ப்ரஸன்ன வதனாம்...!
வானம் கழுவியது போல் விரிந்திருந்தது. கீழ்த் திசையின் முடுக்குகளில் இருந்து வெண்ணொளிக் கீற்றுகள் விசிறியடிக்கத் தொடங்கின. நீரலைகள் நிரம்பித் தள்ளாடும் பெரும் ஒரு நீளப் புடவையாய் மினுக்கியது யமுனா நதி.அதன் மேனியெங்கும் விடியல் இன்னும் பூக்கத் தொடங்கியிராத விண்ணின் நீலக் கரைசல் பிம்பங்கள் மிதந்தன. நிலவொன்று தனியே தன் பாட்டுக்கு ஊஞ்சலாய்த் தொங்கியது. பின்னும், நிரம்பிய நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டே இருந்த காற்றில் குளிர் கலந்திருந்தது.
மரங்களின், கிளைகளின், இலைகளின், நரம்புகளின் மேல் இரவு தடவிக் கொண்டிருந்த தாலாட்டின் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த பனிப் படலங்கள் சோம்பல் முறித்தன. விளிம்புகளில் நிறைந்திருந்த ஈரங்கள் சுருண்டு, உருண்டு ஒன்று சேர்ந்து, ஒற்றைத் துளியாகி, சூரியனின் பெரும் உறிஞ்சலுக்கு ஏங்கத் தொடங்கின.
சின்னச் சின்னக் குருவிகளும், பறவைகளும், புள்ளினங்களும் பெரும் உற்சாகத்தோடு வாரித் தெறித்த அரிசிமணிகளாய் வானில் ஏகிச் சீழ்க்கையடித்துப் பறந்தன. பனித்துளி சுமக்கும் பூக்களின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள் 'கீச்சு..கீச்சென' கூறிக் கொண்டே சுற்றத் தொடங்கின. எறும்புகள் தமக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே வரிசை தவறாமல் எங்கோ விரைந்தன. புறாக்கள் தத்தம் சிம்மாசன இறக்கைகளை விரித்து, அலகால் விட்டு விட்டுக் கோதின. 'ட்ரூச்சு...ட்ரூச்சு..' என எழுப்பிக் கொண்டு மைனாக்கள் நதி மேல் பறந்தன. காக்கைகள் மெல்ல குதித்து, நடந்து, கரையோர அலைகளில் தலை முழுக்கிச் சிலிர்த்தன.
துளிக் கண்கள் திறந்து பார்த்த கூட்டிலிருந்த குஞ்சுகள், இன்னும் தாயின் மென் சூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன. தனித்த குயில் மட்டும் தன் கண்ணாடிக் குரலில் மெதுவாகக் கூவத் துவங்கியதும், கூடவே மற்றொரு மதுரக் குழல் இசையும் சேர்ந்திசைக்கத் தொடங்கியது.
அந்த சுகந்த குழல் நாதம் எழும்பிய புல்லாங்குழல் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளையின் கீழும் ஒரு முத்துப் பரல் ஆடியது. அதன் முனையில் ஒரு வைரமாலை பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தடவித் தடவி மென்மையான பூவிசை கொடுத்த விரல்கள் யாருடையவை..? அந்த விரல்கள் விளைந்திருந்த கைகளில் தங்கச் சாந்தைப் பூசியது யார்..? அந்த விரல்களின் ஒவ்வொரு கோடுகளும் பதிந்த பின் குழல் பொன்னானதா இல்லை குழலின் குரலைத் தடவி அவன் உள்ளங்கைகள் மின்னுகின்றனவா..? யாரவன்..?
முதலில் ஒரு மயில் இறகுக் கொத்து தெரிகின்றது. அதன் நீலக் கண் ஏன் இத்தனை உல்லாசமாய்க் காற்றில் ஆடுகின்றது..? அதன் ஒவ்வொரு பிசிறுகளும் அத்தனை தன்மையாய் தன் சின்னஞ்சிறு இழைகளும் குற்குறுக்க, எத்தனை கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றது. பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்தது போல் அல்லவா இருக்கின்றது..? அது தன் ஒற்றைக் காலால் நிற்கின்ற மகுடம் மட்டும் என்னவாம்..?
மரகதமும், மஞ்சள் பொன் வண்ணமும், செம்பவளமும், ரூபமும், இடையில் பாயும் வெள்ளி நரம்புகளும், தொட்டுத் தொட்டுக் கோர்த்த மணிமாலைகளும் கொண்ட இந்த க்ரீடம், இரவிலும் ஜ்வலிக்கும் சந்திரகாந்தக் கல்லால் செய்யப்பட்டதா..?
இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?
இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன. அந்த தோடுகள்...!! அவை செய்த பாக்கியம் தான் என்ன..! இந்த காந்த இசையைக் கேட்பதற்கேற்ப ஆடி ஆடி மயக்கம் கொண்டு கிளர்கின்றன அல்லவா..?
இது என்ன...!! இரு பெரும் களிறுகள் மதர்த்துப் போய் ஒன்றையொன்று எதிர்த்துக் கிளர்ந்து நிற்கின்றனவே..! ஓ..!! அவை இவன் புருவங்களா..!!
காலையில் கதிரவன் வரும் முன் வெள்ளிக் கரங்கள் திசையெங்கும் பாயும். அது போல் இவன் இமைகளில் துளித் துளி முடிக் குட்டிகள் முளைத்திருக்கின்றனவே..!! மேலும், கீழும் இமைகள் ஒன்றையொன்று கவ்வும் போது, அந்த கண்களை அல்லவா மறைத்து விடுகின்றன.!
கண்கள்..!! அவன் கண்கள்...!!!
கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?
வெண்ணெய் பூசிய கன்னங்களோ அவை இல்லை, கோபியர் கொடுத்த முத்தங்களால் கனிந்த அன்னம் கள்ளோ..?
அந்த நாசியை ஏது சொல்குவேன்..?
செவ்விதழ்களை என்ன சொல்வேன்..? அந்தி மாலை நிறம் என்றா..? ஆதவன் தெறிக்கும் சுவை என்றா..? அழகு தளும்பித் தளும்பி உருக்கும் அதரங்களை என்ன சொல்வேன்..?
prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM
(who is of smiling face, bestower of all fortunes,
whose hands are ready to rescue anyone from fear,
who is adorned by various ornaments with precious stones)
Puer natus est nobis,
et filius datus est nobis:
cujus emperium super humerum...
For to us a child is born,
to us a son is given:
and the government will be upon his shoulder..
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun
But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us
*
ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்
(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)
நமக்கு ஒரு குழந்தை பிறந்தான்;
மகனாக கொடுக்கப்பட்டான்.
சாம்ராஜ்யம் அவன் தோள்களில் கொடுக்கப்படும்.
ஒரு நாள் நீ வந்தாய்.
நீதான் அவன் என்று அறிந்தேன்.
மழையும் நீயே! மாகதிரும் நீயே!
எனக்கு இரண்டும் வேண்டும்,
ஏனெனில் எனக்கு நீ வேண்டும்.
நீதான் அவன்.
என் வாழ்நாள் முழுதும்
கனா கண்டு கொண்டிருந்தேன்.
இருளாக இருக்கும் போது,
நீயே என் வெளிச்சமாக வருவாய்.
ஆனால், மறந்து விடாதே!
நம் வழிகாட்டி எப்போதும் யாரெனில்
நமக்குள்ளிருக்கும் குழந்தையே..!!
***
ப்ரஸன்ன வதனாம் - எந்தப் பாடலில் வரும் வரி என்று நினைவுக்கு வந்து விட்டதா..? :)
***
ஆல்பம் :: எனிக்மா.
பாடல் :: The Child in Us(நமக்குள்ளிருக்கும் குழந்தை.)
இசை :: Michael Cretu
5 comments :
பதிவும் அருமை. பாட்டு அதை விட கண்ணனும் மயங்கும் வண்ணமிருக்கின்றது. சொக்கிப் போனேன்
//ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்
(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)//
திருமகளுக்கு சொல்வது அனைத்தும் திருமகள் தனிக் கேள்வனுக்கும் பொருத்தம் தானே !!
லக்ஷ்மி அஷ்டோத்தர தியானம் இப்படி டகால்டி ஆனது நன்றாக தான் இருக்கிறது. :)
//லக்ஷ்மி அஷ்டோத்தர தியானம் இப்படி டகால்டி ஆனது நன்றாக தான் இருக்கிறது. :)//
ennathu dakaltiyaa? omg! enakku onnume theriyaathu! naan muruga-nu singara chennai-kku ippo thaan vanthen...paatha, ippdi oru super post!
//இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?//
aaaga! ithu pola kuzhal katRai, kaathal-kku romba uthaviyaa irukkum :)
//இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன.//
ippdi ellam varnicheenga-na, kannan kaathu-nu kooda paakka maatten...chellamaa kiitakka vanthu ragasiyam cholra pola, kaathai mellisa kadichiruven :))
அன்பு உயிரோடை...
நன்றிகள்..!
***
அன்பு ராதா...
லக்ஷ்மி அஷ்டோத்ர மந்திரம இது..! தெரிந்து கொண்டேன். நன்றிகள்.
***
அன்பு கே.ஆர்.எஸ்...
நன்றிகள். முந்தைய பதிவுகள் எல்லாம் ஏற்கனவே என் பதிவில் எழுதி வைத்திருந்தவை. இது, 'கண்ணன் பாட்டு'க்காகவே யோசித்து எழுதியது. எனவே கண்டிப்பாக வடிவமைப்பில் வித்தியாசம் தெரிகின்றது.
மன்னிக்கணும் தாமதமாய்பார்த்தேன் வ்சந்த்!
//கண்கள்..!! அவன் கண்கள்...!!!
கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?
//
ஆஹா! அருமையாக இருக்கிறதே!