71. ஏகாதசி ஸ்பெஷல்: ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
இன்று வைகுண்ட ஏகாதசி (Dec 20, 2007)! கண்ணன் பாட்டில், இந்த இனிமையான பாட்டை, எஸ்.பி.பி - ஷோபனாவின் தேன்குரலில் கேட்போம், வாரீங்களா?
இந்தப் படத்தைப் பார்த்த பின்னர், மனம் ரொம்ப கனத்துப் போனதால், மீண்டும் பார்க்கவில்லை! ஆனால் பாட்டை மட்டும், பல முறை, மீண்டும் மீண்டும் கேட்டதுண்டு!
பாடகி ஷோபனாவை, மகாநதி ஷோபானாவாக ஆக்கிய பாட்டு!
அருமையான வாலி வரிகள்.
சொந்த ஊர்ஸ் பாசத்துல அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்கிறார்! இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார். அதுவும் வீணை பிட் ஒன்னு வரும்!
கோவில் தூண்களை அப்படியே பாஸ்ட் மோஷனில் காட்டுவார்கள்! அப்போது ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!
அப்படியே அரங்கம் என்னும் சுரங்கத்தில் கிறங்கிப் போவீர்கள்!
பாடலை இங்கு கேளுங்கள்!
கீழே கோவில் காட்சிகளைத் தொகுத்து, இதே பாடலின் பின்னணியில், ஒரு வீடியோ உள்ளது! பாருங்கள்!
பதிவின் இறுதியில் திரைப்படப் பாடல் காட்சியின் youtube video...
(கங்கா சங்காச காவேரி
ஸ்ரீ ரங்கேச மனோஹரி
கல்யாண காரி கலுசாரி
நமஸ்தேஷூ சுகாசரி)
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி, தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, தெய்வ பாசுரம் பாடடி(ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்(ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி
(ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
குரல்: SPB, மகாநதி ஷோபனா
வரிகள்: வாலி
இசை: இளையராஜா
ராகம்: ஹம்சத்வனி
(இன்னிக்கி எங்க திரும்பினாலும் ஒரே ஹம்சத்வனி-யா இருக்கேப்பா!
நம்ம கானா பிரபா அண்ணனும் இசையரசி வலைப்பூவில் அருமையான ஒரு ஹம்சத்வனியை சுசீலாம்மா குரலில் கொடுத்துள்ளார். தேர் கொண்டு சென்றவன், யாரென்று சொல்லடி தோழீன்னு, பாட்டு)
பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!
கீதை பிறந்ததும் இன்று தானே!
மூலவர் அரங்கநாதனுக்கு முத்தங்கி சேவை!
உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!
நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன்! அவர் தான் நம்முடைய ஆழ்வார், நம்மாழ்வார்!
அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.
குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் ஒட்டிக்கொண்ட குட்டியைப் போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! உண்மையில், சொர்க்க வாசல் என்பதை விட வைகுந்த வாசல், பரமபத வாசல் என்று சொல்வது இன்னும் பொருத்தமானது!
விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, அரங்கன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அரங்கன் நடை அழகு!
ரத்னாங்கி உடை அழகு!
சக்கரப் படை அழகு!
சதிராடும் குடை அழகு!
கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!
முன்னழகு, (பரமபத வாசல் சேவை)
பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும், மரகத உருவும், தோளும்
தூய தாமரைக் கண்களும், துவர்இதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும், தேசும், அடியோர்க்கு அகல லாமே
முன்னிலும் பின் அழகன், திருக்குடை அழகு!
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!
ரங்கா! ரங்கா!! ரங்கா!!!
14 comments :
காலைல டீவில லைவ் டெலிகாஸ்ட் பார்க்க விட்டுப்போச்சு. ஆனா இங்க தரிசனம் தந்துட்டார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்தோம் உங்கள் புண்ணியத்தால். அருமையான பாட்டு, கொடுத்த விதம் அவல் சாப்பிட்டது மாதிரி இருக்கு.
நானும் பல முறை விரும்பிக் கேட்கும் பாடல் இரவி. இன்றும் இருமுறை கேட்டேன். மிகவும் அருமையான பாடல். மனத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்.
திருவரங்கனின் திவ்ய தரிசனமும் கிடைத்தது. மிக்க நன்றி.
இதுக்கு மேலும் அரங்கனை இவ்வளவு தெளிவாக சேவிக்க வைக்கமுடியுமா?
மிக்க நன்றி.
மெளலி அண்ணா...
லைவ் டெலிகாஸ்ட் விட்டுப் போச்சா? srirangam.org போங்க!
கண்ணன் பாட்டுல அவரு தரிசனம் தரலீன்னா விட்டுருவோமா? :-)
//கானா பிரபா said...
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்தோம் உங்கள் புண்ணியத்தால்//
ஹம்சத்வனியே இங்கும் பாடினோம் உங்கள் புண்ணியத்தால்! :-)
//அருமையான பாட்டு, கொடுத்த விதம் அவல் சாப்பிட்டது மாதிரி இருக்கு//
அவல் பாயசம், இங்க ஒரு கப் ப்ளீஸ்!
//குமரன் (Kumaran) said...
நானும் பல முறை விரும்பிக் கேட்கும் பாடல் இரவி. இன்றும் இருமுறை கேட்டேன்.//
பாடலின் இனிமைக்கு நல்ல வரிகளும் இசையும் கைகொடுக்கின்றன குமரன்!
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்...
//வடுவூர் குமார் said...
இதுக்கு மேலும் அரங்கனை இவ்வளவு தெளிவாக சேவிக்க வைக்கமுடியுமா?//
நன்றி குமார் அண்ணா!
குமரன்
பாட்டுக்கு முன்னாடி ஒரு சுலோகம் மாதிரி வருதே! அது என்னான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? தேடினேன்! கிடைக்கல!
திவ்ய தரிசனம் கண்டேன்.
இன்னிக்கு துவாதசி ஸ்பெஷல்:-)))
கோயிலுக்கும் போய் வந்தாச்சு. அங்கேயும் இன்று எனக்கு ஏகாந்த சேவை.
பாட்டை இன்னிக்குமட்டும் நன்ன்னாலு தடவை கேட்டுப்பார்த்தாச்சு.
மனம் நிறைய மகிழ்ச்சிதான். வேறென்ன?
நன்றிப்பா.
//துளசி கோபால் said...
திவ்ய தரிசனம் கண்டேன்.
இன்னிக்கு துவாதசி ஸ்பெஷல்:-)))//
ஆகா...அப்படின்ன அரவணைப் பாயாசம் உண்டு-ன்னு சொல்லுங்க!
நியூயார்க்குக்கு ஒரு கூஜா ப்ளீஸ்! :-)
//கோயிலுக்கும் போய் வந்தாச்சு. அங்கேயும் இன்று எனக்கு ஏகாந்த சேவை.//
சூப்பர் டீச்சர்! ஏகாந்தமா பெருமாளோடு பேசும் சுகம் வேறு எங்க கெடைக்கும்?
//பாட்டை இன்னிக்குமட்டும் நன்ன்னாலு தடவை கேட்டுப்பார்த்தாச்சு.
மனம் நிறைய மகிழ்ச்சிதான். வேறென்ன? நன்றிப்பா.//
அதான் ரெண்டு வீடியோ பாட்டையும் கொடுத்தேன் டீச்சர்!
நீங்க மகிழ்ந்ததே இங்க எனக்கு மகிழ்ச்சி தான்!
நான் தனியா கோயிலுக்கு எல்லாம் இங்க போகல! துளசி தளத்திலேயே துளசி வாங்கிக்கறேன்! :-)
நான் உங்களைக் கேட்க நினைத்ததை நீங்கள் என்னிடம் கேட்டு விட்டீர்கள் இரவிசங்கர். :-)
அதனால் கொஞ்சம் உற்றுக் கேட்டுப் பார்க்கிறேன்.
கங்கா சங்காச காவேரி
ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி
நமஸ்தேஸ்து சுகாசரி
உற்றுக் கேட்டதில் இது தான் எனக்குப் புரிந்தது. காவிரியைப் புகழும் சுலோகம் போல் இருக்கிறது. புரிந்த வரையில் பொருள்: கங்கைக்குச் சமமான காவிரி, ரங்கநாதனின் மனத்தைக் கொள்ளை கொள்பவள், மங்களத்தைத் தருபவள், கலியைக் கெடுப்பவள், சுகமான நடையை உடையவள் - அவளுக்கு நமஸ்காரம்.
திருவரங்கப்பதிவிற்கு தாமதமாய் வரும் என்னை அரங்கனோடு கண்ணபிரான் ரவியும் மன்னிக்க!
"ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான், கோல மாமணி ஆரமும் முத்துத்தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே" என்று திருப்பாணாழ்வார் பாடியதுபோல ஏகாதசித் திருநாளில் நீங்கள் இங்கு அளித்த அரங்கன் படங்கள் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. செவிக்கு இனிமையாய் பாடலும் வேறு! ஆன்மீகச்செம்மல் ரவியின் பதிவு என்றால் அதைப்படிக்க ஆனந்தமே! பாரட்டுக்கள் ரவி!
ஷைலஜா
ரவி சங்கர்!
எனக்கும் பிடித்த பாடல், திருவரங்கக் காட்சிகளுடன் அழகான உள்ளன.
வாலி, பிறந்த மண்ணைச் தமிழால்
சிறப்பித்துள்ளார்.