Sunday, July 24, 2011

வீரராகவர் விரதம் - 1



 சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.

அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.  

தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.

என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப்   பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.

"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.

"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.

நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.  நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.

திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.

எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

43 comments :

adithyasaravana said...

ராதா.. பெண்ணாய் பிறந்து பாக்கியம் செய்து கொண்டீர்..அல்லிக்கேணி கண்ணன் சௌக்கியமா? ஜம்முன்னு பரிவாரத்தோட இருந்தானா? மாலை ஒன்னும் இல்லையான்னு சொன்ன போது தான் ஞாபகம் வருது..ஒரு முறை மாலை வாங்கி உள்ளே போனால் நடை சாத்திவிட்டது, மறுபடியும் வாங்கிய பூக்கடையிலேயே கொடுத்து, மாலை வந்து சாத்தரோமுன்னு சொல்லீட்டு வந்தோம்.. மாலை சாத்த முடியவில்லை.. மனக்குறையும் தீரவில்லை..கண்ணன் கம்பீரமா சிரிச்சுட்டுத்தான் இருக்கான்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராதா.. பெண்ணாய் பிறந்து பாக்கியம் செய்து கொண்டீர்//

ஹா ஹா ஹா
என்ன பாக்கியம் செய்து விட்டாயடீ ராதா! ஆகா! :)))

நாரதரே! உங்கள் தவ மகிமையால் ராதா என்னும் ராதா மோகனை அப்படியே மாற்றி விடுங்கள்! உங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வடை வாங்கித் தருகிறோம்! :)

@சரவணன் அண்ணா
நீங்க மாலை சாத்தாததுக்கு கண்ணன் இப்படிப் பழி வாங்கி விட்டான்:))
ராதா=மிஸ்டர் ராதா மோகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பதிவைப் படிச்சிட்டு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியலை! என்ன தவம் செய்தனை - ராதா - என்ன தவம் செய்தனை!:)

என் தோழன் சில சமயம் வேறு ஒரு பெயரில் என்னைக் கூப்புடுவான்! அதுவும் கோயில் போன்ற பொது இடத்தில் வேணும்-ன்னே...நான் என்னைச் சொல்லலையாக்கும்-ன்னு நடித்து, திரும்பிப் பாக்காம நடப்பேன்!

இன்னிக்கி அது போல் ஒரு காட்சி கண்ணன் பாட்டில்! முருகா! எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது!
ராதா தன் கஷ்டத்தைச் சொல்லிப் பதிவில் புலம்பி இருக்கா(ன்)! ஆனாலும் சிரிப்பு வருது! Sorry da Radha!:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்//

ஓ! "நிறையப்" படிச்சிட்டியா ராதா? :)

//வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை//

ஹிஹி! உண்மை தான்! ஆனால் மனித மனம் குரங்கை விட மோசம்! விட்டலனே கதி என்று இருக்கும் போது, ஏன்டா வேலையை விட்டோம்-ன்னு நினைக்கும்! பல வருமானம் இல்லாத ஆலயங்களில் அர்ச்சகர் சொல்வாரே, அது போலத் தான்:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே//

தாயார் மேல்மாடப் புறாக்களுக்குப் பாசுரம் தெரியாது! கீத கோவிந்தம் தெரியாது! மீரா பஜன் தெரியாது! சைவ-அசைவம் தெரியாது!

அந்தப் புறா வரும்! மாடத்தில் அமரும்!
தாயாரையும் பெருமாளையும் ஸ்பெசல் டிக்கெட் வாங்காமலேயே பார்க்கும்!
பக்கத்திலேயே தன் உணவைக் கொத்திக் கொண்டே, பெருமாளையும் பார்க்கும்! சிரிக்கும்!
எழுந்து இறக்கை பட-படவென அடித்து அவனுக்குப் பூசை ஒலி எழுப்பும்!
பறந்து விடும்!

அரை மணி கழித்து, மீண்டும் வந்து, அதே செய்யும்!:)

அல்லிக்கேணி படபடக்கும் மாடப்புறா ஆவேனே!
எம்பெருமான் வீட்டின்மேல் ஏதேனும்
உளறுவனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்//

அது தெரிஞ்சது தானே ராதா!:)
உன்னிடம் போனில் தான் பேச முடியல! பின்னூட்டத்திலாவது பேசுறேன்! :)

//அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்//

சூப்பர்! என்ன நிகழ்ச்சி துவாரகாவில்? சொல்லு சொல்லு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !//

//பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்//

//உவந்ததென் தவறோ ஐயா !
இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும்//

என்னமோ தெரியலை!
விளையாட்டாய்ச் சிரிச்சி பதிவிலே மழுப்பினாலும்,
இது போன்ற வரிகள் வந்து உண்மையை உடைக்குது!
அதுவும் எம்.எஸ்.அம்மா வந்து இன்னும் பலமா உடைக்கறாங்க! போதும்மா, என்னைய விட்டுருங்க!:(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எந்தையை...பாட்டினால் பரவி வாழும் நாரதரை வணங்கினோமே!

நாரத முனிகளுக்கு என் வணக்கம்! ராதாவை ரொம்ப நாள் கழிச்சிப் பதிவில் பார்த்த மகிழ்ச்சியில், உங்களை முதலிலேயே வணங்கவில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!

எந்தைக்குப் பிடித்தமான ராகத்தை வாசித்து, அவரை மகிழ்வாக வைத்திருக்கும் உங்களுக்கு மிக மிக நன்றி! நீலாம்பரியில் = என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேக்கணும்-ன்னு நினைச்சேன்! அது என்ன தலைப்பில் வீர-ராகவ சரிதம்?

In Love With Krishna said...

@Radha:
First of all, hi! :)
i read ur post and came to comment when i saw this:
//ராதா.. பெண்ணாய் பிறந்து பாக்கியம் செய்து கொண்டீர்..;//
i am really, honestly sorry....but vayiru valikka sirichitten!
in the beginning, even i had this problem...u talked like a guy but ur name! :))
thayangi thayangi ungakitta kettadhellam nyaabagam vandhiruchu!

In Love With Krishna said...

//னலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !
[Image]
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !//

:((((((
thanks for posting this song!!!
loved this song...every word made me cry....
thanks..

Radha said...

ஆதித்யா சரவணா சார்,
என் முழுப்பெயர் ராதாமோகன். நண்பர்கள் எல்லோரும் ராதா என்று அழைப்பார்கள்.
இங்கே நாரதர் என் நண்பர் ஆகிவிட்டார். :-)

அப்புறம் பார்த்தசாரதி கோயிலில் மாலை வாங்கிச் சென்று நடை சாத்திவிட்டால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கோயிலைச் சுற்றி வாருங்கள். நரசிம்மர் சன்னிதிக்கு பக்கத்தில் ஒரு உயரிய ஆசனத்தில் பிருந்தாவன கிருஷ்ணன் இருப்பான். நம் கையாலேயே அவனுக்கு அந்த மாலையை அணிவிக்கலாம். அதாவது உங்களுக்கு கண்ணனுக்குத் தான் மாலை என்று எண்ணம் இருந்தால்...இல்லையேல் மற்ற சன்னிதிகளில் எல்லாம்(வரதர், நரசிம்மர், ஆண்டாள்) சற்று தாமதமாகத் தான் வேலை முடியும். 99% ஆண்டாள் சன்னிதியில் சமர்ப்பித்துவிட முடியும்.
தங்கள் மனக்குறையை விரைவில் கண்ணன் தீர்ப்பான். :-)

Radha said...

ரவி,
பதிவைப் படித்தால் சிரிப்பு வர வேண்டும் என்பது தான் நோக்கமே. :-)))
பாடல் அழ வைத்து விடும். என்பதால் இப்படி ஒரு முன்னுரை...
அப்புறம் வீரராகவரைப் பற்றி ஒரு பதிவு எழுதச் சொல்லி முன்னர் யாரோ கேட்டிருந்தார்கள். அப்பொழுது தோன்றிய தலைப்பு இது. எப்படி சம்பந்தப்படுத்தப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. :-)))

In Love With Krishna said...

@Radha: Ungalukku oru info: evening 05:30-kku vandheenga-nna u can watch Aandal utsavam...it started yday...
06:00 pm-kku maalai maathuvaanga...come to the temple this week to have darshanam....

நாடி நாடி நரசிங்கா! said...

உள்ளேன் ஐயா:)

In Love With Krishna said...

// ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே !//

@ Radha: what is the difference between andha kaalam and indha kaalam?

Radha said...

ராஜேஷ்,
இப்போ தான் நினைவிற்கு வருது. நீங்க தான் திருவள்ளூர் வீரராகவரைப் பற்றி பதிவிடச் சொன்னீர்கள்.
தலைப்பிற்கு சம்பந்தம் வரும்படி ஏதாவது கதை சொல்லுங்க. அடுத்த பதிவில் கிருஷ்ணன் தான் நாயகன்.
ராமனை எப்படி கொண்டு வருவது என்று நீங்க தான் ஐடியா சொல்லணும். :-)

Radha said...

@ILWK, தயங்கி தயங்கி கேட்டீயாம்மா ! அதுக்கே நான் விழி பிதுங்கிட்டேன். :-)
அப்புறம், அந்தக் காலம்(2000) = பொற்காலம். i was fresh out of college...tasting success everywhere...கண்ணன் என்னைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினான். :-))) அதனால் எனக்கு நினைப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு....அப்படின்னு ருக்மிணி போட்டு கொடத்துட்டான்னு நினைக்கறேன். :-)
இப்போ காலம் வேற...வேணும்னா இப்படி சொல்லலாம்...இப்போ நான் கண்ணனைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கிகிட்டு இருக்கேன்... :-)
so you got the difference, right? :-)))

Radha said...

//சூப்பர்! என்ன நிகழ்ச்சி துவாரகாவில்? சொல்லு சொல்லு! //
புதுக் கதை எல்லாம் ஒன்றும் இல்லை. அரதப் பழசான ஒரு நிகழ்ச்சி தான்...இன்னொரு உருக்கமானப் பாடலுக்காக கொஞ்சம் கதை அளக்கிறேன். :-)))

குமரன் (Kumaran) said...

இடையில் வீணையா? ரொம்ப சுமையா இருக்காது? பாவம் நாரதர்! :-(

இரவுல கேட்டா நல்லா இருக்கும்ன்னு சொல்லிட்டீங்க. கேட்டுட்டு சொல்றேன். :-)

In Love With Krishna said...

//கண்ணன் என்னைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினான். :-))) அதனால் எனக்கு நினைப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு....அப்படின்னு ருக்மிணி போட்டு கொடத்துட்டான்னு நினைக்கறேன். :-)//
//உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை.//
@Radha:
Adhenna...suthi suthi Rukmini thaayar-idame vareenga????
i dnt likey! :(

In Love With Krishna said...

//i was fresh out of college...tasting success everywhere...கண்ணன் என்னைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினான். :-)))//
i am fresh-into-college now! :)
And, official tiruvallikeni vaasi!

In Love With Krishna said...

//இப்போ நான் கண்ணனைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கிகிட்டு இருக்கேன்... :-)
so you got the difference, right? :-)))//
Adhavudhu, first case: Perumal protects you "like a grain of palm in His hand!"
Second case :You are carrying Him!! Wow Mr. Radhamohan! Yashodhai-ai kattivida vitta maadhiri psp ungalai thaangikolla vitaaraa!:))
Romba kutham solladheenga, apram unga kutti giridhaari veembu-kku uzhagalandha perumal-aa maarida poraaru! :))

Radha said...

குமரன்,
நீங்க இந்தப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன். முன்னர் ஒரு முறை மீரா பாடல் வரிகளை உங்கள் நண்பர் ஒருவருக்கு எழுதிக் கொடுத்ததாக சொன்னீர்களே...இந்தப் பாடல் விடப்பட்டிருந்தது என்றால் h.m.v கேசட்டில் இந்தப் பாடல் விடுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

Radha said...

//i am fresh-into-college now! :)
And, official tiruvallikeni vaasi!
//
excellent !! have a great time !! :-)))

In Love With Krishna said...

//உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !//
:(((
evvalavu azhagaana varigal!!
i cried all over again!

Radha said...

@ilwk,
"யாரை நமக்கு ரொம்ப பிடிக்குமோ அவங்ககிட்ட தான் சண்டை போட முடியும். யாரை நமக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு பிடிக்குமோ அவங்ககிட்ட தப்பே கண்டுபிடிக்க முடியாது..." இப்படின்னு என் கிட்ட நாரதர் சொன்னார். :-)))
அப்பறம் கிரிதாரி எப்படி மாறினால் என்ன? what do i care ? there is this thirukkural:
"நவில்தொறும் நூல் நயம் போலும்
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு."
with giridhaari it only gets sweeter and sweeter...

In Love With Krishna said...

//அப்பறம் கிரிதாரி எப்படி மாறினால் என்ன? what do i care ?///
um hmm...
naan sonnadhu...neenga psp-ai "thanga thaambaalathil" thaanguren-nnu soneenga illaya...

ungalukkaaga kutti giridhaari-yaaga neenga thookumpadi thannai maathikonda psp...neenga over-aa kutham sonnaa "indha aalukku vakkuren aapu"-nnu uzhagalandha perumal-aaga maarida poraaru-nnu dhaan!:))
So, thanga thaambaalathil neenga thaanginaalum, thaanga vaipadhu MR. PSP...So no kutham sollifying...
:)))

In Love With Krishna said...

@Radha: idhellam ok,Aandal sametha PSP-ai sevikka eppo varadhaa plan?

Rajewh said...

நான் கூட ராதா அக்கான்னு தான் மொதல்ல உங்கள கூப்பிட்டேன் . நான் அக்கா இல்லங்க ராதா மோகன் என்று நீங்க சொன்னவுடன் கூட

ஒ! மோகன் உங்களோட கணவரோ என்று நினைத்தேன் , ஆண்டின்னு சொல்லலாம்னு இருந்தேன் .

அப்புறமாதான் தெரிஞ்சது நீங்க ராதா மோகன் தண்டபாணி என்று .:))

Rajewh said...

//தலைப்பிற்கு சம்பந்தம் வரும்படி ஏதாவது கதை சொல்லுங்க//

ஒரு ஊர்ல ஒரு முனிவர் .சாப்பிடாம விரதம் இருந்து தவம் இருந்தார் .
வருடம் ஒரு முறை மட்டும் சாப்பிடும்போது ஒரு வயதானவர் வந்து அவர் சாப்பிடும் போது பசிக்கிறது என்றார் .
சாப்டது மட்டுமில்லாம எவ்வுள் படுப்பது என்று கேட்க ………..

///அடுத்த பதிவில் கிருஷ்ணன் தான் நாயகன்.//

ராமனை எப்படி கொண்டு வருவது
புல்லாங்குழலை வில்லாக மாற்றி விட்டு அனுமந்த வாகனத்தில் கொண்டு வரலாம் :)

rajesh

Radha said...

ராஜேஷ்,
என் பெயரில் இவ்வளவு குழப்பமா ? :-) எல்லோருமா சேர்ந்து மறுபடியும் profile அப்டேட் செய்ய வைத்துவிட்டீர்கள். :-)

Radha said...

@ilwk,
i wish i find time during the weekdays...also i have to go to my native place this weekend...so its all in the hands of aandaal.

In Love With Krishna said...

//Gender: Male, Nick Name: Radha, Full Name: Radhamohan Dhandapani, Year of Birth: 1978, native place near Cuddalore, favourite deity: Krishna, all time favourite: Giridhaari.//
:)))

In Love With Krishna said...

//all time favourite: Giridhaari.///
:))
@Radha:
Have u heard "Mere toh Giridhar Gopaal,
Dusro na koi" ???
Meera's song...

Lalitha Mittal said...

song ws so nice ;melting!

jaambavathi story does connect rama n shyama in a round about manner if that's wt u mean.

Sankar said...

One of my favorite song anna!Thanks for posting..:)

Radha said...

"மோரே தோ கிரிதர கோபால..." முதன் முதலில் கேட்ட மீரா பஜன். மறக்க முடியாதது. இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள பாடல் மெட்டில் ஒரு மீரா பஜன் இருக்கிறது. அதையும் இட்டால் கண்ணன் பாடல் பக்கம் என்னை அனுமதிக்க மாட்டார்கள் என்று பயந்து இடவில்லை. :-)

Radha said...

லலிதாம்மா,
சியமந்தக மணி கதை அருமையான த்ரில்லர் தான்...ஆனால் பாடல்களுக்கு சம்பந்தம் வருமாறு பார்க்கிறேன்... அடுத்த வரும் பதிவுகளில் ரொம்ப உளறினேன் என்றால் யாரும் அதை பெரிது படுத்த வேணாம் என்று கேட்டு கொள்கிறேன். :-)
சங்கர்,
உங்களிடம் "ஜனார்த்தனா ! ஜகந்நாதா !" பாடல் mp3 இருக்கிறதா ?

Kavinaya said...

அட, ராதா! வருக, வருக!

உருக்கமான பாடலைத் தந்து அழ வச்சுட்டீங்க :(

நாரதரை விசாரிச்சதா சொல்லுங்க :)

Sankar said...

U mean "Pyare darshan Deejyo aaj"?! Please post it too.. :)
Btw, I don hav the song u asked for?!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராதா. இந்தப் பாடலை இப்போது தான் முதன்முதலாகக் கேட்பது போல் தோன்றுகிறது. நண்பருக்கு எழுதித் தந்தவற்றில் இந்தப் பாடல் இல்லை.

Radha said...

//Pyare darshan Deejyo aaj //
அதே அதே. :-) உங்களிடம் உள்ள மீராப் பாடல்கள் பற்றி அறிந்துகொள்ளவாவது கட்டாயம் உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும் சங்கர். :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP