Monday, September 28, 2009

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம்! ரயில்ல போகலாம்! கார்-ல போவலாம்! எங்களைப் போல வருத்தப்படாத வாலிபர்கள் பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்! ஆனா கப்பல்-ல போக முடியுமா? - முடியும்!

எப்படி? அதைத் தான் இன்னிக்கி பதிவில் பார்க்கப் போகிறோம்!


ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் !!
ஜெகதாசார்யரான இராமானுஜரின் கருணைக்கு பாத்தியமானவரும், ஞானம் மற்றும் வைராக்ய குணக்கடலாகிய வேங்கடநாதன் எனும் வேதாந்த தேசிகரை வணங்குகிறேன்.

வேதாந்த தேசிகர் திரு அவதார தினமாகிய இன்று அவரைப் பற்றிய ஒரு பாடலை அனுபவிப்போமா.. அது ஒரு கப்பல் பாட்டு!
திருவில்லிபுத்தூரில் இன்றைய தினம் நடக்கும் உற்சவத்தைப் பற்றி பரவஸ்து. நாராயணதாஸன் (எனது பெரியப்பா) விவரித்ததை இங்கு சென்று அனுபவியுங்கள்.
இங்கே!


இன்று,


புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்
_____________________________________________________


108 திருப்பதிகளில் முதலாவதான திருவரங்கம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் தலைநகரம். அங்கு ஒருநாள்,

ஸ்ரீமத் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கு, ஸ்ருதப் பிரகாசிகை எனும் விளக்கவுரை எழுதிய ஸ்ரீசுதர்ஸன பட்டரை சந்திக்க நாலாயிர திவ்ய ப்ரபந்த வ்யாக்யானகர்த்தா திரு. பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 18 ரகஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்தருளிய திரு. பிள்ளை லோகாசார்யர் அவர்களும் வந்தன்ர்.

பெரியவாச்சான் பிள்ளை: தேவரீர் ! அடியோங்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேணும் !

சுதர்ஸன பட்டர் : வாரும் வாரும் ! ஏன் இந்த ஓட்டம் ?

பிள்ளை லோகாசார்யர் : ஸ்வாமி, வடக்கிலிருந்து மாயாவாதிகள் சிலர் வாதப்போர் புரிய வந்துள்ளனர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தேவரீர் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

சுதர்ஸன பட்டர்: ராமானுஜ சித்தாந்தத்திற்கு ஒருநாளும் ஒரு குறையும் வராது. வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும். உடன் அவரை வரவழையுங்கள்.
_______________________________________________________________________


தூப்புல்

விஷயம் கேள்விப்பட்ட வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்படப் போகிறது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
________________________________________________________________________


ஓம்கார சத்தத்தை எழுப்பிக் கொண்டு கப்பல் செல்லும் அழகையும், ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வெற்றியை பறைசாற்றும் ஒரு அருமையான பாடலையும் கேட்டு அனுபவியுங்கள்.



காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!

நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி

பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது

ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்

திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு

தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது

தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று

திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு

செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல

கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய

அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது

அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பாடியவர்கள் : என் அத்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா மற்றும் அவர் சகோதரி கோமளம்.

Get this widget Track details eSnips Social DNA
புரட்டாசித் திருவோணத்தில் அவதரித்த எங்கள் தூப்புல் கவிதார்க்கிக சிங்கம், வேதாந்த தேசிகர் அடிபணிகிறேன்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

85 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday Desika! :)

மனத்துக்கு இனியான் திருவேங்கடமுடையானின் திரு நட்சத்திரமான அதே புரட்டாசித் திருவோணத்தில் நீயும் வந்து உதித்து, பிறந்த நாள் காண்கின்றனையோ?

சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடம் உடையான்
பார் ஒன்று சொன்ன பழமொழியுள் - ஒரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு!

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய
கவி தார்க்கிக கேசரி
வேதாந்தாச்சார்ய வர்யோ மே
சன்னிதத்தாம் சதா ஹ்ருதி!

jeevagv said...

கடல்(லில்) கொண்டு போகாமல்

ஆறெல்லாம் தாண்டி ஊரெல்லாம் ஓடி

அரங்கம் அடைந்ததோ சிங்காரக் கப்பல்!
இதனால்தானோ,
ஆறெல்லாம், ஊரெல்லாம்

புனிதம் அடைந்ததோ! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கப்பல் படம் யாரு கிராபிக்ஸ் செஞ்சது? சூப்பரா இருக்கு!
அது என்ன திருவேங்கடமுடையானுக்கு மட்டும் கப்பல் மொத்த பின் பகுதியும், பாய்மர நிழலும்?
முன்னாடி உட்கார்ந்து இருக்கும் அயக்ரீவர், பார்த்தசாரதி எல்லாம் என்ன எகானமி கிளாஸா? :) அவரு மட்டும் பிசினஸ் கிளாஸா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உங்கள் அத்தைகள் கமலாம்மா மற்றும் கோமளம் அம்மா...கன கம்பீரமாப் பாடி இருக்காய்ங்க! சும்மா கப்பல் பிச்சிக்கிட்டு பறக்குது! அம்புட்டு வேகம்! மூச்சு வாங்குறதே இல்லாமல் இந்த வயதிலும் இப்படி ஒரு சீரான குரல் வேகம்! என்னோட வாழ்த்துக்கள் மற்றும் வந்தனங்களை மறக்காமச் சொல்லுங்க!

அத்தையோட ஊரு திருவில்லிபுத்துரா? அதானே பார்த்தேன்! உங்களை மாதிரி இல்லாம இம்புட்டு ஃபாஸ்ட்டா இருக்காங்களே...யம்மாடி தோழீ கோதை...ஊருக்காரவுக ஒருத்தற விட மாட்டியா நீயி? அல்லாரும் ஒன்னைப் போலவே ஃபாஸ்ட் பெளலிங் போடுறாங்களே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க//

:)

//திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,//

வரதன் ஏறலையா? :)

//ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..//

பதின்மரா? பன்னிருவர் இல்லீயா? :)

//மாலுமியாக ஹயக்ரீவர்//

ஞானப் படகு என்பதாலா?

//ஏலேலோ விபுதேஷா கோவிந்தா ஏலேலோ//

அது என்ன விபு-தேஷா? அப்படீன்னா என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு//

ரவி குலத்தோர் குலதெய்வம் முருகானாச்சே! :)
சரி சரி, அரங்கனும் அழகான முருகன் தானே!

//எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணிகிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல//

யாருப்பா இந்த கிருஷ்ணமிஸ்ரர்?

//அழகுடைய கருடநதி கரைதனில் வந்துஅயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா//

காஞ்சிக் கப்பல் மீண்டும் காஞ்சிக்கு வராமல், அயிந்தை என்னும் திருவஹீந்திர புரத்திலேயே தங்கி விட்டதா என்ன?

மெளலி (மதுரையம்பதி) said...

பாடலை முன்னரே கேட்டிருந்தாலும், பதிவுடன் கேட்க அருமை. வேதாந்த தேசிகர் திருவடிகளை வணங்குகிறேன்.

ஒருமுறை திருவஹீந்தி புரத்தில் தேசிகர் உற்சவம் கண்டிருக்கிறேன். இப்பதிவினைப் படிக்கையில் அவை மனதில் தோன்றியது.

நன்றி ராகவ்.

Raghav said...

//மனத்துக்கு இனியான் திருவேங்கடமுடையானின் திரு நட்சத்திரமான அதே புரட்டாசித் திருவோணத்தில் நீயும் வந்து உதித்து, பிறந்த நாள் காண்கின்றனையோ?//

ஆவணி திருவோணம், ஹயக்ரீவர் திருநக்ஷத்ரம்.. புரட்டாசி திருவோணம் அவர் அருள் பெற்ற தூப்புல் குலமணியின் திரு அவதார தினம்.

Raghav said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
கடல்(லில்) கொண்டு போகாமல்

ஆறெல்லாம் தாண்டி ஊரெல்லாம் ஓடி

அரங்கம் அடைந்ததோ சிங்காரக் கப்பல்!//

வாங்க ஜீவா !!

அருமையா சொல்லிருக்கீங்க..

Raghav said...

/கப்பல் படம் யாரு கிராபிக்ஸ் செஞ்சது? சூப்பரா இருக்கு!/

நன்றிண்ணா!!.. பாட்டை பொறுமையாக கேட்டதில் மிகவும் ஆழ்ந்து, இவ்வாறு முயற்சி செய்தேன்.. நேரம் இருப்பின் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

ஆழ்வார் ஆசார்யர்களையும் கப்பலில் ஏற்றி இருக்கலாம்.

Raghav said...

//முன்னாடி உட்கார்ந்து இருக்கும் அயக்ரீவர், பார்த்தசாரதி எல்லாம் என்ன எகானமி கிளாஸா? :) அவரு மட்டும் பிசினஸ் கிளாஸா? :))//

:)

கப்பலுக்கு சொந்தக்காரரே அவர் தானே :) அவரிடமிருந்து வாங்கிய பணத்தில் தான், தேசிகர் இக்கப்பலை செய்து திருவரங்கம் செல்கிறார்.

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
உங்கள் அத்தைகள் கமலாம்மா மற்றும் கோமளம் அம்மா...கன கம்பீரமாப் பாடி இருக்காய்ங்க! சும்மா கப்பல் பிச்சிக்கிட்டு பறக்குது! அம்புட்டு வேகம்! மூச்சு வாங்குறதே இல்லாமல் இந்த வயதிலும் இப்படி ஒரு சீரான குரல் வேகம்! என்னோட வாழ்த்துக்கள் மற்றும் வந்தனங்களை மறக்காமச் சொல்லுங்க!//

ரொம்ப நன்றிண்ணா.. உங்களைப் பற்றி ஏற்கனவே கமலா அத்தையிடம் சொல்லியுள்ளேன் :) அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.. வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருப்பதால், நம் பாராட்டுதல்கள் தான் அவருக்கு தெம்பு, உற்சாகத்தை கொடுக்கிறது.

Sreenivasan said...

ஸ்ரீமதே நிகமாந்த மகாதேசிகாய நம:

Raghav said...

//வரதன் ஏறலையா? :)//

ஏன் வரவில்லைன்னு கேட்டுச் சொல்றேன் :)

//பதின்மரா? பன்னிருவர் இல்லீயா? :)//
இதே கேள்வி தான் எனக்குள்ளும்.. ஆழ்வார்கள் பன்னிருவர் என்றாலும் பல இடங்களில் குறிப்பிடும் போது மதுரகவி ஆழ்வாரையும், ஆண்டாளையும் சொல்வதில்லை ஏன் அண்ணா ?

//அது என்ன விபு-தேஷா? அப்படீன்னா என்ன//
குமரன் நீங்கதான் சொல்லணும் .. வாங்க வாங்க..

Sreenivasan said...

ஸ்ரீமதே நிகமாந்த மகாதேசிகாய நம:

காஞ்சி வரதர் ஏன் manifest-la இல்ல ?

Raghav said...

//மதுரையம்பதி said...
பாடலை முன்னரே கேட்டிருந்தாலும், பதிவுடன் கேட்க அருமை. வேதாந்த தேசிகர் திருவடிகளை வணங்குகிறேன்/

வங்க மெளலிண்ணா..
தேசிகரின் ஸ்தோத்ர க்ரந்தங்களில் ஒன்றை நீங்கள் பதிவிட வேணும்னு விண்ணப்பிச்சுக்குறேன்.

Raghav said...

//Sreenivasan said...
ஸ்ரீமதே நிகமாந்த மகாதேசிகாய நம:

காஞ்சி வரதர் ஏன் manifest-la இல்ல ?
//

வாருங்கள் ஸ்ரீனிவாசன் !!

காரணம் என்று எதுவுல் இல்லைன்னு நினைக்கிறேன்...பாடல் எழுதும்போது தானாகவே இவ்வாறு அமைந்திருக்கும் இதப் போன்று பல பாடல்கள் எனது அத்தை பாடிருக்காங்க.. திவ்யப்ரபந்தம், கோபால விம்ஷதி , யதிராஜ ஷப்ததி போன்ற சம்ஸ்க்ருத பாடல்களில் இருந்தும் வார்த்தைகள் எடுத்து, தமிழாக்கி மெட்டு போட்டு பாடுவார்கள். அப்படி அமைந்ததொரு பாடலே இதுவும்.

Radha said...

Happy birthday to Kavithaarkika Kesari !

ஆசார்யர்களின் வாழ்க்கையை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை.
தேசிகர் திருவடிகளே சரணம் !
கப்பல் படம் நன்றாக இருக்கிறது. :)

Radha said...

தேசிகருக்கு ஹயக்ரீவர் துணை வருவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. அவர் ஒருவரே போதுமானவராக இருக்க, வேங்கடமுடையான் (தன் அருளால் தோன்றிய) குழந்தை சண்டை போட போகிறதே என்று துணைக்கு வருகிறான் போல. எதிரிகளை பயமுறுத்த மீசைக்கார வேஷமும் தரித்துக் கொண்டு வருகிறான். :)
திருவல்லிக்கேணியானும் வேங்கடக் கிருஷ்ணன் தானே. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//வங்க மெளலிண்ணா..
தேசிகரின் ஸ்தோத்ர க்ரந்தங்களில் ஒன்றை நீங்கள் பதிவிட வேணும்னு விண்ணப்பிச்சுக்குறேன்.//

தேசிகரது ஸ்தோத்ர க்ரந்தங்களைப் பதிவு போடுமளவு எனக்கு ஸ்ரீவைஷ்ணவம் தெரியாதே?. ஆனால் ஆசையிருக்கிறது. அவர் அருளிருந்தால் நடக்கும்.

தேசிகர் வரலாறு எழுத எண்ணமிருக்கிறது (சமீபத்தில் நண்பன் சேஷசாயி தேசிகர் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சுருக்கமாக கூறினான்). இணைய ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இல்லையென்றால், அதில் முதலில் ஆரம்பிக்கிறேன்.

Radha said...

ராகவ்,மௌலி அண்ணா,
எனக்கு தெரிந்து இணையத்தில் தேசிகரின் தயா சதகம் மற்றும் பாதுகா ஸஹஸ்ரம் (ongoing) ஆகியவற்றிற்கு இந்த தளத்தில் விளக்கம் காணலாம்.
http://namperumal.wordpress.com/
அவருடைய பிரபலமான ஸ்தோத்திரங்கள் (ஹயக்ரீவர், தசாவதாரம், வரதராஜ பஞ்சாசத்....) எதற்கும், நான் அறிந்த வரையில், இது வரை இணையத்தில் யாரும் தமிழில் பொருள்/விளக்கம் தரவில்லை.
~
ராதா

மெளலி (மதுரையம்பதி) said...

ராதா சார்,

பாதுகா சகஸ்ரம் எழுத பரவஸ்து சுந்தரண்ணா நினைத்தார், நானும் அதில் சேர்ந்துகொள்வதாகச் சொன்னேன், அப்போதே நீங்கள் கொட்டுத்த லிங்க் கிடைத்ததால், அதை எழுதாது விட்டுவிட்டோம். தேசிகர் அருளிருந்தால் மற்றவற்றை முயற்சிக்கலாம்.

Radha said...

//ராதா சார்//
Pls address me as Radha or Radhamohan.:)
~
Radha

ஷைலஜா said...

ராகவ்

அருமை அருமை! பின்னூட்டம் விரிவாக வந்துகொண்டே இருக்கிறது

Raghav said...

//Radha said...
Happy birthday to Kavithaarkika Kesari !
//

வாங்க ராதாமோகன் !! ஆசார்யரை சேவித்தீர்களா !

//கப்பல் படம் நன்றாக இருக்கிறது. :)//

:)

Raghav said...

//எதிரிகளை பயமுறுத்த மீசைக்கார வேஷமும் தரித்துக் கொண்டு வருகிறான். :)//

மீசை தான் அவனுக்கு அழகு கூட :)

குமரன் (Kumaran) said...

இராகவ்,

ரொம்ப அழகா இருக்கு பாட்டு. அருமையா பாடியிருக்காங்க.

யார் இந்த கிருஷ்ணமிஷ்ரன்? கேட்ட பேரு மாதிரி இருக்கே?

ஆழ்வார்கள் பதின்மரா பன்னிருவரா என்பதைப் பற்றி இரவிசங்கரே வந்து சொன்னால் தான் நன்றாக இருக்கும். :-)

விபுதேஷான்னா என்ன? எனக்கும் தெரியலை.

குமரன் (Kumaran) said...

தேசிகனின் தனியனில் இருக்கும் 'ராமானுஜ தயாபாத்ரம்' உடையவரைக் குறிக்கவில்லை என்று நினைக்கிறேன். தேசிகனின் ஆசார்யர் திருநாமமும் ராமானுஜரே. அவரைத் தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் உடையவரின் கருணைக்குப் பாத்திரமானவர் என்றும் கூறலாம்; அதுவும் உண்மை தானே.

குமரன் (Kumaran) said...

இராதா, இங்கேயும் 'காசினி' வந்திருக்கு; பாத்தீங்களா? :-)

Raghav said...

//மதுரையம்பதி said...
தேசிகர் அருளிருந்தால் மற்றவற்றை முயற்சிக்கலாம்//

என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிண்ணா!!.. சுந்தரண்ணாவும் இதில் உதவுவார்னு நம்புறேன்.

Raghav said...

//ஷைலஜா said...
அருமை அருமை! //

நன்றிக்கா.. நேரமிருப்பின் நீங்களும் பாடி பதிவில் சேருங்களேன்.. உங்களோட இளமையான குரலில் இனிமையா கேக்கலாமே :)

Raghav said...

//குமரன் (Kumaran) said...
ரொம்ப அழகா இருக்கு பாட்டு. அருமையா பாடியிருக்காங்க//

நன்றி குமரன்.. இத்தனை நாள் இவர்கள் பாடுவதை பதிந்து வைக்க இயலாமல் போய்விட்டது :(.. தற்போது தான் புத்தி வந்து பதிய ஆரம்பித்துள்ளேன். ஒவ்வொன்றாக வலையேற்றுகிறேன்.

Raghav said...

//குமரன் (Kumaran) said...
தேசிகனின் தனியனில் இருக்கும் 'ராமானுஜ தயாபாத்ரம்' உடையவரைக் குறிக்கவில்லை என்று நினைக்கிறேன். தேசிகனின் ஆசார்யர் திருநாமமும் ராமானுஜரே. //

தேசிகரின் ஆசார்யர் கிடாம்பி அப்புள்ளர் தானே குமரன் ?

இங்கே பாருங்களேன்,
http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!261.entry

மேலுள்ள வலைபூவில் ஒரு இடத்தில், இநத தனியனில், ராமானுஜ எனும் பதம் நம்மாழ்வாரைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார், ஸ்வாமி ரகுவீரதயாள் அவர்கள்.

Raghav said...

//யார் இந்த கிருஷ்ணமிஷ்ரன்? கேட்ட பேரு மாதிரி இருக்கே? //

உங்களுக்கே தெரியாதா குமரன் :)

கிருஷ்ணமிஷ்ரர் ஒரு சிறந்த அத்வைதி.. ப்ரபோத சந்த்ரோதயம் எனும் நாடகத்தை எழுதி தேசிகருடன் வாதத்திற்கு வந்தபோது, தேசிகர் அந்நூலை மறுத்து, சங்கல்ப சூர்யோதயம் எனும் நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் சிறப்பைக் கண்டு கிருஷ்ணமிஷ்ரர், தேசிகருக்கு கவிதார்க்கிக கேசரி எனும் பட்டத்தை அளித்தார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
//

இதுக்கு மீனிங் ப்ளீஸ்!

//வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும்//

மாயாவாதி-ன்னா என்ன ராகவ்?
மாயா மோகினி போல இருக்கே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கப்பல் கஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி//

கஸ்தூரி ரங்கனா? அரங்கனுக்கு அப்படி ஒரு பேரு இருக்கா?
சரி....யாரு அந்த கஸ்தூரி? :))

//ஆழ்வார்கள் பதின்மரா பன்னிருவரா என்பதைப் பற்றி இரவிசங்கரே வந்து சொன்னால் தான் நன்றாக இருக்கும். :-)//

குமரா, இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :)

அடியேன் பதிவு போடாம, கேள்வி கேக்காம, எவ்ளோ நல்ல பிள்ளையா, ஒத்தை விரலை உதட்டில் வச்சி உட்கார்ந்துகிட்டு இருக்கேன்! தேசிகரே என்னைய காப்பாத்துப்பா!! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக//

:)
சாஸ்திரத்தைப் பீரங்கி-ன்னு சொன்ன உம்மைத் தலையிலே செல்லமாக் குட்டறேன்! :)
அது என்னய்யா சாஸ்திரம்-ன்னாலே பீரங்கி தானா? எல்லாம் சேர்க்கை தான் ராகவ் ஒனக்கு! அப்பவே சொன்னேன்! கேட்டாத் தானே? :)

//நாலு வேதங்களும் நங்கூரமாக//

:)

//திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம் திடமான கொடியிலே கயிறாக//

ஆக மொத்தம் செலுத்த உதவுவது இது தான்-ன்னு சொல்லுறாங்க போல!

Radha said...

//இராதா, இங்கேயும் 'காசினி' வந்திருக்கு; பாத்தீங்களா? :-) //
கவனித்தேன். புன்னகைத்தேன். :) அப்பவே பதிலும் ரெடி செய்தேன். :)
இதுலயும் கவிநயா அக்காவின் எளிமை இல்லை. ;-)

Raghav said...

ரவிண்ணா, கேள்வியும் நீரே! பதிலும் நீரே !!

சிலவற்றிற்கு எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. சரி பாத்து சொல்லுங்கள்.

கஸ்தூரி ரங்கன் - கஸ்தூரி திலகம் அணிவதாலா ?

மாயாவாதிகள் : அத்வைதிகள் என்று நினைக்கிறேன். சரிதானா மெளலிண்ணா ?

Raghav said...

//சாஸ்திரம்-ன்னாலே பீரங்கி தானா? //

:) எதிர்வாதம் புரிவோரின் வாதங்களை தவிடுபொடியாக்க வேண்டாமா :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
தேசிகனின் தனியனில் இருக்கும் 'ராமானுஜ தயாபாத்ரம்' உடையவரைக் குறிக்கவில்லை என்று நினைக்கிறேன். தேசிகனின் ஆசார்யர் திருநாமமும் ராமானுஜரே. //

உம்ம்ம்ம்...அப்படியா குமரன்?
கிடாம்பி ஆச்சான் என்னும் அப்புள்ளார், தேசிகனின் சொந்த தாய்மாமன்! அவரிடம் பாடம் பயின்றார்! அதனால் அவர் தான் ஆச்சார்யன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!

நீங்கள் சொல்வது ராமானுஜன் என்ற அதே பேரில் இன்னொரு ஆச்சார்யர் தேசிகருக்கு உள்ளாரா? ஒரு வேளை தேசிகர் வழி ஆச்சார்ய வம்ச விருட்சத்தில் வருபவரோ? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்!

Radha said...

//தேசிகனின் ஆசார்யர் திருநாமமும் ராமானுஜரே. அவரைத் தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன். //
அப்புள்ளாரின் இன்னொரு பெயர் ஆத்ரேய ராமானுஜர். குமரன் சொல்வது தான் சரி.:-)

தேசிகர் உடையவரை புகழ்ந்து யதிராஜ சப்ததி எல்லாம் பாடி இருக்கார்.
ராகவ் சொல்றது தான் சரி. :-)

//ராமானுஜ எனும் பதம் நம்மாழ்வாரைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார், ஸ்வாமி ரகுவீரதயாள் அவர்கள்.//

தேசிகர் நம்மாழ்வாரின் அருளைப் பெற்று திருவாய்மொழியின் சாரத்தை வடமொழிக்கு மாற்றினார். ஸ்வாமி ரகுவீரதயாள் சொல்றது தான் சரி. :-)

சரி...கண்ணன் பாட்டுன்னு சொல்லிட்டு கண்ணனை பத்தி பேசாம இருந்த எப்படி? :-)
ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்.கண்ணனின் தயைக்கு பாத்திரமாகி யாதவாப்யுதயம் என்ற அற்புதமான காவியம் படைத்தார்.
ராதா சொல்றது தான் சரி. :-)

ஐயா தேசிகரே ! இத்தனை பேருடைய அருள் உமக்கு இருந்தது. உம் ஒருவர் அருள் எங்களுக்கு இருக்கக் கூடாதா? பதிவு போட்டு பின்னூட்டமும் போடறோம். கஞ்சத்தனம் வேண்டாம். பிறந்தநாள் அன்று வாரி வழங்குவீர். :-)

~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் சொல்வது தான் சரி.:-)
ராகவ் சொல்றது தான் சரி. :-)
ஸ்வாமி ரகுவீரதயாள் சொல்றது தான் சரி. :-)
ராதா சொல்றது தான் சரி. :-)//

அப்பாடா!
கண்ணன் பாட்டுக்கும் பந்தலுக்கும் கட்டிக் காப்பாத்த ஒரு கட்டித் தங்கம் இல்லையே-ன்னு நினைச்சேன்! :)
இன்னியோட அந்தக் கவலை தீர்ந்தது! :)

வாழ்விக்க வந்த ராதா!
மகாத்மா நீ வாழ்க வாழ்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஐயா தேசிகரே ! இத்தனை பேருடைய அருள் உமக்கு இருந்தது. உம் ஒருவர் அருள் எங்களுக்கு இருக்கக் கூடாதா? பதிவு போட்டு பின்னூட்டமும் போடறோம். கஞ்சத்தனம் வேண்டாம். பிறந்தநாள் அன்று வாரி வழங்குவீர். :-)//

ஹா ஹா ஹா
தேசிகரே! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

நானிலமும் தான் வாழ நான் மறைகள் தாம் வாழ
ஞானியர்கள் சென்னி அணி, சீர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா, சுந்தர் அண்ணா, ராதா, ராகவ்!

தேசிகரின் மொத்த நூல்களும் இங்கு உள்ளன! Sripedia Effort!

ஆங்கிலத்தில் நிறைய இருந்தாலும், இணையத்தில் தமிழ் விளக்கங்கள் அதிகம் இல்லை!
பாதுகா சகஸ்ரம், தயா சதகம் அளவில் பெரியவை!
தவிர இன்னும் பல அற்புதமான படைப்புகள் உள்ளன! ரகுவீர கத்யம், கருட தாண்டகம், கோபால விம்சதி!

உங்களுக்குப் பிடித்த "ஸ்ரீ ஸ்துதி"-யும் உண்டு! தேசிகனின் மாஸ்டர் பீஸ்!
தாயாரை அப்படி அலங்கரணங்களால் வர்ணித்து இருப்பார்! கனகதாராவைப் போலவே இதன் பின்னணி உண்டு!


மானாதீத ப்ரதீத விபவாம்
மங்களம் மங்களானாம்!
ஸ்ரேயோ மூர்த்திம் ஸ்ரீயம்
த்வாம் சரண்யாம் ப்ரபத்யே!
அசரண்ய சரண்யாம்,
அநந்ய சரண:
சரணமஹம் ப்ரபத்யே!

எது பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கிட்டு, துவங்கலாமே! தேசிகர் அருளிருந்தால் என்ற பேச்சே இல்லை! தேசிகர் அருள் தான் என்றும் இருக்கே! சுபஸ்ய சீக்கிரம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராமானுஜ எனும் பதம் நம்மாழ்வாரைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்//

இராமனின் பாதுகைகள் தான் நாட்டை ஆண்டன!
தம்பிகள் ஆள வேண்டியது! பாதுகை ஆண்டது!
எனவே பாதுகையும் அனுஜன் தன்! இராம + அனுஜன் = இராமானுஜன்!

நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்
சென்றால் மரவடியாம் - என்று பாதுகையும் ஆதி சேஷனே!

எனவே இலக்குவனும், பாதுகையும் ஒருவரே!

இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்

இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், "இராம+அனுஜர் = இராமானுஜர்" என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!

அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
ரவிண்ணா, கேள்வியும் நீரே! பதிலும் நீரே !!//

ஹை ஹை! அந்தக் காலமெல்லாம் போயே போச்சி! போயிந்தே! சோலே காச்சி :)

//
//சாஸ்திரம்-ன்னாலே பீரங்கி தானா? //
:) எதிர்வாதம் புரிவோரின் வாதங்களை தவிடுபொடியாக்க வேண்டாமா :)//

உம்ம்ம்ம்! வாதங்களை முறியடிக்கவும், வம்பு பண்றத்துக்கும் தான் அதை வச்சிருக்கீயளா? ஹா ஹா ஹா :)))

Jokes apart!
பீரங்கி என்று சாஸ்திரத்தையும்
நங்கூரம் என்று வேதங்களையும்
பாட்டில் தேசிகர் கருத்துக்கு ஏற்றாற் போலவே சொல்லி உள்ளார்கள்!

செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
"தெளியாத மறை நிலங்கள்" தெளிகின்றோமே என்று தேசிகரே பாடுகிறார்!

நங்கூரம் என்பது கப்பலை நிலை நிறுத்த உதவுவது!
அதுவும் தேவைப்படும்! ஆனால் கப்பல் என்றாலே செல்ல வேண்டும் அல்லவா? துறைமுகத்தில் அடைந்து கிடக்கவா கப்பல்?

இப்படி எங்கும் செலுத்த உதவுவது,
பாய் மரத்திலே //திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம் திடமான கொடியிலே கயிறாக// - என்று அதான் பாட்டிலும் வருகிறது! தேசிகர் திருவுள்ளத்தை ஒட்டிய கருத்தே இப்படி அழகாக அமைந்து விட்டது பாட்டில்!

செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
"தெளியாத மறை நிலங்கள்" தெளிகின்றோமே!

ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னொன்னும் முக்கியமாச் சொல்லணும், இந்த நன்னாளிலே!

தேசிகர் என்றாலே இந்தக் கலை, அந்தக் கலை-ன்னு அடைச்சி வச்சிப் பார்ப்பதே மனித வழக்கமாகப் போய் விட்டது!

அன்னியில் இருந்து இன்று வரை,
* தாத்பர்யங்களை முன்னிறுத்திப் பார்ப்பதைக் காட்டிலும்,
* ஆட்களை முன்னிறுத்திக் கொள்வதும்
* தங்கள் தங்கள் சட்ட திட்டங்களை முன்னிறுத்திக் கொள்வதும் தான்
வாடிக்கை போலும் மதத்தில் உள்ள சில விற்பன்னர்களுக்கு! :((

இவர்களுக்கு எல்லாம் இந்நாளில் உடையவர் இருந்திருக்கணும்! அப்போ தெரிஞ்சிருக்கும் இந்த ஆட்டங்கள் எல்லாம் ஆடியிருக்க முடியுமா என்று! :)))

இராமானுசர் கட்டிய காதல் அணைக்கு, தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர்-ன்னு ஒருத்தரைக் காட்ட முடியும்-ன்னா, அது வேதாந்த தேசிகர் ஒருவரே!
இவரின் மொத்த நூல்களே, இன்று சம்பிரதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவத் தூண்கள்!

* இதெயெல்லாம் எண்ணிப் பார்க்காமல்...
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா? வாடுமா? என்று எண்ணிப் பார்க்காமல்...

* இன்றளவும் முக்கிய ஆலயங்களில் கலை பேதங்கள் கற்பித்து...
* சாஸ்திரம் என்ற பேரால் பிடிகளை இறுக்கி
* பெருமான் முன்பாகவே தங்கள் தங்கள் அணி திரட்டி, வளைய வருதல்...

* தேசிகர் பக்கம் சாஸ்திரங்களைத் திரட்டியும், மாமுனிகள் பக்கம் எளிவந்தத்தைத் திரட்டியும்...
விதம் விதமான ஸ்வயாபிமானம் நிற்கும் நாள் எந்த நாளோ?

அதுவே...
ஒப்புயர்வில்லாத் தேசிகனுக்குத் தரும் உயர்ந்த பிறந்தநாள் பரிசாக அமையும்!

"சீர் ஒன்று தூப்புல்" என்று தேசிகரைக் கொண்டாடிப் பாடுவதே பிள்ளை லோகாச்சார்யர் என்னும் தென்னாச்சார்ய மகான் என்னும் போது...
தென்னாச்சார்யமாவது, வடவாச்சார்யமாவது...?
அனைத்தும் ஒரே ஆச்சார்யம் தான்!
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தேசிகரின் உற்ற தோழர்களான தென்பரம்பரையாளர்கள்...

* பிள்ளை லோகாச்சார்யர் - முமுட்சுப் படி செய்தவர்!
* அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் - ஆச்சார்ய ஹிருதயம் நூலைச் செய்தவர்!
* திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) - பின்னாளில் மணவாள மாமுனிகளின் குரு!
* பிரதிவாதி பயங்கரம் அண்ணன் - சுப்ரபாதம் எழுதியவர் - இவர் தேசிகரின் காலடியில் பாடம் கேட்டவர்.

* இப்படி இயைந்து இயைந்து இவர்களால் இருக்க முடியும் போது...
* ஆட்களை நிறுத்திப் பார்க்காமல் கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்க முடியும் போது...???

எம்பெருமான் உள்ளம் உவக்குமா? வாடுமா? - இதைப் பார்க்கத் தெரிந்து கொண்டால் போதும்...ஒரு கலையும் வராது! :))

வசந்த குமார், ராதை பற்றி இட்ட கண்ணன் பாட்டுப் பதிவைப் பாருங்கள்!
எம்பெருமான் உள்ள உகப்பு என்றால் என்ன என்பதை சாஸ்திரம் அறியாத ஒரு பெண்பிள்ளை சொல்லிக் கொடுப்பாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஞானியர்கள் சென்னி அணி, சீர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Balaji said...

raghava.... nee yengaeyoooo poitaeee..!!! ;)

ஷைலஜா said...

ராகவ்!

கண்ணன் பாட்டினிற்கு இது மகுடம் என்லாம் அத்தனை அருமை...அத்தைகளின் குரல்வழி பாடல் ஒலிப்பது இன்னும் பெருமை சேர்க்கிறது..இப்படி ஒரு பாடல் இருப்பதே தெரியாது....இனிமே கத்துக்கொண்டுடணும்! ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரிக்கு அவர்தம் பிறந்த நன்னாளில் ராகவ் இங்கு அளித்த இந்தப்பதிவு உன்னதமானது!

ஷைலஜா said...

//வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்.. மாலுமியாக ஹயக்ரீவர் அமர________________________________________________________________________//


என்ன ஒரு அழகான கற்பனை! கண்முன் கப்பல் அப்படியே மிதக்கிறதே!

ஷைலஜா said...

தேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தின் வரலாறு சுவையானது நான் சொல்லட்டுமா ராகவ் இங்கு அதை?

ஷைலஜா said...

ஸ்ரீரங்கநாதன் விஷயமாக அபீதிஸ்தவத்தையும் ஆழ்வார்கள் விஷயமாக ப்ரபந்த சாரத்தையும் எம்பெருமானார் ராமானுஜர் விஷயமாக எதிராஜ ஸப்ததியையும் கோதையின் விஷயமாக கோதாஸ்துதியும் பாதுகைவிஷயமாக பாதுகா ஸஹஸ்ரத்தையும் இன்னும் பல திருக்கோயில்ஷேத்ரங்கள் பெருமாள்களின் ஸ்தோத்திரங்களையும் க்ரந்தஙக்ளையும் செய்து அருளினார்
தேசிகர்.

ஷைலஜா said...

வேதாந்த குரு ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரர் கவிதார்க்கிக சிம்மம் என்று பலதிருநாமங்கள் சிறப்பாக தரப்பட்டவை...கம்பர் மண்டபம் பக்கத்தில் அரங்கத்தில் தேசிகருக்கு சந்நிதி உள்ளது ஸ்ரீரங்கம் கோயிலில்.. வடமொழியும் தமிழ்மொழியும் அரங்கபிராட்டிமுன்னிலையில் கைகுவித்து நிற்கின்றன.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா, இங்கே, ராதாமோகன், ஷைலஜாக்கா, குமரன் ஆகியோரது பின்னூட்டங்களைப் படித்தால் நான் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதாதிருப்பதே மேல் என்று தோன்றுகிறது. எத்துணை செய்திகள்?, எல்லாம் எனக்குப் புதியது.

Divyapriya said...

தேசிக கப்பல் பயணம் அருமையாக இருந்தது ராகவ்!

Radha said...

ராகவ்,
கப்பல் பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது. இது போன்ற பாடல்களை மறக்காமல் பதிவு செய்து எங்களுக்கு தரப் போவதற்கு நன்றி. :-)

விபுதேஷா - (விபுதஹ + ஈஷஹ) "நன்றாகக் கற்றவர்களுக்கு ஈசன்", "வித்துவான்களுக்கு தலைவன்" என்று நினைக்கிறேன்.
சரியா என்று தெரியவில்லை. வடமொழி தெரிந்த பெரியோரை கேட்க வேண்டும்.
நல்ல வேளை. ஏலேலோ அப்படின்னா என்னனு யாரும் கேட்கலை. :-)
~
ராதா

Raghav said...

//Balaji said...
raghava.... nee yengaeyoooo poitaeee..!!! ;)//

ஹா ஹா.. பாலாஜி நான் எங்கயும் போகல.. ஆடுகொடில தான் இருக்கேன்.. உங்க பிளாக்க இன்னைக்கு தான் பாத்தேன்..

Raghav said...

//ஷைலஜா said...
கண்ணன் பாட்டினிற்கு இது மகுடம் என்லாம் அத்தனை அருமை...//

நீங்க ரொம்பத்தான் புகழ்றீங்கக்கா :)

//.இனிமே கத்துக்கொண்டுடணும்! //

இது போன்று பல ஓடப் பாடல்கள் இருக்குக்கா.. அத்தையிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்..நீங்க பாடி வெளியிடுங்க

Raghav said...

//ஷைலஜா said...
தேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தின் வரலாறு சுவையானது நான் சொல்லட்டுமா ராகவ் இங்கு அதை//

என்னக்கா என்கிட்ட கேட்டுகிட்டு :) உங்க ஊரு ரங்கராஜாவைப் பத்தி பாடிருக்காரு.. நீங்க சொல்லுறதுதான் சரியா இருக்கும் :)

Raghav said...

//ஷைலஜா said...
ஸ்ரீரங்கநாதன் விஷயமாக அபீதிஸ்தவத்தையும் ஆழ்வார்கள் விஷயமாக //

அடடா.. அக்கா என்னதிது.. தேசிகர் என்றவுடனே வியாக்யனகர்த்தாக்கள் போன்று ”விஷயமாக”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களே :)

Raghav said...

//வடமொழியும் தமிழ்மொழியும் அரங்கபிராட்டிமுன்னிலையில் கைகுவித்து நிற்கின்றன//

கைகுவித்து நிற்கவில்லைக்கா.. கைகாப்பிட்டு நிற்கிறார்..

திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :(

சாஸ்திரங்களின் மூலமாகவே ஆழ்வார்களை பகல்பத்து, இராப்பத்து உற்சவத்தில் உலா வரச் செய்த தேசிகரை.. கோவில் ஒழுகில் அவருக்குரிய ஆராதனை விவரம் இல்லையென்று கூறி சன்னதியை விட்டு வெளிவர விடுவதில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன்.. :(

Raghav said...

//நான் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதாதிருப்பதே மேல் என்று தோன்றுகிறது. எத்துணை செய்திகள்?, எல்லாம் எனக்குப் புதியது.//

அண்ணா, இப்புடியெல்லாம் தப்பிக்க முடியாது.. உங்களுக்கு தெரியாத ஸ்ரீவைணவமா :)

Raghav said...

//Divyapriya said...
தேசிக கப்பல் பயணம் அருமையாக இருந்தது ராகவ்///

பாட்டைக் கேட்டீங்களா திவ்யா ?

Raghav said...

//Radha said...
ராகவ்,
கப்பல் பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது. இது போன்ற பாடல்களை மறக்காமல் பதிவு செய்து எங்களுக்கு தரப் போவதற்கு நன்றி. :-)///

கட்டாயம் ராதா !!
விபுதேஷா விளக்கம் மெளலிண்ணா சரிபார்த்து சொல்வார்னு நினைக்கிறேன்.

Raghav said...

//அனைத்தும் ஒரே ஆச்சார்யம் தான்!
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யம்!//

மிகச் சரியாக சொல்லிருக்கீங்கண்ணா.. உங்க பின்னூட்டப் பதிவுகளுக்கும் என்னோட தனிப்பட்ட நன்றிகள். இதே பாடலை நீங்க பதிவா போட்டிருந்தா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

Radha said...

மௌலி அண்ணா,
இந்தக் கும்பலில் வைணவம் தெரிந்த அளவிற்கு யாருக்கும் வடமொழி தெரியாது.(இல்லைனா விபுதேஷான்ன என்னன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்க மாட்டோம் இல்லையா? )

தேசிகர் பற்றிய கதையை சொல்லப் போனால் தான் "எனக்கும் தெரியுமே" என்று சிறுபிள்ளை போல கை தூக்குவோம். நேரடியாக "வைராக்கிய பஞ்சகம்" அல்லது ஏதானும் ஒரு சிறிய படைப்பினை எடுத்துக் கொண்டு ச்லோகங்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பியுங்களேன். எல்லோரும் சைலென்ட் ஆயிடுவோம். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
//நல்ல வேளை. ஏலேலோ அப்படின்னா என்னனு யாரும் கேட்கலை. :-)//

ஆமா...ஏலேலோ-ன்னா என்ன ராதா?
தோழி கோதை வேற ஏலோ ரெம்பாவாய்-ன்னு ஏலோ, ஏலோ போடறாளே? :)

//விபுதேஷா//

விபு = தேவர்கள்
ஈசா = தலைவன்
விபுதேஷா = தேவ தேவன்! தேவாதி ராஜன்! :)

அலோ ராகவ்...இப்ப எங்க காஞ்சி பேரருளாளன் படகில் வந்துட்டானா? :)


விபு = தலைவன், எங்கும் நிறைபவன் என்றும் பொருள்!
சேஷாத்ரி சேகர "விபோ (விபு)", தவ சுப்ரபாதம்!

எத்தினி முறை சுப்ரபாதம் கேட்டிருப்பீங்க?
இந்த எளிமையான விபு-வையா இம்புட்டு நேரம் தேடீனீங்க? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விதி பாவ "விபு தேஷ"
பிரம்மக அக்னி ஸ்பூலிங்க
தக தக நரசிம்ம
சஹ்ய விராஹிதம் மே
- என்பது நரசிம்ம ஸ்துதி!

இங்கே பிரம்மன், சிவ்பெருமான், விபுதேஷன் (இந்திரன்) என்ற பொருளில் வந்தாலும்...
விபு+தேஷ என்று வரும் போது, அது தேவ தேவன் என்பதே சரி!

தேவ தேவன் என்பது இந்திரனை ஏகதேசமாக குறித்தாலும், அவனுக்கும் தலைவனான எம்பெருமானையே பன்முகமாகக் குறிக்கும்!

திருமகள் தலைவனை "தேவ தேவனை"
இரு பதம் முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்! - நம்மாழ்வார்

"தேவாதி தேவனைச்" சென்று நாம் சேவித்தால்
ஆ-வா என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் - என்று தோழியும் விபுதேஷாவைத் தமிழாக்குகிறாள்! :)

தேவாதி தேவன், தேவ தேவன், எங்கள் காஞ்சி வரதனாகிய தேவப் பெருமாளே! அவனே விபுதேஷன்!
***********************
விபு வேறு! விபுதா வேறு!

விபுதா என்னும் போது தான், நம்ம ராதா குறிப்பிட்ட "படிச்ச ஞானிகள்"-ன்னு பொருள் வரும்! மீண்டும் சுப்ரபாதத்தில் இருந்தே....த்ரைவிக்ரமாதி சரிதம் "விபுதா" ச்துவந்தி :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
//திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :( //

:((
இந்தத் தகவலைக் கொஞ்சம் சரி பார்த்து உறுதிப்படுத்துங்கள் ராகவ்!

சன்னிதிக் காவல் (House Arrest/Shrine Arrest) என்பது சற்று பலமான சொல்லாடல்!
திருவரங்கத்தில் தேசிகர் புறப்பாடு படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தேசிகன் பிறந்தநாள் அதுவுமாய், அன்பர்கள் அகங்குளிர...

ஸ்வாமி தேசிகன் வரலாற்றை மிக அழகாக விளக்கும் Powerpoint Presentation - சித்ர தேசிகீயம்...இங்கே தரவிறக்கிப் பாருங்கள்! மிகவும் அருமை!

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@ராகவ்
//திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :( //

:((
இந்தத் தகவலைக் கொஞ்சம் சரி பார்த்து உறுதிப்படுத்துங்கள் ராகவ்!

சன்னிதிக் காவல் (House Arrest/Shrine Arrest) என்பது சற்று பலமான சொல்லாடல்!
திருவரங்கத்தில் தேசிகர் புறப்பாடு படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்!

11:44 AM, September 30, 2009
///



ரவி.

வீதில ஒரு தேசிகர் சந்நிதி உண்டு
அந்த தேசிகராய் இருக்கலாம்..எனக்கு ஷ்யூரா தெரியல..பொடமாக் நதிக்கரைல உக்காந்திட்டு பொன்னிநதிக்கரையிலிருக்கும் கவிதை சிங்கத்தைப்பற்றி உறுதியாக இப்போ சொல்லமுடியல....சொல்ப டைம் ச்சாயியேஜி:):)

ஷைலஜா said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தேசிகன் பிறந்தநாள் அதுவுமாய், அன்பர்கள் அகங்குளிர...

ஸ்வாமி தேசிகன் வரலாற்றை மிக அழகாக விளக்கும் Powerpoint Presentation - சித்ர தேசிகீயம்...இங்கே தரவிறக்கிப் பாருங்கள்! மிகவும் அருமை!

11:47 AM, September 30, 2009
///

ஆஹா! அருமையோ அருமை....
படங்கள் கண்ணுக்குக் குளுமை
அத்தனையும் இனிமை!

Vidhoosh said...

அற்புதமான பயணம் கப்பலில் - அத்தைகள் குரலோடு.. :)
வித்யா

S.Muruganandam said...

தூப்புல் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.

கப்பலும் அருமை, கவிதையும் அருமை, பாடியவர்களும் அருமை, பாட்டும் அருமை, பதிவிட்டவரும் அருமை.

ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய.

sanjeev srivatsan said...

adiyen srivatsan.எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யுதயம் எங்கு கிடைக்கும் என தெரிய படுத்தமுடியுமா? வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.பிரதி இருப்பவர்கள் கொடுத்தால் ஒரு பிரதி
எடுத்துக்கொண்டு திருப்பித் தரவும் சித்தமாக இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஸ்ரீவத்சன்

//எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யுதயம் எங்கு கிடைக்கும் என தெரிய படுத்தமுடியுமா? வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறேன்//

:)
இதோ!

This is from digital library archives and is fully in sanskrit! - There is no tamizh or english commentary in this link!
But there is a commentary from Appayya Dikshitar also! See if itz helpful to you!

தமிழில் உரை வேண்டுமானால், உத்தமூர் சுவாமி எழுதிய வியாக்யானத்தைத் தேடிப் பிடிக்கவும்! சென்னை-மயிலை வேதாந்ததேசிகர் சன்னிதியில் கேட்டால் (SVDD) தகவல்கள் கிடைக்கும்!

Radha said...

Dear Srivatsan,
In Chennai, here is the address where one can get all works of Sri Uttamur Vira Raghavachariar:

Sri Uttamur Vira Raghavachariar Centenary Trust,
Regd. Office: 19, (Old 7) Nathamuni St,
T.Nagar, Chennai- 600017

Ph: +91 44 28156053 /28156325

Anonymous said...

can anyone please inform me where i can get yadhavapudhayam full moolam? or if anyone has the original shall they give us the xerox by VPP?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
can anyone please inform me where i can get yadhavapudhayam full moolam? or if anyone has the original shall they give us the xerox by VPP?//

Pl follow the link given above. It has the full moolam with Appaya Deekshithar's commentary.
For a book version (out of print), you may have to contact sri vaishnava sri and ask them.

You may also visit this link in English, for a quick introduction to the slokas in Yadavabhyudayam.
http://www.ahobilavalli.org/yadavabhyudayam.pdf

anjsanj said...

please visit
http://desikans-yadavabhudhayam.blogspot.com/

for yaadhavapyudhayam. At present I have posted sargam 1. working or other sargams

Anonymous said...

யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல் ஏன் சுக மஹரிஷிக்கு கிளியின் தலை ஏற்பட்டது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல் ஏன் சுக மஹரிஷிக்கு கிளியின் தலை ஏற்பட்டது?//

பதிவுக்குத் தொடர்புடைய கேள்விகளைக் கேளுங்கள் (அ)
தங்களைப் பெயரைச் சொல்லியாவது, உங்கள் தனிப்பட்ட ஐயங்களைக் கேளுங்கள்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP