Wednesday, January 07, 2009

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்
(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்
நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்
ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)




அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர் நண்பர் இரவிசங்கரோட கட்டளைப்படி இந்தப் பாடலை வைகுண்ட ஏகாதசித் திருநாளாகிய இன்று இங்கே இட்டுவிட்டேன். பாடலின் பொருள் முழுவதுமாகப் புரியவில்லை. அதனால் எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் இருக்கலாம்; அப்படித் தென்பட்டால் திருத்துங்கள். நானும் திருந்தி இடுகையிலும் திருத்திவிடுகிறேன்.

என்றும் அழியாத, புகழில் குறைவு படாத வாழ்க்கையைக் கொண்டவன் அமரஜீவிதன். ஆசை, வெறுப்பு, கொடையின்மை, மயக்கம், கருவம், பொறாமை போன்ற குணங்களால் இறந்தவர் போலிருப்பவர்களையும் உயிர்ப்பிக்கும் வாய்மொழிகளைக் கொண்டவன் அமுதவாசகன். இவ்வகைக் குணங்களால் ஈனத்தன்மை அடைந்தவர்களைப் புனிதமாக்குபவன் பதிதபாவனன். அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.

வேணுகானம் என்னும் புல்லாங்குழலிசையால் மயக்குபவன் முரளிமோஹனன். அசுரத்தன்மைகளை அடக்கி ஒடுக்குபவன் அசுரமர்த்தனன். கீதையெனும் பாடலைப் போதித்தவன் கீதபோதகன். அவனுடைய திருநாமம் கிருஷ்ண என்னும் மந்திரம்.

மென்மையானவன் நளின தைவதன். மன்மதனைப் போன்ற அழகு உருவம் கொண்டவன் மதனரூபகன். காளிங்கன் என்னும் நாகத்தின் மேல் நடனமாடியவன் நாகநர்த்தனன். கோவிந்தா என்று கூவியழைத்தவளுக்கு அவள் மானம் காக்கத் துணிகளைத் தந்தவன் மானவஸ்திரன். பாண்டவர்கள் என்னும் ஐவரால் தொழப்பட்டவன் பஞ்சசேவகன். பஞ்சஜனன் என்ற சங்கு வடிவ அசுரனை வென்று அவனைத் தன் திருக்கர்த்தில் தாங்கியவன் பாஞ்சசன்னியன்.

எல்லாரையும் எல்லாவற்றையும் காப்பவன் ஸர்வரக்ஷகன். தருமம், இவன் என்று வந்தால் இவனையே தருமத்திற்கு முன்னர் கொள்ள வேண்டும் படி தருமமே வடிவம் ஆனவன் தருமதத்துவன். அன்பினால் கட்டுப்படுபவன் ராகபந்தகன். ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் ராசலீலகன்.

13 comments :

அது சரி(18185106603874041862) said...

இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...ரொம்ப நன்றி...

அதே மாதிரி...அலைபாயுதே கண்ணா சுதா ரகுநாதன்....அதுவும் ரொம்ப நல்லாருக்கும்!

குமரன் (Kumaran) said...

நன்றி அது சரி அண்ணே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ஏகாதசிப் பதிவாய் கண்ணன் பாட்டில் ஏதாச்சும் வரணுமே-ன்னு நெனைச்சேன்!

நினைத்தேன் வந்தாய் நூறு வயது!
- இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர்//

அபசாரம்! அபசாரம்!

பரிசாரகர்: ஸ்ரீ பாதம் தாங்குவார் எங்கேஏஏஏஏஏஏ?

அடியேன், நாயிந்தே....இங்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பாட்டை எழுதியது யார் குமரன்? குறிப்பு கொடுங்க!

//நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்!
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்!//

எப்படி வார்த்தை வந்து விழுது பாருங்க! இறைவா! எங்க எல்லாருக்கும் மானவஸ்திரம் தா!

//ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்//

ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்//

வாடா...விளையாட! சுவாமி ராச லீலை...வாடா...விளையாட! :)
I like this Cool Guy! :))

குமரன் (Kumaran) said...

அதான் சொன்னேனே இரவி. உங்கள் கட்டளைப்படியே தான் இந்த இடுகை எழுதப்பட்டது. தேவரீர் திருவுள்ளத்தின் நினைப்பைச் செயல்படுத்தித் தேவரீரின் திருவுள்ள உகப்பைக் காண்பது தானே அடியேனின் கடமை. :-)

குமரன் (Kumaran) said...

பாட்டை எழுதுனது கவியரசர் கண்ணதாசன்; இசையமைச்சு பாடுனது மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் - என்று நினைக்கிறேன். சரி தானா இரவி?

Raghav said...

ரொம்ப நாள் கழித்து அமரஜீவிதம் பாடலை கேட்க தந்தமைக்கு நன்றி குமரன்..

ஆனா என்ன, ஏகாதசிக்கு கேட்க முடியவில்லை..

Raghav said...

//அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.//

சாதகம் செய்பவன் சாதகன் என்று எடுத்துக் கொள்ளலாமா?? அல்லது சாதகமாக (பக்கத் துணையாக) இருப்பவன் என்று கொள்வதா?

Raghav said...

//ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் //

திரு அரிமேய விண்ணகர் குடமாடு கூத்தரா :)

குமரன் (Kumaran) said...

இராகவ். ஏகாதசிக்குக் கேட்காட்டி என்ன? துவாதசிக்குக் கேட்டீர்கள் தானே? :) கண்ணன் புகழைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் நேரம் காலம் இடம் எல்லாம் ஒரு தடையா என்ன? :-)

குமரன் (Kumaran) said...

இராகவ், சாதகன் என்றால் பொதுவாக ஆன்மிகப் பயிற்சிகள் செய்பவன், இசைப்பயிற்கள் செய்பவன், கலைப்பயிற்சிகள் செய்பவன் என்ற பொருள் இருக்கிறது; நீங்கள் சொன்னது போல் சாதகம் செய்பவன் சாதகன். அதனால் பக்தர்களை அடைய சாதகம் செய்பவன் பக்தசாதகன் என்று சொல்லலாம்; இல்லாவிட்டால் எதற்கு மீனமாய், ஆமையாய், மானமிலாப் பன்றியாய் என்றெல்லாம் அவன் கீழிறங்கி வருகிறான்? :-)

இங்கே பக்தர்களுக்குச் சாதகமாய் இருப்பவன் என்ற பொருளைக் கொண்டேன்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP