80. இச்சுவை தவிர யான் போய்....
எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.
பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.
பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்
என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.
ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர்.
அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை.
நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம்.
அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது.
ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.
பின்னானார் வணங்கும் ஜோதி என்று அனுபவிக்கும்படி எல்லா திவ்ய தேசங்களிலும் அவன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியபடி கூடி இருந்து குளிரக் குளிர பெருமானைக் காணவேண்டும்.
என்னரங்கத்தின் இன்னமுதர் குழலழகர் விழியழகர் கண்ணழகர் என்றெல்லாம் பெருமாளின் திருவழகில் மயங்கி நிற்கிறாள் மங்கை ஆண்டாள். அர்ச்சாவதார மூர்த்தியான அரங்கனின் மேனி அழகைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்.
பாடலைப் படித்துக் கேட்டு இன்புறுவோமா?
மந்திர ஒலியில் இங்கு கேளுங்கள்! அருணா சாயிராம்
உன்னி கிருஷ்ணன் குரலில் இங்கு கேளுங்கள்!
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே.
திருமதி ஆர்.வேதவல்லியின் குரலில்
வேத நூல் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவர் ஏலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்று அதில் பதினை ஆண்டு,
பேதை பாலகன் அதாகும்
பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகர் உளானே
திருமால் பெருமை படத்தில் TMS பாடுவது இங்கே!
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா.
அரங்க மா நகர் உளானே
பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இதயங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- திருவரங்கப்ரியா
8 comments :
நன்றி ரவி சங்கர் அவர்களே சீர்காழியின் ஒரு பாடலும் உள்ளது திருமால் பெருமை படத்தில் அதையும் இணையுங்களேன்.
வாங்க கைலாஷி!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்தப் பதிவை இட்டது ஷைலஜா!
நீங்கள் சொன்னது போல இதே பச்சை மாமலை போல் மேனிப் பாடலைச் சீர்காழியும் பாடியுள்ளார். பதிவில் சேர்த்து விடுங்கள் ஷைலஜா!
@கைலாஷி
சுட்டி சேர்த்தாகி விட்டது. ஒரு சின்ன திருத்தம். அது TMS, சீர்காழியார் அல்ல
@ஷைலஜா
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும்.
எங்கே போயிருந்தீங்க இவ்ளோ நாளா? பரம் வியூகம்-னு ஒளிவா இருந்தவங்க, புத்தாண்டு அதுவும் அர்ச்சை போல அமர்க்களமா வந்துட்டீங்க! மீள் நல்வரவு! :-)
எல்லார் வீட்டிலும் பாடும் சிம்பிளான பாட்டு, நல்ல நாளில் இட்டமைக்கு நன்றி!
திருவரங்கப் பிரியா - இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். பள்ளியில் படித்தது. பல ஆண்டுகளுக்குப் பின் நினைவில் வந்தது - மனப் பாடப் பகுதி - மறக்க வில்லை. அருமையான பதிவு - புத்தாண்டு தொடக்கத்தில் - நன்றி - மந்திர ஒலியில் வரிகள் இனிக்கின்றன. உன்னி கிருஷ்ணன் குரலில் 8 வரிகளுக்கு 5 மணித்துளிகளா என சிந்தித்தேன் - முழுவதும் கேட்ட பின்னர் தான் புரிந்தது.
பள்ளியில் இப்பாடலைப் பற்றி நாங்கள் சொன்ன பொருளே வேறு. மதுரையில் ஏதோ ஒரு உணவகத்தில் காலயில் நல்ல பசியோடு போய் இட்லி சாப்பிட்ட ஒருவர் கூறியது:
பச்சை மா ( நன்றாக அவிய வில்லை)
மலை போல் மேனி ( கற்கள் கலந்திருந்தன)
பவள வாய் - (சட்னியின் காரம் தாங்க முடிய வில்லை)
கமலச் செங்கண் - ( இட்லிப் பொடியின் காரம் கண்கள் சிவந்து விட்டன)
அச்சுதா, அமரரேறே, ஆயர் தம் கொழுந்தே
இச்சுவை, இப்புவியில் நான் பெற்ற இச்சுவை -
யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் (நான் போய் இந்திர லோகத்தை ஆண்டாலும் மறக்க முடியாது)
அரங்கமாநகருளானே !!
எனக்கு மிகவும் பிடித்த பாடல், தருவித்தமைக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அரங்கப்பிரியா:
புத்தாண்டு வாழ்த்துக்கள். அருமையான பதிவு. ஒளிப்பதிவிலுள்ள பாடல்: பாம்பே ஜெயஸ்ரீ போலுள்ளதே! வேதவல்லியும் நிறையப் பாடியிருக்கிறார். நம்மாழ்வார் திருவாய் மொழி!
நாலாயிரத்தையும் இசை கூட்டி யாராவது செய்ய வேண்டும்! அதைக் கேட்டுக் கொண்டே திருநாடு எழவேண்டும்! ஆகா!
கைலாஷி கண்ணபிரான் ரவி சீனா ஜீவா மற்றும் கண்ணன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ
திருவரங்கப்ரியா
திருப்பாசுரம் ஓதும் முறை கூறுக