காணாமலே வந்த காதல்!
முதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை
நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி
படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக்
கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான்
தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக்
காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.
அவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி
இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில்
எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று
ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக்
காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம்
இன்னும்தான் அதிகமாகிறது!
“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத
பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை!”
“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான்
அவளுக்கு. அவனைத் தவிர!”
“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது
முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா?”
“நீயும் காதல் வயப்பட்டிருந்தால்
இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்!”
“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ,
இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.
“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ
இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச்
சட்டை செய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு
அதிகம்!”
“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன்
போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ?
அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா?”
இவர்கள் பாட்டுக்குப் பேசிக்
கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.
“அவன் எப்படி இருப்பான்? நான்
கற்பனையில் கண்டது போலவே இருப்பானா? என்னைக் கண்டதும் என்ன நினைப்பான்? என்னைப் பிடிக்குமோ
பிடிக்காதோ அவனுக்கு? நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா? காணாமலேயே
காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது? அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை
அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்?”
“ஏனடி இப்படியெல்லாம் கவலைப்படுகிறாய்?
அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான்,
பாரேன்!”
அப்போதுதான் உணர்கிறேன், என்
மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று!
எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக்
கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து
சூடாவது எனக்கே தெரிகிறது.
“ஐய... வெட்கத்தைப் பார்! எங்களுக்குத்தான்
உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே!”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.
“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம்
அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “
“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி
என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்!” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி
ஒருத்தி கேட்கிறாள்.
“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக
இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதலை எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற
மனநிலையிலா இருந்தேன்?”
அந்தக் கடிதம் என் மனக் கண்ணில்
ஓடுகிறது…
“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப்
பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து
விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு
முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம்
அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து
என்னைக் காப்பாற்று.”
எந்தப் பெண்ணின் முதல் காதல்
கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.
நாளைக்குத்தான் கௌரி பூஜை.
அவன் வருவானா?
--கவிநயா
9 comments :
Madam pl. increase font size.
:)
இப்ப சரியா இருக்கான்னு பாருங்க... அப்படி இல்லன்னா browser-ல இருக்கும்போது Ctrl and + அழுத்தினா window size + font size பெரிசாகும்.
அழகிய அருமையான எண்ணம் (ஆக்கம்)
தொடர வாழ்த்துக்கள்...
Rajesh
Adjusted now!
Kavikka
I guess u were using ms-word to publish, instead of blogger;
Thatz why it got converted to its own size.. I changed the post html to font-size: medium
Gowri poojai-kku vaazthukkaL
He will come, bcoz he is He! True Love never fails!
நன்றி தனபாலன்!
ஆமாம் கண்ணா, நீங்க சொன்னது சரியே. உதவிக்கு மிகவும் நன்றி. அப்பப்ப இந்த அக்காவுக்கு ஹலோ சொன்னா சந்தோஷமா இருக்கும். நலம்தானே?
ஆகா! அற்புதம்.
வாங்க துரை. மிக்க நன்றி!
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-