Tuesday, January 22, 2008

85.தைப்பூசம்-ஜோதி தரிசன வீடியோ-வள்ளலார் பாடும் கண்ணன் பாட்டு!

வள்ளலார் ஜோதியுரு அடைந்த திருநாள் தைப்பூசம்! - இன்று ஜனவரி 23-2008! (ஆங்கிலத் தேதியென்றால், January 30, 1874! காந்தியடிகளும் பின்னாளில் இதே நாளில் மறைந்ததும் ஒரு ஒன்றான நிகழ்வு தான்!)

காரேய்க் கருணை இராமானுசா என்று சொல்லுவார்கள்! அது பதினோராம் நூற்றாண்டு!
ஆனால் அண்மையில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) வந்துதித்த இன்னொரு காரேய்க் கருணைப் பெருஞ்சோதி நம் வள்ளல் பெருமான்!
ஜீவ காருண்யம் - அனைத்துயிர்க்கும் கருணை - இது செழிக்கவே வந்துதித்த அண்ணல் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார்!

வேற்றுமைகளும் மத மாச்சர்யங்களும் ஓங்கி இருந்த காலம் அது! வெறும் கூச்சலே வழிபாடாகிப் போன கொடுமை!
தீப மங்கள ஜோதீ நமோ நம என்று இறைவனை ஜோதி வடிவத்தில் வழிபட்டு, அதன் மூலம் வேற்றுமையை ஒழித்த வெள்ளுடை வேந்தர் பெருமான்!

வள்ளலார் இளங்காளைப் பருவத்தில், செக்கச் செவேல்-னு ரொம்ப அழகா இருப்பாராம்! கண்டவர் மயங்கும் முகஅழகு, வடிவழகு (ஆண்களுக்கு handsome என்று சொல்கிறோமே, அது)! அப்போது திருவொற்றியூரில் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னைப் பாரிமுனையில் உள்ள கந்த கோட்டத்துக்கு நடந்தே வந்து சேவிப்பது இராமலிங்கரின் வழக்கம்! தம்பு செட்டித் தெரு-ன்னு இப்பவும் சொல்லுவாங்க! அது வழியா நடந்து வருவார் அண்ணல்!

எதிரே வரும் மங்கையர் யாராச்சும் எதேச்சையாகத் தன்னைப் பார்த்து, தன் முகப்பொலிவால் மயக்குறக் கூடாதேன்னு, இழுத்த துணியைப் போர்த்திய படி, குனிந்த தலை நிமிராமல், பாடல்களை ஜபித்துக் கொண்டே வருவாராம்! - இப்படியும் ஒரு பிள்ளை! அதுவும் இள வயதில்! :-)

மற்றவனைப் பார்த்து "நீ முதல்ல திருந்துடா"ன்னு சொல்லும் காலம் இது! ஆனா பிறர் குற்றங்களையும் தன் குற்றங்களாக ஏற்று, நீ திருந்திக் கொள்-னு சொல்வதைக் காட்டிலும், தன்னைச் சரி செய்து கொள்கிறார் பாருங்கள்! இவரை என்னவென்று சொல்வது! - புனித பிம்பமா? இல்லை மனிதருள் புனிதரா?

அப்படி நடந்து வரும் போது பாடின ஒரு பாட்டு தான்...
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார், உறவு கலவாமை வேண்டும்!!
- இந்தப் பாடல் மிகவும் பிரபலம்! சென்னைக் கந்த கோட்டத்து முருகப் பெருமான் மேல் பாடியது!
- அதே போல் கண்ணன் மீதும் இராமன் மீதும் பல பாடல்கள் புனைந்து வாழ்த்தி உள்ளார் வள்ளலார் பெருமான்!

திருவருட்பா திருமுறையில் இவற்றை சேர்ந்திசையாகத் தொகுத்து தந்துள்ளார்! குறிப்பாக ஜீவ காருண்யம், புலால் மறுத்தல் கொள்கைகளில் இராமபிரானைக் காட்டி வள்ளலார் செய்துள்ள பாடல்கள்/கட்டுரைகளை ஒரு முறை வாசிக்க வேண்டும்! இன்றைய கண்ணன் பாட்டில் வள்ளலார் அளித்த அருட்பாவைப் பார்ப்போம்!



திருவருட்பா - இரண்டாம் திருமுறை - 100/101 வது பாடல்! கீழே கேளுங்கள்! (நன்றி: vallalar.org - தர்மலிங்க சுவாமிகள் குழுவினர்)
Kaaraaya_Vanna_Val...

இராம நாம சங்கீர்த்தனம்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்குசக்ர தர நீள்

சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே

தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்

நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!


இராம நாமப் பதிகம்
பொன்னுடையார் வாயிலில் போய் வீணே காலம்
போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி


என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
என்செய்கேன் என்செய்கேன் ஏழையேன் நான்

(இதே ஆழ்வார் வரிகள் யாருக்காச்சும் நினைவுக்கு வருதா? :-)

பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா


உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ? என்
ஒரு முதல்வா சீராமா உணர்கி லேனே!



கீழே வடலூர் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனத்தை youtube video-வில் கண்டு மகிழுங்கள்! - இதையும் வழக்கமான ஒரு பூசையாக மட்டும் பார்த்து விடாதீர்கள்! :-)
தரிசனத்தின் போது ஜீவ காருண்யத்தைக் கொஞ்சம் மனத்தில் இருத்துவோம்! இனி அடுத்தவர் மனம் நோகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டே தரிசியுங்கள்! - அதுவே போதும்! வள்ளலார் ஜீவ காருண்ய வழிக்கு முதல் படி!



வள்ளலார் அருளிய முத்துக்களில் சில:

1. அன்பும் கருணையுமே முக்திக்கு வழி!
2. இறைவனிடம் சுத்த தேகம் வேண்டிப் பெறுவதொன்றே வீடுபேறு அளிக்கும்!
3. மந்திர மாய ஹோம ஜெபங்கள் முக்தியின் சாதனம் அல்ல!

4. எவ்வுயிர்க்கும் இரங்கும் ஜீவ காருண்யமே முக்தியின் வழி!
5. உயிர்களைக் கொல்லாமை, வறியவர்க்கு ஈதல், பசித்தார்க்கு உணவிடல், சாதி பேதங்கள் அற்ற நல்லிணக்கம் - இவையே ஜீவ காருண்யத்தை இதயத்தில் வளர்க்கும் வழிகள்!

அருட் பெருஞ் ஜோதி, தனிப் பெருங் கருணை!
அருட் பெருஞ் ஜோதி, அருட் பெருஞ் ஜோதி!!

9 comments :

மெளலி (மதுரையம்பதி) said...

சாரம் மிக்க கட்டுரை. ஜிவகாருண்யம் பற்றி எழுதியது சிறப்பு. நடைமுறை முடிந்தவரை படுத்த உறுதி கொள்வோம்.

இன்னும் எனக்கு படங்களை எப்படி பதிவுக்கு நடுவில் கொண்டு வருவதுன்னு தெரியல்ல!..யாராவது எங்காவது இது பற்றி பதிவு எழுதியிருக்காங்களா? தெரியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
சாரம் மிக்க கட்டுரை. ஜிவகாருண்யம் பற்றி எழுதியது சிறப்பு. நடைமுறை முடிந்தவரை படுத்த உறுதி கொள்வோம்//

நன்றி மெளலி அண்ணா! ஜீவ காருண்யம் இப்பல்லாம் சக மனிதர்கள் கிட்டயே காட்ட வேண்டிய லெவலுக்கு வந்தாச்சு! :-)

//இன்னும் எனக்கு படங்களை எப்படி பதிவுக்கு நடுவில் கொண்டு வருவதுன்னு தெரியல்ல!..யாராவது எங்காவது இது பற்றி பதிவு எழுதியிருக்காங்களா? தெரியுமா?//

எப்படிச் செய்யணும்-னு தனி மடல் அனுப்பி உள்ளேன்! பாருங்க!
பதிவர் உதவிப் பக்கமும் ஒரு எட்டு எட்டிப் பாருங்க!
http://tamilblogging.blogspot.com/

Radha Sriram said...

வழக்கம் போல நல்ல கட்டுரை.வள்ளலார் ஜீவ சமாதியா அடைந்தார்? நான் இத்தனை நாள் அவர் ஜோதியாக பூத உடலுடன் மறைந்தார் என்று நினைத்திருந்தேன்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
வழக்கம் போல நல்ல கட்டுரை.//
நன்றி ராதா!

//வள்ளலார் ஜீவ சமாதியா அடைந்தார்? நான் இத்தனை நாள் அவர் ஜோதியாக பூத உடலுடன் மறைந்தார் என்று நினைத்திருந்தேன்!!//

ஆகா, தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ராதா! கிடுகிடு வென்று எழுதியதில் மற்ற சித்தர்களுக்குச் சொல்வது போல், ஜீவசமாதி என்று குறிப்பிட்டு விட்டேன்! மன்னிக்கவும்!

ஜோதியுரு அடைந்த நாள் என்று பதிவில் மாற்றி விட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நண்பன் பாடலின் ஒலிச்சுட்டி வேலை செய்யவில்லை என்று தொலைபேசினான். எனக்கு வேலை செய்கிறது! உங்களுக்குக் கேட்குதா? - ஏன்னா இதைத் தேடி எடுக்க கொஞ்ச நேரம் பிடித்தது! அதான்! :-)

குமரன் (Kumaran) said...

கல்லூரி காலத்தில் வள்ளலார் அன்பரான வகுப்புத் தோழன் எனக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தான் இரவிசங்கர். சில நேரங்களில் எங்கள் குழந்தைகளுக்குத் தாலாட்டாய் பாடியிருக்கிறேன். பாடலில் ஒரே ஒரு மாற்றம் தேவையிருந்தது. 'சங்கு சக்ர தர நீள்' என்று வரும். இடுகையில் அதனை மாற்றிவிட்டேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கல்லூரி காலத்தில் வள்ளலார் அன்பரான வகுப்புத் தோழன் எனக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தான் இரவிசங்கர். சில நேரங்களில் எங்கள் குழந்தைகளுக்குத் தாலாட்டாய் பாடியிருக்கிறேன்.//

ஆகா...பல பாடல்களை நீலாம்பரியா மாத்திடுவீங்க போல இருக்கே! :-)

//பாடலில் ஒரே ஒரு மாற்றம் தேவையிருந்தது. 'சங்கு சக்ர தர நீள்' என்று வரும். இடுகையில் அதனை மாற்றிவிட்டேன்//

நன்றி குமரன். பாட்டை முழுதும் கேட்டேன். கன சங்குசக்ர தாரா-னு சொல்லிட்டு...அப்புறம் நீங்க சொன்னா மாதிரி நீள்-னு தான் ஆரம்பிக்கறாங்க!

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English

T.M.RAMALINGAM said...

அருமையான பதிவு. அனைவருக்கும் மரணமில்லா பெருவாழ்வு கிட்டட்டும். நன்றி. அருட்பெருஞ்ஜோதி

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP