Thursday, December 27, 2007

விஷமக்காரக் கண்ணன்

கண்ணனைக் குழந்தையாகஅனுபவித்தவர்களின் பட்டியலில் ஆழ்வார்கள்,பாரதி, ஊத்துக்காடுவேங்கட கவி போன்றோர்கள் சிறப்பானவர்கள்.
குறிப்பாக ஊத்துக்காடு அவர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானது. அவர் வாழ்ந்த காலம் 1700 -1765, இதே காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகளும் வாழ்ந்தனர்.

ஆனால் இவருடைய பாடல்கள் வித்தியாசமாக உள்ளது. வடமொழியிலும்,தமிழிலும் அடுக்கு மொழிச் சொற்களை கையாள்வதில் திறமை மிக்கவர். அதுவும் குறிப்பாக தஞ்சை மண்ணில் அக்காலத்தில் வழங்கி வந்த பேச்சுத்தமிழில் எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்திருந்தது இவரது பாடல்கள்.

கண்ணனின் விளையாட்டை இவர் வர்ணிக்கும் விதமே தனிச்சுவை கொண்டது.வெண்ணை திருடியது,அதை யசோதையிடம் கோள் சொன்ன பெண்களின் கதி இவர் பாட்டில் நகைச்சுவை மிளிரும் வண்ணத்தில் இருக்கும். விஷமக்கார கண்ணன் என்ற பாட்டில் நமக்கு சங்கீதத்தையும் கற்றுத்தருகிறார். முகாரி ராகம் எப்போது பாடுவார்கள் அது வெளிப்படுத்தும் ரசம் என்ன என்பதை இப்படி நகைச்சுவையாகத் தருகிறார்

பக்கத்து வீட்டு பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புகிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி
முகாரி ராகம் என்பான்

சரி நீங்களே முழுப்பாட்டையும் கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்


ராகம் : செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்
பல்லவி

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி

வெண்ணை பானை மூடக் கூடாது - இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )
சரணம்

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்.......... ..................
(விஷமக்காரக் கண்ணன்)

திருமதி.சுதா ரகுனாதன் குரலில்
இந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் கீழே செல்லவும்

-

இன்றைய திருப்பாவை (இதுவும் கண்ணன் பாட்டு தான்)


கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம்பொற்கொடியே!

புற்றவல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்து தோழிமா ரெல்லாம் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்-


10 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான பாட்டு திராச
திருப்பாவையுடன் இட்டமைக்கு நன்றி!

//எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி
முகாரி ராகம் என்பான்
//

ரொம்ப தான் கொழுப்பு! :-)
அடுத்த முறை பெண்கள் என்ன செய்யணும்னா, கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! கேட்டா இதான் கல்யாணி-ன்னு சொல்லணும்! அப்ப தான் இந்தப் விஷமக்கார பையன் அடங்குவான்! :-)

கோவி.கண்ணன் said...

கண்ணடிக்கும் கண்ணன் படம் சூப்பர்

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் பாட்டு....நன்றி தி.ரா.ச சார்.

நேயர் விருப்பத்தில் அடுத்ததாக அருணா சாயிராம் பாடிய 'மாடு மேய்க்கும் கண்ணன்' போடுங்க சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

//கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! //

ஏனிந்த கொலை வெறி.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
நேயர் விருப்பத்தில் அடுத்ததாக அருணா சாயிராம் பாடிய 'மாடு மேய்க்கும் கண்ணன்' போடுங்க சார்//

போட்டாச்சே!
http://kannansongs.blogspot.com/2007/07/blog-post_23.html

மதுரையம்பதி said...
//கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! //
ஏனிந்த கொலை வெறி.....//

மெளலி அண்ணா...
கண்ணன் தான் கல் யாணி கேட்டான்! அதான்! இதெல்லாம் ஒரு கொலை வெறியா?:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கோவி. கண்ணன். கண்ணடிக்கும் கண்ணனே வந்தா மாதிரி இருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@krs கண்ணபிரானின் சிறுவயசு லீலைகளைச் சொன்னேன்.இன்னும் நிறைய இருக்கு.ஓட்டேரி பக்கம் போய் சேகரிக்க வேண்டும்.:-)
ஆமாம் இந்த விஷமாரக்கண்ணன் யார் தெரியுமா மைந்தனென்று அழைத்து மடிமேல் வைத்து சுந்தர முகத்தை பார்க்கின்ற வேளையில் வாய் திறந்து இந்திர ஜாலம் போலே ஈரேழு லோகமும் காட்டினவன்.அந்த வாசுதேவன் இவன் தான்.

கல் ஆணியைப்போட்டு வைத்தால் விட்டுவிடமாட்டான். கண்ணன் நம் மனத்திலிருக்கும் கல்
ஆணி போன்ற கள்ளம்,ஆணவத்தை எடுத்துவிட்டு நமக்கும் கருணை அளிப்பவனுக்கு அது முடியாதா என்ன?

தி. ரா. ச.(T.R.C.) said...

@Mauliஏன் இந்த கொலை வெறி இந்த வாசகம் யாரோடைய டிரேட் மார்க் ஆச்சே? நீங்க எப்படி யுஸ் பன்ணலாம்.கண்ணன் பாட்டு மொத்தத்தையும் படிச்சுட்டு வாங்க அப்புறம் நேயர் விருப்பம் போடலாம்.சரி டைத்த வேஸ்ட் பண்ணாதீங்க அங்கே இடது பாதம் தூக்கி பாடல் போட்டாச்சு.போய்க் கேளுங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

@krsசொல்லியபடி செய்துவிட்டேன் வேறு ஏதாவது கட்டளை உண்டா?

குமரன் (Kumaran) said...

ஆகா. பத்து வருடத்திற்கு முன்பு நண்பன் ஒருவனுடன் ஊத்துக்காட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் போது இந்த 'விஷமக்காரக் கண்ணன்' பாடலைப் பற்றிச் சொன்னான். இன்று தான் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான பாடல் தான். மிக்க நன்றி தி.ரா.ச.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP