Thursday, March 18, 2010

பி.சுசீலா - ஜெயதேவர் அஷ்டபதி - காதலா? காமமா?

பிருந்தாவனம்! யமுனைத் துறை!
புன்னை மரத்து நிழல் கீழே, நினைவென்னும் காதல் மடி மேலே, தலை வைத்து மெல்லியதொரு தூக்கம்! கலங்காது கை கோர்த்து சேரும்...கண்ணோரம் ஆனந்த ஈரம்...

அப்போது, இசையரசி பி.சுசீலாம்மா பாடிக் கொண்டே, தலையைத் தடவிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்த உறக்கத்தின் கிறக்கத்தில் உதித்தது தான்.....இந்தப் பதிவு! இப்போது என் துக்கங்கள்-தூக்கங்கள் எல்லாமும் அப்படியே!!
ஜெயதேவர்-ன்னா ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! (1200 CE)
அஷ்டபதி-ஜெயதேவர்-ன்னு சொன்னாக்கா, இன்னும் சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞரான, அவர் எழுதிய காதல் காவியம் தான்.....அஷ்டபதி என்கிற கீத-கோவிந்தம்!

பேரில் என்னமோ கீத கோவிந்தம்-ன்னு "கோவிந்தம்" இருக்கு!
ஆனால் படிக்கறப்போ "வேற மாதிரி" இருக்கே!
இது பக்திக் காவியமா? காதல் காவியமா? காமக் காவியமா? :)

எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எனக்கு எதுவும் தெரியாது! :)

சரி, அது என்ன அஷ்ட-பதி?
கல்யாணம் ஆகும் போது, தீவலம் செய்து, 7 அடி எடுத்து வைப்பதை, சப்த-பதி-ன்னு சொல்லுவாய்ங்க!
இது கல்யாணம் ஆவதற்கும் முன்னாடியே (Pre Marital) என்பதால், ஒரு "அடி" கூடவா? அதான் அஷ்ட-பதியா?? :)

மொத்தம் 12 சர்க்கம், 24 பாடல்கள்!
ஒவ்வொரு பாட்டும் 8 பத்திகள், பதிகள்! அதுவே அஷ்ட பதி!

அஷ்டபதி என்பது சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஒரு நாட்டிய நாடகம்!
புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா?? ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?


* ராதையின் அகங்காரம், ராதையின் திமிர்,
* ராதையின் கோபம், ராதையின் தாபம்,
* ராதையின் ஊடல், ராதையின் தேடல்,
* ராதையின் சாதல், ராதையின் காதல்,
* ராதையின் பேதை, ராதையின் மேதை,
இவை எல்லாமே நாடகத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கின்றன!

அதனால் தான், பின்னாளில்...
கண்ணனின் வாழ்வு கூட்டத்தில் கலக்க, ராதையின் வாழ்வு தனிமையில் கலந்து போனது!
கண்ணன் தனக்கா? உலகத்துக்கா? என்று வந்த போது...
தன் முகம் காட்ட மறுத்தாள்! முகவரியை மறைத்தாள்!

வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!

அவள் இருந்தாளா? = அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும்! எனக்கும் தெரியும்!
கண்ணனின் சோலையில் அவள் சுகந்த பரிமள வாசத்தை...காண முடியாது! முகர மட்டுமே முடியும்! முகர...முகர...முருகா!

* என் பால் நோக்காயே ஆகிலும்...உன் பற்றல்லால் பற்றில்லேன்!!
அவள் "பரிசுத்தமான காமம்"! = அதுவே "கீத கோவிந்தம்"!!!


திரைப் பாடலைக் கேட்டுக் கொண்டே, பதிவை வாசியுங்க!


அல்லது...கேட்க/தரவிறக்க மட்டும் இதோ!
பதிவின் இறுதியில் இதர கலைஞர்களின் குரலில், இதே பாடல்!வடமொழியில் உள்ள வரிகளை, கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழாக்கி உள்ளேன்!
தமிழில் சரியாப் பொருந்தி வருதா?-ன்னும் பார்த்துச் சொல்லுங்க!


படம்: தெனாலி ராமகிருஷ்ணா (தெலுங்கு)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
(மயக்கும்) குரல்: சுசீலாம்மா
கலைஞர்கள்: ஜமுனா, பானுமதி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித
கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

சந்தனம் சிந்திடு்ம் நீல மேனி தனில்
பொன்பட்(டு) உடை வனமாலை!
தந்தன தந்தன குண்டலம் ஆடிட
மோகனப் புன்னகை லீலை!!
கண்ணனின் கன்னியர் நாணமும் ஆசையும்
கண்டு கொண்டே விளை யாடினரே!

காபி விலாச விலோல விலோசன
கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ அதிகம் - மது
சூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவளொரு தாரகை, அவள்விழி முந்திட,
அவன் மனம் முந்திய நேரம்!
அவன்முகத் தாமரை, அவள்முகம் விரிந்திட,
மதுசூ தனன் இதழ் ஈரம்!

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி
காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப
ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!
நகைத்தனன் அவனும், பகைத்தனள் அவளும்,
இருப்பினும் கூடினள் கோதை!
(கண்ணனின் கன்னியர்...விளையா டினரே)

ஸ்ரீஜய தேவ பணிதம நேமம்
அத்புத கேசவ கேளி ரகஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் வித
நோது சுபாமி யஷாஸ்யம்!

இதுஜெய தேவர் அருளிய தாஸ்யம்
பிருந்தா வன விளை யாடல் ரகஸ்யம்
அற்புத மோகன கீத கோவிந்தம்!
அருளிடும் அவன்திரு் பாதர விந்தம்!!

ராகம்: காமவர்த்தினி
தாளம்: ஆதி
மொழி: வடமொழி
வரிகள்: ஜயதேவர்
காவியம்: அஷ்டபதிசுசீலாம்மா தனியாகப் பாடுவது: (Dont miss the veeNai interlude at the beginning)


சுசீலாம்மாவின் முன்பு, பூஜா என்ற பெண் முயற்சி செய்கிறார்!


கர்நாடக இசையில்:
* Priya Sisters

சற்றே மெல்லிசையில்:
* உன்னி கிருஷ்ணன்

பரதேசி என்னும் தெலுங்குப் படத்தில்:
* மனோ,சங்கீதா,சுபா (Just opening lines for a cinema song)

ஒரிய மொழி இசையில்:
* In Oriya Style, Prafulla Mohanty & Bhubaneshwari Mishra (The 1st one min is intro)
* Chorus, Nirmala Mishra & Rakhal Mohanty

சுசீலாம்மாவை நினைவிருத்தி...தமிழில் யாரேனும் எனக்குப் பாடித் தருகிறீர்களா?
உறக்கத்தின் கிறக்கத்தில் உறங்கச் செல்கிறேன்.....சிற்றஞ் சிறுகாலே 4:45!
குறிப்பு:
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடம் - கிருஷ்ணா நீ பேகனே,
* மலையாளம் - வழிகாட்டுக வழிகாட்டுக,
* தெலுங்கு - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரம் - பகவத் நமமூஸ்
* வடமொழி் - பாவன குரு/அமர ஜீவிதம்/அஷ்டபதி,
* இந்தி் - பஸோ மொரே...மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்பன போன்றவை, எப்போதாவது ஒன்னு ரெண்டு வரும்!

31 comments :

Raghav said...

கீத கோவிந்தம் அருமையோ அருமை.. முதன்முதல் கேட்கிறேன்.. உங்க மொழிபெயர்ப்பு அப்புடியே கண்ணனிடம் கொண்டு செல்கிறது..

Raghav said...

//துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!//

கண்ணனுடன் கலந்தனள் பாவை..
எம்மையும் அவன் காலடியில் சேர்த்தனள் ராதை...

Sri Kamalakkanni Amman Temple said...

ஏங்குதே......... மனம்
கண்ணா!!!!!!!!

sury said...

அஷ்டபதி கீத கோவிந்தக் காட்சிகளை என்னமா கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள் !

அதை பார்த்து பார்த்து ரசிக்கமுடியாமல், சுசீலா அம்மாவை பாடவிட்டு, என்னையே அறியாமல் என் கண்களை மூடவைத்து
ஒரு ஸெவந்த் ஹெவன் ஆஃப் ஜாய் க்கே கொண்டு சென்றுவிட்டீர்கள் !!

அது சரி .. சுசீலா பாடுவது மோஹனம் அல்லவா ? காம வர்த்தினி என்று எப்படி ?

எப்படியோ ! ப்ரபத்தி என்ன என நான் குமரனிடம் சந்தேகம் எழுப்பப்போய், கண்ணபிரான் காலடியில்
அஷ்டபதியை க்கேட்கவேண்டுமென்று
சித்தித்திருக்கிறது. என் பாக்யமே பாக்யம். !!

அஷ்டபதியில் கேளதி (!) மம ஹ்ருதயே பாடலைப்பற்றி சற்று விவரியுங்களேன். விச்ராந்தியாகக்
கேட்கிறேன்.

// எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எதுவும் தெரியாது! எனக்கு எதுவும் தெரியாது! //

தெரியாதபோதே இவ்வளவு என்றால், தெரிந்துகொண்டால் ? !!


சுப்பு ரத்தினம்.

Raghavan said...

ஜெயதேவர் அஷ்டபதி - சிருங்கார ரசம் கொண்டது. ஆழ்ந்த பக்தியில்
ஈடுபாடு - அதன் அர்த்தம் புரியாததால்
இன்னும் நம்மவர்கள் ஜெயதேவரை
கிழிக்கவில்லை .

அன்புடன்
ராகவன்.வ

PS: we missed your blog for a
long time. long

இரா. வசந்த குமார். said...

ஆஹா... செம கிள்கிள்ப்பா இருக்கு..! ஜெயதேவர் அருமையாக எழுதியிருக்கார்..!

கே.ஆர்.எஸ், இதழ்-கள் படமே பதித்து விட்டதால், அதே கேடகிரியில் வரும் ஓர் ஆசிரியப்பாவையும் இங்கே பின்னூட்டமாக வெளியிடுவதில் களிக்கிறேன். :)

***

பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்;
சேர்த்துக் கொல்; செதில் உரித்த
செம்மீன் நிலத்தில்காண்;
வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
வெயிலைக் குளிராக்கு;
போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
பொழிலில் திளைத்துப்பார்.

கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
குத்தும் மார்நுனிகள்;
காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
கருமைப் புருவமிடைச்
சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
சன்னல் மேலொட்டி,
ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
எங்கும் முத்தம்தா!

இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
இதழ்மேல் வரிகளைக்கல்;
நெருக்கம் வளர்த்து நெஞ்சில் முதுகில்
நெடுங்கோ டிழைத்துக்கொள்;
சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
சுழலில் இறங்கிப்பெய்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்தும்
தவறைச் சரியாய்ச்செய்;

***

போற்றலும், தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..! :)

குமரன் (Kumaran) said...

கிருஷ்ணபிரேமையில் திளைக்க கீத கோவிந்தம் ஒரு அருமையான வழி!

sury said...

ஏதோ ஞாபக மறதியில் " கேளதி மம் ஹ்ருதயே " என்று எழுதிவிட்டேன். அது சதாசிவ ப்ரமேந்திரர் எழுதியது.
நான் எழுத நினைத்தது " ப்ரளய பயோத ஹரே" எனும் அஷ்டபதி பாடல்.

சுப்பு ரத்தினம்.

Tulsi said...

ஆஹா.... இப்போதான்
நந்தலாலா கோவிலுக்குப்போய் அந்த வேணுகோபாலை தரிசித்தோம்.

வீட்டுக்கு வந்தால் இங்கே அஷ்டபதி.

ரொம்ப நன்றி கே ஆர் எஸ்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இரா. வசந்த குமார். said...
கே.ஆர்.எஸ், இதழ்-கள் படமே பதித்து விட்டதால்,//

இதழ்-"கள்" படமா? எங்கே வசந்த்? நான் எதுவும் போடலையே! அது வெறுமனே Tulips (Two Lips) படம் தானே? :)

//அதே கேடகிரியில் வரும் ஓர் ஆசிரியப்பாவையும் இங்கே பின்னூட்டமாக வெளியிடுவதில் களிக்கிறேன். :)//

அருமை! சில வரிகளை மனப்பாடம் செஞ்சிட்டேன்! esp...
** நெருக்கம் வளர்த்து நெஞ்சில் முதுகில்
நெடுங்கோ டிழைத்துக்கொள்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்தும் தவறைச் சரியாய்ச்செய்**

//போற்றலும், தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..! :)//

இங்கே யாரும் இதற்கெல்லாம் தூற்றி விட மாட்டார்கள், வசந்த்! யாம் இருக்க பயம் ஏன்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghavan said...
PS: we missed your blog for a long time. long//

:)
Sorry Raghavan! :)

// ஜெயதேவர் அஷ்டபதி - சிருங்கார ரசம் கொண்டது. ஆழ்ந்த பக்தியில்
ஈடுபாடு - அதன் அர்த்தம் புரியாததால்
இன்னும் நம்மவர்கள் ஜெயதேவரை கிழிக்கவில்லை//

ஜெயதேவர் வடமொழியில் எழுதி இருப்பதாலோ என்னவோ?...

ஆனால் தோழி கோதையை, "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை *கொங்கை மேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா"-வுக்கு எப்பவோ கிழித்து விட்டார்கள் பகுத்தறிவாளர்கள்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...//

அட, என் பதிவில் இன்று இரண்டு ராகவன்களா? :)

//கீத கோவிந்தம் அருமையோ அருமை.. முதன்முதல் கேட்கிறேன்..//

கீத கோவிந்த அறிமுகம், இன்னும் வரும்!

// உங்க மொழிபெயர்ப்பு அப்புடியே கண்ணனிடம் கொண்டு செல்கிறது..//

ஏன், ராதையிடம் கொண்டு செல்லவில்லையா? :)
இங்கும் அவள் முகவரியை மறைக்கிறாளா என்ன?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
கண்ணனுடன் கலந்தனள் பாவை..
எம்மையும் அவன் காலடியில் சேர்த்தனள் ராதை...//

கண்ணனிடம் கலக்கவில்லை! கலங்கி மட்டும் போனாள்!
பிணக்கு விளைந்து, பின்பு தோழி ராதைக்கு அறிவுரை கூறும் கட்டம் எல்லாம் அடுத்த பகுதியில்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Sri Kamalakkanni Amman Temple said...
ஏங்குதே......... மனம்! கண்ணா!!!!!!!!//

:)
நலமா ராஜேஷ்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//sury said...//

வாங்க சூரி சார்! அம்மாவும் நீங்களும் நலம் தானே?

//அதை பார்த்து பார்த்து ரசிக்கமுடியாமல், சுசீலா அம்மாவை பாடவிட்டு, என்னையே அறியாமல் என் கண்களை மூடவைத்து ஒரு ஸெவந்த் ஹெவன் ஆஃப் ஜாய் க்கே கொண்டு சென்றுவிட்டீர்கள் !!//

:)
இசையரசி தானே அதைச் செய்தார்கள்! அவர்களுக்கே உங்களது பாராட்டு சேர வேண்டும்!

//அது சரி .. சுசீலா பாடுவது மோஹனம் அல்லவா ? காம வர்த்தினி என்று எப்படி ?//

ஆமாங்க சார்! சுசீலாம்மா மோகனத்தில் பாடறாங்க!
ஆனால் மரபு வழியில் ஜெயதேவரின் இந்தப் பதிக்கு இட்ட ராகம் காமவர்த்தினி (எ) பந்துவராளி!

//எப்படியோ ! ப்ரபத்தி என்ன என நான் குமரனிடம் சந்தேகம் எழுப்பப்போய், கண்ணபிரான் காலடியில் அஷ்டபதியைக் கேட்கவேண்டுமென்று சித்தித்திருக்கிறது//

:)
உங்கள் கேள்வியான, கண்ணனுக்கே ஆமது காமம் = பக்தியா? ப்ரபத்தியா?
இதற்கு, குமரன் அண்ணாவின் பதிவில், நேற்று தான் பதில் இட்டேன்!
பின்பு விமானம் பிடிச்சி நியூயார்க் வந்து சேர நள்ளிரவு ஆகி விட்டது!

வரும் வழியில் யோசனை எல்லாம் இந்த அஷ்டபதியில் தான்! அதான் வந்து சேர்ந்தவுடன்...இந்தப் பதிவு...
மனம் முந்தியதோ, கரம் முந்தியதோ? :)

//தெரியாதபோதே இவ்வளவு என்றால், தெரிந்துகொண்டால் ? !!//

தெரியத் தெரியத்
தெரியாமை தெரியும்!
:)

குமரன் (Kumaran) said...

//தெரியத் தெரியத்
தெரியாமை தெரியும்!
:)//

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

பல வித அறிவு நூல்களைக் கற்கும் தோறும் அதில் அறிவு ஏற்பட்டு இது வரை அந்த அறிவு இல்லாமல் இருந்தது எப்படி தோன்றுகிறதோ அதே போல் இவளுடன் கூடும் போதெல்லாம் மேன்மேலும் இன்பம் விளங்கி இந்த சிவந்த ஆடை அணிகலன் அணிந்த பெண்ணின் மீது மேன்மேலும் காதல் தோன்றுகிறது.

ஒரே நூலையும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது புதிது புதிதாகப் பொருள் தோன்றுவதைப் போல் ஒரே பெண்ணான இவளுடன் மீண்டும் மீண்டும் கூடும் போது புதிது புதிதாக இன்பம் தோன்றி இவள் மேல் மேன்மேலும் காதல் தோன்றச் செய்கிறது. புதிய அறிவு பழைய அறிவை சிறியதாக்குவதைப் போல் புதிய காதல் பழைய காதலை சிறியதாகக் காணச்செய்கிறது. காலம் செல்ல செல்ல காதல் கூடும்; கூடுகிறது என்பது உட்பொருள்.

அறிதோறும் - புதிய அறிவினைப் பெறும் போதெல்லாம்

அறியாமை - இதுவரை இருந்த அறியாமை

கண்டற்றால் - தெரிய வருவது போல்காமம் செறிதோறும் சேயிழை மாட்டு - சிவந்த ஆடைகளை அணிந்த இந்த அழகிய பெண்ணின் மேல் உள்ள காதல் மென் மேலும் வளர்கிறது.


http://koodal1.blogspot.com/2010/03/2_17.html

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அஷ்டபதியில் கேளதி (!) மம ஹ்ருதயே பாடலைப்பற்றி சற்று விவரியுங்களேன். விச்ராந்தியாகக் கேட்கிறேன்//
//நான் எழுத நினைத்தது " ப்ரளய பயோத ஹரே" எனும் அஷ்டபதி பாடல்//

ப்ரளய பயோதி ஜலே என்ற ஜயதேவ அஷ்டபதியைக் கேட்கறீங்க-ன்னு நினைக்கிறேன்!
அது தசாவதாரங்கள் ஒவ்வொன்னா வரும்! அதான் முதல் அஷ்டபதி! சிருங்கார காவியத்தில் கடவுள் வாழ்த்து! :)

இனி வரும் பதிவில் ஒவ்வொன்னாத் தொட்டுச் செல்கிறேன்!
இதோ உங்க விஷ்ராந்திக்கு, இப்போதைக்கு, எம்.எஸ்.அம்மா குரலில்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்
//அறிதோறும் - புதிய அறிவினைப் பெறும் போதெல்லாம்

அறியாமை - இதுவரை இருந்த அறியாமை

கண்டற்றால் - தெரிய வருவது போல்//

:)
நான் என்னுடைய தெரியாமையைச் சொல்ல வந்தேன்-ண்ணா :)

நீங்க சொன்ன குறளை, நான் இப்படியும் சில(பல) சமயம் நினைச்சிக்குவேன்!

நூலை அறிதோறும், ஆகா...நம் அறியாமை இன்னும் எவ்ளோ இருக்கே என்று தெரிய வருவது போல்...

அன்பே, உன்னைச் சேரும் போதெல்லாம்...ஆகா...உன்னிடம் நான் அறியாத இடங்கள் இன்னும் எவ்ளோ இருக்கே...
- என்று தான் இந்தக் குறளுக்கு எனக்குப் பொருள் தோன்றும்! :)

sury said...

//அன்பே, உன்னைச் சேரும் போதெல்லாம்...ஆகா...உன்னிடம் நான் அறியாத இடங்கள் இன்னும் எவ்ளோ இருக்கே...//


அடடா !! அடடா !!1
அட்டகாசம் !
தூள் கிளப்பிட்டீர்களே !!

எங்காத்து மாமி, தோளுக்குப்பின்னாடி வந்து நின்னூண்டு
' கொஞ்சம் அடக்கி வாசிங்கோ ' என்று சொல்றாளே !!சுப்பு தாத்தா

சிவமுருகன் said...

nalla irukku!

Anonymous said...

யாரு அது ? எனக்கு பிரபுதேவா தான் தெரியும் !! நயன் தாரா பாய் ஃப்ரென்ட்.
இது வேற யா ?

Radha said...

//வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!//

வியாசர் அருளிய புராணங்களுள் பிரம்மாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் இவற்றில் ராதை காணக் கிடைப்பாள். கீத கோவிந்தம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ள ராதா-கிருஷ்ண லீலைகளை தழுவி எழுதப்பட்டது என்பர்.

பாடல்களுக்கு மிக்க நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
வியாசர் அருளிய புராணங்களுள் பிரம்மாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் இவற்றில் ராதை காணக் கிடைப்பாள்//

ராதா
வியாசர் இந்தப் புராணங்களை அருளவில்லை!
வெறும் தொகுக்க மட்டுமே செய்தார் என்று சொல்லப்படுவது அல்லவா?

கண்ணன் பற்றிய மூல நூல்களான பாகவதத்திலும், மகாபாரதத்திலும் ராதை ஏனோ காணவில்லை! :((
தன் கண்ணனுக்காக, தன் முகவரியை மறைத்தாளோ?

//கீத கோவிந்தம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ள ராதா-கிருஷ்ண லீலைகளை தழுவி எழுதப்பட்டது என்பர்//

ஆமாம்!
கீத கோவிந்தம் பற்றி கண்ணன் பாட்டில், ராதாவாகிய நீங்க தொடர் எழுதினா நல்லா இருக்குமே!

//பாடல்களுக்கு மிக்க நன்றி//

:)
நன்றியெல்லாம் வேணாம்! தமிழ்-ல பாடிக் குடுங்களேன்! பொருள் எல்லாம் சரியா இருக்கு தானே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Anonymous said...
யாரு அது ? எனக்கு பிரபுதேவா தான் தெரியும் !!//

:)
இவரு ஜெயதேவா-ங்க! பிரபுதேவா அல்ல!

//நயன் தாரா பாய் ஃப்ரென்ட். இது வேற யா ?//

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிவமுருகன் said...
nalla irukku!//

என்ன சிவா, ஆளையே காணோம்?

அதே தான் நீங்களும் என்னைக் கேட்க நினைச்சீங்களா? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// sury said...
எங்காத்து மாமி, தோளுக்குப்பின்னாடி வந்து நின்னூண்டு ' கொஞ்சம் அடக்கி வாசிங்கோ ' என்று சொல்றாளே !!//

ஹா ஹா ஹா
அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும் சூரி சார்!

//அன்பே, உன்னைச் சேரும் போதெல்லாம்...ஆகா...உன்னிடம் நான் அறியாத இடங்கள் இன்னும் எவ்ளோ இருக்கே...//

உன்னிடம் நான் அறியாத இடங்கள்-ன்னா = உன் குணம், உன் பண்பு, உன் வெட்கம், உன் கலை...இதெல்லாம் தான் நான் சொல்ல வந்த அர்த்தம்! - அப்படின்னு சொல்லிச் சமாளிச்சிருவேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Tulsi said...
ஆஹா.... இப்போதான் நந்தலாலா கோவிலுக்குப்போய் அந்த வேணுகோபாலை தரிசித்தோம்//

வாங்க துளசி! எந்த ஊரு நந்தலாலா?

//வீட்டுக்கு வந்தால் இங்கே அஷ்டபதி. ரொம்ப நன்றி கே ஆர் எஸ்.//

கேட்டதும் கொடுப்பவனே கண்ணா கண்ணா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கிருஷ்ணபிரேமையில் திளைக்க கீத கோவிந்தம் ஒரு அருமையான வழி!//

நம்ம ராதாவைத் தலைவராப் போட்டு, கீத கோவிந்தம்-ன்னு ஒரு புது வலைப்பூ தொடங்கிறலாமா அண்ணா? :)

Dr.Rudhran said...

another beautiful jayadev composition in susheela's voice is in the film meghasandesam (telugu). the song is-
radhika krishna..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நன்றி ருத்ரன் ஐயா...
என் அடுத்த பதிவையெல்லாம் நீங்களே பின்னூட்டமாச் சொல்லிட்டா எப்படி? :)
அந்த அஷ்டபதியும் சுசீலாம்மா தான்! ராதையின் இந்த வாழ்க்கைக்கு ஆஸ்தான பாடகர் அவங்க தான் போல!

Janetnczf said...

Lithium Cobalt and Lithium Manganese were the first to be produced in commercial quantities but Lithium Iron Phoshate is taking over for high power applications because of its improved safety performance. Memory Booster kills any running apps that aren't necessary. I dont know how we managed any camping trips without it.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP