Friday, October 23, 2009

ஆடாது, அசங்காது வா...!!



வான முகிலின் மேனியில் வாரிதி பொழிந்தது போலும், பாயும் நதியில் தன் நிறம் கண்டு கருவங்கொண்ட நீல மேகப் பிம்பத்தில் வெண் நுரை ததும்பியது போலும், கரையில் கொழித்திருக்கும் நாணல் புதர்களைத் தலையாட்டிச் செல்லும் தென்றலின் குளுமை போலும், பாறைகளின் மேல் முழுக்கியும், தழுவியும், பக்கவாட்டில் சரிந்தும் சலசலத்துப் பாய்கின்ற நதி நீரோட்டம் போலும் சின்னக் கண்ணன் தவழ்கிறான்.

தாவித் தாவித் துள்ளியோடி, தம் சின்னக் கண்களை வெருண்டி, குச்சிப் பாதங்களால் குதித்துச் செல்லம் கொண்டாடிப் பறந்தோடும் புள்ளிமானின் குறும்புக் கண்களைக் கொண்டவனாயும், செம்பவளம், வெம்பவளம் இரண்டையும் தனித்தனியாய்க் கண்டிருந்த கண்களுக்கு செம்பவள இதழ்களின் உள்ளே வெம்பவள முத்தென பற்களைப் பதுக்கிப் புன்னகைத்து உயிர் மயக்கம் தருவானாயும், இருளின் வர்ணமா, இருள் இவனின் வர்ணமா என்று குழம்பித் தெளியும் வண்ணம் சுருள் குழல்கள் காற்றில் அசைந்தாடுவனாயும், எத்துணை புன்யம் செய்தனையப்பா, எங்கள் குழந்தைக் கண்ணன் கூந்தல் மீது குத்தி நின்றாய் நீ என்று கேட்கத்தக்க பச்சை மயிற்பீலி காற்றில் சிரித்தாட, கண்ணன் தவழ்ந்து வருகிறான்.

அழகன் இவன் அமுதன் குரல் இனியன், குழல் இசைப் பிழியன் என ஆசைத் ததும்பத் ததும்ப மொழிகள் பொழிகையில் ஆனந்தப் புன்னகைச் சிந்தி, மலர் இதழ்கள் போல் சிரம் கிளைத்த செவி மடல்களில் அணிந்த காதணிகளில் ஒளிப் பிரசவித்து, 'என்னை அள்ளிக் கொள்ள மாட்டாயா?' என்று பூங்கரங்களை நீட்டி விரல்களை அசைத்து காற்றைத் தடவித் தடவி மீட்டி, எங்கணும் இனிமை பொங்கிப் பிரவாகித்து ஓடம் குழறலாய் 'அம்மா... அம்மா...' என்றழைத்து தவழ்ந்து வருகிறான் கண்ணன்..!

ஆயர்பாடி ஆநிரைகள் கொடுத்து நிறைந்த பொன் பானைகளில் வெண்ணுரை பொங்க பால் வரும்; அந்த பாலைக் கடைகையில் கண்ணன் எண்ணங்களை நினைக்கையில் மனதில் இருந்து கிளர்ந்து எழும் அருள் காதல் போல் வெண்ணெய் திரண்டு வரும்; அந்த வெண்ணெய் உண்டு உண்டு, பாலமுதென மென்மை படர்ந்த கொழுத்த கன்னங்கள் அசைய அசைய, 'அம்மா... அம்மா...' என்றழைக்கிறான்.

மேகத்திற்குப் பொட்டிட்டது யாரோ? அவன் கண்களுக்கு மையிட்டது யாரோ? கருணை மழை பொழியப் பொழிய விழி நனைந்து மையெல்லாம் அடியார் துயர் போல் கரைந்து ஓடுகிறதே! இவனைக் காணாத கணமெல்லாம் முள்ளின் மேல் படுக்கை போலும், நெருப்பின் மேல் நடக்கை போலும் தகிக்கிறதை அறிந்து, தம் கருணைப் பார்வையை செலுத்துகிறான்; அதனை கணத்தின் நுண்ணிய பொழுதும் மறைக்கின்ற வகையில் மேலிமை, கீழிமையைக் கவ்வுகிறதே!

திருநெற்றியில் நாமம் இட்டதும், புருவங்களில் வர்ணப் பொட்டுகள் வைத்தும் இவனை அழகுபடுத்தியது யார்? அழகே உனக்கே அழகா? சிணுங்கியபடி நீ பசு போல் நடந்து வருகையில், உண்மைப் பசுக்கள் எல்லாம் உன்னழகைப் பருகிப் பருகி 'ம்மா... ம்மா...' எனக் குழற, நீயும் 'அம்மா... அம்மா...' என்றழைக்க என் கைகள் உன்னை அள்ளிக் கொள்ள நீள்வதென்ன?

இதழ்ச் சிரிப்பு அழகா, இளஞ் சிவப்பு இதழ் அழகா என்று குழம்பிப் போய் நிற்கின்ற போது நீ சிரிக்கின்றாய். ஆகா! மனமயக்கம் கொள்ள வைக்கின்ற மதுரச் சிரிப்படா உனது! ஆசை மோகம் கிளர்ந்தெழ உனை அணைத்துக் கொள்ள பாய்ந்து வருகையில் உனது பெருஞ்சிரிப்பு, குறுஞ்சிரிப்பாய் குவிகின்ற புள்ளியில் கிறங்கி நிற்கிறேனடா!

இவன் பூங்கழுத்தில் யாரது மணியாரங்களும், முத்து மாலைகளும், பொன்னாபரணங்களும், ஜொலிக்கும் வெள்ளி நகைகளும் சூட்டி அழகுபடுத்திப் பார்ப்பது? அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியா? இல்லையே, அவள் அன்பெனும் நார் எடுத்து, அவளது கனவுகளை மலர்களாய்த் தொடுத்து, காதலெனும் தேரில் விடுத்து, தன்னையே என் கண்ணனுக்குக் கொடுப்பவள் ஆயிற்றே! இவன் ஆரம் தாங்குமா, இந்நகைகளின் கனத்தை? ஒற்றை விரலால் கோவர்த்தனகிரி தாங்கும் வல்லமை உள்ளவனானாலும் தாயுள்ளம் தவிக்கின்றதே! என் மனதின் தவிப்புணர்ந்தும், தலையசைத்து தன்னகை கழட்டாமல் கூட புன்னகையும் அணிந்து கொண்டு அலைக்கழிக்கின்றானே, என் செய்வேன்...?

இரு பிஞ்சுக் கைகளில், அஞ்சு விரல்களில் மோதிரம் வேண்டாமடா உனக்கு! குழல் ஒன்று போதுமே! எழில் கொஞ்சும் ஆபரணங்கள் தத்தம் வாழ்பயனைப் பெற உன் மேனியில் விளையாடுகின்றன. இடுப்பில் ஒட்டியாணமும், பாதங்களில் கிலுகிலுக்கும் ஒலிக் கொலுசும், வளைகளும், மரகதக் கற்களும், பால் ஒளியன்ன வெள்ளிக் கழல்களும் ஜொலிக்கின்ற சின்னக் கண்ணனை அள்ளி அணைக்கையில் மகாகவி போல் 'உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடா'!

மதன மோகன ஸ்வரூபா, மதி மயக்கக் கொஞ்சும் குறுஞ்சிரிப்பழகா, இணை சொல்லவியலா இளங்கன்றென துள்ளி வரும் பிள்ளாய், துணை நீயென என் மனம் சொல்ல உன்னைத் தூக்கி அணைக்கையில் ஜென்மம் அர்த்தம் கொள்ள, ஒரு குழந்தையென குதூகலிக்கும் குமரக் குறும்பா,

நீ ஆடாது, அசங்காது வா...!

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments :

இரா. வசந்த குமார். said...

ஹேய்..!! என்னாச்சுப்பா எல்லாருக்கும்..! இந்தப்பக்கம் ஒருத்தரையும் காணோம்..?

Radha said...

கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி...பொறுமையா வந்து படிக்கறேன்.

Radha said...

அருமை வசந்த். உண்மை என்னவெனில், உங்களுடைய எழுத்தை ஒப்பீடு செய்யாமல் படிக்க வேண்டும் என்று கொஞ்ச காலம் கழித்து வந்து படிக்கிறேன். எதனோடு ஒப்பீடு என்று கேட்கிறீர்களா? உங்கள் முந்தைய பதிவுகளோடு தான்.
ராதை இல்லாமல் உங்கள் எழுத்துக்களை படிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. I gave sometime for myself to get rid of that bias.
And now I am finding this article (Yasodha bhavam) to be very interesting. "கண்ணம்மா என் குழந்தை" - எனக்கு மிகவும் பிடித்த பாடல். I am reminded of a Thyagaraja Kirtan in which he vividly describes the decorations he performs for child Rama.

ஆயில்யன் said...

அற்புதம் வரிகளால் வர்ணித்து கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டீர்கள் :)

தலைப்பினை பார்த்ததும், பித்துகுளிமுருகதாஸ் பாடி முன்பொரு காலத்தில் கேட்ட ஞாபகத்தில், மனம் தானாகவே வரிகளை கற்பனை செய்துகொண்டு, பாட ஆரம்பித்துவிட்டது!

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாடல் இணைப்பு எனக்கு செயல்படவில்லை !

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

ஆடாது அசங்காது வா வா கண்ணா

இந்த லிங்க்ல கேட்டுட்டேன் :)

ஆயில்யன் said...

oops லிங்க தப்பா போச்சு

http://www.esnips.com/doc/7b0c3752-95e3-4ff5-8aef-fb7f561dac4c/Aadathu-Asangathu-Vaa-Kanna

RAMYA said...

பதிவு நல்லா இருந்திச்சு வசந்த், உங்க ப்ளாக் ஏனோ எனக்கு தெரியலை. நல்ல ஒரு பதிவு படிச்ச மன நிறைவு கிடைச்சுது.

செம! செம! பாட்டு உங்க தயவாலே நீண்ட நாட்கள் கழித்து இந்த பாட்டைக் மறுபடியும் கேட்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி ஆயில்ஸ் அண்ணா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP