந்ததில், அடுத்த நாள் நல்ல பலன் கிடைத்தது. பேட்டரி முழுதும் காலி ஆகி விட, தங்கிய லாட்ஜின் பவர் சார்ஜர் ப்ளக் பாய்ண்ட் காலை வாரி விட்டு விட, நாள் முழுதும் செல் தொல்லை இன்றி நிம்மதியாகச் சுற்றினோம்.



தே இரயிலில் உறவினர் குடும்பமும் வர, எல்லோரும் லாட்ஜ் சென்று புதுப்பித்துக் கொண்டோம்.

முதன் முறையாக வேட்டி கட்டப் புகுந்து, அதில் இருக்கின்ற சில Techniques புரியாமல், சரி நாம் fresher தானே என்று லுங்கி கட்டுவது போல் ஓர் இறுக்கி இறுக்கி, மடித்து விட்டு, சுருட்டிக் கொண்டதில் ஓரளவிற்குச் செட்டிலானது. ஆனால் உண்மையாலுமே நல்ல Comfortness இருந்தது. ஆனால் ஒரு கவனத்தை வேட்டி மேல் வைத்துக் கொள்வது அனைவர்க்கும் நலம் பயக்கும்.

நானும் அவ்வப்போது ஒரு நுனியைக் கையில் மடித்துப் பிடித்து, கீழிறக்கி, மடித்து ஒரு கட்டு கட்டி, பின் தாழ இறக்கி என்று நாள் முழுதும் ஒரே 'வேட்டியோடு விளையாடு' தான்...!

இப்போதே அப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றால், வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டி வரும் என்று தெரிந்த நண்பர் ஒருவரால் கூறப் பட்டு இருந்ததால், ஓர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த வேறு சில கோயில்களுக்குச் சென்று விட்டு, மதியம் 12 மணி அளவில் வரிசையில் நின்று கொண்டால், மதியம் 2 மணிக்கு நடை சாத்தும் முன்பு அப்பனை தரிசித்து விடலாம் என்று Planning.

முதலில் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போதே பார்த்து வைத்திருந்த பார்த்தசாரதி கோயில்! அங்கு சென்றோம். மூலவர் பார்த்தசாரதி தான். மூலவருக்கு இடது மூலையில் கணபதி. வலது மூலையில் சாஸ்தா. மற்றும் நாகர், பகவதி என்று எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலவே அனைவரும் இருந்தனர். எல்லோருக்கும் ஒரு ஹாய்!

பின் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றோம். ஹையா..! இது தெலுங்கு கோயிலு! டீஸர்ட்டை கழட்டலு, வேண்டாம்லு என்று நினைத்துச் சென்றால், போர்டு 'ஹி..ஹி' என்றது. இது வேங்கடப்பன் கோயிலாம். இங்கே இவர் பேர் வேங்கடப்பன். அம்மன் பேர்.. கரெக்ட். வேங்கடம்மன் என்று தமிழில் எழுதி விட்டு, மலையாளத்திலும் இந்தியிலும் பகவதி என்று எழுதி வைத்திருந்தார்கள். பேரில் என்ன இருக்கின்றது?

நாங்கள் போன சமயம் வெடி வழிபாட்டிற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இருக்கும் வரை வெடிக்கவேயில்லை. எல்லா தெய்வங்களையும் சென்று கும்பிட்டு விட்டு, அடுத்த கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறி கொஞ்ச தூரம் சென்ற பின் 'பட...பட...' சத்தங்கள் கேட்டன.



அடுத்து மம்மியூர் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.

Mummyயூர்..?

இதற்கும் ஒரு விளக்கப் போர்டு இருக்கிறது. 'மஹிமா'-ஊர் தான் மருவி, மம்மியூர் என்றானதாம். ஆனால் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள் தான்!! இப்பெயர்க் காரணம் இன்னோர் இடத்தில் தெளிவானது.

இது கொஞ்சம் பெரிய கோயிலாகத் தான் இருந்தது. குளம், சிவன், விஷ்ணு, அம்மன், கண்பதி, முருகன் (தமிழில் 'முருகன்' என்றும், மலையாளத்திலும் , இந்தியிலும் 'சுப்ரமணியர்' என்று எழுதி இருந்தது. Linguistic Politics..?) என்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து விட்டு, கொஞ்ச தொலைவில் 'ஆனக் கொட்டாரம் உண்டு' என்று அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

செல்லும் வழியில், கணபதி கோயில் ஒன்றும், பகவதி கோயில் ஒன்றுக்கும் சென்றோம். இந்த பகவதி அம்மன் கோயிலில் அம்மனிடம், சிரித்து தான் பேச வேண்டுமாம். அதாவது ' அத்தைக் குடு! இத்தைக் குடு!' என்று பஞ்சப் பாட்டுப் பாடாமல், 'என்னை இவ்ளோ சந்தோஷமா வெச்சிருக்கியே! ரொம்ப நன்றி! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கற மாதிரி செய்!' என்று மகிழ்வாகச் சொல்லி விட்டு வர வேண்டுமாம்.

இந்தக் கோயிலுக்கு தான் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப்படி நம்ம ஊர் அம்மா, யானை காணிக்கை வழங்கினாராம். (இப்போது புரிகிறதா முன்னோர்களின் தீர்க்கதரிசனம், Mummyயூர்!) அது பெரிய அளவில் பிரபலமாகி, மனிஷங்கர் அய்யரை ஓட விட்டு அடித்தது வரை நடந்தது, தெரிந்த கதை!

ஆனக் கொட்டாரத்தில் 65 யானைகள் வரை இருந்தன. எல்லோரும் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தனர். அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும்...!









ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன. நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். எல்லா ஊரிலும் இப்படி ஒரு பெருமிதப் படுவார்கள் போலும்! நாங்களும் 'அடடே! அப்படியா! இங்கே தான் நடந்தாரா? இப்படித் தான் உட்கார்ந்தாரா?' என்று பிரமிப்பு காட்டி விட்டு, வெளி வந்தோம். இதே ரஜினி சூட்டிங் நடந்தது என்றால், 32-ஐயும் காட்டி இருப்பேனோ என்னவோ..?

பின் அறைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, அப்பன் திருக்கோயிலுக்குச் சென்றோம். பெரிய மலைப்பாம்பு போல் வளைந்து நின்று கொண்டிருந்த ஒரு பெரிய வரிசையில் நாங்களும் இணைந்தோம்.

வெளிர் மஞ்சள் அல்லது சந்தன நிறத்தாலானதும் பட்டு ஜரிகைகள் போட்டதுமான பாவாடை,அதே நிறத்தாலான இறுக்கப் பிடித்த சிறுமிகள் சட்டை, தலைக்கு குளித்து விட்டு ஈரத்தோடோ, காய வைத்தோ, அடிக்கின்ற காற்றில் அலைபாய்கின்ற நீள் கூந்தலை விரித்த படி வைத்து, இரு செவி மடல்களின் மேல் இருந்து, இரு கற்றை முடியை எடுத்து, இணைத்து முடிச்சு போட்டு, ஒரு சன்னமான பாம்பைப் போல் பின்னலிட்டு, நெற்றியில் சின்னக் கீற்றாக சந்தனம் இட்டு உலா வந்து கொண்டிருந்த பூக்களின் கூட்டங்கள், இது 'கடவுளின் சொந்த Country' மட்டும் அல்ல, 'தேவதைகளின் தேசமும்' தான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.



அந்தக் கள்ளன், காதலன் மாயக்கண்ணன் இருக்கும் இடத்தில் கோபியர்கள் கூட்டம் இருப்பது இயல்பு தானே? வேறு எங்கே கோபியர்கள் இருக்க முடியும்? நாம் தான் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அலைபாயும் மனத்தை, கண்களை கொஞ்சமாவது அடக்க வேண்டியதாகின்றது. என்ன செய்ய? (இந்த வழிசலைப் பற்றியும், கண்களுக்கு அளவிறந்த வேலை கொடுத்ததைப் பற்றியும் இங்கு ரொம்ப பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மலை நாடு வளம் மிகுத்தது. அவ்வளவு தாங்க..! ;) )

12:30க்கு நிற்க ஆரம்பித்து, மெது மெதுவாக நகர்ந்து உள்ளே செல்ல நேரம் 2 ஆகி விட்டிருந்தது. சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே (சொன்னால் மனம் கேட்டால் தானே..?) வளைவான வரிசைகளில் நடந்து, நகர்ந்து, கோயிலின் உள்ளே சென்று விட்டோம். பின் அங்கு வரிசை கலைந்து முந்தி முந்திச் செல்ல, அங்கே காட்சி அளித்தான் குருவாயூரப்பன்.

சின்னக் கண்ணன் தான். சந்தனக் காப்பு அலங்காரம். அவனது கருவறைக்கு முன்பு பலப் பல விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டே இருந்தன. இருட்டான கருவறையின் மத்தியில் அபயக் கரம் காட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை பொழிய அந்த அழகுக் கண்ணன் நிற்கிறான். கண்கள் நிரம்ப, மனதில் மகிழ்வு பெருக அவனது திவ்யதரிசனம் கிடைத்தது.

இங்கே 'ஜருகண்டி' எதுவும் அவ்வளவாக இல்லை.

சுற்று வளைவுகளில் சுற்றி வர பிரசாதம் தீர்ந்து விட்டது என்றார்கள்.

'என்ன கண்ணா இது?' என்று மனம் குமைந்த வேளையில், வெல்லப்பாயாசம் கிடைத்தது. பின்னே, அவன் பக்தர்களைச் சும்மா விட்டு விடுவானா என்ன? வெண்ணெய் பிரசாதம் கிடைத்தது. அவனுக்கே பிடித்த வெண்ணெய், நமக்குப் பிடிக்காமல் இருக்குமா? அள்ளி அள்ளி வாயெல்லாம் பூசிக் கொண்டு, விரல்களால் இலையை வழித்து நக்கிக் காலி செய்ததில் Fat கொஞ்சம் அதிகமாகுமே என்ற பயம் புறந்தள்ளப் பட்டது.

உறவினர்கள் மீண்டும் ஒருமுறை அவனை கண்ணார தரிசித்துக் விட்டு வருகிறோம் என்று மீண்டும் வரிசையில் நின்று கொள்ள (அடுத்த நடை திறப்பு 4 மணிக்கு!), நான் 'போதும் ஒருமுறை பார்த்ததே ஒரு ஜென்மத்திற்குத் தாங்கும்' என்று சுற்றக் கிளம்பினேன்.

கோயிலை வலம் வருகையில் கருவறையின் பின்புறம், பெரிய திருக்குளம் என்று பார்த்தேன். தேவசம் போர்டின் புத்தக சாலையில் நுழைந்து சில புத்தகங்கள் வாங்கினேன். கதகளி முக அலங்காரச் சிலை ஒன்று, திருவிழாவின் போது யானை முகத்தில் போர்த்தப் படும் அலங்காரம் ஒன்றின் மாடல், சில குருவாயூரப்பன் படங்கள் என்று கலந்து கட்டி வாங்கியதில் பர்ஸின் கனம் குறைந்தது; மகிழ்வில் மனம் நிறைந்தது.

அடுத்து கிடைத்தனு தான் அற்புத தரிசனங்கள்.

திருக்கோயிலின் பக்கத்தில் இருந்த மேடைக்கு அருகில் இருந்து பாடல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரி என்ன அங்கே என்று பார்க்கப் போக, நல்ல நடன நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

நான் செல்கையில் 'தோடுடைய செவியன்..' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் கொஞ்சம் பெரிய சிறுமிகள் (10 - 13 வயதிருக்கலாம்) நல்ல நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது Sync தப்பினாலும், அதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.



அடுத்து வந்தது சின்னச் சின்னச் சிறுமிகள் (10 வயதிற்குள்) நடனமாடிய ஒரு மலையாளப் பாடல்! என்ன ஒரு நடனம்! எல்லோரும் குட்டிக் குட்டி கிருஷ்ணன்களாக வேடம் இட்டிருந்தார்கள். நடனம் போகப் போக ஒவ்வொரு குழந்தையும் அந்தக் குறும்பனைப் போலவே ஆளுக்கொரு புறம் ஆடத் தொடங்கினர். சிரத்தில் வைத்திருந்த மயிலிறகு கீழே விழுந்தது; கிரீடம் வழுக்கிக் கொண்டே வந்தது; நடன அசைவை நிறுத்தி அதைச் சரி பண்ண வேண்டியது; நழுவிச் சென்று விட்ட மீண்டும் அருகில் ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டியது. நடனத்தில் கையில் வைத்திருந்த குழல் பறந்து எங்கோ விழுந்தது;



அந்த குருவாயூரப்பனைக் காண வந்ததில், அவன் 'நான் என்றும் சிறு குழந்தை தான்! என் பால லீலைகளைப் பார்க்கிறாயா?' என்று எனக்குச் சொல்வது போல், இந்தக் குட்டி பாலகிருஷ்ணன்கள் மேடையில் விளையாடி விட்டுச் சென்றார்கள்.

ஆனால் ஒன்று! அத்தனை பேர்க்கும் முன்னால், பாட்டை முடித்து விட்டுத் தான் குழந்தைகள் கிளம்பின. அதற்கே பாராட்ட வேண்டும்.

மற்றொருமுறை அவனைப் பார்க்க வரவில்லையென்று ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தது. 'இல்லை! என்னை இந்தக் குழந்தைகளின் ஆட்டத்தின் வழி பார்!' என்று கூறியது போல் எடுத்துக் கொண்டேன்.



பின் 'அலைபாயுதே' என்று ஒரு சிறுமி சோலோவாக வந்து அரங்கை கலக்கி எடுத்துச் சென்றாள்.

உறவினர்களும் வந்து விட, நேரமாகி விட்டதே என்று அருகில் இருந்த தேவசம் போர்டின் மியூஸியத்திற்கும், ஓர் அரச மரத்தின் அடியில் அமர்ந்து விளக்குகளின் ஒளியில் ஜெகஜ் ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கும் (என்ன தான் கணபதி, விநாயகர் என்று சொன்னாலும், இந்த பிள்ளையார் என்றால் தான் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார், எனக்கு.!) ஒரு வணக்கம் சொல்லி, கிளம்பினோம்.

ரவு 9 மணிக்கு அதே குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் இரயிலில் ஏறிக் கொள்ள, அதிகாலை 3:30 மணி சுமாருக்கு திருவனந்தபுரம் வந்தடைந்தேன். விடைபெற்று, கரியாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறி, 4:15 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

மீண்டும் ஒரு முறை குருவாயூர்க் குட்டியைச் சென்று பார்த்து நிதானமாக இரண்டு நாட்களாவது அங்கு இருந்து பல முறை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மனத்தை, நித்திரை தேவி தன்வயப்படுத்திக் கொள்ள... Zzzzzz..!

15 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்!
கண்ணன் பாட்டிலேயே முதல் முதலாக...
பயணக் கட்டுரை! :)

//நானும் அவ்வப்போது ஒரு நுனியைக் கையில் மடித்துப் பிடித்து, கீழிறக்கி, மடித்து ஒரு கட்டு கட்டி, பின் தாழ இறக்கி என்று நாள் முழுதும்//

ஹிஹி!
கையில் பிடிச்சி,
தாழ இறக்கி....
இதெல்லாம் கண்டாங்கி சீலை கட்டிக்கறவங்க பண்றது!
அதையெல்லாம் உங்களைப் பண்ண வச்சிட்டான் போல மாயக் கண்ணன்! :)

Radha said...

//சின்னக் கண்ணன் தான். சந்தனக் காப்பு அலங்காரம். அவனது கருவறைக்கு முன்பு பலப் பல விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டே இருந்தன. இருட்டான கருவறையின் மத்தியில் அபயக் கரம் காட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை பொழிய அந்த அழகுக் கண்ணன் நிற்கிறான். //

வசந்த்,
குருவாயூர் கிருஷ்ணனை இது வரை நேரில் பார்த்ததில்லை. மிகவும் சிறிய மிக மிக அழகான கிருஷ்ணன் என்று கேள்வி பட்டு உள்ளேன். ஒரு தடவையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.

Radha said...

ரயில் பயண வர்ணனையை மிகவும் அருமை. :)

// நாள் முழுதும் செல் தொல்லை இன்றி நிம்மதியாகச் சுற்றினோம். //

:)))

Radha said...

//பிள்ளையார் என்றால் தான் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார் //
same here. :)

Radha said...

//இந்த பகவதி அம்மன் கோயிலில் அம்மனிடம், சிரித்து தான் பேச வேண்டுமாம். //
அஹா ! தெய்வம் இப்படி கூட கண்டிஷன் போடுதா? :)
சுவையான தகவல். :)

Radha said...

முழுதும் படித்து முடித்து விட்டேன். :)
குருவாயூரப்பனை வைத்து ஒரு சுவையான கட்டுரை. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
முழுதும் படித்து முடித்து விட்டேன். :)
குருவாயூரப்பனை வைத்து ஒரு சுவையான கட்டுரை. :)//

அடப்பாவி ராதா...
இவ்ளோ நேரம் முழுக்கப் படிக்காமத் தான் பின்னூட்டம் போட்டியா? :)

அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய-ன்னு சொல்லுவாரு ஆழ்வார்!
இரணியனைக் கொன்னுக்கிட்டே தூணில் இருந்து வந்தாராம்....
அது போல நீ பின்னூட்டம் போட்டுக்கிட்டே வந்து படிக்கறீயோ? :)

Radha said...

வசந்த்தின் கட்டுரை என்பதால் திடீரென ஒரு பத்தி முழுக்க அருமையான வர்ணனை வரும்.
பிருந்தாவன வர்ணனைகள் இன்னும் நினைவில் உள்ளன. :)
அது மாதிரி ஏதேனும் இருக்குமோ என்று தேடி வேகமாக (பத்தி பத்தியாக) ஒரு கண்ணோட்டம் விட்டேன். :)
பிறகு மெதுவாக இன்னும் ஒரு முறை முழு கட்டுரையையும் படித்தேன். :)

Raghav said...

நல்லதொரு பயணக்கட்டுரை.

பள்ளிச் சுற்றுலா சமயத்தில் குருவாயூர் சென்றும் அப்பனை தரிசிக்க முடியவில்லை.. எப்போது தரிசனம் கொடுக்க நினைக்கிறானோ..

Rajewh said...

nice its

குமரன் (Kumaran) said...

Yes! Nice it is! :-)

இரா. வசந்த குமார். said...

அன்பு கண்ணன் அன்பர்களுக்கும்,

நன்றிகள். :)

passerby said...

ஏன் ஆழ்வார்கள் குருவாயூரைப்பற்றி பாடவில்லை ?

ஆராயலாம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு கள்ளபிரான்...

நல்ல கேள்வி. கே.ஆர்.எஸ். பதில் சொல்வார் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

வசந்த்

நீங்க வேஷ்டி (முண்டு ? ) கட்ட கத்துக்கிட்டீங்களா ? குருவாயூர் குட்டியை அப்புறம் போய் பார்த்தீங்களா ? ( அட.. நான் சொல்றது குட்டி கிருஷ்ணனை )

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP