54. கே.பி.சுந்தராம்பாளா?
ஏலா ஒனக்குக் கே.பி.சுந்தராம்பாள் தெரியுந்தானே?
ஆமு. தெரியும்.
எப்படில தெரியும்.
அவங்கதானல ஔவையாரு.
அவங்க ஔவையாரா? ஒரு விதத்துல அப்படித்தாம்ல. ஆனா அவங்க ஔவையாரா நடிச்சவங்க. நெறைய பாட்டுக பாடியிருக்காங்க.
ஆமு. ஆமு. தெரியும். முருகன் பாட்டுக எக்கச்சக்கமா பாடியிருக்காங்க. நாங்களும் கேட்டுருக்கம்லேய்! கேட்ருக்கம். வாழைப்பழத்தைப் பிழிந்து....
ஏலேய் நிப்பாட்டு....தெரியலைன்னா வாயப் பொத்து...அப்பு அப்புனேன்னா...யாரு பாட்டல கிண்டல் பண்ணுத..அது வாழைப்பழமில்ல...ஞானப்பழம்.
என்ன...கோவிக்க..உண்மைக்குந் தெரியாமத்தாம்ல பாடுனேன். தப்புன்னா திருத்தாம கோவிக்கான். அவங்கதான் முருகன் பாட்டு பாடியிருக்காங்கன்னு சொன்னம்லா. அது சரிதான.
அது என்னவோ சரிதான். அவங்க முருக பக்தை. முருகன் மேல நெறைய பாட்டுப் பாடியிருக்காங்க. திருவிளையாடல் படத்துல....காரைக்கால் அம்மையார் படத்துல.....சிவபெருமான் மேலையும் பாடியிருக்காங்க. சக்திலீலை படத்துல அம்மன் மேல பாடியிருக்காங்க....அதெல்லாம் எப்ப? எழுவது வயசுக்கு மேல. ஆனா....அவங்க ஏழுமலை மேலையும் பாடியிருக்காங்க தெரியுமா!
என்னல சொல்லுத! ஏழுமலைல இருக்காரே வெங்கடேசரு. அவரு மேலையா....ஆச்சிரியமா இருக்கே! என்ன பாட்டு? வெவரமாச் சொல்லுல!
திருமலைத் தெய்வம்னு ஒரு படம். ஏ.பி.நாகராஜன் எடுத்தாரு. அதுல கே.பி.சுந்தராம்பாள் நாராயணியம்மா அப்படீங்குற பாத்திரத்துல நடிச்சாங்க. அந்தப் பாத்திரத்துக்காகத்தான் ரெண்டு பாட்டு பாடியிருக்காங்க. ஒன்னு "நாளெல்லாம் உந்தன் திருநாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"ங்குற பாட்டு. இது அவங்க ஏற்கனவே பாடுன "நாளெல்லாம் பூசம் திருநாளே"ங்குற பாட்டு மெட்டுதான். ஆனா இன்னொரு பாட்டு செம பாட்டு. அப்ப புதுப்பாட்டு. குன்னக்குடி இருக்காரு தெரியும்ல..
யாரு...சிலுக்குச் சட்டை போட்டுக்கிட்டு வருவார்ல...பிடில் வாசிப்பாரே?
அவரேதான். அவரு இசையமைச்ச படம் அது. அந்தப் பாட்டு "ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை"ன்னு ஜம்முன்னு இருக்கும்லா! கேட்டுப் பாக்கியா?
சரி போடு, கேக்கேன். மாட்டேன்னா விடவா போற?
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணன் திரவுபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கொன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
அன்புடன்,
கோ.இராகவன்
11 comments :
அருமையான பாடல் ஜி.ரா...
அந்த குரலில் ஒரு தேய்வீக தன்மை தெரிகிறது...
// வெட்டிப்பயல் said...
அருமையான பாடல் ஜி.ரா...
அந்த குரலில் ஒரு தேய்வீக தன்மை தெரிகிறது... //
வாங்க வெட்டியாரே...கே.பி.எஸ் குரல் பக்தியை மட்டும் பாடிய குரல். நல்லதை மட்டும் பாடிய குரல். அந்தக் குரலில் எது கேட்டாலும் நல்லதாகவே இருக்கக் காரணம் அதுதான்.
கண்ணன் பாட்டு ரெண்டு பாட்டுதான் எனக்குத் தெரிஞ்சு. ஆனா பாருங்க. அதுலயும் அவங்க முத்திரை. வேற யாரும் நிக்க முடியலை. இத்தனைக்கும் அந்தப் படத்துல, டி.எம்.எஸ், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பழைய பாடகர்களும் உண்டு. பாடியிருக்காங்க. ஆனா....இந்த ரெண்டு பாட்டுகதான் திருமலைத் தெய்வம்னு போட்டாலே கிடைக்குது.
ராகவா!
மிக இனிய பாடல், பெண்களில் கம்பீரமும் கலந்த குரலின் சொந்தக்காரி எங்கள் கே.பி.எஸ் அம்மா! ஆம் அவர் நல்லதை மட்டும்
பாடியவர்.
நன்றி
ஜிரா
கண்ணன் பாட்டில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக!
சுந்தரமான சுந்தராம்பாளின் சுறுசுறு பாட்டுடன், சுவையாகத் துவங்கி உள்ளீர்கள்!
அதுவும் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன் ஒப்பார் இல் அப்பன்...
என்னப்பன், திருவேங்கடமுடையான் பாடல்!
கண்ணக்கு இனியானைக் காதுக்கும் இனியதாகக் கேட்கும் போது...
இனியது கேட்கின் அல்லவா?
இனிஎது கேட்கின் மன்னவா!
மலர்மகள் மாதவா! நீ ஏழு மலை இருக்க..ஏது மனக்கவலை!
அப்பனைப் பலர் பாடினாலும்
தமிழையே பாடியவள் பாடும் ஈடு வருமா?
தமிழ் முன் செல்ல
தான் பின் வந்தான் அல்லவா அவன்!
இவர் பின்னல்லவோ ஓல மறைகள் ஓலமிட்டுத் தொடர்கின்றன!
//தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி//
இங்கு சபரி என்பதைக் சுந்தராம்பாளாகவே வைத்துப் பார்க்கிறேன்! அவர் சுவைத்த தமிழ்-முருக அமுதை, அப்படியே தன் கணீர்க் குரலில் பெருமாளுக்கும் தருகிறாரே!
//தருவதற்கொன்றுமில்லை தலைவனே எமை ஆதரி//
சுந்தராம்பாள் இன்குரலில் தந்து விட்ட பின், தர ஏது உள்ளது?
தலைவனே எமை ஆதரி!
இந்தக் குரலுக்குச் சொந்தக்காரரை
அவ்வையார் என்றே சின்ன வயதில் நினத்ததுண்டு.
அப்படி ஒரு உருக்கமும் பக்தியும்.
மயிலேறும் வடிவேலனே பாடல் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் தொடங்காது அப்போதெல்லாம்.
கேபிஎஸ் அம்மா கம்பீரமும்,மணிக்குரலும் அதற்குப்பின் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஜி.ரா,நீங்கள் சொன்னது போல நல்லதையே பாடினதால் தான் இருக்கும்.
மிக மிக நன்றி.
ரவி,ஜி.ரா
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
மிக இனிய பாடல், பெண்களில் கம்பீரமும் கலந்த குரலின் சொந்தக்காரி எங்கள் கே.பி.எஸ் அம்மா! ஆம் அவர் நல்லதை மட்டும்
பாடியவர்.
நன்றி //
உண்மைதான் ஐயா. லட்ச ரூவாய் சம்பளம் வாங்கி நாட்டு விடுதலைப் போராட்டத்துக் கொடுத்தாராம். ம்ம்ம்..இன்றைக்குக் கோடிக் கோடியா சம்பளம் வாங்கி...ஏரியா உரிமைய வாங்கிக் கொள்ளையடிக்கிறவந்தான் உண்டு. கே.பி.எஸ் உண்மையிலேயே பெருமைக்குரியவர்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
கண்ணன் பாட்டில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக! //
நன்றி ரவி.
// சுந்தரமான சுந்தராம்பாளின் சுறுசுறு பாட்டுடன், சுவையாகத் துவங்கி உள்ளீர்கள்! //
அவர் பாடிய பாடல்கள் எக்கச்சக்கம். அத்தனையும் முருகனுக்கு இச்ச கச்சம். இருந்தாலும் இரு எச்ச கச்சம் வேங்கடன் மேலும். அதை எடுத்துச் சொல்லத்தான் இந்தப் பதிவு.
// அதுவும் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன் ஒப்பார் இல் அப்பன்...
என்னப்பன், திருவேங்கடமுடையான் பாடல்!
கண்ணக்கு இனியானைக் காதுக்கும் இனியதாகக் கேட்கும் போது...
இனியது கேட்கின் அல்லவா?
இனிஎது கேட்கின் மன்னவா!
மலர்மகள் மாதவா! நீ ஏழு மலை இருக்க..ஏது மனக்கவலை! //
ம்ம்ம்...சொற்கோர்வை... :)
// வல்லிசிம்ஹன் said...
இந்தக் குரலுக்குச் சொந்தக்காரரை
அவ்வையார் என்றே சின்ன வயதில் நினத்ததுண்டு.
அப்படி ஒரு உருக்கமும் பக்தியும்.
மயிலேறும் வடிவேலனே பாடல் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் தொடங்காது அப்போதெல்லாம்.
கேபிஎஸ் அம்மா கம்பீரமும்,மணிக்குரலும் அதற்குப்பின் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஜி.ரா,நீங்கள் சொன்னது போல நல்லதையே பாடினதால் தான் இருக்கும்.
மிக மிக நன்றி.
ரவி,ஜி.ரா //
உண்மைதான் வல்லியம்மா. கே.பி.எஸ் அவர்களின் குரலும் பாடும் திறமும்...அவர்களுக்கு மட்டுந்தான். அவருக்குப் பின் யாருக்கும் இல்லை. முன்னும் அப்படித்தான்.
ஜி.ரா,
அருமையான பாடல்.
You made my day,
Ezhu malai irangi Odivanthaan!!!
ennai thedi...
Ezhu malai irangi Odivanthaan!!!
மிக அருமையான பாடல் இராகவன். சிறு வயதில் வானொலியில் கேட்டிருக்கிறேன். ஆனால் பாடல் முழுவதும் அப்போது மனத்தில் நின்றதில்லை. இன்று நின்றது.
கால்வண்ணம், கைவண்ணம் என்னும் போது கம்பனின் வரிகள் நினைவுக்கு வந்ததென்றால் குசேலன், குகன், சபரி என்னும் போதும் மனம் நிறைந்து கண்களும் நிறைந்தது.
மிக்க நன்றி.