எங்கள் மால் இறைவன் ஈசன் (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)
திருமாலவனை வணங்கும் நான் மற்ற தேவரை வணங்கமாட்டேன் என்ற கற்புநெறியோடே இருப்பது பக்தர்களின் இயல்பென்று பேசும் வைணவம். அரங்கனை பாடிய நான் குரங்கனைப் பாட மாட்டேன் என்று அரங்கநாதனைத் தவிர்த்து திருமலையானையும் பாடாத பெரும் கற்புடன் இருந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் கொண்ட இந்த ஆழ்வார் திருவரங்க நகரப்பனுக்குத் திருமாலை தொடுத்துத் தரும் தொண்டினைச் செய்து வாழ்ந்து வந்தார். அவருடைய பாசுரங்களில் சிலவற்றை இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில் திருமதி. எம்.எஸ். அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ்வோம்.
பங்குனி உத்திரத் திருநாள் திருவரங்கத்தில் ஒரு மாபெரும் திருநாளாகும். இந்தத் திருநாள் தான் அரங்கநாதனும் அரங்கநாயகியும் இணைந்து காட்சி தரும் ஒரே திருநாளாகும். வருடத்தில் வேறு எந்த நாளிலும் கிட்டாத திருக்காட்சி அது. திருமகளுடன் இணைந்த மாலவனே பரம்பொருள் என்று கூறும் வைணவத்தின் அணிவிளக்காம் இராமானுஜர் இந்தத் திருநாளில் தான் திவ்ய தம்பதிகளின் முன்னர் சரணாகதி செய்து மூன்று கத்யங்களைப் பாடி அருளினார்.
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்னாம்
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
வண்டினங்கள் இசை பாடும் சோலை. மயிலினங்கள் நடனமாடும் சோலை. மேகங்கள் தவழ்ந்து வரும் சோலை. குயிலினங்கள் கூவும் சோலை. தேவர்களின் தலைவனான அரங்கன் அமரும் சோலை. அழகிய சோலையாகிய அந்தத் திருவரங்கம் என்னும் பெரியவர்கள் மிக விரும்பி உண்ணும் உணவை இந்த சிறிய நாயேனுக்கும் நீங்கள் இடவேண்டும்.
கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே.
கங்கையை விடப் புனிதமான காவிரியின் நடுவில் எல்லாப் பக்கங்களிலும் நீர் பரந்து பாயும் பூஞ்சோலையாம் திருவரங்கம் தன்னுள் எங்கள் மாலவன் எங்கள் இறைவன் எங்களையுடைய ஈசன் கிடந்த திருக்கோலத்தைக் கண்ட பின் அதனை எப்படி மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே.
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே
சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. சொந்த நிலம் என்று ஒன்று இல்லை. உன்னை விட்டு மற்றொருவர் உறவு என்று இல்லை. இந்த உலகத்தில் உன்னுடைய திருப்பாதங்கள் என்னும் வேரைப் பற்றினேன் பரமனே. கருநிற ஒளி வண்ணனே. கண்ணனே. கதறுகின்றேன். உன்னை விட்டால் வேறொரு களைகண் இல்லை. திருவரங்கமாநகருளானே.
2 comments :
தாயார் முன்னாடி பெருமாள் அடென்ஷன் அப்படி நீக்கறது இன்னைக்கு மட்டுந்தானா?,
ஓ!! நமக்கு ஒரு வருஷங்கறது தேவர்களுக்கு ஒரு நாள் இல்லையா?, அவர் ஒருநாள் நிக்கறது நமக்கு வருஷத்துக்கு ஒருநாளாயிடுச்சு :-)
அட, இதெல்லாம் தொண்டரடிப்பொடியார் பாசுரங்களா?.
இதெல்லாம் எனக்கு பாடலாக மனப்பாடம், ஆனா தொண்டரடிப்பொடின்னு தெரியாது.
அடிப்-பொடியேனாழ்வார் படத்துடன் தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்கள் சூப்பர். :-)
அது மட்டையடி வாங்குன பயம் தான் இப்படி நெட்டுக்க நிக்கிறார் நெடியவர். அம்மா ஜம்முன்னு உக்காந்திருக்காங்க. மட்டையடி உற்சவத்தைப் பத்தி இரவிசங்கர் பதிவுல படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
இன்னைக்கு மட்டும் தான் ஐயா இப்படி பணிவு காட்டுவார். மற்ற நாட்கள்ல அவர் ரங்கராஜா.
போச்சு. ஒரு நாள் மட்டும் தான் நிக்கிறார்ன்னு நான் நினைச்சா நம்ம ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள்ன்னு சொல்லி எல்லா நாளும் ஐயா நிக்கிறார்ன்னு சொல்லிட்டீங்களே. :-(
ஆமாம் மௌலி. இவை எல்லாம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் தான். ரொம்ப பாப்புலர்.