தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே
கோபியர்களும் ஆழ்வார்களும் கண்ணனின் பிரிவால் வாடி வாடிப் பாடிய பாடல்களை நாம் படித்திருக்கிறோம். 'ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்று புலம்புவான் பாரதியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நாயகி சுவாமிகளும் அதே போன்ற உணர்வு கொண்டு அவன் பிரிவால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். நடனகோபால நாயகி என்ற அவருடைய திருநாமத்திற்கு ஏற்றதொரு பாடல் இது. இந்தப் பாடலின் சில சரணங்களைத் திரு. தொ.மீ. சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) அவர்களின் இனிய குரலில் இங்கே கேட்கலாம்.
அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாய் இருக்கிறது அறிந்து கொள்ளாய் நாடி (அன்னம்)
உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதக் கூடிய நாயகி சுவாமிகளுக்கு கண்ணனின் பிரிவால் அன்னம் விஷமாக இருப்பது இயற்கையே. பாவம் தோழிகளாகச் சுற்றியிருக்கும் மற்ற உயிர்களான நமக்குத் தான் அது தெரியவில்லை. அன்னம் புசி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.
புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச் செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போது இக்குல உபகாரன் (அன்னம்)
புன்னை மரத்தடியில் மற்ற பெண்களைப் புலம்ப வைத்து அவர்களுக்கு அருள் செய்த அந்தச் சோரன் இன்று எனக்கருள் செய்யாமல் மறந்தானோ? அங்கே செய்த அதே லீலை இங்கும் செய்து எனக்கு அருள மாட்டானோ? அப்படி அவன் அருளினால் எனது ஏழ்படிகாலும் வீடு பெற்று உய்வோமே! என் குல உபகாரன் என்னை மறந்தானோ? - என்கிறார்.
ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி (அன்னம்)
அவனுக்கு ஆட்செய்யாமலேயே, தொண்டு செய்யாமலேயே நாட்கள் இங்கே நகர்ந்து போய்கொண்டிருக்கிறதே; அவனுக்கே ஆட்செய்தல் என்ற வாழ்வினைத் தந்து வாழ்விப்பான் என்றே ஒன்றும் செய்யாமல் காத்திருந்தேனே; மாயம் செய்துவிட்டானே - என்கிறார்.
தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)
அடடா. தாமோதரனைக் காணாது தாகம் அடங்குமோ இங்கே என்கிறாரே. என்ன ஒரு உணர்வு! தமரேஸ் தின்னு தமரேஸி; தாக் நீஸ்தெநு மோஸ் ஜாரியாசி; தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவய் தாமோதரா - ஓடுகின்றதே நாள் ஓடுகின்றதே; பயம் இல்லாதவர்கள் மோசம் போகின்றார்களே; தாமோதரா தாமோதரா உன் தயை எந்த காலம் வரும் தாமோதரா - என்று உருகியராயிற்றே.
சொல்லாதே அடைக்காய் அமுதால் சுகம் என்னேடி
எல்லாருக்கும் தெரியுமே என் இதயம் ஈதன்றோடி (அன்னம்)
உண்ணும் சோறு, பருகும் நீர் இவையெல்லாம் கண்ணன் என்று மேலே சொன்னார். அவை மட்டும் இல்லை தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்கிறார் இங்கே. தின்னும் வெற்றிலையாய், போகமாய், அவனே இருக்கும் போது வெறும் அடைக்காய் அமுதம் என்ன சுகம் தரும்? என் இதயம் தான் என்ன என்று உங்கள் எல்லோருக்குமே தெரியுமேடி என்கிறார்.
கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கின்றானோ
நண்ணப் போய் அழைத்து வாடி நான் காணாது உய்வேனோ (அன்னம்)
நம்மாழ்வார் போல் பாடிக் கொண்டிருந்தவருக்கு கூடல் அழகன் நினைவு வந்துவிட்டது போலும். கூடல் மா நகரில் தானே விட்டுசித்தருக்கு எதிரே பெருமாள் வந்த போது அவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று பல்லாண்டு பாடினார். இங்கே என்னைத் தவிக்க விட்டுவிட்டு கண்ணேறு படும்படி இப்படி எத்தனை பேர் முன் போய் நிற்கின்றானோ? போய் அவனை அழைத்து வாடி என்கிறார்.
திடுக்குத் திடுக்கென என் நெஞ்சம் திகில் அடைகுது இங்கே
அடுக்கு முறி வெண்ணெய் கண்ணனுக்கு அமுது செய்வது எங்கே (அன்னம்)
கண்ணேறு படும்படி எங்கெல்லாம் சுற்றுகின்றானோ என்று எண்ணும் போதே எனக்கு திடுக் திடுக்கென்று நெஞ்சம் திகில் அடைகின்றதே. அவன் அப்படி கண்ணேறுபட்டு நோய் வாய்ப்பட்டால் அடுக்கு முறி வெண்ணெயை அவன் உண்ண முடியாதே என்று தவிக்கிறார். வெண்ணெய் நிறைய உண்டதற்கு மருந்தாக மண்ணை உண்டாயோ என்றார் நம்மாழ்வார். கண்ணேறு பட்டால் அந்த வெண்ணெயும் அமுது செய்ய இயலாதே என்கிறார் இவ்வாழ்வார்.
தயிர் கடையும் வேளை வந்து தழுவி விளையாடும்
மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் நாடும் (அன்னம்)
ஆழ்வார்களாய் பாடிக் கொண்டிருந்தவர் இங்கே கோபியரில் ஒருத்தி ஆனார் போலும். தயிர் கடையும் வேளையில் வந்து பின்னே தழுவிக் கொள்வானே. அந்த மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் விரும்பும்; ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் என்று வியக்கிறார்.
மழை இல்லாப் பயிர் அது போல நான் மயங்குவேனோ வாடி
களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோடி (அன்னம்)
வானம் பார்த்த பூமியில் வாழும் பயிர்கள் போல் வேறொன்றும் கதியாக எண்ணாமல் அவன் அருளே முதற்பொருளாய் கொண்டு வாழும் நாயகி சுவாமிகள் மழையில்லாமல் வாடும் பயிர் போல் அவன் அருள் இல்லாமல் வாடுவதைச் சொல்கிறார். முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற்பொருள் ஆகவில்லையே என்று இருப்பார்கள் நடுவில் முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் போன்ற தன் முயற்சியால் அவனை அடைய இயலும் என்று அவ்வழிகளில் முயல்வார்களும் இருந்தால் அவர்களால் இவர்களும் மயங்குவார்களே. களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோ? ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஒரு நிபந்தனை இட்டிருக்கிறானே. அதன் படியல்லவோ நடக்க வேண்டும். என் முயற்சியால் அவன் அருளைப் பெற்றுவிடுவேன் என்ற எண்ணம் களையாக இருக்கிறதே; அதனை அவன் அருளால் நீக்க மாட்டானோ? அவன் அருள் என்னும் மழையை நோக்கும் பயிரான நான் தழைக்க மாட்டேனோ - என்கிறார்.
செழித்திருந்தேனே கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்
குழைத்துக் கிடக்கின்றன பார் குழக்கன்றுகள் எல்லாம் (அன்னம்)
அவனுக்கே தொண்டு செய்து கிடந்த போதெல்லாம் பசுங்கன்றில் ஒன்றான நான் செழித்துக் கிடந்தேனே. இப்போது அவன் அருள் அகன்று போக நானும் என்னை ஒத்த பசுங்கன்றுகளும் குழைத்துக் கிடக்கின்றன பார். கோபாலன் தீண்டினால் அல்லவா அக்குழக்கன்றுகள் மீண்டும் செழிக்கும் - என்கிறார்.
நடனகோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம்.
7 comments :
அன்பு குமரன்,
கண்ணனுக்காக இவ்வளவும் உருக முடியுமோ.
என்ன தவம் செய்தாரோ கண்ணனை நீங்காது நினைப்பதற்கும். இதைப் படித்த பிறகாவது மனம் தெளிந்து அவனை மட்டும் நாடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
நன்றிம்மா..
//செழித்திருந்தேனே
கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்//
செழித்திருக்கேனே
கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்!
செழித்திருப்பேனே
கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்!!
தலைவியாய், தாயாய், கோபிகையாய் ஒரே பாடலில் மிளிரும் நாயகி சுவாமிகள் திருவடிகளே சரணம்!
//தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)//
நாரம், நாரணன் என்றாலே நீர் தானே! அதான் போலும் தாகத்துக்கு அவனையே கேட்கிறாள்(ர்) :)
சுவையான பாடலைத் தந்தமைக்கு நன்றி, கண்ணன் பாட்டுப் பதிவின் முதன்மையாளரே! :)
குமரன் அருமையான பாடல் குமரன்.. பாடல் கேட்கமுடியவில்லை.. வீட்டுக்கு போய் கேக்கணும்.
உண்மை தான் வல்லியம்மா. நன்றி.
--
நன்றி இரவி. நீங்கள் தானே எங்கும் முதன்மையானவர். என்னை முன்னவர் என்கிறீர்களே.
--
நன்றி இராகவ். பாடலைக் கேட்டும் பாருங்கள்.
அருமையான பாடல் குமரா. ஒவ்வொரு வரியின் குழைவிலும் மனசு இழைகிறது.
//ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி //
இப்படித்தான் இருக்கு. என்ன செய்யலாம்? :(
உண்மை அக்கா. நன்றி.