Saturday, June 30, 2007

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே!!!


யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு
இராக ஆலாபனமுடனும் பாடு
முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு

அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலில் (யார்)

நாரதர் நாதமும் வேதமும் நாண
கானக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட
கோபியரும் பாட
வெகு
நேர் நேர் எனச் சொல்லித் தான் ஆடுவான்
அந்த
ஐயன் கருணையைப் பாடு ...

தோலை உரித்து கனி தூர எரிந்து
வெறும் தோலைத் துணிந்தொருவன் தந்தான் அல்லவோ?!
மேலைப் பிடி அவலை வேணும் என்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ?!
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி
கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ?!
ஞாலம் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை நமக்கெதற்கு என்று தள்ளி
நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி
ஐயன் கருணையைப் பாடு ...


பாடலைக் கேட்க

20 comments :

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இந்த ஊத்துக்காட்டார் பாடல் எனக்கு மிகப்பிடிக்கும். ஒலித்தகடே வைத்துள்ளேன்.
இறையெய்திய மகாராஜபுரம் சந்தானம், பிற்பாட்டு அவர் மகன் ராமச்சந்திரன்.
மகா வித்துவான்.அருமையாகப் பாடியுள்ளார்கள். கண்ணன் லீலைகள்
ஒலிச்சித்திரமாக அவர்கள் குரல் தருவது சிறப்பம்சம்.
பாடல் வரியில் "தோலை உரித்து கனி தூர எறிந்து"...என்பதே பொருத்தம் என நினைக்கிறேன்.
"மேலைப் பிடி அவலை "என்பது போல் என் செவிக்குக் கேட்கிறது.
வித்துவான்கள் பாடல்களில் உச்சரிப்புத்
தவறு செய்வது இயல்பாக நடப்பதை அவதானித்துள்ளேன்.
கச்சேரியைத் தமிழில் செய்ய பாடல்கள்
இல்லை என்போர் இவற்றைப்பாடலாம்.

குமரன் (Kumaran) said...

பிழை திருத்தங்களுக்கு நன்றி யோகன் ஐயா.

இந்தப் பாடலை நானும் திரு. சந்தானம் பாடிக் கேட்டுத் தான் மயங்கினேன். மற்றவர்கள் பாடி அதன் பின்னர் கேட்டிருக்கிறேன். ஆனால் இது போல் வருவதில்லை.

G.Ragavan said...

நல்ல பாடல். கேட்டு மகிழ்ந்தேன்.

வெற்றி said...

குமரன்,
இப் பாடலை இப்பதான் முதன்முறையாகக் கேட்கிறேன். நல்லதொரு அருமையான பாடல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

பி.கு:- தற்சமயம் எங்கே இருக்கிறீர்கள்? பிறந்த வீட்டிலா[தமிழகம்] அல்லது புகுந்த வீட்டிலா[அமெரிக்கா]? தாயகப் பயணம் எப்படி இருந்தது? ஆட்சேபனை இல்லையெனின் பயண அனுபவங்களைப் பதிவாகப் போடுங்களேன்.

குமரன் (Kumaran) said...

வெற்றி, பிறந்த வீட்டில் சீராடிவிட்டு புகுந்த வீட்டிற்கு வந்தாயிற்று. :-)

தாயகப் பயணம் நன்றாக இருந்தது.

பயணக் கட்டுரைகள் எழுதுவதில் திறமை இல்லை. சிந்தித்துப் பார்க்கிறேன் சுவையாகச் சொல்லும் படி ஏதாவது இருக்கிறதா என்று. அப்படி ஏதேனும் இருந்தால் எழுதுகிறேன்.

குமரன் (Kumaran) said...

பிடி அவலைத் தந்த கதையும் தெரியும். கனி கடித்துச் சுவைத்துத் தந்த கதையும் தெரியும். தோலை உரித்து கனி தூர எரிந்து வெறும் தோலை தந்த கதை தெரிந்தாற் போல் இருக்கிறது - ஆனால் முழுதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாச்சா? அனைவரும், எல்லாமும் நலமாக நடந்திருக்கும் இறை அருளால்,
தோலைக் கொடுத்தது "சபரி"தான் என்று படித்த நினைவு. ஐயன் முகத்தின் அழகையும், தேஜஸையும் பார்த்துக் கொண்டே தோலை உரித்துப் பழத்தைப் போட்டுவிட்டுத் தோலை மட்டும் கொடுத்ததாகவும், அந்த அன்புக்குக் கட்டுப் பட்டு இறைவன் அந்தத் தோலையே தின்றதாகவும் கதாகாலட்சேபங்களில் ("சபரி மோட்சம்") கேட்டதாயும் நினைப்பு இருக்கு.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதா அம்மா. இறைவன் அருளால் எல்லாம் நன்கு நடந்தது.

அம்மை சபரி ஐயனின் திருமுக அழகில் மயங்கி பழத்தை எறிந்துவிட்டுத் தோலைக் கொடுத்ததாகப் படித்த நினைவு எனக்கும் இருக்கிறது. ஆனால் ஒருவன் என்றல்லவோ பாடலில் வருகிறது. அது தான் இது வேறு கதையோ என்று எண்ண வைக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்ணன் பஞ்சவர்க்கு தூதாக ஹஸ்தினாபுரம் வந்தபோது விதுரந்தான் அவரை வரவேற்று உப்சரித்தான். கண்ணனுக்கு உணவு அளிக்கும்போது கண்ணனுடைய முக அழகைப் பருகிக்கொண்டு தன்னை மறந்த நிலையில் வாழைப்பழங்களை உரித்து பழத்தைஎறிந்துவிட்டு தோலை கண்ணனுக்கு அளித்தான். கண்ணனும் பக்தன்மேல் உள்ள அன்பினால் அதை சாப்பிட்டதாக மஹாபரதத்தில் ஒரு கதை உண்டு. இதைத்தான் விதுர பக்தி என்று கூறுவார்கள்

இதுநடக்குமா என்று எண்ணவேண்டாம்.
இபோதும் உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கும்போது பல முறை டிவி பார்த்துக்கொண்டு தோலை கிழங்கை உரித்துவைத்துள்ள பாத்திரத்திலும் உருளைக்கிழங்க்கை எறியவேண்டிய தோலோடும் போட்டதுண்டு. டிவியின்மீதே இந்தபற்று இருந்தால் கண்ணன் மீது விதுரற்கு உள்ள பற்றைகேட்கவாவேண்டும்

ramachandranusha(உஷா) said...

குமரன் தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோ என்று அலறி அடித்துக் கொண்டு வந்தால்.... :-(

Anonymous said...

அருமையான பாடல், நம்ம ஊர்க்காரர் சேஷகோபாலனும் பாடியிருக்கிறார்....

பெங்களூர் வந்து போன் பண்ணுவதாக சொல்லிவிட்டு, இப்படி பண்ணிவிட்டீர்களே குமரன்?...சரி பார்க்கும் நேரம் இன்னும் வரவில்லை போல....

மெளலி...

குமரன் (Kumaran) said...

உஷா. இன்னொரு தடவை ஏமாத்திட்டேனா? மன்னிச்சுக்கோங்க. :-)

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. மன்னிச்சுக்கோங்க. பெங்களூருவில நேரம் சரியா இருந்ததால தொலைபேச முடியலை. இந்த முறை யாருக்கும் தொலைபேச முடியாமல் போச்சு.

ஓகை said...

வருக!

அருமையான பாடல். தந்தமைக்கு மிகவும் நன்றி, குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாரதர் நாதமும் வேதமும் நாண
குழல் ஒன்று ஊதுவான்//

கானக் குழல் ஒன்று ஊதுவான் - என்று வரும் குமரன்! அப்போது தான் தாளமும் மெட்டும் கூட நிறைவடையும்!

//தோலை உரித்து கனி தூர எரிந்து வெறும் தோலை தந்த கதை//

திராச ஐயா குறிப்பிட்டது போல் இது விதுரரின் கதை தான், குமரன்!
அங்கே திரியோதனன் வீட்டுக்குச் சென்றிருந்தால் அறுசுவை உணவும், போலியான புகழ்ச் சொற்களும் கிடைத்திருக்கும்!
ஆனால் இங்கே பக்தனின் வீட்டில், பக்தன் அன்பால் வாய் அடைத்துப் போய் நிற்கிறான். போதாதென்று தோலை உண்ணத் தருகிறான் :-)

வாழ்வின் பயனான பழத்தை எறிந்து விட்டு, பயனற்ற தோலை அளித்தது, வியாக்யானங்களில் பக்தியும் தத்துவமும் ததும்ப பேசப்படுகிறது!

Anonymous said...

Good song and good picture Kumaran.

Thanks,
Kumaresh

குமரன் (Kumaran) said...

நன்றி ஓகை ஐயா. ஏற்கனவே இந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வந்துவிட்டதாம். இரவிசங்கர் சொல்லி சுட்டியும் தந்தார். அறியாமல் மறுபதிப்பாய் இட்டுவிட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

கானக் குழல் என்று மாற்றிவிட்டேன் இரவிசங்கர். வியாக்யானங்களில் விதுரர் செய்தது எப்படி பக்தியும் தத்துவமும் ததும்பப் பேசப்படுகிறது என்று ஒரு தனி இடுகையாகவே இட்டு விளக்குவீர்களா?

குமரன் (Kumaran) said...

நன்றி குமரேஷ்.

குமரன் (Kumaran) said...

நானும் நீங்கள் சொன்னது போல் செய்திருக்கிறேன் தி.ரா.ச. உருளைக்கிழங்கை உரிக்கும் போது தோலையும் கிழங்கையும் இடம் மாற்றிப் போட்டிருக்கிறேன். :-)

விதுரரின் கதையைச் சொல்லி என் ஐயத்தைப் போக்கியதற்கு மிக மிக நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP