கண்ணன் எப்போது வருவானடி? கலந்து சுகம் பெறவே!
சுவாமிகள் நாயகி கோலத்தில்
கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)
எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)
எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)
விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)
ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)
ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)
வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)
பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)
நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)
கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)
இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.
4 comments :
நடன கோபால நாயகி அவர்களின் பாடலை அதிகம் பிரபலம் ஆக்கியவர் திருமதி சிவானந்த விஜயலட்சுமி என்று கேள்விப் பட்டுள்ளேன். அவர் குரலில் பாடல்கள் ஒன்றும் இல்லையா?
கீதாம்மா.
நாயகி சுவாமிகளின் பாடல்கள் சௌராஷ்ட்ர மக்களின் நடுவில் மட்டும் வழங்கிக் கொண்டிருக்கும் போது சௌராஷ்ட்ரம் கற்றுக் கொண்டு சுவாமிகளின் பாடல்களைத் தன் சொற்பொழிவுகளின் நடுவில் பாடிப் பரப்பியவர் திருமதி. சிவானந்த விஜயலட்சுமி. அந்த வகையில் மதுரை அளவிற்காகவது சுவாமிகளின் பாடல்களைப் பரப்பியவர்களில் முதன்மையானவர் அவர். சிறுவயதில் அம்மன் கோவிலிலும் திருநகர் விநாயகர் கோவிலிலும் அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அப்போது அவர் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்.
சிவமுருகனும் நானும் தற்போது http://www.srimannayagi.org/home.htm என்ற வலைப்பக்கத்தில் இருந்து தான் பாடல்களை எடுத்து இடுகிறோம். அங்கு சென்று பார்த்த போது திருமதி. சிவானந்த விஜயலட்சுமி பாடிய பாடல்கள் இல்லை. இணையத்தில் தேடிப் பார்த்து கிடைத்தால் இடுகிறேன்.
//முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி//
"உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" என்ற பாவை வரிகள் தான் நினைவுக்கு வருகுது குமரன்!
நாயகி சுவாமிகளின் கண்ணன் தமிழ்ப் பாடல்களைக் கண்ணன் பாட்டிலேயே தொடர்ந்து தாருங்களேன்!
ஆமாம் இரவிசங்கர். சரியாகச் சொன்னீர்கள். ஆண்டாளின் வாக்கே இங்கு வேறு வடிவம் எடுத்திருக்கிறது. அதே உணர்வு.
முடிந்த போதெல்லாம் நாயகி சுவாமிகளின் தமிழ்ப் பாடல்களை இங்கே இடுகிறேன். நன்றி.