Tuesday, June 11, 2013

TMS: பச்சைமா மலைபோல் மேனி!

TMS அவர்களின் நீங்கா நினைவாக, முருகனருள் வலைப்பூவில், 2 வாரங்களாய், பாடல் இட்டுக் கொண்டே வரும் போது.......

அட, கண்ணன் பாட்டிலே, இன்னும் இடவில்லையே -ன்னு இன்று தான் மின்னல் போலத் தோன்றியது; அதான் இந்தச் சினிமாப் பாடல்;
பலருக்கும் தெரிஞ்ச பாடல்... ஆனா TMS-இன் "பின்குறிப்பு" தெரியாத பாடல்....

அதென்ன "பின்குறிப்பு"?



1967-68
TMS அவர்களின் அருமை மகன் = பாலசுப்பிரமணி;
பாலன் தான் = 16 வயது;
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது; திடீரென்று மஞ்சள் காமாலை; ஒரேயடியாயப் படுத்து விட்டான்:(

TMS சொல்வதையே கேளுங்கள்:

"பல வைத்தியர்களை அழைத்தேன்; பணத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்தேன்; ஆனால் அவனோ கடைசி வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை;
"முருகா முருகா" என்ற சொற்கள், அவன் வாயிலிருந்து வந்தபடியே, அவன் உயிர் பிரிந்தது;

அன்றிலிருந்து, நான் எதிலும் பற்றற்று இருக்கிறேன்;
என் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருப்பினும், ஆண்டவனின் பாதங்களில் சரணம் அடைந்து விட்டதால்... காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்!

அந்தச் சமயத்தில், எனக்கு ஒரு பாட்டு அமைந்தது; விக்கித்துப் போனேன்;
"உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா? அரங்க மா நகருளானே!"

என் அப்பன் முருகன் மேல் எத்தனையோ பாடல்கள் பாடி இருக்கிறேன்; 
எத்தனையோ அம்மன் பாடல்கள் பாடி இருக்கிறேன்; எத்தனையோ கண்ணன் பாடல்கள் பாடி இருக்கிறேன்;
ஆனால், 1968இல் வந்த திருமால் பெருமை என்கிற இந்தப் படத்தில், இந்த ஒரு பாடல், இந்த ஒரு வரி... அப்போது என்னை மிகவும் அசைத்து விட்டது;

என் மகன் பாலசுப்பிரமணி; அவன் ஆன்மா சாந்தி அடையணும்; உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா, அரங்க மா நகருளானே"
(பொக்கிஷம்: நேர்காணல் - 29/5/1977)



TMS (எ) அந்த முருக உள்ளத்தை உருக்கிய திருமால் பாடலை,
இன்று பாடுவோம்...
அவர் மகனும், அவரும்
ஈசன் எந்தை இணையடி நீழலே - ன்னு இளைப்பாற வேண்டுவோம்;

அவரின் துணைவியார் திருமதி. சுமித்ரா செளந்தரராஜன் & மற்ற பிள்ளைகளுக்கு, அவரின் ஆசி நிலைத்து நிற்கவும் வேண்டுவோம்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....



பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

----------

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!


காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே



படம்: திருமால் பெருமை
இசை: கேவி மகாதேவன்

வரிகள்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
குரல்: ஏழிசை மன்னர் TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan

கண்ணன் பாட்டில்,TMS பாடல்களின் தொகுப்பு = இங்கே!



3 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் கனத்தது...

Kavinaya said...

//ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!//

ஆமாம். அவரின், பிள்ளையின் ஆன்மா சாந்தியுற்றிருக்கும் இந்நேரம். நெகிழ்வான பகிர்வுக்கு நன்றி கண்ணா.

குமரன் (Kumaran) said...

எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இன்று கேட்க மனம் நிறைகிறது.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP